திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்
திருச்செந்தூர்
தொடர்ச்சி...
2. வெள்ளை சாத்தி - ஏழாம் நாள் விழாவில் நள்ளிரவில் சிவப்பு மலர்களை முற்றிலும் களைந்துவிட்டு, முற்றிலுமாக வெண்ணிற மலர்களால் அலங்கரிப்பர். ஆபரணங்கள் ஏதும் அணிவிப்பதில்லை. அதிகாலையில் விரைவாக ஊர்வலம் சென்று வருகிறார். இதனால், “பிரம்மனும் நானே” என்று உணர்த்துகிறார்.
3. பச்சை சாத்தி - எட்டாம் திருநாள் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை மயில் வாகனனை, பச்சைப் பட்டாடை, பச்சை மலர்களால் அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துச் செல்வர். எட்டு வீதிகளிலும் செல்லும் இவருக்குப் பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்வதால் வீதிகளிலெல்லாம் பன்னீர் சேறாகக் காணப்படும். “பச்சை நிற திருமாலும் நானே” என்றுணர்த்துகிறார் செந்தில் ஆண்டவன்!
கொடிமரத்தின் கீழ் நின்று இடப்புறம் திரும்பினால் ஆறுமுகப் பெருமானின் பிரதிபிம்பம் எனப்படும் குமர விடங்கரைக் காணலாம். இவர்தான் ஷண்முகருக்கு உற்சவ மூர்த்தி. வலக்கைகளில் முன் கை அம்பேந்திய தோற்றத்துடன் உள்ளது. பின் கையில் சக்தி வேல் உள்ளது. இடக்கையில் முன் கை வில்லும் பின் கை வச்சிரப்படையும் தாங்கி உள்ளன. வள்ளி தெய்வயானை சமேதராக உள்ளார். திருமண நிகழ்ச்சிகளில் இவரே மாப்பிள்ளையாக எழுந்தருளுவதால் இவரை மாப்பிள்ளை சுவாமி என்றழைக்கின்றனர்.
கொடிமரத்திற்கு நேராக உள்ள வெளி மதில் சுவரில் ஒரு துளை உள்ளது. அதன் வழியாகப் பார்த்தால் கடல் அலைகளைக் கண்டும் அலை ஓசையைக் கேட்டும்
மகிழலாம்.முதல் சுற்றில், பக்தர்கள் கூட்டத்தைச் சமாளிக்க தடுப்புகள் போடப்பட்டிருப் பதால், அப்பிரதட்சிணமாக வந்து தான் தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்க முடியும். பின்னர் மீண்டும் பிரதட்சிணமாக நடந்து வள்ளியம்மை சந்நதிக்கு வருகிறோம்.
இச்சா சக்தியான வள்ளியம்மையின் சந்நதியே இறைவனுடைய பள்ளியறையும் ஆகும். வெள்ளியினால் செய்யப்பட்ட பீடத்தின் மேல் வள்ளி ஒருக்களித்து ஒரு புறம் திரும்பிப் படுத்திருப்பது போன்ற திருவுருவம் வள்ளியின் அறையில் உள்ளது. இவ்வுருவமே நாள்தோறும் பள்ளியறைச் சொக்கர் அருகில் வைக்கப்படுகிறது.காலை 4.30 மணிக்கு ஆயத்த சங்கு ஒலித்ததும் அனைவரும் ஆயத்தமாகிறார்கள். கதவு திறந்ததும் வள்ளி சந்நதி முன் சுப்ரபாதமும், செந்தூர் திருப்பள்ளியெழுச்சியும் பாடுகின்றனர். பள்ளியறைச் சொக்கரை வெள்ளிப் பல்லக்கில் அமர்த்தி, நெய்ப்பந்தம் பிடித்து, ஆடிப் பாடிய வண்ணம் முதல் பிராகாரம் வழியே வலம் வந்து ஆறுமுகப் பெருமான் திருப்பாதங்களருகே வைப்பார்கள். பின்பு மூலவருக்கும் ஷண்முகருக்கும் தீபாராதனை நடத்தப்படுகிறது.
சுந்தர ஞான மென்குற மாது
தன் திரு மார்பில் அணைவோனே
சுந்தரமான செந்திலில் மேவு
கந்த சுரேசர் பெருமாளே
- என்று பாடுகிறோம்.
தெய்வயானை சந்நிதிக்குப் போகும் வழியில் யாகசாலையையும் பின் புறம் சங்கரநாராயணர், காசி விசுவநாதர் - விசாலாட்சி, வேதபுரீசுவரர், வாதபுரீசுவரர், ஏகாம்ப்ரநாதர் ஆகியோரையும் தரிசிக்கலாம்.தெய்வயானை சந்நதியைச் சுற்றி முன்புறம் வரும் போது பக்கவாட்டுச் சுவரில் புடைப்புச் சிற்பமாக வள்ளி ஆலோலம் பாடிய வண்ணம் பறவைகளை விரட்டும் காட்சியும் முருகன் தரிசனம் தருவதும் மிக நுண்ணிய முறையில் செதுக்கப்பட்டுள்ளன. தெய்வயானை இரண்டு அடி உயரமுள்ள உருவமாக விளங்குகிறார். கந்த சஷ்டிக்கு மறு நாள் முதல் பங்குனி உத்திரம் வரை கோயில் விழாக்களில் இவர் எழுந்தருளுகிறார்.வள்ளி தெய்வயானை தமக்குப் பாத தீட்சை அருளியதை கந்தர் அந்தாதிச் செய்யுளொன்றில் மிக அழகாகக் குறிப்பிடுகிறார் அருணகிரியார்.
செவிக்கு உன் தவா ரண நல்கு இசை பூட்டவன் சிந்தை
அம்செ வி குன்ற வாரணம் அஞ்சல் என்று ஆண்டது, நீண்ட கன்ம
செ இக்குன்றவா ரண வேலாயுதம் செற்றது உற்றன
கட்செவிக்குன்ற, வாரண வள்ளி பொற்றாள் மற்றென் தேடுவதே
[நாகாசல வேலவனே! உன் திருப்புகழை நான் செவிமடுத்ததும், உன்னுடைய சேவல், என் ஆத்மாவை அபயம் கொடுத்து ஆண்டு கொண்டது. உன்னுடைய வேலாயுதம், ஜனனத்திற்குக் காரணமான ஆசைகளை தகர்த்துவிட்டது. உன் தேவிமார்களின் திருவடி தீக்ஷையும் கிடைத்தது. இனிமேல் நான் தேட வேண்டியது ஒன்றுமே இல்லை.]
வள்ளி தெய்வயானையைத் தொழுது பிரதட்சிணமாக வரும்போது சண்டிகேசுவரரைத் தரிசிக்கிறோம். சண்டிகேசுவரரைத் தரிசித்துத் திரும்பும் போது எதிரே ஒரு நுழைவாயில் தென்படுகிறது. இதன் வழியே வந்தால் இரண்டாம் சுற்றாலைக்கு வட பகுதியில், போர்க்களத்தில் தன் மருமகன் விசுவரூப தரிசனம் அளிக்கவிருக்கிறான் என்று கேள்விப்பட்டு நாரதரோடு இங்கு வந்த வேங்கடாசலப் பெருமாளைத் தரிசிக்கலாம். தனிச் சந்நதியில் நின்ற கோலத்தில் விளங்குகிறார். எதிரே பன்னிரு ஆழ்வார்கள் உள்ளனர். கருடாழ்வார் கம்பீரமாக நிற்கிறார். மணற்குன்றிலே அமைந்த பாண்டியர் காலக் குடவரைக் கோயில் இது.
நாகம் குடை பிடித்தபடி நிற்க சந்தான கிருஷ்ணன் அதன் கீழே நிற்கிறார். இருபுறமும் யானைகள் குடத்து நீரைச் சொரிய, கஜலட்சுமி காட்சி அளிக்கிறார். காலருகே ஸ்ரீதேவி பூதேவி உள்ளனர். கொப்பூழ்க் கொடியிலிருந்து எழுந்த தாமரையில் பிரமன் அமர்ந்துள்ளார்.
ஒரு காலத்தில் இவ்விடம் சந்தன மலையாக இருந்ததற்கு சாட்சியாக குன்றின் ஒரு சிறு பகுதி இங்கு விளங்குகிறது.கோயிலில் நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய சந்நதி இரண்டாம் சுற்றில் மேற்குப் பகுதியில் விளங்கும் சூரசம்ஹார மூர்த்தி. மயில் மீதமர்ந்த ஆறுமுகனின் அற்புதமான திருவுருவம். மயில் அவரைச் சுமந்து கொண்டிருக்கும் பெருமிதத்தில் மிகக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. முருகனைச் சுமந்து கொண்டு போர்க்களத்திற்குச் செல்கிறேன் என்ற பெருமிதமோ? அருகில் சூரனின் சுதைச் சிற்பத்தைக் காண்கிறோம்.
[இவர் இக்காலத்தில் சத்ரு சம்ஹார மூர்த்தி என்றே அழைக்கப்படுகிறார். சத்ருக்களின் தொல்லையிலிருந்து விடுபட பலர் இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.] ஐயன் கைவேலைக் கண்டு அருண கிரியாரின் வேல் விருத்தப் பாடலை இங்கு சமர்ப்பிக்கிறோம்.
வெங்காளகண்டர் கைச் சூலமும் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர்பதி குலிசமும் சூரன் குலம் கல்லி
வெல்லா எனக் கருதியே
சங்க்ராம நீ ஜயித்து அருளெனத் தேவரும்
சதுர்முகனும் நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனி ஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசனக்
கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவிஅமலை
கெளரி காமாஷி சைவ
சிங்காரி யாமளை பவாநி கார்த்திகைகொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொன் திருக்கை வேலே.
சித்ரா மூர்த்தி