வாழ்வில் திருப்பங்களை தந்தருளும் திருவேங்கடநாதபுரம்
* தாமிரபரணி கரையில் ஒரே பகுதியில் மேல் திருப்பதி, கீழ் திருப்பதி மற்றும் காளகஸ்தியை போன்ற ஆலயமுள்ள தலமே திருவேங்கடநாதபுரம்.
* வியாச மாமுனிவரின் சீடரான பைலர், தாமிரபரணி கரையில் ஒரு கோடி மலரால் பூஜித்து, அர்ச்சனை செய்த இடம் ஸ்ரீ நிவாச தீர்த்த கட்டம்.
* வெங்கடப்ப நாயக்கர் ஸ்ரீ நிவாசர் தீர்த்த கட்டத்தில் மூழ்கி வணங்கினார். அசரீரீயாக பெருமாள் ‘ஆயிரம் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கு’ என்றார். நாயக்கரும் அன்னதானம் வழங்கி குழந்தை பேறு பெற்றார். நன்றிக் கடனாக, கோயிலை கட்டினார்; அந்த தலத்திற்கு வேங்கடநாதபுரம் என்று பெயரும் வைத்தார்.
* மூலவர் திருவேங்கடமுடையார் ஸ்ரீ தேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்கிறார்.
* மூலவர் தவிர தனிச்சந்நதிகளில் ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்கள் வீற்றிருக்கின்றனர். விஷ்வக்சேனருக்கும் தனிச் சந்நதி உண்டு.
* திருவேங்கடநாதபுரத்துக்கு திருவணாங்கோயில், சங்காணி, குன்னத்தூர் என்ற சுவேதா மலை, சாலிவாடிஸ்வரம், வைப்பராச்சியம் ஆகிய பெயர்கள் உண்டு. தற்போது இத்தலத்தை திருநாங்கோயில் மற்றும் மேலத் திருவேங்கடநாதபுரம் என்றழைக்கிறார்கள்.
* திருப்பதி ஏழுமலையானுக்கு செலுத்த வேண்டிய நேர்ச்சையை தென் திருப்பதியான திருவேங்கடநாதபுரத்தில் செலுத்தலாம். ஆனால் இங்கு நேர்ந்து கொள்ளும் நேர்ச்சையை திருப்பதியில் செலுத்த முடியாது.
* குழந்தைப் பேறுக்காக உருளிப் பானையில் பொங்கலிட்டு தானம் செய்து அந்தப் பானையை கொடிமரத்தடியில் கவிழ்த்து வைக்கின்றனர். விரைவில் குழந்தை பாக்கியம் பெறுகின்றனர்.
* மணி மண்டபத்திற்கு எதிரே மதில் சுவரின் உட்புறம் தென்கிழக்கு மூலையில் தலவிருட்சமான நெல்லிமரம் உள்ளது.
* திருப்பதி மலை வெண்கற்களால் ஆனதுபோலவே சங்காணி மலைக் குன்றும் வெண் கற்களால் ஆனது.
* தெற்குப் பிராகாரத்தில் உள்ள வெண்கல கருடன் இருபுறமும் மடித்த இறக்கைகளுடன் கையில் சங்கு - சக்கரத்துடன் அபூர்வமாகக் காணப்படுகிறார்.
* இத்தலத்தில் உள்ள கீழ் திருப்பதி வரதராஜப் பெருமாள், பிருகு முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவர் சதுர் புஜத்துடன் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார்.
* பெருமாளின் வலக்கரம் ஒன்றில் சக்கரமும், மற்றொரு கரத்தில் தன ரேகையும் ஓடுகிறது. இடதுபுற கரங்களில் ஒன்றில் சங்கும், மற்றொன்றில் கதாயுதமும் காணப்படுகின்றன.
* இவரை தனரேகை பெருமாள், வாழவைக்கும் பெருமாள் என்கிறார்கள். தனரேகை கரத்தில் பணம் வைத்து எடுத்துச் சென்றால் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாதாம்.
* பெருமாளின் கையில் தனரேகை ஓடும் காரணத்தால் இதை சுக்கிர தலம் என்பர்.
* காளஹஸ்திக்கு இணையான தலமாக இங்குள்ள சிவாலயம் விளங்குகிறது.
* கோத பரமேஸ்வரரும், அன்னை சிவகாமியும் சர்ப்பதோஷம், நாகதோஷம் நீக்குகின்றனர். தடைபட்ட திருமணங்கள் விரைவில் நடக்கின்றன.
* இத்தலத்திற்கு நெல்லை சந்திப்பிலிருந்து டவுன் பஸ் வசதி உள்ளது. ஆட்டோவிலும் செல்லலாம்.