இந்த வார விசேஷங்கள்
1-11-2025 - சனிக்கிழமை - பேயாழ்வார் திருநட்சத்திரம்
ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் முதல் ஆழ்வார்களில் மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார் திருநட்சத்திரம். எல்லா பெருமாள் கோயில்களிலும் முதல் ஆழ்வார்கள் திருநட்சத்திர சாற்றுமறை நடைபெறும். ஐப்பசி சதயம் என்பது ராஜராஜசோழன் திரு நட்சத்திரமும் கூட. இன்று தஞ்சை பெரிய கோயில் ராஜராஜ சோழன் சதய நட்சத்திர விழா கொண்டாடப்படும்.
1-11-2025 - சனிக்கிழமை பிரபோதினி ஏகாதசி
சயன ஏகாதசி, பரிவர்த்தனை ஏகாதசி, உத்தான ஏகாதசி என்னும் பிரபோதன ஏகாதசி, ஸ்ரீவைகுந்த ஏகாதசி என்ற இந்த நான்கு ஏகாதசிகளையும் வைணவம் சிறப்பாகப் போற்றும் இந்த நாளில் துளசியால், பெருமாளை பூஜை செய்பவர்கள் வைகுண்டம் செல்வார்கள். துளசியைத் தரிசிப்பது, துளசியைத் தொடுவது, துளசியின் பெயரைச் சொல்வது, துளசியைத் துதிப்பது, துளசியை நட்டு வளர்ப்பது, துளசிக்குத் தண்ணீர் விடுவது, துளசியை பூஜை செய்வது என எதைச் செய்தாலும், பல யுகங்கள் வைகுண்ட வாசத்தை அளிக்கும் ஏகாதசி இது. மூவுலகங்களிலும் கிடைக்கப் பெறாத பொருளும், ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கப்பெறும். ப்ரபோதினி ஏகாதசி விரதத்தின் பலனால் பாபங்களில் மிகவும் பெரிய பாபமும் க்ஷண நேரத்தில் நஷ்டமடைகிறது. ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதத்தை அனுஷ்டிப்பவரின் பத்து தலைமுறை மூதாதையர் மற்றும் எதிர்கால சந்ததியினர் விஷ்ணுலோகம் அடைந்து வாசம் செய்யும் பாக்கியத்தை பெறுகின்றனர். நரகத்தில் அனேக துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அவருடைய பித்ருக்களும் விடுதலை அடைந்து விஷ்ணு லோகம் அடைந்து சுக வாழ்வு பெறுவர்.
2-11-2025 - ஞாயிற்றுக்கிழமை துளசி விவாகம்
பெருமாளுக்கு அதிக விருப்பமானது பத்ரம் எனப்படும் துளசி. துளசிச் செடி வளரும் வீட்டிலோ அருகிலோ தீய சக்திகள் நெருங்குவதில்லை. தினமும் கிருஷ்ணனை அர்ச்சித்த ஒரு துண்டு துளசித் தளத்தை சுவீகரித்தவன், நோயற்றவன், தீர்க்காயுள் கொண்டவன். பாபம் விலகியவன். துளசியால் கிருஷ்ணனுக்கு பூஜை செய்தவனின் முன்னோர்களும் கூட பாபத்திலிருந்து விடுதலை பெறுவார்கள்.பெரும் புண்ணியம் தரும் துளசி விவாகம் அல்லது துளசி கல்யாணம் இன்று அனுசரிக்க வேண்டும். இதில் சாளக்கிராமம் அல்லது நெல்லி மரக் கிளையுடன் துளசிக்கு சம்பிரதாயத் திருமணம் நடைபெறும். துளசி மகிமையைப் பற்றியும், துளசிக்கும் பெருமாளுக்கும் நடந்த துளசி விவாகம் பற்றியும் பத்மபுராணத்தில் செய்திகள் உண்டு.
2-11-2025 - ஞாயிற்றுக்கிழமை சாதுர்மாஸ்யம் முடிவு
இந்து சமயத்தில் சாதுர்மாஸ்ய விரதம் என்பது துறவிகள் மழைக்காலமான ஆடி மாத பௌர்ணமி முதல் ஐப்பசி மாத பௌர்ணமி வரை, நான்கு மாதங்கள் ஒரே இடத்திலிருந்து அனுசரிப்பார்கள். அந்த விரதம் இன்றுடன் நிறைவடைகிறது.
3-11-2025 - திங்கட்கிழமை சோம பிரதோஷம்
சோம பிரதோஷம் என்பது திங்கட்கிழமையில் வரும் சிறப்பான பிரதோஷமாகும். பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் திரயோதசி திதியில் வரும் ஒரு நாள் ஆகும். இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானையும் நந்தியையும் வழிபட வேண்டும். கோயிலுக்குச் செல்லும் பொழுது ஏதேனும் ஒரு பூவோ, பழமோ அல்லது விளக்கு எண்ணெயோ எடுத்துக் கொண்டு செல்லுங்கள். சிவன் கோயிலுக்கு அபிஷேகப் பொருள் தருவது மிகவும் விசேஷம். அபிஷேக காலத்தில் நந்தியை தரிசனம் செய்ய வேண்டும். அப்பொழுது ருத்ர நாம ஜபமும் செய்ய வேண்டும். நந்தியை வழிபட முந்தும் வினைகள் நீங்கும். பெரும்பாலான சிவாலயங்களில் பார்வதி சமேத சந்திரசேகரர் ரிஷப வாகன பிராகாரத்தில் வலம் வருவார். அந்த சுற்றுக்கள் அத்தனையிலும் கலந்து கொண்டு சிவனை வணங்க வேண்டும். அப்பொழுது நடைபெறும். வேத பாராயணம், திருமுறை பாராயணம் செவியால் கேட்க வேண்டும். சிவாலய தரிசனம் முடிந்த பிறகு வீட்டில் விளக் கேற்றி வைத்து உங்களுடைய பிரதோஷ விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
4-11-2025 - செவ்வாய்க்கிழமை சந்திர ஜெயந்தி
சந்திரனை மனோகாரகன் என்று சொல்வார்கள். சந்திரன் கெட்டால் புத்தி(மதி) கெட்டது என்பார்கள். ஒருவருக்கு நடக்கக் கூடிய நன்மை தீமைகளை சொல்லும் தசாபுத்தி காலங்களை சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் ஜோதிட சாஸ்திரத்தில் நிர்ணயம் செய்கிறார்கள். ஒருவருடைய ராசியை நிர்ணயிப்பது சந்திரன். அவர்கள் பிறந்தபோது சந்திரன் இருந்த வீடுதான் ராசி.
ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் சரியாக இல்லாவிட்டாலோ, ராகு - கேது - சனி போன்ற கிரக சேர்க்கையோடு பலமிழந்து இருந்தாலோ அவருக்கு மனச் சஞ்சலங்கள் அதிகமாக இருக்கும். எதிலும் தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சந்திர ஜெயந்தி தினமான இன்று பரிகார வழிபாடு நாள். மற்றவர்களும் செய்யலாம். சந்திரனுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி, வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றி, வழிபட சந்திர தோஷம் விலகும்.
4-11-2025 - செவ்வாய்க்கிழமை திருமூலர் குரு பூஜை
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெட்டு சித்தர்களில் ஒருவருமான திருமூலநாயனார் குரு பூஜை ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. திருமூலர் அவதாரத்தலம் ஆடுதுறை பக்கத்தில் உள்ள சாத்தனூர். நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலில் திருமூலர் வரலாற்றை சுருக்கமாகக் கொடுத்திருக்கிறார். திருமூலர் முக்தி பெற்ற தலம் திருவாடுதுறை. அவர் இயற்றிய திருமந்திரம் மிகச்சிறந்த தத்துவ நூல். அதிலே யோக சாஸ்திரம் முழுமையாக சொல்லப்பட்டிருக்கிறது. பத்தாம் திருமுறையாக வைத்துப் போற்றப்படுகிறது. பல சிவாலயங்களில் திருமூலர் குருபூஜை இன்றைய தினம் நடைபெறும்.
5-11-2025 - புதன்கிழமை அன்னாபிஷேகம்
பசியோடு உலகில் யாரும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் பரமாத்மா ஒவ்வொருவருக்கும் பல்வேறுவிதமான உணவு ஆதாரங்களை இந்த பூ உலகத்தில் படைத்திருக்கிறான். கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல் உணவே தந்து போற்றும் தயாபரன் அல்லவா அவன். அந்த ஈசனை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடும் உயர்ந்த வழக்கு வேறு எங்கும் இல்லை.
ஐப்பசி பௌர்ணமியில் எல்லா சிவாலயங்களிலும் அன்ன அபிஷேகம் நடைபெறும். முதலில் ஐந்து வகை பொருள்களால் அபிஷேகம் செய்து பின்பு, நன்கு வடித்து ஆறிய அன்னத்தைக் கொண்டு சிவபெருமானின் திருமேனியை மூடுவார்கள். இப்பொழுது காய்கறி, கனி வகைகள், அப்பளம், வடை போன்ற விஷயங்களையும் சேர்த்துக் கொள்கின்றார்கள். இப்படி அன்னாபிஷேகம் செய்வதால் அன்னதோஷம் விலகி பசி பட்டினி நீங்கும். எல்லா உயிர்களுக்கும் உணவு கிடைக்கும். பயிர்கள் பூச்சிகளால் பாதிக்காமல் விளைச்சல் பெருகும். மழைவளம் செழிக்கும். பயிர் வளம் கொழிக்கும்.
அன்ன அபிஷேகத்தை தரிசிப்பதன் மூலமாக அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும். லிங்கத்தின் வடிவில் ஒவ்வொரு அன்னப் பருக்கையும் அன்று விளங்குகிறது. அன்னாபிஷேகம் செய்து பாணலிங்கம் மீதுள்ள அன்னத்தைத் தவிர்த்து, ஆவுடையார் மீது உள்ள அன்னத்தை தயிர் கலந்து பிரசாதமாக எல்லோருக்கும் விநியோகிப்பார்கள். பாண லிங்கம் அன்னத்தை திருக்குள நீரில் கரைப்பார்கள். நீர்வாழ் உயிரினங்களுக்கு அது உணவாகும். எத்தனையோ கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும், கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் அன்ன அபிஷேகத்துக்கு மிகுந்த சிறப்பு உண்டு. அன்னாபிஷேக தினம் பௌர்ணமி என்பதால் கிரிவலம் வருவதும் சிறப்பு. கிரிவலம் வர இயலாத நிலையில் உள்ளவர்கள் சிவாலயத்தின் பிராகாரத்தை வலம் வரலாம்.
5-11-2025 - புதன்கிழமை நின்ற சீர் நெடுமாறன் குருபூஜை
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான பாண்டிய மன்னன் நெடுமாறன். செழியன் சேந்தன் என்கின்ற மன்னனுக்கு குமாரனாக பிறந்தவர். கி.பி. 640 முதல் 670 வரை ஆட்சி செய்தவர். மாறவர்மன், சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், அரிகேசரி பராங்குசன் முதலிய பட்டப் பெயர்கள் இவருக்கு உண்டு. இவருடைய மனைவி மங்கையர்க்கரசி அம்மையார். சோழ நாட்டைச் சேர்ந்தவர். சைவத்தில் ஊற்றமுடையவர். அரசி மங்கையர்க்கரசியும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர்தான். சமண மதத்தை தழுவிய தன்னுடைய கணவரை எப்படியாவது சைவ மதத்திற்குத் திருப்ப வேண்டும் என்று படாத பாடு பட்டவர் மங்கையர்க்கரசி அம்மையார்.
கூன் பாண்டியனை திருத்திப் பணி கொள்ள வேண்டும் என்பதற்காக இறைவன் வயிற்றில் சூலை நோயை கொடுத்து ஞானசம்பந்தப் பெருமானால் சைவ சமயத்துக்கு மடைமாற்றம் செய்யப்பட்டார். இவருடைய சைவ சமய ஊற்றத்தினாலும், தொண்டினாலும் பாண்டிய தேசம் முழுக்க இவர் காலத்தில் சைவ சமயம் மிகப் பிரகாசம் அடைந்தது. “நிறை கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என்று சுந்தரர், தம் திருத்தொண்டத் தொகையில் இவருடைய சிவத்தொண்டினையும் சிவபெருமான் மீது கொண்ட அன்பி னையும் வெளிப் படுத்துகிறார். அவருடைய குருபூஜை ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரம், இன்று.
6-11-2025 - வியாழக்கிழமை இடங்கழியார் நாயனார் குருபூஜை
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர் இடங்கழி நாயனார். கொடும்பாளூரை தலைநகராகக் கொண்டு வேளீர்குலத் தலைவனாக வாழ்ந்தவர். கொடும்பாளூர் என்பது திருச்சியில் இருந்து விராலிமலை வழியாக மதுரை செல்லும் சாலையில் புதுக்கோட்டை மணப்பாறை சாலை சந்திப்பில் உள்ள சிற்றூர். ஒருகாலத்தில் பேரூர்.
ஒரு நாள் நாட்டில் பஞ்சம் வந்தது. எங்கும் நெல்மணிகள் கிடைக்க வில்லை. அந்த ஊரில் சிவனடியார்களுக்கு அன்னம் இடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த ஒரு அன்பர், சிவனடி யார்களுக்கு அன்னம் இடுவதற்காக நெல்மணிகள் கிடைக்காததால், வேறு வழியின்றி அரசனுடைய அரண்மனைக்குள் புகுந்து, அங்குள்ள நெற்களஞ்சியத்தில் இருந்து நெல்லை எடுத்துக்கொண்டு சென்று, சிவனடியார்களுக்கு அன்னம் இட்டார். இதை அறிந்த அரண்மனைக் காவலர்கள் அந்த தொண்டரைப் பிடித்து வந்து மன்னன் முன் நிறுத்தினர்.
‘‘ஏன் நெற்களஞ்சியத்திலிருந்து நெல்லை கொள்ளை அடித்தீர்?” என்று மன்னர் கேட்டார்.
‘‘நான் சிவனடியார்களுக்கு மஹேஸ்வர பூஜை செய்து அன்னம் படைக்கும் வழக்கமுடையன். அன்னமிட எங்கும் நெல்மணிகள் கிடைக்கவில்லை. சிவனடியார்கள் வயிறு பசியால் காயும்போது நான் என்ன செய்வேன்? தங்கள் அரண்மனைக்குள் புகுந்து அரண்மனை பண்டாரத்தில் இருந்து நெல்லை எடுத்துச் சென்றேன்” என்று சொன்னவுடன் மன்னன், “அந்த நெற்களஞ்சியம் எனக்கு பண்டாரம் அல்ல ; இதோ சிவனடியார்களுக்கு அன்னம் படைப்பதே குறிக்கோளாகக் கொண்ட இந்த அன்பர் அன்றோ நமக்குப் பண்டாரம்(செல்வம்)” என்று சொல்லி அவரைப் போற்றி வணங்கினார்.
தம்முடைய நெற்களஞ்சியத்தில் இருந்த நெல்மணிகளை எல்லாம் எடுத்து ஏழை எளியவர்களுக்கு கொடுத்தார். பல இடங் களில் சிவத் தொண்டு புரிந்து கோயில்களுக்கு திருவிளக்கு ஏற்றுவதற்கு மானியங்கள் அளித்தார். சிவத்தொண்டை தன்னுடைய குலத் தொண்டாக கொண்ட மன்னன் இடங்கழி நாயனார் குருபூஜை ஐப்பசி கார்த்திகை. இன்றைய தினம்.