திருமூலரின் அட்டாங்க யோகமும் மருத்துவமும்
இந்தியாவில் தோன்றிய ஒரு கலை அல்லது தத்துவம் யோகாசனம் ஆகும். உடல், மனம் மற்றும் ஆன்மிகத்தை இணைக்கும் பயிற்சி இந்த ‘யோகா’ கலை. பதஞ்சலி முனிவர் உருவாக்கினார் என்பது கருத்து. பதஞ்சலி முனிவரின் கூற்றுக்கிணங்க மூன்று குற்றங்களையும் நீக்கும் சாத்திரம் ’யோகா’கலை ஆகும். அவை 1. ‘வாக்குக் குற்றம்’ இதனை சப்த சாத்திரம் என்பர். 2 ‘காயம்’ இதனை மருத்துவ சாத்திரம் என்று கூறுவர். மூன்றாவது ‘மனக்குற்றம்’ இதனை யோக சாத்திரம் என்று அழைப்பர்.
யோகா என்பது சமஸ்கிருத சொல். யோகாவின் தந்தை பதஞ்சலி முனிவராக இருந்தாலும் கூட, நம் தமிழ் மொழியில் கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே எழுந்த சங்க இலக்கியங்களிலும், தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் யோகக் கலையின்அடிப்படையான மனக்கட்டுப்பாடு பற்றி அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் ‘‘நாலிருவழக்கின் தாபத பக்கமும் ‘‘(தொல்காப்பியம் நூற்பா 1021) என்று புறத்திணை இயலின் வாகைத் திணையின் சிறப்பு இலக்கணம் கூறப்படுகிறது. இதற்கு உரை வகுத்த நச்சினார்க்கினியர் தவம் செய்து யோகம் புரிவதற்குரிய எட்டு யோகா பயிற்சிகளை விளக்குகிறார்.
* இயமம் - ஒழுங்கு நெறிமுறை.
* நியமம் - கவனம்
* ஆசனம் - யோக நிலை அதாவது இருக்கு.
* பிராணாயாமம் - வழி நிலை அதாவது மூச்சுப் பயிற்சி.
* பிரத்தியாகாரம் - தொலைநிலை அதாவது மனதை ஒரு முகப்படுத்துதல்.
* தாரணை - புரைநிலை.
* தியானம் - நினைவு.
* சமாதி - மன ஒருமைப்பாட்டின் உச்சம்.
அதாவது பூரண நிலை. இந்த எட்டு யோக நிலையையும் கண்டவர்கள் சித்தர்கள் அல்லது முனிவர்கள் ஆவார்கள்’’ என்ற விளக்கத்தை நச்சினர்க்கினியார் கூறுகிறார். அப்படிப்பட்ட தமிழ்ச்சித்தர் நம் திருமூலர். ‘‘ஒருமையில் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து’’ என்று வள்ளுவர் பெருந்தகை கூறுகிறார். மெய், வாய், கண், மூக்கு, செவி என்று ஐந்து உறுப்புகளையும் அடக்கி ஆளத்தெரிந்தவன் ஏழு பிறவியிலும் சிறந்து விளங்குவான் என்கிறது திருக்குறள். இந்த யோக்கலையின் அடிப்படை அம்சம் இந்த ஐம்புலன்களையும் அடக்கி ஆளுதல் என்பதாகும்.
இதனைத் திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார். திருமூலரின் திருமந்திரத்தில் பல மருத்துவ நன்மைகளும் இருப்பதை, இன்று மருத்துவ அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமூலர்
சித்தர்களில் குறிப்பிடத்தக்கவர் திருமூலர். இவர் காலத்தால் முற்பட்ட சித்தர் எனலாம். பிற்கால சித்தர்கள் பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே வருகின்றனர். ஆனால் திருமூலர் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டாகும். திருமூலர் நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். பல அற்புதங்கள் செய்தவர். கூடுவிட்டு கூடுபாயும் கலையைப் பயின்றவர். பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரம் இவர் பாடியது. குறிப்பாக இவர் பாடல்களில் மருத்துவ முறைகள் உள்ளதை இன்றைய அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
திருமூலரின் அட்டாங்க யோகம்
தேகப் பயிற்சி மூலம் பல நன்மைகள் உடலுக்குள் ஏற்படும் என்பதை திருமூலரின் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. யோகக் கலையின் மூலம் தியானம் செய்வதால் பல நன்மைகள் மனிதர்களுக்குக் கிடைக்கின்றன. திருமூலர் கண்டறிந்தது மருந்தில்லா மருத்துவமாகும்.‘‘உங்களால் தலை உச்சியின் மேல்கவனம் வைத்து தியானம் செய்து அதில் கிடைக்கும் மகிழ்வை உணர முடிகிறதா? அந்த மகிழ்வை உணர்ந்தால் நீங்கள் வானுலகில் உள்ள தேவர்களை விட மேலானவர்கள்’’ என்று திருமூலர் கூறுகிறார். இதனை அகத்தியானம் என்று அழைக்கலாம். திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் சைவசமயத் தத்துவம் கூறப்படுகிறது. அதாவது, பசு, பதி, பாசம் என்ற முப்பெரும் உண்மைகளை விளக்குகிறது. மூன்று பெரும் உண்மைகள் விளக்குகிறது. மூன்று பெரும் உண்மைகள் ஆணவம், கன்மம், மாயை ஆகும்.
இவற்றை மும்மலங்கள் என்று அழைக்கிறார்கள். மும்மலங்களையும் நீக்கிய இந்த உயிரானது இறைவனை அடைகிறது.மும்மலங்களை ஆசை என்கிற பாசம் எனவும், அவை இருக்கின்ற இடமாகிய நம் உடல் பசு எனவும், மும்மலங்களையும் நீக்கிய பசுவாகிய நம் உயிர் அடையக் கூடிய இடம் இறைவனாகிய பதி எனவும் சிவ தத்துவத்தை திருமந்திரம் உறைகிறது. யோக நிலையில் கடவுளை அடையலாம் என்கிறது இந்தத் திருமந்திரம். திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் மூவாயிரம் பாடல்களை இயற்றியிருக்கிறார். பதினெட்டுச் சித்தர்களில் குறிப்பிடத்தக்கச் சித்தர் இவர்.
திருமூலர் பாடலில் மருத்துவம்
திருமூலர் இயற்றிய திருமந்திரப் பாடல்களிலுள்ள தியானக் கலையை நாம் பின்பற்றினால் நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுப் பல வகையான நோய்கள் தீர்க்கப்படுவதை இன்றைய மருத்துவ உலகம் கண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக அட்டாங்க யோகத்தின் நாலாவது யோகம் ‘‘பிராணாயாமம்’’ அதாவது மூச்சுப் பயிற்சி. Yogic breathing, yoga breathing, breathing regulation என்று இதனை ஆங்கிலத்தில் அழைப்பர். இந்தப் பயிற்சி மூலம் நம் உடலின் பல நோய்களைத் தீர்க்கலாம் என்று இன்றைய மருத்துவ உலகம் நிறுவி இருக்கிறது. எடுத்துக்காட்டாக திருமூலரின் ஒரு பாடலை அறிவியல் முறையில் ஆராய்ச்சி செய்து, அதனை உயிர் வேதியலின் நுட்பங்களின் மூலம் அறிய முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
‘‘ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் அறுபத்துநாலதில் கும்பகம்
ஊறுதல் முப்பத்திரண்டதில் ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகம் ஆமே’’
(திருமந்திரம் பாடல் எண்-568)
என்று திருமூலரின் பாடல் மூலமாகப் புற்றுநோயைத் தீர்க்கலாம் என்று கண்டறிந்துள்ளது மருத்துவ உலகம்.இப்பாடலில் பூரகம் என்பது மூச்சை இழுத்தல். கும்பகம் என்பது மூச்சை அடக்குதல். ரேசகம் என்பது மூச்சை வெளி விடுதல் இந்த அடிப்படையில் எத்தனை முறை இந்த மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்? என் கணக்கை மேற்கண்ட இந்த பாடல் சொல்கிறது.
அதன் அடிப்படையில் இந்த பாடலில், இலக்கண முறைப்படி எழுத்துக்களின் மாத்திரை அளவு கொண்டு அளவிடப் படுகிறது. ஒரு மாத்திரை அளவு என்பது கண் இமைக்கும் அல்லது கை நொடிக்கும் கால அளவாகும். எழுத்துகள் ஒலிக்கும் கால அளவை மாத்திரை என்று அழைப்பர். இதன் அடிப்படையில் இப்பாடலில் 16 மாத்திரை அளவுள்ள நேரம் மூச்சை இழுத்து, 64 மாத்திரை அளவு நேரம் மூச்சை அடக்கி, பின்பு 32 மாத்திரை அளவு நேரத்தில் மூச்சை வெளிவிட வேண்டும் இது திருமூலர்கூறும் பிராணாயாமம் ஆகும்.
இந்த அடிப்படையில் மூச்சுப் பயிற்சியை செய்து அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகம் சில ஆய்வாளர்களுடன் இணைந்து, உயிர் வேதியலின் நுட்பங்களின் மூலம் மனிதர்களுக்கு இந்த யோகப் பயிற்சி செய்வதால் உடலில்ஏற்படும் மாற்றங்களை கண்டறிய முற்படுகிறது. அப்படி மூச்சுப் பயிற்சி செய்ததன் விளைவைப் பின்பு ஆராய்ச்சி செய்கிறது.
மூச்சுப்பயிற்சி செய்யும் முறை
‘‘ஓம் நமசிவாய’’ என்று நாம் கூறினால் அது எட்டு மாத்திரை அளவாகும். இதனை அடிப்படையாக வைத்துக் கொண்டு இந்த மூச்சுப் பயிற்சியை நாம் செய்யலாம். இரண்டு முறை ஓம் நமசிவாய என்று கூறினால் எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவு நேரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். உள் இழுத்த மூச்சை எட்டு முறை ஓம் நமசிவாய என்று கூறினார் எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவு நேரம் அந்த மூச்சை உள்ளே வைத்திருக்க வேண்டும்.
பின்பு, நான்கு முறை ஓம் நமசிவாய என்று கூறினால் எவ்வளவு நேரம் ஆகுமோ அந்த அளவு நேரம் நாம் உள்ளே அடக்கி வைத்திருந்த மூச்சை மெதுவாக வெளிவிட வேண்டும் இதுதான் இந்த மூச்சுப் பயிற்சி செய்யும் முறை. இதனைத்தான் மேற்கண்ட பாடல் விளக்குகிறது.அமெரிக்க பல்கலைக்கழகம் இந்த முறையாலான மூச்சுப் பயிற்சியை சில மனிதர்களைச் செய்யச் சொல்லியும் இன்னும் சில மனிதர்களை அமைதியாக இருக்கச் சொல்லியும் ஆராய்ச்சி நடத்தியது. ஆராய்ச்சியின் முடிவில் திருமூலரின் பிராணாயாமம் முறையில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டவர்களின் உடலில் ஏற்படும் மாற்றத்தை அவர்களின் உமிழ்நீர் மூலமாகச் சோதனை செய்தது.
அவ்வாறு செய்யும்பொழுது மூச்சுப் பயிற்சி செய்தவர்களின் உடலில் நரம்பு வளர்ச்சிக் காரணிகள் அதிக அளவில் தூண்டப்படுகிறது என்பதை கண்டறிந்தது. மேலும், புரத அளவு அதிகரித்துள்ளதையும் இப்புரதங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை தூண்டும் வகையில் அமைந்ததையும் கண்டறிகிறது. மேலும், மன அழுத்தம் உருவாக்கும் மூலக்கூறுகள் குறைந்துள்ளதையும் கண்டறிந்துள்ளது. முக்கியமாக 22 புரதங்கள் அதிகரித்துள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
அவை நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி இன்றைய அறிவியல் உலகிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கக்கூடி புற்று நோய் உற்பத்தியாவதை தடுப்பதில் துணை புரிகிறது என்ற வியக்கத்தக்க உண்மையையும் கண்டறிந்தார்கள். இந்த ஆராய்ச்சியை கேம்பிரிர்ஜ் பல்கலைக்கழகம் தனது கட்டுரையில் வெளியிட்டது. மூச்சுப் பயிற்சியின் மூலம் புற்றுநோயைத் தடுப்பதற்கான மூலக்கூறுகள் தூண்டப்படுகின்றன என்று அந்த ஆராய்ச்சி முடிவு கூறுகிறது. இது மருத்துவ உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய சாதனை ஆகும்.
திருமூலரின் மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் ஆய்வினை தமிழ்நாட்டில் புதுக்கோட்டைக்கு அருகாமையிலுள்ள கறம்பக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவடிவேல் பாலசுப்பிரமணியன் என்ற தமிழர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சில ஆய்வாளர்களுடன் சேர்ந்து இந்த ஆய்வினை நடத்தி ஆய்வின் முடிவில் புற்றுநோயைத் தடுக்கும் சக்தி திருமூலரின் அட்டாங்க யோகத்தில் அதாவது, பிராணாயாமம் யோகத்திற்கு உண்டு என்பதை நிறுவுகிறார்.
இதன் மூலம் மருத்துவ உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் திருமூலர். குறிப்பாக மருந்தே இல்லாமல் மருத்துவம் பார்க்கும் முறையினை பழங்காலத்திற்கு முன்னரே தமிழ்ச் சித்தர் திருமூலர் கண்டறிந்து, உலகத்தில் மிகப்பெரிய மருத்துவராகத் திகழ்ந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. எனவே, திருமூலரின் திருமந்திரம் நம் தமிழர்களுக்கும் மருத்துவ உலகிற்கும் கிடைத்த அருமருந்து என்பது திண்ணம்.
முனைவர் இரா.கீதா உதவிப் பேராசிரியர்