திருமணத் தடை நீக்கும் சூட்சுமங்கள்
பொதுவாக ஒரு மனிதனுக்குஉத்தியோகம் திருமணம் ஆகிய இரண்டும் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகளாக அமைகின்றன. இன்றைய தலைமுறையினர் சிலருக்கு உத்தியோகம்கூட நன்றாக அமைந்துவிடுகிறது. ஆனால் திருமணம் என்பது கேள்விக்குறியாகிவிடுகிறது. அரசு வேலையில் இருப்பவர்களுக்குகூட திருமணம் என்பது வெகுசீக்கிரமாக கூடி வருவதில்லை. அரசுத்துறை ஒன்றில் உயர்அதிகாரியாக பணிபுரிந்து வரும் நண்பர் ஒருவருக்கு 43 வயதாகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இத்தனைக்கும் அவரின் மாத சம்பளமோ ஒரு லட்சத்துக்கும் அதிகம். இதுபோன்று அரசு துறையில் வேலை பார்க்கும் சில பெண்களுக்கு 35 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் நடைபெறாத அவல நிலை நம் சமூகத்தில் இருக்கத்தான்செய்கின்றன. அதிக வயதை கடந்தும் திருமணமாகாத வரிசையில் படித்தவன் பாமரன் ஏழை பணக்காரன் மட்டுமின்றி அரசியல் கலைத்துறை என அனைத்து தரப்பு மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் என்ன? எல்லாம் அவரவர் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள்தான். ஏனெனில் கிரகங்கள் பாகுபாடு பார்ப்பது கிடையாது.
காலதாமதமாக திருமணம் நடைபெறுவதற்கான அம்சங்கள்
* ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ஏழாம் பாவகாதிபதி 3,6,8,12ல் அமர்வது.
* 1,2,7,8 பாவகங்களும் அதனதிபதிகளும் வலிமை குறைவோடு இருப்பது.
* ஏழாம் பாவகாதிபதி பகை நீசம் அஸ்தமனம் மற்றும் கிரகயுத்தத்தில் தோற்பது.
* ஏழாம் பாவகாதிபதி வலிமை குறைந்து திரிகோணாதிபதிகளின் தொடர்பில்லாமல் இருப்பது.
* சனி, ராகு - கேது போன்ற கிரகங்களால் 1,2,7,8 போன்ற பாவகங்கள் பாதிப்படைவது.
* ஏழாம் பாவகாதிபதிகளின் நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் வலிமையற்று இருப்பது.
இது தவிர களத்திர ஸ்தானாதிபதியுடனோ அல்லது களத்திர ஸ்தானத்துடனோ பாதகாதிபதி சம்பந்தப்பட்டால் திருமணம் மிகவும் காலதாமதமாகிறது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.
ஆணின் திருமணத்தடை நீக்கும் சூட்சுமம்
ஜோதிடத்தில் ஆண்களுக்கு திருமணத்தைக் குறிக்கக்கூடிய கிரகம் சுக்கிரன் ஆவார். எந்த லக்னம் ராசியாக இருந்தாலும், ஆணின் ஜாதகத்தில் களத்திரகாரகன் யாரென்றால் சுக்கிரன்தான். சுக்கிரன் மீன ராசியில் 27 பாகை வரை உச்சம் பெறுவார். அவர் உச்சமாகும் நட்சத்திரம் ரேவதியாகும். ரேவதியின் மிருகம் பெண் யானை என்பதாகும்.திருமணத்தடை உள்ள ஆண்கள், பெண் யானை உள்ள ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்து கடவுளை மனதார வணங்கி அங்குள்ள கோயில் யானைக்கு விருப்பமான உணவுப் பொருட்களை (தேங்காய் கரும்பு வாழைப்பழம்) தன் கையால் கொடுத்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். ஒரு செம்பு தண்ணீரால் யானை மூலம் தன் முகத்தில் தண்ணீர் அடிப்பது மிகவும் விசேஷமாகும். யானைப்பாகனுக்கு தட்சணையாக ஒரு வேஷ்டி துண்டு ரூ.101 அல்லது ரூ.201 என அவரவர் தகுதிக்கு ஏற்ப கொடுக்கவும். இதனை வெள்ளிக்கிழமை அன்று செய்யவும். இதன் மூலம், ஆண்களுக்கு திருமணத்தடை நீங்கி மங்கள வாழ்வு அமையும்.
பெண் யானைகள் உள்ள சில முக்கிய கோயில்கள்
* ராமநாத சுவாமி திருக்கோயில் ராமேஸ்வரம்.
* நெல்லையப்பர் கோயில்திருநெல்வேலி.
* மீனாட்சியம்மன் கோயில் மதுரை.
* அரங்கநாத சுவாமி திருக்கோயில் ரங்கம் திருச்சி.
* ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் திருவானைக்காவல்.
* ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் கும்பகோணம்.
* காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் திருக்கோயில்
* ஆண்டாள் கோயில் வில்லிபுத்தூர்.
* அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடையூர்.
* திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில்.
பெண்ணின் திருமணத்தடை நீக்கும் சூட்சுமம்
ஜோதிடத்தில் பெண்களுக்கு திருமணத்தை குறிக்கக்கூடிய கிரகம் செவ்வாய் ஆவார். எந்த லக்னம் ராசியாக இருந்தாலும், பெண்களின் ஜாதகத்தில் களத்திரகாரகன் யாரென்றால் செவ்வாய்தான். செவ்வாய் மகர ராசியில் 28 பாகை வரை உச்சம் பெறுவார் அவர் உச்சமாக நட்சத்திரம் அவிட்டம் ஆகும் அவிட்டம் நட்சத்திரத்தின் மிருகம் பெண் சிங்கம் என்பதாகும். திருமணத்தடை உள்ள பெண்கள் சிம்ம வாகனத்தில் வீற்றிருக்கும் காளி கோயிலுக்கு சென்று அந்த அம்மனுக்கு சிவப்பு பட்டாடை செவ்வரளி மாலை அணிவித்து வணங்குதல் வேண்டும். பிறகு பிரம்ம முகூர்த்த காலபூஜை (அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) அம்மனுக்கு நடைபெறும் மஞ்சள், பாலாபிஷேகத்தை கண்குளிர காண வேண்டும்.
பிரம்ம முகூர்த்த காலபூஜை கலந்து கொள்ள இயலாதவர்கள், மதியம் 12 மணி அளவில் நடைபெறும் உச்சிக்கால பூஜையில் கலந்து கொண்டு அம்மனுக்கு செய்யப்படும் மஞ்சள் பாலாபிஷேகத்தை பார்க்க வேண்டும். இதனை செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும். இதன் மூலம் பெண்களுக்கு திருமணத்தடை நீங்கி நல்ல வரன்கள் அமையும்.
சிம்ம வாகனம் கொண்ட பெண் தெய்வங்களின் முக்கிய கோயில்கள் சில
* காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்.
* விராலிமலை முருகன் கோயில்.
* கந்தக்கோட்டம் முருகன் கோயில் சென்னை.
* திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயில்.
* ராஜ துர்க்கை அம்மன் ஆலயம் திருவாரூர்.
* திண்டுக்கல் மகா துர்க்கை அம்மன் கோயில்.
* சாலாமேடு அஷ்ட வராகி அம்மன் கோயில் விழுப்புரம் மாவட்டம்.
* விருதுநகர் சொக்கநாத சுவாமி கோயில்.
* காரைக்கால் திருப்பட்டினம் ராஜ சோளீச்சுரர் கோயில்.
* திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில்.
எந்த கிரகம் எந்த நட்சத்திரத்தில் உச்சமாகும் என தெரிந்துகொண்டு, அந்த நட்சத்திரத்தின் அதிதேவதை அல்லது அந்த நட்சத்திரத்தின் மிருகம் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.