இந்த வார விசேஷங்கள்
16.8.2025 சனிகோகுலாஷ்டமி
கொண்டாட்டங்களில் சிறந்தது கோகுலாஷ்டமி கொண்டாட்டம். கோகுலாஷ்டமி கொண்டாட்டத்திற்கு முன்பாக, வீட்டை சுத்தம் செய்து, மாலை களால் அலங்கரிக்க வேண்டும். கிருஷ்ணரின் படங்களுக்கு பூக்கள், விளக்குகள் மற்றும் பிற பூஜை பொருட்களால் அலங்கரிக்கவும். பகவான் கிருஷ்ணருக்கு நெய் விளக்குகள் ஏற்றுவதும் நல்லது கிருஷ்ண அஷ்டோத்திரம் அல்லது சஹஸ்ரநாமம் பஜனைகள் பாடுவதும் சிறந்தது. பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கை சம்பவங்களையும் அவரது குணங்களையும் குழந்தைகளுக்குச் சொல்லி ஆராதனை செய்யவும். கோகுலாஷ்டமிக்கு பலவகையான இனிப்புகள், சுண்டல், போன்ற பல வகையான பிரசாதங்கள் படைக்கலாம். குறிப்பாக, கிருஷ்ணருக்கு பிடித்த அவல், வெண்ணெய் மற்றும் பால் அன்னம் போன்றவற்றை நிச்சயம் செய்யலாம்.
16.8.2025 சனி ஆடி அறுதி
ஆடி அறுதி என்பது ஆடி மாதத்தின் கடைசி நாளை குறிக்கும். இந்த நாளை, விவசாயிகள் நாற்று நடுவதற்கு நல்ல நாளாக கருதுகிறார்கள். மற்ற மாதங்களைப் போல அல்லாமல், தமிழ் மாத அடிப்படையில் வரும் ஆடி மாதத்திற்கு 32 நாட்கள் உள்ளன. ஆடி அறுதி எந்த கிழமையில் வருகின்றது என்ற அடிப்படையில் கூடுதல் சிறப்பைப் பெறும். இந்த ஆண்டு, ஆடி அறுதி 2025 ஆகஸ்ட் 16, சனிக்கிழமை அன்று வருகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளி இரண்டு நாட்களுமே ஆடி மாதத்தில் சிறப்பான, அம்மனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுவதால், இந்த ஆண்டு ஆடி அறுதி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் சனியோடு முடிவதால் அன்று பெரும்பாலான அம்மன் கோயில் மற்றும் அம்பாள் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
16.8.2025 சனி ஆடி கிருத்திகை
2025ம் ஆண்டின் ஆடி மாதத்தில் இரண்டு முறை கிருத்திகை நட்சத்திரம் வருகிறது. ஒரு மாதத்தில் இரண்டு முறை ஒரு நட்சத்திரம் வந்தால் இரண்டாவதாக வரும் நட்சத்திரத்தை தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என பஞ்சாங்க சாஸ்திரம் சொல்கிறது. அதன்படி இன்று ஆடிக் கிருத்திகை. காலை 8.27 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 17ம் தேதி காலை 6.48 மணி வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. கடன் சிக்கல்கள் வழக்குப் பிரச்னைகள், குடும்பத்தில் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் போன்ற பிரச்னைக்கெல்லாம் கிருத்திகை விரதம் நல்ல பலனைத் தரும் இன்றைய தினம் தேய்பிறை அஷ்டமி உடன் இணைந்து வருவது இன்னும் சிறப்பு இந்த நாளில் கால பைரவரையும் முருகப்பெருமானையும் அம்பிகையையும் கோகுலாஷ்டமி என்பதால் கிருஷ்ணரையும் வழிபடலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்றோ அல்லது வீட்டிலோ வழிபடலாம்.
16.8.2025 சனி மூர்த்தியார் குருபூஜை
பாண்டிய நாட்டை சேர்ந்த வணிகர் மூர்த்தி நாயனார்; இவர், திருவாலவாயில் (மதுரை) சொக்கலிங்க பெருமானுக்கு, தினமும் சந்தனம் அரைத்து கொடுப்பார். சமணத்தை ஏற்ற மன்னர், பாண்டிய நாட்டை கைப்பற்றி, சமணமதம் பரப்பினான். சந்தன கட்டைகள் கிடைக்காதவாறு செய்தார். தினமும் சந்தனம் அரைத்து கொடுக்கும் சேவையாற்றிய மூர்த்திநாயனார், தனது முழங்கையை சந்தனக்கல்லில் அரைத்தார். இறைவன் அருளால், பாண்டிய நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்று, அருளாட்சி நடத்தி, இறைவனடி சேர்ந்தார்.
16.8.2025 சனி புகழ்ச்சோழர் குருபூஜை
சோழநாட்டை ஆண்ட புகழ்சோழர், பல ராஜ்ஜியங்களை வென்று, சிவபெருமானையே பேரரசனாக எண்ணி வாழ்ந்தார். சிவனடியாருக்கும் தொண்டு செய்தார். இவரது வீரர்கள், அதிகன் என்ற அரசன்மீது படையெடுத்து வென்றனர். அங்கிருந்து வெட்டி வரப்பட்ட தலை களில் ஒன்று, திருநீறு அணிந்து, சடைமுடியுடன் இருந்தது. தவறு செய்துவிட்டதாக துடித்த புகழ்சோழர், அக்னியை வளர்த்து, சடைமுடி தலையுடன், தீயில் இறங்கினார்; பூமாரி பொழிந்து, இறைவன் புகழ்சோழனை ஆட்கொண்டார். ஆடிக் கிருத்திகை நாளில், மூர்த்தி நாயனார் மற்றும் புகழ்சோழ நாயனார் குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது.
17.8.2025 ஞாயிறு விஷ்ணுபதி புண்ணிய காலம்
விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது ஒரு சிறப்பான புண்ணிய நாளாகும், இது வருடத்திற்கு நான்கு முறை வரும். இந்த நாட்களில் சூரியன் ஒரு குறிப்பிட்ட ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குள் நுழையும் போது, மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு. இந்த நாட்களில் செய்யப்படும் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் பல மடங்கு பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது. இந்த நாட்களில் மகாவிஷ்ணுவை வழிபடுவதும், பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் சிறந்தது. விஷ்ணுவின் அருளைப் பெற ஒரு பொன்னான நேரம் இந்த நாள்.
17.8.2025 ஞாயிறு ஆவணி முதல் ஞாயிறு
ஆவணி மாதம் சிம்ம ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதம். சிம்மம் அவருடைய ஆட்சி வீடு. ஞாயிறு அவருடைய கிழமை. ஆவணி மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சூரிய வழிபாடு நடத்துவது மிகச்சிறந்த நன்மைகளைத் தரும். பல குடும்பங்களில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் காலை சூரியனுக்கு வெட்டவெளியில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது உண்டு. ‘‘ஆவணி ஞாயிறு பொங்கல்’’ என்று இதற்குப் பெயர். காலை சூரிய உதய காலத்தில், சூரிய வெளிச்சம் தருகின்ற வீட்டின் முன்புறம் அல்லது முற்றத்தில், கோலம் போட்டு, விளக்கு ஏற்றி, புதிய செங்கற்களை அடுக்கி, பானையில் பொங்கல் வைத்து, வாழை இலையில் படைத்து, சூரியனை வணங்குவது உண்டு. எல்லாக் கிரகங்களுக்கும் தலைவரான சூரியனை வணங்குவதன் மூலமாக சகல கிரக தோஷங்களும் நீங்கும். அன்றைக்கு காலையில் ஆதித்ய ஹிருதயம் முதலிய சூரிய ஸ்லோகங்களை அல்லது கீழே உள்ள சூரிய காயத்ரியைச் சொல்வது மிகச் சிறந்த பலனை அளிக்கும்.
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தன்னோ சூர்ய ப்ரசோதயாத்
19.8.2025 செவ்வாய் சர்வ ஏகாதசி
தேய்பிறை ஏகாதசியான காமிகா ஏகாதசி நாளான இன்று, பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்வது சிறப்பு. அடுத்த நாளான ஸ்ரீ ஜெயந்தி துவாதசியிலும் பெருமாளை பாரணை செய்து வணங்குவது வாழ்வில் நிம்மதியைத் தரும். துவாதசி நாளில், அன்னதானம் செய்வது தலை முறைக்கே பலன்களை வழங்கும். ஏகாதசி நாளில் கண்டிப்பாக அரிசி சாப்பிடக்கூடாது. விரதத்தின் முந்தைய நாள் இரவிலும், விரதத்தின் மறுநாளிலும் அரிசி சாதம் சாப்பிடக் கூடாது. விரதம் இருக்கும்போது, பழங்கள் சாப்பிடலாம். உப்புள்ள பண்டங்களை சாப்பிடக்கூடாது. துவாதசி பாரணையில் பருப்பு, முள்ளங்கி, கத்தரிக்காய், பீன்ஸ் உள்ளிட்டவற்றை உட்கொள்ளக் கூடாது.
20.8.2025 புதன் பிரதோஷம்
மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்த காலவேளையே பிரதோஷ வேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாதயிருமுறை பிரதோஷம் வரும். திரயோதசி திதியில் சூரிய மறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷகாலம். சிவ தரிசனம் செய்து எல்லையற்ற நற்பலனைப் பெறுக.
20.8.2025 புதன் ரமணாஸ்ரமம் கும்பாபிஷேகம்
ஸ்ரீ ரமண ஆசிரமம் திருவண்ணாமலையில் ரமண மகரிஷியின் நினைவாக, அவர்களின் சீடர்களால் கட்டப்பட்ட ஆசிரமமாகும். இது 1922 ஆம் ஆண்டில் இருந்து அத்வைத வேதாந்த நெறியை போதித்து வாழ்ந்த ரமண மகரிஷி மஹா நிர்வாணம் அடைந்த ஆண்டான, 1950 வரை இவரது வாசஸ்தலமாக இருந்தது. 16 வயதில், திருவண்ணாமலையை அடைந்து, அடுத்த 54 ஆண்டுகளுக்கு கோயில் நகரத்தை விட்டு வெளியேறாத அவரை, உலகமே தேடி வந்தது, ஸ்ரீ ரமண ஆசிரமம் ஆரம்பத்தில் சிறு கொட்டகையாக இருந்தது நாளுக்கு நாள் பக்தர்கள் அதிகரிக்க அதிகரிக்க கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்றைய ஆசிரமமாக உருமாறியது. செங்கம் சாலையில், திருவண்ணா மலைக்கு மேற்குப் பகுதியில், அருணாசல மலையின் அடி வாரத்தில் அமைந்துள்ளது. அவரது சமாதி கோயில் புண்ணிய இடமாகக் கருதப்படுகிறது. ஆசிரமத்தைக் காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஆர்தர் ஆஸ்போர்ன் என்ற எழுத்தாளர், இருபது ஆண்டுகள் ஆசிரமத்தில் தங்கியிருந்த போது, The Mountain Path என்னும் ஆங்கில இதழில் ஆசிரமத்தைப் பற்றியும், ரமண மகரிஷி மற்றும் அவரது போதனைகள் சார்ந்த பல புத்தகம் எழுதியுள்ளார். 1949இல் மௌனிசாது என்பவர் பல மாதங்கள் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். 1976இல் டேவிட் கோத்மன் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் ஆசிரமத்தில் தங்கியிருந்து ஸ்ரீ ரமண மகரிஷி தொடர்பான தலைப்புகளில் பதினான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார். அவர் தொடர்ந்து ஆசிரமத்திலேயே வாழ்ந்தார். இன்று இந்த ஸ்ரீ ரமண ஆசிரமம் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
21.8.2025 வியாழன் செருத்துணையார் குருபூஜை
செருத்துணை நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழநாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள தஞ்சாவூரிலே வேளாண் குடியில் தோன்றியவர் சிவபிரான் திருவடியில் மெய்யன்புடையவர். சிவபூஜைக்கு யார் பழுது செய்தாலும் உடனே கடுமையாக தண்டித்து விடும் வழக்கமுடையவர். அதனுடைய பின் விளைவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டார். திருவாரூர் திருக்கோயிலில் திருத்தொண்டு புரிந்து வந்த காலத்தில் பல்லவ மன்னன் மனைவி, சிவனுக்குரிய பூஜைப் பூக்களை முகர்ந்து பார்த்ததால் வெகுண்ட நாயனார் பட்டத்து ராணியின் மூக்கினை அறுத்தார். வன்தொண்டரான இவருடைய குருபூஜை நாள் ஆவணி மாதம் பூசம்.
21.8.2025 வியாழன் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனத்தில் பவனி
காரைக்குடிக்கு அருகில் உள்ள பிள்ளையார்பட்டி புகழ்பெற்ற கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி பிரம்மோற் சவம் துவங்கி நடந்து வருகிறது. அதில் இன்று கமல வாகனத்தில் விநாயகர் சர்வ அலங்காரத்துடன் பவனி வருகிறார்.
22.8.2025 வெள்ளி சர்வ அமாவாசை
இன்று ஆவணி மாத அமாவாசை தினம். எந்த லௌகீக சுப காரியங்களும் செய்யக்கூடாது. முற்றிலும் முன்னோர்கள் வழிபாட்டுக்குரிய தினம் முன்னோர் வழிபாடு முறையாகச் செய்வது நலம் தரும்.
22.8.2025 வெள்ளி அதிபத்த நாயனார் குருபூஜை
அதிபத்த நாயனார் நாகப்பட்டினத்தில் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். அதிபத்தர் தன்னுடைய சிவபக்தியின் காரணமாக, தான் பிடிக்கும் மீன்களில் சிறந்த ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சில நாட்களில் ஒற்றை மீனே பிடிபட்டாலும் அதனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து விட்டு, வெறுங்கையுடன் திரும்புவார். இதனால் வறுமையால் வாடினார். ஒரு சமயம் சிவபெருமான் அதிபத்தரை சோதிக்க எண்ணி ஒரு மீனும் பிடிபடாத நாளில், ரத்தினங்கள் பதிந்த தங்க மீனை வலையில் சிக்குமாறு செய்தார். ஆனால் தீவிரமான பக்தரான அதிபத்தர் அதனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். வறுமையிலும், பசியிலும் வாடிய பொழுதும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் வழமை தவறாத பக்தியை கொண்டவராக அதிபத்தர் விளங்கியமையால் அவரை நாயன்மார்களில் ஒருவராக போற்றுகின்றார்கள். திருநாகையில் பிறந்த அதிபத்த நாயனாரின் குருபூஜை தினம் இன்று ஆவணி ஆயில்யம்.