திருச்செந்தூரில் ஒரு திவ்ய தரிசனம்
1. முன்னுரை
திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
- என்று ஒரு அழகான திரைப் பாடலை, திருச்செந்தூரின் பெருமையைப் போற்றித் தந்தார் கவிஞர் கண்ணதாசன். திருச்சீர் அலைவாய் என்று போற்றப்படும் திருச்செந்தூர் அற்புதமான முருகன் தலம். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. முருகன் தேவசேனாதிபதியாக வந்து சூரபத்மனை சம்ஹாரம் செய்த திருத்தலம். இத்தலத்தின் பெருமை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. வரும் ஜூலை மாதம் ஏழாம் தேதி (7.7.2025) சீர்மிகு திருச்செந்தூர் திருத்தல ஆலயத்திற்கு குடமுழுக்கு வைபவம் குன்றாத ஒளியுடனும் மங்காத புகழுடனும் மணிமகுடமாக நடத்தப்பட இருக்கிறது. அதை யொட்டி திருச்செந்தூரின் வரலாறு, விழாக்கள், என அத்தனை அற்புதங்களையும் முப்பது முத்துக்களாகக் காண்போம்.
2. எங்கே அமைந்துள்ளது?எப்படிச் செல்வது?
திருச்செந்தூர் வங்கக்கடல் அருகே அமைந்த திருத்தலமாகும். முருகனின் அறுபடை தலங்களில் இது ஒன்றே கடற்கரைத் தலமாகும். கொஞ்சும் அலைகள் தாலாட்ட, சிங்கார வேலவனான செந்தில் வேலவன், அன்பர்களின் குறை நீக்கி, அற்புத வாழ்வளிக்கக் காட்சி தரும் திருத்தலம். தமிழகத்தின் எந்த ஊரில் இருந்தும் மிக எளிதாக பேருந்து, கார், ரயில் மூலம் திருச்செந்தூர் வரலாம். திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும், ராமேஸ்வரத்தில் இருந்து 220கி.மீ. தொலைவிலும் தூத்துக்குடியில் இருந்து 40 கி.மீ ம் தொலைவிலும் அமைந்துள்ளது. எல்லா வசதிகளும் உள்ள சிறப்பான தலம். இங்கே ஏராளமான தங்கும் விடுதிகள் இருக்கின்றன. ஒரு நாள் முழுக்க தங்கி முருகனை நிதானமாகவும் நிம்மதியாகவும் சேவித்து வரலாம்.
3. திருச்செந்தூரில் வரலாற்றுப் பெருமை
இத்தலம் மிக மிகப் பழமையான தலம். சங்க இலக்கியங்களில் இத்தலத்தைப் பற்றிய அற்புதமான குறிப்புகள் இருக்கின்றன. “வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில், நெடுவேள் நிலை இய காமர் வியன் துறை என்று புறநானூறு பேசுகிறது. சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்” என்று சிலப்பதிகாரம் இதன் பெருமையைப் பறைசாற்றுகிறது.
தொல்காப்பிய மேற்கோள், திருமுருகாற்றுப்படை, கந்த புராணம் ஆகிய நூல்கள் இவ்வூரை அலைவாய் என குறிப்பிடுகின்றன. சிவந்த நிறமுடைய முருகப்பெருமானாகிய சேந்தனுக்குரிய கோயில் அமைந்ததால் செந்தில் என பெயர் ஏற்பட்டு செந்தில் என மருவியது என்றும் ஒரு பெயர்க் காரணம் சொல்லப்படுகிறது.செந்து என்பது உயிர். உயிர்களுக்கு அடைக் கலமான இடமாக (இல்) விளங்குவதால் செந்தில் என்று பெயர் வந்தது.
திருச்செந்திலூர் மருவி திருச்செந்தூர் ஆகி இருக்கலாம். தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களாலும், பெரும் பணக்காரர்களும் கட்டப் பட்டிருக்கும் நிலையில் ஆண்டிகளாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் ‘‘திருச்செந்தூர் முருகன் கோவிலாகும்”. இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம். 1. மௌனசுவாமி 2. காசிசுவாமி 3. ஆறுமுகசுவாமி (இவர் ராஜகோபுரம் கட்டியவர்) 4. வள்ளிநாயகசுவாமி 5. தேசியமூர்த்தி சுவாமி. ஐவரும் துறவிகள்.
4. எத்தனைப் பெயர்கள் தெரியுமா?
திருச்செந்தூர் திருத்தலத்திற்கு பற்பல பெயர்கள் உண்டு. ராமாயணத்தில் இத்தலம் கபாடபுரம் என்று குறிப்பிடப்படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் இத்தலத்தைப் பற்றிய குறிப்பு வருவதால் இத்தலத்தின் பழமை நமக்கு விளங்குகிறது. கடல் அலைகள் வந்து மோதுவதால் சீரலைவாய் என்ற பெயர் திருவோடு சேர்ந்து திருச்சீரலைவாய் என்றும், முருகப் பெருமான் சூரபத்மனை வெற்றிகொண்ட தலம் என்பதால் ஜயந்திபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக மலைமேல்தானே முருகன் இருப்பான்? இங்கே கடற்கரையில் வீற்றிருக்கிறானே என்ற கேள்விக்குப் பதிலாக இத்தலத்திற்கு கந்தமாதன மலை என்ற பெயரும் உண்டு. கந்த மாதன பர்வதம் என்ற பெயர் கந்தபுராணத்தில் இருக்கிறது சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன் என்பது இந்த வட்டாரத்தில் உள்ள ஒரு நாடோடிப் பாடல். அதனால், இப்பகுதிக்கு சந்தன மலை என்ற பெயரும் இருந்திருக்கிறது அதற்கு ஆதாரமாக இந்த முருகன் கோயிலில் மட்டும் சந்தனம் வழங்கப்படுகிறது.
5. திருச்செந்தூர்ப் புராணம்
திருச்செந்தூர் பற்றிய பல நூல்கள் உள்ளன. அவற்றுள் சில: திருச்செந்தூர்ப் புராணம், திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் தலபுராணம், திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு, திருச்செந்தூர் தலவரலாறு, ஓரெழுத்து அந்தாதி, திரிபு அந்தாதி, பதிற்றுப்பத்து அந்தாதி, யமக அந்தாதி, வெண்பா அந்தாதி, சுப்பிரமணிய அந்தாதி, முருகன் கலித்துறை அந்தாதி, திருச்செந்தில் உலா, திருச்செந்தூர் வழிநடைச் சிந்து, திருச்செந்தூர் கோவை, திருச்செந்தூர் சண்முக சதகம், திருச்செந்தில் நவரச மஞ்சரி மற்றும் திருச்செந்தூர் முருகனே போற்றி.
இவை அனைத்தும் திருச்செந்தூர் முருகன் கோயிலின் சிறப்புகள் மற்றும் தலபுராணத்தை விவரிக்கும் நூல்களாகும். திருச்செந்தூர்ப் புராணம் வென்றிமாலைக் கவிராயரால் இயற்றப்பட்டது. இது திருச்செந்தூர் கோயிலின் தலபுராணத்தை விளக்கும்.
6. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்பது பகழிக் கூத்தரால் எழுதப்பட்ட ஒரு பிள்ளைத்தமிழ் நூலாகும். இது திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானை குழந்தையாகப் பாவித்து பாடப்பட்ட நூலாகும். அருணகிரிநாதரின் திருப்புகழ், கந்தர் அந்தாதி முதலிய நூல்கள் திருச்செந்தூரின் பெருமையையும் அங்கு எழுந்தருளி இருக்கும் முருகனின் சிறப்புகளையும் நமக்கு எடுத்துக்காட்டும் நூல்களாகும்.
கந்தர் கலி வெண்பா என்பது திருச்செந்தூர் முருகனைக் குறித்துப் பாடப்பட்ட ஒரு நூலாகும். இதனை 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் இயற்றினார். கலிவெண்பா எனப்படும் பாடல்களினால் ஆக்கப்பட்ட இந்நூல், அப்பாடல் வகைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. சைவசித்தாந்தக் கருத்துகளை உள்ளடக்கிய இந்நூல், முருகப் பெருமானின் தோற்றத்தைக் கேசாதி பாதமாக வருணித்து, அவரிடமிருந்து கல்வி, ஒழுக்கம் முதலியவற்றை அருளவும், துன்பங்கள் அனைத்தையும் போக்கவும் வேண்டுகிறது. இந்நூலைச் சைவர்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்துவர்.
7. தல புராணம் கூறும் செய்தி
முன்பொரு காலத்தில் அசுரர்கள் தேவர்களுக்கு எதிராக பல தொல்லைகள் செய்து வந்தார்கள். அதில் ஒருவன்சூரபத்மன். சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து வரம் பெற்றவன். எனவே, தேவர்களால் அவனை வெல்ல முடியவில்லை. சூரபத்மன் செய்யும் அநீதிகளை முறையிட்டு அவனை அழிக்க சிவபெருமானை வேண்டுகிறார்கள். சிவபெருமான் தேவர்களின் பிராத்தனையை ஏற்றுக் கொண்டார்.
தேவர்களுக்கு தொல்லைகள் கொடுத்து வந்த சூரபத்மனை அழிக்க சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணில் இருந்து முருகப்பெருமானை அவதரிக்க செய்தார். குழந்தையான முருகப் பெருமானை கார்த்திகைப் பெண்கள் சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார்கள். பின்பு, சிவபெருமான் தேவர்களின் வேண்டுதல்படி சூரபத்மனை அழிக்க முருகப் பெருமானுக்கு உத்தரவிட்டார்.
8. வீரபாகு தூது
சிவபெருமானின் கட்டளையை ஏற்று சூரபத்மனை அழிக்க முருகன் திருச்செந்தூருக்கு வருகிறார். அப்போது தேவர்களின் குரு வியாழ பகவான் முருகப்பெருமானின் அருளாசி பெற தவத்தில் இருந்தார். முருகப் பெருமானும் அவருக்குத் தரிசனம் தந்து அருள் அளித்துவிட்டு திருச்செந்தூரை படை வீடாகக்கொண்டு தனது படையுடன் தங்கி சூரபத்மனை அழிக்க வியூகம் வகுத்தார். அசுரர்களின் வரலாற்றை அவர் வியாழபகவானிடமிருந்து அறிந்து கொண்டார். பின்னர், முருகப் பெருமான் தனது நவவீரர்களில் ஒருவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூதுவனாக அனுப்பி, தேவர்களுக்குக் கொடுக்கும் தொல்லையை நிறுத்த வேண்டும் என்ற தகவலை தெரிவித்தார். முருகப் பெருமானின் சமாதானக்
கோரிக்கையை சூரபத்மன் ஏற்கவில்லை.
9. சூர சம்ஹாரம்
வேறுவழியின்றி முருகப் பெருமான் சூரபத்மன் மீது போர் தொடுக் கிறார். கடுமையான போர் நடக்கிறது. சிவபெருமானிடம் வரம் பெற்ற சூரன் மாயப்போர் புரிகிறான். நிறைவாக மாமரமாக உரு மாறிய சூரபத்மனை வதம் செய்யாமல் அவனது ஆணவத்தை அழித்து சேவற் கொடியாகவும், மயிலாகவும் மாற்றி ஆட்கொண்டார். அதனால் முருகப் பெருமான் சேவற் கொடியோன் என்றும் அழைக்கப்பட்டார் . இந்நிகழ்விற்கு பிறகு, வியாழ பகவான் முருகப் பெருமானை திருச்செந்தூரில் தங்கி அருள் புரியும்படி வேண்டுகோள் விடுத்தார். பின்னர், வியாழ பகவான் உத்தரவின்படி விஸ்வகர்மா இந்த திருக்கோவிலை கட்டினார். சூரபத்மனை அழித்ததில் முருகனின் வெற்றியின் காரணமாக, முருகப் பெருமான் ஜெயந்திநாதர் என்று அழைக்கப்
படுகிறார்.
10. அழகான ராஜகோபுரம்
இனி திருச்செந்தூர் கோயிலின் அழகையும் சிறப்பையும் காண்போம். கடற்கரை ஓரத்தில் அற்புதமான ராஜகோபுரத்தோடு காட்சி தரும் இத்திருக்கோயில் ஓம் எனும் பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு ம யனால்(தேவ சிற்பி ) கட்டப்பட்டது. திருச்செந்தூர் முருகன் கோயில் கடற் கரையிலிருந்து வெறும் ‘‘67 மீ” தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. ‘‘133 அடி” உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து ‘‘140 மீ” தொலைவில்தான் அமைந்துள்ளது.
ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள். திருச்செந்தூர் திருக்கோயிலில் ஒரு தனிச் சிறப்பு உள்ளது. கொடிமரத்திலிருந்து வலமாக எல்லாச் சந்நதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ஓம் என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்துள்ளதைக் காணலாம்.
11. குமாரவிடங்கப் பெருமான்
300 அடி நீளம் 216 அடி அகலம் அமைந்த இத்திருத்தலத்தின் மேற்குத்திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மேற்குக் கோபுரம் சுவாமிக்கு எதிரே, கிழக்குத்திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. கந்தசஷ்டி திருவிழா நடைபெறும் போதும், முருகன் திருக்கல்யாணத்தின்போதும் நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் மேல ராஜா கோபுர வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
இனி முதல் பிராகாரத்தில் நுழைவோம்.முதல் பிராகாரத்தின் தெற்கில் ஜெயந்தி நாதர் எனும் குமார விடங்கப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகின்றார். வள்ளிக்கும் தெய்வானைக்கும் தனித்தனி சந்நதிகள் உள்ளன. பிராகாரத்தின் மேற்கே சங்கரநாராயணர், காசி விஸ்வநாதர் - விசாலாட்சி, வேதபுரீஸ்வரர், திருவாதபுரீஸ்வரர், நாகநாத சோமேஸ்வரர் என பல சந்நதிகளைக் காணலாம்.
வடக்கில் மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், சிவகாமி - நடராஜர், சனீஸ்வரர், பைரவர் முதலியோருக்குச் சந்நதிகள் இடம் பெற்றுள்ளன சில முக்கியமான முருகன் கோயில்களில் இடம் பெற்றுள்ளவாறு இங்கும் பெருமாளுக்கு தனித்தனியாக சந்நதிகள் உண்டு. இனி இரண்டாம்
பிரகாரத்தில் நுழைவோம்.
12. பஞ்சபூதத் தலங்களும் ஒரே கோயிலில்
பிராகாரத்தின் மேற்கில் சித்தி விநாயகர், சகஸ்ர லிங்கம், ஆத்மநாதர், மனோன்மணி அம்மை, பானுகேஸ்வரர், சோமசுந்தரர் - மீனாட்சி அம்மை, திருமூலநாதர் சந்நதிகள் உண்டு. இது தவிர பஞ்சபூதத் திருத்தலங் களில் நான்கினை ஒரே தலத்தில் தரிசிக்கும்படியாக திருக்காளத்தி நாதர், (வாயு லிங்கம்), உமாமகேஸ்வரி அருணாசலேஸ்வரர் (தேயு லிங்கம்), உண்ணாமுலையம்மை ஜம்புகேஸ்வரர் (அப்பு லிங்கம்) வன்மீக நாதர் (பிரத்வீ லிங்கம்) அருணகிரிநாதர் வல்லப கணபதி ஆகியோரின் சந்நதிகள் உள்ளன. இது தவிர தென்பகுதியில் வாசலருகே, வீர கேசரியும் வீர மார்த்தாண்டரும் காவல் புரிகின்றனர்.
13. நவகிரக சந்நதிகள் கிடையாது.
நவகிரக சந்நதிகள் இங்கே கிடையாது. ஆனால், சனிக்கு மட்டும் சந்நதி உண்டு. முருகனுக்கு உள்ள முக்கியத்துவம் அவருடைய தளபதியான வீரபாகுவுக்கும் உண்டு. இத்தலத்தை வீரபாகு தலம் என்று சொல்வதும் உண்டு. வீர மகேந்திரரும் வீரபாகுவும் காவல் தெய்வங்களாக விளங்கும் இத்தலத்தில் வீரபாகுவுக்கு முதல் பூஜை உண்டு. செந்தில் ஆண்டவனுக்கு பூஜை செய்யும் முன்னால் வீரபாகுவுக்கு பிட்டு படைத்து வழிபடுகின்றனர். இனி மூலவரைத்தரிசிப்போம். தவக்கோலத்தில் காட்சி தரும் மூலவர் கையில் வழக்கமாக இருக்கும் வேலாயுதம் இல்லை. அருகில் தேவியரும் இல்லை. செந்தில் ஆண்டவர் என்ற திருநாமம். நான்கு திருக்கரங்களோடு நின்ற கோலத்தில் தரும் காட்சி அற்புதமான காட்சி.
14. இரண்டு ஆகமங்கள் இங்கே பூஜை முறையில் இரண்டு
ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன. மூலவருக்கு குமார தந்திரம் எனும் பூஜை ஆகமமும் சண்முகருக்கு சிவாகமம் முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. மூலவரின் உற்சவத் திருமேனிக்கு அலைவாய் உகந்த பெருமான் என்று திருநாமம். தோழன் சாமி என்பார்கள். அருகில் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருவார். இவர் நவராத்திரியில் பாரி வேட்டை, சிறுத்தொண்டர் திருநாள், தை மாதத்தில் புனர்பூசம் பூசம் ஆகிய நாட் களில் எழுந்தருள்வார். கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்கள் காட்சி தருகின்றன.
கருவறைக்குள் மூன்று லிங்கங்கள் உள்ளன. ஆக எட்டு லிங்கங்கள் கருவறைக்குள் உள்ளன. சூரிய சந்திரர்கள் உட்பட பஞ்சபூதங்களையும் தன்னுள் வைத்திருக்கிறார் எனக் காட்டும் ஐதீகமாக இந்த அமைப்பு வழங்குகிறது. அஷ்டலிங்கங்களில் ஐந்து லிங்கங்களுக்கு பூஜை இல்லை. காரணம் இந்த பஞ்ச லிங்கங்களையும் முருகப்பெருமானே பூஜிப்பதாகச் சொல்கிறார்கள்.
15. தாராபிஷேகம்
நாள்தோறும் ஒன்பது கால பூஜை நடைபெறும் இத் திருக்கோயிலில் மார்கழி மாதத்தில் மட்டும் பத்து கால பூஜை நடைபெறும். அதிகாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தொடர்ந்து நடைதிறந்து இருக்கும். திருவிழாக்காலங்களில் நடை திறப்பு நேரம்.
* மார்கழி மாதம் அதிகாலை 3.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்.
* வைகாசி விசாகம் அன்று அதிகாலை 1.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்.
* மாசி திருவிழா மற்றும் ஆவணித்திருவிழா காலத்தில் முதல் திருவிழா, ஏழாம் திருவிழா அதிகாலை 1.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு திருக்காப்பிடப்படும் இதர நாட்களில் அதிகாலை 3.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்.
* கந்தசஷ்டி திருவிழாவின் போது ஒன்றாம் திருவிழா மற்றும் ஆறாம் திருவிழா அன்று அதிகாலை 1.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்.
* தைபூசம் அன்று அதிகாலை 1.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்.
* பங்குனி உத்திரம் அன்று அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்.
முருகப் பெருமானுக்கு மஞ்சள் பட்டாடை அணிவித்து மஞ்சள் மலர்களாலும், நீலப் பட்டாடை அணிவித்து நீல மலர்களாலும், சிவப்பு பட்டாடை அணிவித்து சிவப்பு மலர்களாலும், வெண் பட்டாடை அணிவித்து வெண் மலர்களாலும், பச்சைப் பட்டாடை சாத்தியும் வழிபாடு நடக்கும். அதைவிட அற்புதமான விசேஷம் மூலவரின் தலைக்கு மேலே ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் நுண் துளையிட்டு அந்த சிறு துவாரம் வழியாக சொட்டுச்சொட்டாக பசும்பாலை மூலவரின் திருமுடி மேல் விழச்செய்யும் தாராபிஷேகம் இந்தக் கோயிலுக்கே உள்ள சிறப்பு.
16. பன்னீர் இலை விபூதி பிரசாதம்
இந்தத் தலத்தின் சிறப்பம்சம் பன்னீர் இலை விபூதி பிரசாதம். இது வேறு எங்கிலும் இல்லாதது. இலை விபூதி பிரசாதம் என்பார்கள். காரணம், திருச்செந்தூரில் தேவர்கள் எல்லாம் பன்னீர் மரங்களாக இருக்கின்றனர். 12 முகங்களுக்கு 12 நரம்பு களைச் சொல்வார்கள். பன்னீர் மர இலை களில் 12 நரம்புகள் உண்டு.
சூரபத்மனை வதம் செய்த பின்னால் முருகப்பெருமான் 12 கரங்களாலும் விபூதி பிரசாதம் வழங்கியதாகவும், விஸ்வாமித்திரரின் காசநோயை 12 கரங்களால் விபூதி பிரசாதம் அளித்து நீக்கியதாகவும், அதுவே பன்னீர் இலையின் 12 நரம்புகள் ஆக இருப்பதாகவும் சொல்கிறார்கள் கடற்கரை அருகில் உள்ள தலம் என்பதால் மீனவர்கள் செந்தில் ஆண்டவரை தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். அதுமட்டுமின்றி தங்கள் குலத்தில் பிறந்த தெய்வானையை மணந்ததால், மீனவர்கள் முருகனை மச்சான் சாமி என்று பரிவோடு அழைக்கின்றனர்.
17. பூஜைமுறைகள்
காலை முதல் வழிபாடாக திருவனந்தலும் இரவு நிறைவு வழிபாடாக பள்ளியறை வழிபாடும் நடைபெறுகிறது திருவனந்தல் வழிபாடு காலை சுமார் 5:30 மணிக்கு நடைபெறும் அப்பொழுது தரிசனத்தைக் காணக் கூட்டம் அலைமோதும். அதன் பின் உச்சிக்கால பூஜை நடைபெறும் . உச்சிக்கால பூஜை முடிந்ததும் மேளதாளத்துடன் கடற்கரைக்குச் சென்று கங்கைக்குச சுத்த அன்னம் படைக்கப்படுகிறது.
இரவு ஒன்பதே முக்கால் மணிக்கு சுவாமிக்குத் தீபாராதனைக் காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகப் பெருமானின் முன் பள்ளியறை சொக்கரை வைத்து தீபாராதனை செய்கின்றனர். இதனை ரகசிய தீபாராதனை என்கிறார்கள். பொதுவாக கந்த சஷ்டி விழா ஆறு நாள்கள் நடைபெறும். திருக்கல்யாணம் சேர்த்தால் ஏழு நாள் நடைபெறும். ஆனால் இங்கு 12 நாட்கள் நடைபெறும். முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம் சூரசம்காரம் ஏழாம் நாள் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் அடுத்த ஐந்து நாட்கள் சுவாமி திருக்கல்யாணக்கோலத்தில் ஊஞ்சல் சேவை என 12 நாட்கள் நடைபெறும்.
18. ஆறுமுக அர்ச்சனை
இங்கு ஆறுமுகப் பெருமானுக்கு 36 தடவை அபிஷேகம் நடைபெறுகிறது. இதில் விபூதி அபிஷேகம் சிறப்பானது ஆறுமுகப் பெருமானுக்கு நடைபெறும் ஆறுமுக அர்ச்சனை அற்புதமானது. ஆறு வித்வான்கள் ஆறுமுகப் பெருமானின் முன்னால் நின்று திருநாமங்களைப் பாட ஆறு சிவாச்சாரியார்கள் மலர்தூவி அர்ச்சனை செய்வார்கள். ஆறு திருமுகங்களுக்கும் ஆறுவிதமான நிவேதனங்கள் படைக்கப்படுகின்றன ஆறு தீபாராதனை காட்டப்படுகிறது. இங்குள்ள அர்ச்சகர்களுக்கு திரிசுதந்திரர்கள் என்ற பெயர். பொதுவாக கோயில்களில் ஒரு தெய்வத்துக்கு ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால் திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமார விடங்கர், அலைவாய்ப்பெருமாள் என 4 உற்சவர்கள் உண்டு. இவர்கள் அனைவருக்குமே தனித்தனிச் சந்நதிகள் இருப்பது சிறப்பு.
19. நிவேதனங்கள்
இங்கு மூலவருக்கான நைவேத்தியங்களில் காரம் புளி சேர்ப்பதில்லை ஆனால் சண்முகருக்கான நெய்வேத்தியத்தில் காரம், புளி உண்டு. பருப்புக் கஞ்சி, தோசை, தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டு தினை மாவு முதலிய நிவேதனங்கள் படைக்கப்படுகின்றன. உதயமார்த்தாண்ட பூஜையின் போது தோசை சிறு பருப்புக் கஞ்சி உண்டு. இரவு பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் நிவேதனம் செய்யப்படுகின்றது. இங்கு மூன்று விதமான மடைப்பள்ளிகளும் உண்டு.
மூலவருக்கு போற்றி மடைப்பள்ளியிலும் ஆறுமுகப் பெருமானுக்கு முக்காணியர்கள் மடைப்பள்ளியிலும் நைவேத்தியம் தயாரிக்கப்படுகிறது. பெருமாள் சந்நதிகளுக்கு தனி மடைப்பள்ளியில் நிவேதனங்கள் தயாராகின்றன. இங்கு முருகப் பெருமானின் வாகனமான மயிலுக்கு பொரி படைக்கிறார்கள். கேரளக் கோயில்களைப் போலவே, இங்கும் சுவாமியை தரிசனம் செய்யும் ஆடவர்களுக்கு மேலாடை அணிய அனுமதியில்லை.
20. மஞ்சள் வண்ணமும் தங்கமும்
திருச்செந்தூர் குரு பகவானுக்கு உரிய தலம். வியாழபகவான்தான் இங்கு இந்த கோயிலை அமைத்தார் என்பது தலபுராணச் செய்தி. குரு என்றால் மஞ்சள் ஆடை, மஞ்சள் நிறமுள்ள பொருட்கள், பொன் முதலியவற்றைக் குறிக்கும். எனவே இங்கு பொன்னாலான பொருட்கள் பூஜைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இறைவனுக்கு நிவேதனம் படைக்கும் பொழுது கீழே சிந்தும் உணவுகளை எடுப்பதற்கு தங்க ஊசி பயன்படுத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தின் போது தீர்த்தத்தில் தங்க மீன்களும் தங்கத் தாமரை மலர்களும் இடப்படுகின்றன. தங்க சாமரம் கொண்டு சுவாமிக்கு ஆலவட்டத் தொண்டு (விசிறி விடுதல்) செய்கின்றனர். இது தவிர, தங்க ஆமை ஒன்றும் இருக்கிறது.
21. ஸ்கந்த புஷ்கரணி
‘‘செந்தூரின் கடல்ஓசைங்கீதம்” என்பார்கள். முருகப்பெருமானை பிரணவ சத்தத்தோடு இங்குள்ள கடல் அலைகள் வணங்குகின்றன. சூரபத்மன் போன்ற அசுரர்களுடன் முருகப்பெருமான் போர் செய்த தலம் என்பதால், அவர்கள் குருதி பட்டு, கடல் நிறமும் இப்பகுதியில் சற்று சிவந்தே காணப்படுவதாக ஐதீகம். 24 தீர்த்தங்கள் இத்தலத்திற்கு உரியதாக இருக்கின்றன. காயத்ரி மந்திரத்திற்கு 24 எழுத்துக்கள் உண்டு.
இங்குள்ள ஒவ்வொரு தீர்த்தமும் காயத்ரி மந்திரத்தின் அட்சரங்களாக விளங்குகிறது. இங்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு, அதன் பிறகு உப்புத்தண்ணீர் போக, கடற்கரை ஓரமாக அமைந்த நாழி க்கிணறு நல்ல தண்ணீரில் நீராடி விட்டு, பின்தான் முருகப்பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும், இந்த நாழிக் கிணறு ‘‘ஸ்கந்த புஷ்கரணி”என்று அழைக்கப்படுகிறது. ஒரு சிறு பாத்திரத்தில் முக்கும் அளவுக்கு மட்டும் வற்றாத நீர் இருப்பதால் நாழிக் கிணறு என்று அழைக்கிறார்கள். முருகப்பெருமான் படைவீரர்களுக்கு தாகம் தீர்ப்பதற்காக தன்னுடைய வேலாயுதத்தால் ஏற்படுத்திய ஊற்று நாழிக் கிணறு.
22. பொன் மீது ஆசைப்பட்ட டச்சு வர்த்தகர்கள்
இத்திருக்கோயிலைப் பற்றி பல அதிசயக் கதைகள் உண்டு. முருகப் பெருமானின் வியக்கத்தக்க திருவிளையாடல்களாக இக்கதைகள் விளங்கு கின்றன. அதில் ஒரு அற்புதமான சம்பவத்தை வரலாற்று ஆதாரத்துடன், வேங்கடம் முதல் குமரி வரை என்று பல திருத்தலங்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதிய தொமு பாஸ்கரத் தொண்டைமான், அவருக்கே உரிய பாணியில் எழுதுகிறார். அதை அப்படியே தருகிறேன்.
1648 ஆம் வருஷம் மேல்நாட்டிலிருந்து வந்த டச்சு வர்த்தகர்கள் இங்கு வந்து தங்கியிருக்கிறார்கள். அவர்கள் பொன் வண்ணத்தில் இருக்கும் ஆறுமுகனைக் கண்டு களித்திருக்கிறார்கள். அந்த மூர்த்தியை எடுத்துச் சென்றால் அத்தனை பொன்னும் தங்களுக்கு உதவுமே என்று கருதி, அந்த மூர்த்தியைக் களவாடி கப்பலில் ஏற்றிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் ஆறுமுகனோ அவர்களுடன் நெடுந்தூரம் செல்ல விரும்பவில்லை. ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறான்.
23. வடமலையப்பர் செய்த பணி
கொந்தளிக்கும் கடலிலே டச்சுக்காரர் கப்பல் ஆடியிருக்கிறது. இனியும் ஆறுமுகனைா கப்பலில் வைத்திருத்தல் தகாது என நினைத்து அவனை அலக்காய்த் தூக்கிகடலிலேயே எறிந்திருக்கிறார்கள். கோயிலில் இருந்த ஆறுமுகன் காணாமல் போன செய்தியை நாயக்க மன்னரின் பிரதிநிதியான வடமலையப்ப பிள்ளையன் அறிந்திருக்கிறார். வருந்தியிருக்கிறார். பஞ்சலோகத்தில் இன்னொரு ஆறுமுகனை வார்த்தெடுத்து நிறுத்த முனைந்திருக்கிறார். ஆனால் கடலுள் கிடந்த ஆறுமுகனே அவரது கனவில் தோன்றி, தான் இருக்கும் இடத்தை அறிவித்திருக்கிறான்.
அவன் தெரிவித்தபடியே அவர்கள் கடலில் ஆறுகாத தூரம் சென்றதும் அங்கு ஓர் எலுமிச்சம் பழம் மிதந்து கொண்டிருக்கிறது. அந்த இடத்தில் கருடன் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். அங்கு மூழ்கிப் பார்த்ததில், கடலின் அடித்தளத்தில் டச்சுக்காரர்கள் களவாடிய ஆறுமுகமனானவன் இருந்திருக்கிறான். இதனை எடுத்து வந்து ஒரு நல்ல மண்டபம் கட்டி அதில் இருத்தியிருக்கிறார், வடமலையப்பர். அதனாலேயே இன்னும் ஆறுமுகன் கோயில் கொண்டிருக்கும் மண்டபம் வடமலையப்பன் மண்டபம் என்று வழங்கப்படுகிறது.
24. கற்பனை அல்ல; உண்மை
இது ஏதோ கற்பனைக்கதை அல்ல. 1785 இல் பெர்லின் நகரிலிருந்து எம். ரென்னல் எழுதிய சரித்திர இந்தியா என்ற புத்தகத்தில் இத்தகவலைத் தாம் ஒரு டச்சு மாலுமியிடமிருந்து தெரிந்து கொண்டதாக அவர் எழுதியிருக்கிறார். 1648 இல்இது நடந்தது என்று உறுதியாகக் கூறியிருக்கிறார். 1648 இல் கடலுள் சென்ற ஆண்டவன் 1653இல் தான் வடமலையப்பப்பிள்ளையின் மூலம் வெளிவந்திருக்கிறான். அன்றிலிருந்து அவன் புகழ் பிரசித்தி பெற்றிருக்கிறது. இந்தச் செந்தில் ஆண்டவனிடத்திலே பாஞ்சாலங் குறிச்சிபாளையக்காரரான கட்டபொம்மன் மிகுந்த பக்தி சிரத்தையோடு வாழ்ந்திருக்கிறான். திருநெல்வேலியில் கலெக்டராக இருந்த லஷிங்டன் என்ற துரை மகனும் இந்த ஆண்டவனிடம் ஈடுபட்டு 1803 இல் பல வெள்ளிப் பாத்திரங்களைக்
காணிக்கையாகக் கொடுத்திருக்கின்றார்.
25. திருப்பணிகள்
பாண்டிய மன்னர்களும் சேர மன்னர்களும் இக்கோயில் கட்டுவதில் முனைந்திருக்கிறார்கள். வரகுணமாறன், மாறவர்மன், விக்கிரம பாண்டியன் முதலியோர் கோயிலுக்கு வேண்டிய நிவந்தங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவை பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கின்றன. கிபி 1729 முதல் 1758 வரை திருவிதாங்கூரை ஆண்ட மாத்தாண்டவர்ம மகாராஜா இக்கோயிலில் உதய மார்த்தாண்டக் கட்டளையை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த இருபதாம் நூற்றாண்டிலும் மெளனசுவாமி என்பவர் கோயில் திருப்பணியை மேற்கொண்டிருக்கிறார். அவருக்குப் பின் திருப்பணியைத் தொடர்ந்து நடத்தியவர் வள்ளிநாயகசுவாமிகள். இன்று விரிவடைந்திருக்கும் கற்கோயில் ராஜ கோபுரம், பிராகாரங்கள் எல்லாம் இவர்களின திருப்பணி வேலைகளே.
26. மாமரங்கள் வளர்வதில்லை
முருகப் பெருமான் திருச்செந்தூருக்கு வந்ததும் முதலில் தங்கிய இடம் ஒரு சிவன் கோயில். ஆதிகோயிலான இக்கோயிலை சிங்கக் கொழுந்தீசர் என்கிறார்கள். இந்தக் கோயிலில் உற்சவங்கள் நடைபெறுவது கிடையாது. ஆனால் முருகப்பெருமான் இங்கு எழுந்தருளுகிறார்.முருகப்பெருமான் கோயிலுக்கு அருகே கடற்கரையை ஒட்டி இருக்கும் வள்ளிக்குகை அவசியம் தரிசிக்க வேண்டியது. சூரபத்மன் மாமரமாக மாறி நிற்க, முருகப்பெருமான் வேலாயுதத்தால் பிளந்து மயிலாகவும் சேவலாகவும் மாற்றினார்.
எனவே இத்தலத்தில் மாமரங்கள் வளர்வதில்லை என்கிறார்கள். இங்குள்ள சண்டிகேஸ்வரருக்கு புதிய மாலைகளை சாத்துவதில்லை. மூலவருக்கு அணிவித்த மாலைகளை அணிவிக்கிறார்கள். இரவில் மூலவர் சந்நதி அடைக்கப்பட்டதும் பைரவர் சந்நதியில் சாவியை வைக்கிறார்கள். இங்குள்ள விளக்கில் இருந்துதான் மடைப்பள்ளிக்கு அக்னியைக் கொண்டு செல்கின்றார்கள். பைரவருக்கு வடை நைவேத்தியம் செய்யப்படுகிறது.
27. அற்புதத் திருவிழாக்கள்
இனி இங்கு நடக்கும் அற்புதமான திருவிழாக்களைப்பற்றிப் பார்ப்போம். ஒவ்வொரு மாதப் பிறப்பன்றும் பள்ளியறை தீபாராதனை முடிந்த பின் கொடிமரம் வணக்கம் செய்துவிட்டு தெற்கு வாசல் (சண்முக விலாசம்) வந்து சூரிய வணக்கம் செய்வார்கள் அடியார்கள். ஞாயிற்றுக்கிழமை அன்றும் இது நடைபெறும். வைகாசி மாதம் விசாகப் பெருவிழா 10 நாள்கள் நடைபெறும். அப்பொழுது கோயிலின் எதிரில் உள்ள வசந்த மண்டபத்தைச் சுற்றி அகழி போல் நீர் நிரப்பி வைத்திருப்பார்கள். உச்சி காலபூஜை முடிந்தவுடன் முருகப்பெருமான் இந்த வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். ஆராதனைகள் முடிந்ததும் சப்பரத்தில் ஏறி 11 தடவை வலம் வந்து கோயிலுக்குள் செல்வார்.
28. சூரசம்ஹாரம்
ஆவணிப் பெருவிழா, புரட்டாசியில் நவராத்திரி விழா, ஐப்பசியில் கந்த சஷ்டி விழாவில் நடைபெறும் சூரசம்ஹாரம் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். சூர சம்கர விழாவைக் காண்பதற்கு லட்சோப லட்சம் மக்கள் திருச்செந்தூர் கடற்கரையில் திரள்வார்கள். திருவாதிரை அன்று நடராஜர் அபிஷேகத்திற்கு பிறகு திருச்செந்தூர் நடராஜருக்கு முருகப்பெருமான் ஆபரணங்கள் அணிவிக் கப்படும். தை மாதம் பூசத் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப் படும். பங்குனி உத்திரம் இங்கு நடைபெறும் தனிச் சிறப்புமிக்க விழா.
29. மாப்பிளைச்சாமி
திருவிழாவின்போது ஒரு நாள் தங்கம் ஆடு வாகனத்தில் அஜாரூடராகக் காட்சி தருவார் செந்தில் ஆண்டவர். திருக்கல்யாண உற்சவங்களில் ஆறுமுகப் பெருமானின் உற்சவரான குமார விடங்கப் பெருமான் எழுந்தருள்வார். இதனால் இவரை மாப்பிள்ளைச் சாமி என்பார்கள். ஆவணி மாசி விழாக்களில் ஏழாம் நாள் மட்டும் திருஉலா வருவார் சண்முகர். மற்ற நாட் களில் திருஉலா வருபவர் ஜெயந்தி நாதர். ஆவணித் திருவிழாவின் ஏழாம் நாள் அன்று தங்கப் பல்லக்கில் முருகன் வலம் வருவார். முன்புறம் ஆறுமுகப் பெருமான் பின்புறம் நடராஜர் என அன்று மட்டும்தரிசிக்கலாம்.
திருச்செந்தூர் தங்கரதப்பவனி சிறப்பு வாய்ந்தது. 315 சிவப்பு கற்கள், ஏழு குச்சை வகை சிகப்புக் கற்கள், 44 பச்சைக் கற்கள், 407 பெல்ஜியம் வைரக் கற்கள் பதிக்கப்பட்ட வைர கிரீடத்தை (ராம்கோ தந்தது) வளர்பிறை சஷ்டி தினங்களில் மூலவருக்கு அணிவிப் பார்கள். அதைப்போலவே சண்முகருக்கு உள்ள வைரவேல் 100 பவுன் தங்கம், 40 கேரட் வைரத்தால் செய்யப்பட்டது. பெரிய பச்சைக்கல் கொண்டது. மாசித்திருவிழாவின் எட்டாம் நாள் அன்று சண்முகருக்கு அபிஷேகம் செய்யும் பொழுது தங்கப் பிடியுடன் கூடிய காண்டாமிருகக் கொம்பு வழியாக அபிஷே கம் செய்வது அற்புதமான காட்சியாகும்.
30. எல்லா தோஷங்களும் நீக்கும் திருச்செந்தூர்
கோயிலின் கிழக்கு பிராகாரத்தில் அலையடிக்கும் அத்தனை அருகாமையில் உள்ள இத்திருக்கோயிலில் சூரசம்ஹார நாளில் கடல் சற்று உள்வாங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் முடிந்தவுடன் செந்திலாண்டவர் அபிஷேகம் நடைபெறும். நேரடியாக அபிஷேகம் செய்யாமல் சுவாமிக்கு முன்னால் கண்ணாடி வைத்து கண்ணாடிக்கு அபிஷேகம் செய்வார்கள். இதை சாயா அபிஷேகம் என்பார்கள். இங்குள்ள கொடிமரத்திற்கும் ஒரு கதை உண்டு. இலங்கை கண்டியை ஆண்ட மன்னனின் கனவில் முருகன் தோன்றி சந்தன மரம் ஒன்றை வெட்டி கடலில்விடச் சொன்னான்.
அது திருச்செந்தூர் கரையை அடைந்தது. இந்த மரமே கொடிமரமாக உள்ளது. இச்செய்தி திருச்செந்தூர் பிள்ளைத் தமிழில். இடம்பெற்றுள்ளது வாய் பேசாத குமரகுருபரர் இத்தலத்து முருகன் அருளால் கவிபாடும் புலமை பெற்றார். இக்கோயிலில் தங்கி சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினால் நினைத்த காரியங்கள் நடைபெறும். தீராத வயிற்று வலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நதியில் கந்த சஷ்டி கவசம் பாடினால் நோய் குணமாகும் என்று பாலதேவராய சுவாமிகள் கூறியிருப்பதைப் பின்பற்றி பல பக்தர்களும் குணமாகி ருக்கின்றார்கள்.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சித்திரை, வைகாசி, கார்த்திகை மாதங்களில் பால்குடம் எடுப்பதால் குழந்தைகளின் தோஷங்களும் பெற்றோர்களின் தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இப்படிப்பட்ட பெருமைமிக்க திருச்செந்தூர் திருக்கோயிலுக்கு ஜூலை மாதம் ஏழாம் தேதி நடைபெறும் திருக்குடமுழுக்கு விழா காண அலை அலையாய் வாருங்கள். திருச்சீரலைவாய், திருச்சீர் (நல்வாழ்வு) அளிக்கும்.
எஸ். கோகுலாச்சாரி