இந்த வார விசேஷங்கள்
25-10-2025 - சனிக்கிழமை தூர்வா கணபதி (சதுர்த்தி) விரதம்
பிள்ளையாருக்கு உரிய விரதங்களில் மிகச்சிறந்த விரதம் சதுர்த்தி விரதம். இந்த சதுர்த்தி ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையில் ஒரு முறையும் தேய்பிறையில் ஒரு முறையும் வரும். ஒவ்வொரு சதுர்த்தி விரதத்திற்கும் தனித்தனிச் சிறப்பு உண்டு. இன்றைய (25.10.2025) சதுர்த்தியில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம்தான் தூர்வா கணபதி விரதம். கணபதிக்கு பிடித்த அறுகம்புல்லை வைத்து அனுசரிக்கும் விரதம் இது.எப்படி அனுசரிக்க வேண்டும் என்று பார்ப்போம். ஒரு சுத்தமான இடத்தில் கோலமிட்டு, தரையின் மீது முழுவதும் அறுகம்புல்லை (தூர்வை) பரப்பவும்.அறுகம்புல்லின் மீது கணபதி விக்ரகம் அல்லது சிலையை வைக்கவும். பின்னர், அந்த அறுகம்புல் மீது விநாயகரை வைத்து பூஜை செய்யவும். விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை கனி வகைகள் பொரிகடலை முதலியவற்றை வைத்து நிவேதனம் செய்யவும். கணபதிக்குரிய ஸ்தோத்திரங்களையும் பாடல்களையும் காயத்ரி மந்திரத்தையும் சொல்லவும். இந்த விரதம் இடையூறுகளை நீக்கி வெற்றியைத் தரும்.
26-10-2025 - ஞாயிற்றுக்கிழமை குமார வயலூர் சஷ்டியில் கஜமுகாசுரன் வதம்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குமார வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவை விமரிசையாகக் கொண்டாடும் தலங்களில் ஒன்று. அருணகிரிநாதர் பாடிய பாடல்களால் சிறப்பு பெற்றது. இது திருமுருக கிருபானந்த வாரி யார் பெருமைப்படுத்திய தலங்களில் ஒன்று . அவர் பேசத் தொடங்கும் போது வயலூர் முருகப்பெருமான் அருளால் என்று தான் தொடங்குவார். இங்குள்ள சக்தி தீர்த்தம் மிகவும் புனிதமானது. இது முருகக் கடவுள் சூரபதுமனுக்கு பெருவாழ்வு தந்து மயில் வாகனமாக ஆக்கிக் கொள்வதற்கு முன்பே தோன்றிய கோயிலாகவும் போற்றப்படுகிறது. அனைத்து முருகன் தலங்களிலும் மயில் வாகனம் தெற்கு முகமாக அமைந்திருக்கும் ஆனால் வயலூரில் மட்டும் வடக்கு முகம் நோக்கி அமைந்துள்ளது எனவும் தல வரலாறு தெரிவிக்கிறது. இன்று சஷ்டி பெருவிழாவில் சூரனை வதம் செய்து பெருவாழ்வு தந்து பின் அன்ன வாகனத்தில் வலம் வருகிறார்.
27-10-2025 - திங்கட்கிழமை மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம்
வைணவ ஆசார்யர்கள் பரம்பரையில் (தென்னாச்சார்ய) கடைசியாக அவதரித்தவர் மணவாள மாமுனிகள். ஆதி சேஷனுடைய அவதாரமாகவும், பகவத் ராமானுசரின் அவதார மாகவும் அவதரித்தவர் மாமுனிகள். நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரிக்கு அருகில் ஐப்பசித் திங்கள் ‘‘மூல” நட்சத்தி ரத்தில் அவதரித்தார்.. மாமுனிகளின் இயற்பெயர் ‘‘அழகிய மணவாளர்” என்பது. மாமுனிகளுக்கு, ஆழ்வார்களின் அருளிச் செயல்களையும், பிள்ளை உலகாரியனின் சீரிய நூல்களையும் கற்பித்தார் பிள்ளை உலகாரியனின் சீடரான திருவாய் மொழிப்பிள்ளை என்கிற திருமலையாழ்வார். மணவாளரின் சீரிய பணியைக் கண்ணுற்று அவருக்கு எதிராசரிடம் பேரன்பு கொண்டவர் என்ற பொருளில் ‘‘யதீந்த்ரப்ரவணர்” என்ற விருதை வழங்கினார், அவரது ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை. பிள்ளை ஆணையிட்டபடி, உடையவரைப் பற்றி இருபது பாக்கள் கொண்ட ‘‘யதிராஜ விம்சதி” என்ற வடமொழி நூலையும், அழகிய மணவாளர் இயற்றினார். சில காலம் கழித்து, அழகிய மண வாளரை திருவரங்கம் ‘‘பெரிய கோயிலில்” வாழ்ந்து வைணவ சமயத் தலைமை பூண்டு பணி செய்ய ஆணையிட்டு, திரு நாட்டுக்கு எழுந்தருளினார், திருவாய்மொழிப்பிள்ளை. அழகிய மணவாளர் செந்தமிழ், வடமொழி என்ற இருமொழியி லமைந்த வைணவ சமய நூல்களையும் பரப்பும் உபய வேதாந்த பிரவர்த்தகாசார்யராய், புகழ்மிக்கவராக விளங்கினார். அவர் அவதரித்த ஐப்பசி மூலம் இன்று .
27-10-2025 - திங்கட்கிழமை ஐயடிகள் காடவர்கோன் குருபூஜை
காடவர்கோன் என்பது பல்லவ மன்னர்களைக் குறிக்கும். ஐயடிகள் காடவர்கோன் காஞ்சியில் பல்லவ மன்னராக ஆட்சி புரிந்தார். சைவ சமயத்தின் சீர்மிகும் 63 நாயன்மார்களில் இவரும் ஒருவர். திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட திருத்தொண்டத் தொகையில் ‘‘ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்” என்று சுந்தரரால் போற்றப்படுகிறார். இம்மன்னர் அரசுரிமையை தன் சிவனடித் தொண்டிற்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவதலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் 24 பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப்பெறுகின்றது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் இருக்கக் காணலாம். ஐயடிகள் காடவர்கோன் குருபூசை நாள்: ஐப்பசி மூலம்.
27-10-2025 - திங்கட்கிழமை சூரசம்ஹாரம்
சூரபதுமன் என்ற அரக்கன் இறைவனிடம் கடும்தவம்புரிந்து அரிய வரங்களை பெற்றான். அதன் மூலம் தேவர்களை கொன் றதுடன், தனக்கு நிகரான எதிரியே மூவுலகிலும் இல்லை என்ற ஆணவம் கொண்டிருந்தான் சூரபது மனின் அட்டகாசங்களைத் தாங்க முடியாத தேவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். உடன் சிவபெருமான், முருகப்பெருமானை சிருஷ்டித்தார்.முருகப் பெருமானுக்கும் சூரபதுமனுக்கும் நடந்த போரில் முருகக் கடவுள் தனது ஞான வேலால் சூர பதுமனை இரண்டாகப் பிளந்து, தேவர்களைக் காத்தருளினார். சூரபதுமனை வதம் செய்த முருகக் கடவுள், அவனை இரண்டாகப் பிளந்து, ஒரு பாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றி மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும்குமரவேள் கொண்டு அருளினார். இந்த நிகழ்வுகளே அனைத்து சுப்பிரமணிய ஸ்தலங்களிலும், கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்செந் தூர் என்னும் படை வீட்டில் இந்த சூரசம்காரப் பெருவிழா கோலாகலமாக நடைபெறும். ஐந்து நாட்களும் விரதம் இருந்து ஆறாவது நாள் காலை நீராடி விளக்குகள் ஏற்றி வைத்து முருகப்பெருமானை, திருப்புகழ், கந்த சஷ்டி, கந்தர் அனுபூதி முதலிய தோத்திரங்களால் துதிக்க வேண்டும். மாலை திருக்கோயில்களில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவில் கலந்து கொண்டு சூரசம்காரம் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உணவருந்த வேண்டும்.
28-10-2025 - செவ்வாய்க்கிழமை முருகன் திருக்கல்யாணம்
சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் அனைத்து முருகன் கோயில்களிலும் திருக்கல்யாணம் நடைபெறும். சூரபத்மனை அழித்த வெற்றிக்குப் பிறகு, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வு கந்த சஷ்டி விழாவின் முக்கிய பகுதியாகும். இரவு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது கந்தசஷ்டி காலத்தில் நம்முடைய வீட்டில் எழுந்தருளிய முருகப் பெருமான், எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காக திருக்கல்யாணத்தை தரிசித்து விட்டு வந்தபிறகு எளிமையான சிறிய வழிபாடு ஒன்றை செய்வது சிறப்பு. இதனால் வீட்டில் எப்போதும் முருகப் பெருமானின் அருளும் மகிழ்ச்சியும், செல்வ வளமும் நிறைந்திருக்கும். வீட்டில் கணவன், மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
29-10-2025 - புதன்கிழமை திருவோணம்
திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் ஆழ்வார் பாசுரங்கள் பாடுவது, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்ல பலன் கொடுக்கும். மறுநாள் அதிகாலையில் குளித்து பெருமாள் கோயிலுக்கு சென்று, துளசி மாலை சாற்றி வழி படலாம். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில், பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும். நிவேதனத்தில் உப்பு சேர்க்கக்கூடாது.
30-10-2025 - வியாழக்கிழமை முதல் ஆழ்வார்கள் திருநட்சத்திரம்
ஆழ்வார்கள் 12 பேர். அவர்கள் எழுதிய அருந்தமிழ் நூல் நாலாயிரத் திவ்ய பிரபந்தம். அவர்கள் வரிசை இது.
பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை
அய்யன் அருள்மாறன் சேரலர் கோன் துய்ய பட்ட
நாதனன் பர்த்தாள் தூளி நற்பாணன் நல் கலியன்
ஈதிவர் தோற்றத் தடைவாம் இங்கு
இந்த பிரபந்தம் முதல் ஆழ்வார்களிடமிருந்து மூன்று அந்தாதிகளாக அவதரித்தது. காலத்தால் முந்தியவர்கள் என்பதால் ‘‘முதல் மூவர்” என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் ஐப்பசி மாதம் திருவோணம் ,அவிட்டம் ,சதயம் எனும் அடுத்தடுத்த நட்சத்திரத்தில் அவதாரம் செய்தவர்கள்.
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்! - எப்புவியும்
பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று சிறப்பால்.
என்று இவர்கள் அவதரித்த நாள் சிறப்பை உபதேச ரத்தின மாலையின் ஒரு பாசுரம் கொண்டாடுகிறது.இவர்கள் மூவருமே அயோனிஜர்கள் அதாவது தாயின் கருவிலிருந்து பிறவாதவர்கள். எனவே, எல்லா திருமால் ஆலயங்களிலும் இவர்கள் அவதார தினம், இன்றும், நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.முதல் ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வார் காஞ்சி புரத்தில் (கச்சி) திருவெஃகாவில் ஐப்பசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் தோன்றினார். இவர் அருளியன 100 பாசுரங்கள் கொண்ட முதல் திருவந்தாதி ஆகும். (திருவெஃகா என்பது சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில் ஆகும்.) அடுத்தது பூதத்தாழ்வார். இவர் திருக்கடல் மல்லையில் (மாமல்லபுரம்) ஐப்பசி மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் அருளிய 100 பாசுரங்கள் கொண்ட நூல் இரண்டாம் திருவந்தாதி என்று அழைக்கப்படுகின்றது.மூன்றாம் ஆழ்வார் பேயாழ்வார். இவர் திருமயிலையில் (மயிலாப்பூர்) ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரத்தில் தோன்றினார். இவர் அருளிச் செய்தன 100 பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதி ஆகும். இவர்கள் பிறந்ததிலிருந்தே எம்பெருமான் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள். இறையனுபவத்தில் திளைத்திருந்தவர்கள். வாழ்வின் ஒரு தருணத்தில் திருக்கோவலூர் இடைகழியில் சந்தித்துக் கொண்ட இவர்கள் மூவரும், அப்போதிலிருந்து ஒன்றாகவே இருந்து, பற்பல திவ்ய தேசங் களுக்கு பயணித்தனர். இவர்கள் ‘‘ஓடித் திரியும் யோகிகள்” அதாவது எப்போதும் யாத்திரை செய்பவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இதனால் இவர்கள் அவதார விழா திருக்கோவலூரில் வெகுசிறப்பாக நடைபெறும்.
31-10-2025 - வெள்ளிக்கிழமை, திருமாலிருஞ்சோலை தைலக்காப்பு
மதுரைக்குப் பக்கத்திலே பிரசித்தி பெற்ற அழகர் கோயிலில் (திருமாலிருஞ் சோலை) சுந்தர்ராஜ பெருமாளுக்கு நடைபெறும் ஐப்பசி உற்சவம் வெகு சிறப்பானது. அழகர் கோயில் மேலே நூபுர கங்கை (சிலம்பாறு) என்று ஒரு தீர்த்தம் இருக்கிறது. அதன் அருகில் ராக்காயி அம்மன் கோயில் என்று ஒரு இடம் இருக்கிறது. தீர்த்தவாரி உற்சவத்திற்கு அழகர் காலையில் பல்லக்கில் புறப்படுவார் .வழி நெடுக தீப ஆராதனை காட்டி வழிபடுவர். கருட தீர்த்தம், அனுமன் தீர்த்தம், சோலைமலை முருகன் கோயில் என இங்கெல்லாம் சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதற்குப் பிறகு ராக்காயி அம்மன் கோயிலில் மாதவி மண்டபத்தில் எழுந்தருள்வார். அவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்படும். அதன் பிறகு பெரு மாளுக்கு மூலிகை மருந்துகள் கலந்த வாசனை தைலங்கள் சாத்தப்படும். தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இது கண்கொள்ளாக் காட்சியாகும்.
விஷ்ணுபிரியா