தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்துக்கள் முப்பது

மகாளய பட்சம் 8-9-2025 முதல் 22-9-2025

Advertisement

1. முன்னுரை

நாம் ஆவலோடு எதிர்பார்த்த இரண்டு முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் மாதத்தில் பிரதானமாக இருக்கின்றன. ஒன்று ஆவணி மாத திருவோணத்தை ஒட்டி வரும் வாமன ஜெயந்தி. (4.9.2025). வாமன ஜெயந்தியை கேரளாவில் ஓணம் பண்டிகை என்று பிரம்மாண்டமாகக் கொண்டாடுகிறார்கள். தமிழ் நாட்டிலும் திருவோணம் என்பதால் வைணவத் திருக்கோயில்களில் விசேஷமான திருமஞ்சனமும் புறப்பாடும் நடைபெறுகின்றன.

கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயிலில் இது இன்னும் சிறப்பு. இந்த ஓணம் பண்டிகையை அடுத்து சந்திர நாட்காட்டி முறையில் புரட்டாசி மாதம் துவங்கி விடுகிறது. பௌர்ணமியில் ஆரம்பித்து அமாவாசை வரை 15 நாட்கள் மகாலயபட்சம் நடக்கிறது. ஓணம் பண்டிகையின் சிறப்பு குறித்தும், மகாலய அமாவாசையின் சிறப்பு குறித்தும் இந்த 30 முத்துக்கள் பகுதியில் பல முத்தான விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்.

2. திருவோணச் சிறப்பு

பகவான் மகாவிஷ்ணு இந்த உலகத்தைக் காப்பதற்காக பல்வேறு அவதாரங்களை எடுத்தாலும் பத்து அவதாரங்கள் மிகச் சிறப்பாக சொல்லப்படுகிறது. அதில் ஒன்றுதான் வாமன அவதாரம். ஒவ்வொரு அவதாரத்திலும் ஒரு நட்சத்திரத்தை தனக்குரிய அவதாரம் நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்த பகவான் (ராமருக்கு புனர்பூசம், கண்ணனுக்கு ரோகிணி, நரசிம்மருக்கு சுவாதி) வாமன அவதாரத்திற்குத் தேர்ந்தெடுத்த நட்சத்திரம் திருவோணம்.

திரு என்கிற அடைமொழியோடு இரண்டு நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஒன்று திருவோணம். இன்னொன்று திருவாதிரை. இரண்டும் பிரதான தெய்வங்களுக்கு உரிய நட்சத்திரங்கள். திருவோணம் மகாவிஷ்ணுவுக்கு உரியது. திருவாதிரை சிவனுக்கு உரியது. இந்த நட்சத்திரத்தை ஒட்டித்தான் வைணவத்தில் திருவோணப் பெருவிழாவும், சைவத்தில் மார்கழி திருவாதிரையும் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன.

3. இரட்டை அவதாரம்

வாமன அவதாரம் எடுக்கும் பொழுது சிறிய வடிவத்தில் பகவான் வருகின்றான். ஆனால், அதே அவதாரத்தில் அவன் உலகங்களை எல்லாம் அளக்கும் திருவிக்கிரமனாக உயர்கின்றான். ஆதி அந்தம் என்று சொல்வது போலவும், ஒரு பெரிய விருட்சம் ஒரு விதையில் இருந்து கிளம்பி வியாபித்தது போலவும், ஒரு அட்சரத்தில் இருந்து மொழிகள் கிளைத்து செழிப்பது போலவும், வாமன அவதாரம் எடுத்த பகவான், திருவிக்கிரமனாக வளர்ந்து, அண்ட சராசரங்களை எல்லாம் அளந்து வியாபிக்கிறான்.

பகவானின் வியாபகத் தன்மையைச் சொல்வது இந்த அவதாரம். வைணவத்தில் பெருமாளுக்கு ஆயிரக்கணக்கான நாமங்கள் உண்டு. பேர் ஆயிரம் உடைப் பெரியோன் என்று அவருடைய எண்ணற்ற நாமங்களைச் சொல்வது வழக்கம். ஆயிரக்கணக்கான நாமங்களில் 12 நாமங்களை துவாதச நாமங்கள் என்று முக்கியமாகச் சொல்வார்கள். இந்தப் பன்னிரண்டு நாமங்களில் வாமன திருவிக்ரம நாமங்கள் அடுத்தடுத்து இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

4. பேர் ஆயிரம் உடைப் பெரியோன்

வாமன திருவிக்ரம அவதாரத்தின் பெருமையை வேதம் போற்றுகிறது. பொதுவாக திரிவிக்கிரம அவதாரத்தைப் பற்றி வேதத்தில் இருக்கும் அளவுக்கு அதன் மூல அவதாரமான வாமன அவதாரத்தைப் பற்றிய செய்திகள் அதிகமில்லை. மூன்றாவது அடிக்கு மண் கேட்டபொழுது தலைகுனிந்து நின்றான் மகாபலி சக்கரவர்த்தி. அவனால் திரிவிக்கிரம அவதாரத்தைக் கண்டு ரசிக்க முடியவில்லை.

அவனுடைய ஏக்கம் தீர, மறுபடியும் திரிவிக்கிரம அவதாரத்தை உலகளந்த பெருமாளாகக் காட்டினார். அப்படிக் காட்டிய இடம்தான் காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில் விருட்சத்தைப் பார்க்கும் நாம் வேர்களைப் பார்ப்பதில்லை. திருக்கோவலூர் திருவிக்ரமசுவாமி கோயிலில், நாம் எல்லோரும் ஓங்கி உலகளந்த திருவிக்ரமனைத்தான் சேவிக்கிறோம். ஆனால், கருவறையின் பின்னால் (திருவுண்ணாழிச் சுற்று) சிறிய சந்நதியில் வாமன மூர்த்தியும் காட்சி தருகிறார் அந்த மூர்த்திக்கு வாமன ஜெயந்தி அன்று விசேஷமான வழிபாடுகள் நடக்கின்றன

5. நாடு இழந்த இந்திரன்

பகவான் பூமியை மீட்க வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாட்சனை அழித்தார். அவனுடைய அண்ணன் இரணியனை நரசிம்ம அவதாரம் எடுத்து அழித்தார். இரணியனின் பிள்ளைதான் பிரகலாதன். பிரகலாதன் பேரன் மகாபலிச் சக்கரவர்த்தி, மிகப்பெரிய பலத்தோடு யாகங்கள் பல செய்தான். அதன் மூலம் பெற்ற வரங்களும் ஆயுதங்களும் கொண்டு போர்புரிந்தான். தேவர்களை விரட்டி விட்டான். தேவர்களுக்கு நாடு நகரம் இல்லாமல் போயிற்று. தன் பிள்ளைகள் துன்பப்படுவதைக் கண்டு தாயான அதிதி தேவி மிகவும் துக்கப்பட்டாள். இதற்கு ஒரே வழி பகவானை சரணடைவது தான் என்று சொல்லி “பயோ விரதம்” என்ற ஒரு விரதத்தை அனுஷ்டிக்க, அந்த விரதத்தின் பலனாக பகவான் ஸ்ரீமன் நாராயணன் காட்சி தந்தார்.

6. வாமனன்

“மகாபலிச் சக்கரவர்த்தியை போர் புரிந்து வெல்லமுடியாது. அடுத்து அவன் பிரகலாதன் வம்சத்தில் தோன்றியதால், பிரகலாதனுக்கு தந்த வரத்தின்படி, அவனைக் கொல்ல முடியாது. இந்திரனுக்கும் வாழ்வு தர வேண்டும். மகாபலி சக்கரவர்த்திக்கும் வாழ்வு தர வேண்டும். எனவே நானே உனக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்” என்று சொல்லி கஸ்ய பிரஜாபதிக்கும் அதிதிக்குக்கும் மகனாக அவதரித்தார்.

அவர் அவதரித்த காலம் புரட்டாசி மாதம் வளர்பிறை திருவோண நட்சத்திரம் துவாதசி நாள். வாமனனின் திருவடிவ அழகை ஸ்ரீமத் பாகவதம் அற்புதமாக வர்ணிக்கிறது. இரண்டு காதுகளிலும் அற்புதமான பொற் குண்டலங்கள் அசைந்தாடியது. தோள்வளை, கங்கணமும் தோள்களில் ஜொலித்தது. மார்பிலே ஸ்ரீவத்ஸம் என்னும் மறு பிரகாசித்தது. கால்களிலே தண்டையும் சிலம்பும் அசைந்து பிரணவாகார ஒலியை எழுப்பியது. மார்பில் அழகான வனமாலை தவழ்ந்தது. கொள்ளை கொள்ளும் புன்னகையுடனும், நான்கு கரங்களுடனும், சியாமள மேனி வண்ணனாக பகவான் அவதாரம் செய்தார்.

7. சங்க இலக்கியங்களில் வாமன அவதாரம்

பெரும்பாணாற்றுப்படை நூலில் வாமன அவதாரத்தின் கதை சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அதில், திருமாலின் திருவடி, நிலத்தை அளந்ததை பற்றியும், மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கியதையும் பற்றிய குறிப்புகள் உள்ளன. ‘‘இருநிலம் கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ணன்’’ என்று வாமனன் உலகை அளந்ததை உருத்திரங்கண்ணனார் பாடியுள்ளார். மதுரைக் காஞ்சியில்: ‘‘கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள்’’ என்று மாங்குடி மருதனார், வாமன அவதாரம் நிகழ்ந்த திருவோண நாளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ‘‘கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை’’ என்று பரிபாடல் குறிப்பிடுகிறது.

“ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப் பால் அன்ன மேனியான்’’ என்று கலித்தொகையிலும் வாமன அவதாரக் குறிப்பு உள்ளது. இந்த உலகமே, திருமாலின் பாதத்தில் அடங்கி விட, அந்த சமுத்திரமே, அவரது ஆடையென ஆகிவிட்டதாகத் திருமால், நெடுமாலாக உலகை அளந்த நிகழ்வை ‘‘மாநிலம் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பௌவம் உடுக்கையாக’’ என்று நற்றிணையில் பெருந்தேவனார் போற்றிப்பாடுகிறார்.

8. சிலப்பதிகாரத்தில் வாமன அவதாரம்சிலப்பதிகாரத்தில்,

‘‘மூவுலகும்ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத்

தாவிய சேவடி சேப்பத், தம்பியொடும் கான்போந்து

சேர் அரணும் போர் மடியத், தொல் இலங்கை கட்டழித்த

சேவகன் சீர் கேளாத…. செவி என்ன செவியே?

திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?’’ என்ற பாடலில் வாமன அவதாரத்தையும் ராம அவதாரத்தையும் இணைத்துப் பாடுகிறார் இளங்கோவடிகள். சோம்பல் இல்லாத மன்னன், திருமால் மூவுலகையும் தன் பாதத்தால் அளந்த மூவுலகையும் ஒருங்கே அடைவான்! என்பதை, ‘‘மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந் தான் தாஅயது எல்லாம் ஒருங்கு’’ என்று திருவள்ளுவரும், கூறுகிறார். இன்னும் ஒரு அற்புத உவமையாக திருக்குறளையும் வாமன அவதாரத்தையும் இணைத்து திருவள்ளுவமாலை என்ற நூலில் பரணர் பாடுகின்றார். எப்படி இரண்டே வரிகளில் மிகப்பெரிய கருத்துக்களை எல்லாம் குறட்பாவில் திருவள்ளுவர் சொன்னாரோ, அதைப்போல இரண்டே அடிகளில் இந்த உலகத்தை எல்லாம் வாமனன் அளந்தான். குறள் என்பதற்கு திருக்குறள் என்று ஒரு பொருள். வாமனன் என்று ஒரு பொருள். ‘‘மாணிக் குறளனே’’ என்பது ஆழ்வார் பாசுரம்.

9. ஆண்டாள் காட்டும் வாமனன்

நாச்சியார் திருமொழியில் ஒரு பாடல்.

கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி

சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்

அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்

என்பது ஆண்டாள் வர்ணிக்கும் மாப்பிள்ளை அழைப்புப்பாடல்.

ஒரு திருமண மண்டபம். நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மண்டபத்தில் மாப்பிள்ளை அழைப்பு நடந்துகொண்டிருக்கிறது. பெண் ஆவலோடு அமர்ந்திருக்கின்றாள். பெண் வீட்டுக்காரர்கள் யாரோ சொல்கிறார்கள். மாப்பிள்ளை இதோ சற்று நேரத்தில் மண்டப வாசலுக்கு வந்து விடுவார். மங்கையர்கள் எல்லாம் வரவேற்கத் தயாராகுங்கள். மங்கையர்கள் தயாராகிவிட்டார்கள். அழகான தீபங்களை ஏந்திக்கொண்டு மங்கலமாக மாப்பிள்ளையை வரவேற்க வாசலுக்குச் செல்லுகின்றார்கள்.

10. கண்ணனும் வாமனனும்

இதோ மாப்பிள்ளை வந்து விட்டா. இது வரை ஒழுங்காக நடந்து வந்த மாப்பிள்ளை, ஏன் இத்தனை பதட்டம்? அவன் தடதடவென்று நடந்து வரும் போது இடையில் அங்கங்கே சில நாற்காலிகள் சரிந்து விடுகின்றன. இந்த அதிர்வு ஏன் வந்தது? ஆர்வம், பதற்றம், அதிர்வுக்கு - இதுதான் காரணம். அடுத்து இது ஒரு காதல் திருமணம். பெண் பெரியாழ்வாராகிய அந்தணரின் பெண். இவன் ஆயர்குலத்தில் அவதரித்த கண்ணன்.

பட்டரின் மனம் புரிந்த அளவுக்கு தன் மாமனாராகிய அவர் மரபு புரியவில்லை. பழக்க வழக்கம் மாறுகிறது. தட்டு வேட்டிய கட்டிய இடையில் பஞ்சகச்சம் ஏறுகிறது. நவீன உடை அணியும் இக்கால இளம் பெண்கள் திடீரென சேலை கட்டினால் நடக்க தடுமாறுவது போல நடந்தான் கண்ணன். புது இடம். புது உறவு. புது பழக்கம். புது ஆடை. புதிதாகப் பழகும்போது ஏற்படும் பதற்றம். அதிர்வு. அவன் அதிர வந்தது எப்படி இருந்தது என்றால் முற்காலத்தில் வாமனன் மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனுடைய யாக பூமியிலே வந்ததுபோல் இருந்தது என்று ஒரு உவமையோடு உரை செய்தார்கள்.

11. யாசகம் கேட்டு பழக்கமில்லை

உவமை சொல்லும் போது எச்சரிக்கை வேண்டும். வாமனன் நடக்க ஏன் பூமி அதிர வேண்டும் என்ற கேள்வியை கேட்டு விட்டார்கள். என்ன விடை சொல்வது? வாமனன் சிறு பிள்ளையாக இருந்தாலும் சர்வேஸ்வரன். அதனால் அவன் பாதம் பட்டு கடலோடு சேர்ந்த பூமி நெளிந்தது என்று உரை சொன்னார்கள். நஞ்சீயர் என்கிற உரையாசிரியருக்கும் இவ்வுரையில் திருப்தி இல்லை. ஆகையினாலே தன் ஆசிரியரான பராசரபட்டர் என்கிற மேதையிடம் இக்கேள்வியை நஞ்சீயர் எழுப்பினார். அதற்கு அவர் அழகான பதில் சோன்னார் இதுவரை பகவான் யாசகம் கேட்டதில்லை. இப்பொழுதுதான் இந்திரனுக்காக மகாபலியிடம் யாசகம் கேட்கிறார். எல்லோருக்கும் கொடுத்துப் பழக்கப் பட்டவன் ஏதோ ஒரு நிலையில் வாங்கும் பொழுது கூச்சப்படுவான். அப்போது பேச்சு வராது. நடை தடுமாறும். அதனால் வாமனன் பதட்டத்தோடு வந்தான் என்றார் பட்டர்.

12. வாமனன் மண் இது

நிலத்தை அளப்பவரை நில அளவையாளர்கள் என்று சொல்கிறோம். முதல் நில அளவையாளர் (surveyor) வாமனன்தான். தன்னுடைய மண்ணைத் தானே தன் திருவடியால் அளந்து பத்திரம் எழுதிக் கொண்டான். அதனால் நாம் நம்முடைய வீட்டுப் பத்திரத்தை எழுதுகின்ற பொழுது, நம்முடைய பெயரை எழுதிக் கொண்டாலும், இது உண்மையில் வாமனன் மண், அதை அவன் சார்பில் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்க வேண்டு இந்த பூமியை மண்ணை இருந்து துழாவி ‘வாமனன் மண் இது’ என்று நம்மாழ்வார் பாடுவார். மகாபலி சக்கரவர்த்தி, ஏதோ தன் மண்ணை தானம் தந்ததாக நினைத்துக் கொண்டான்.

13. தானத்தின் பெருமையைச் சொல்வது வாமன அவதாரம்

யாரோ ஒருவருக்குத் (இந்திரன்) தருவதற்காக, எல்லா ஐஸ்வர்யங்களையும் உடைய பெருமாள், தன்னுடைய பெருமையைக் கருதாது, நெளிந்தும் குழைந்தும் யாசித்த அவதாரம் வாமன அவதாரம். அதனால் தான் தன்னிடம் பொருள் இல்லாவிட்டாலும் யாசித்தாவது தானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. அப்படி நம்மால் தானம் செய்யா விட்டாலும் தடுக்கக்கூடாது. வாமன அவதாரத்தின் இதற்கும் சான்று உண்டு. வாமனன் மூன்றடி மண் கேட்க மகாபலி தாரை வார்த்து தானம் கொடுக்க கமண்டல நீரை சாய்க்கிறான்.

அப்பொழுது ‘‘தானம் தரக்கூடாது, வந்திருப்பவன் பகவான். அவன் மகாபலியின் செல்வங்களை கவர்ந்து சென்று விடுவான்’’ என்று நினைத்து, ஒரு சிறிய வண்டு உருவம் எடுத்து கமண்டலத்தின் நீர் வழியை அடைத்துக் கொண்டான் சுக்கிரன் என்கிற அசுரகுரு. பகவான் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து நீர் வரும் வழியைக் கிளறிய பொழுது சுக்கிரன் கண்கள் பழுதடைந்தது. அசுர குருவாக இருந்தாலும் தானத்தைத் தடுத்ததால் பெற்ற தண்டனை அது. இதை ஆழ்வார் ‘‘தக்கது இது அன்று என தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கரக் கையன்’’ என்று பாடுகின்றார். தானம் தராவிட்டாலும் தருபவர்களைத் தராதே என்று சொல்வது மகா பாவமாகும்.

14. உத்தமன்

ஆண்டாள் வாமன அவதாரத்தை மட்டும் உத்தமன் என்ற பெயரால் கொண்டாடுகிறாள். ஆண்டாளின் திருப்பாவையில் இந்த அவதாரத்தைக் குறித்து மூன்று பாசுரங்கள் இருக்கின்றன. ஏன் வாமனனை உத்தமன் என்று குறிப்பிடுகிறாள் என்பதற்கு உரையாசிரியர்கள் சொல்லும் காரணம் அற்புதமானது. மனிதர்களில் நான்கு விதம் இருக்கிறார்கள். பிறருக்காக தன்னைத் தியாகம் செய்து கொண்டு வாழ்பவர்கள் உத்தமர்கள்.

பிறரும் வாழட்டும், தானும் வாழ்வோம் என்று நினைப்பவர்கள் மத்திமர்கள். பிறர் எக்கேடு கெட்டால் என்ன? தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று சுயநலத்தோடு வாழ்பவர்கள் அதமர்கள். பிறரைத் துன்புறுத்தி, அவர்களிடம் இருப்பதைப் பறித்துக்கொண்டு, அவர்கள் துன்பத்தில் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் அதமா அதமர்கள், இந்த வரிசையில் சர்வேஸ்வரனான எம்பெருமான், பிறருக்காக, தன்னுடைய பெருமையைக் கருதாது, யாசித்தான் என்பதால் அவனை உத்தமன் என்ற சொல்லால் ஆண்டாள் குறிப்பிடுவதாக உரையாசிரியர்கள் கூறுவார்கள்.

15. ஓணம் பண்டிகை

கேரளத்தில் மன்னர் மகாபலி ஆண்டுதோறும் தன் மக்களை பார்க்க வருவதால் அவரை வரவேற்கும் பண்டிகையாக ஓணம் அமைகிறது. விவசாய வேர்களை எடுத்துக் காட்டும் பண்டிகையாக அமைகிறது. ஓணம் பண்டிகையின் 10 நாள் கொண்டாட்டம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்குகிறது. ஓணத்தின் முக்கிய நாள் செப்டம்பர் 5 ஆம் தேதி வருகிறது. இந்த நேரத்தில்தான் மிகப் பெரிய கொண்டாட்டங்கள் நடைபெறும். திருப்புனித்துரா என்ற ஊர் பிரமாண்டமான ஊர்வலத்திற்கு பெயர் பெற்றது.

வண்ணமயமான அணிவகுப்புகள், இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் விளங்கும். ஆலப்புழா என்னும் ஊரில் கேரளாவின் உப்பங்கழிகளில் ஒத்திசைவாக நீண்ட, அழகாக அலங்கரிக்கப்பட்ட படகுப் பந்தயம் நடைபெறும் வல்லம்கலி அல்லது பாம்புப் படகுப் பந்தயத்திற்கு பிரபலமானது.இனி அடுத்தது வரும் மஹாளயத்தின் சிறப்பில் சில செய்திகளைத் தெரிந்து கொள்வோம்.

16. மஹாளயம் என்ன சிறப்பு?

ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் பிதுர் உலகம் சென்ற முன்னோர்கள் நம்மைத் தேடி வந்து நம்முடைய வழிபாட்டினை ஏற்றுக் கொள்கிறார்கள். மகாலயபட்சம் 15 தினங்களிலும் கூட்டமாக அவர்கள் இங்கே வருவதால் மகாளய அமாவாசை சிறப்பு பெறுகிறது. முன்னோர்கள் அனைவரும் ஒன்றாக கூடி வரும் அமாவாசை என்பதால் இது மகாலய அமாவாசை என்று சொல்லப்படுகிறது.

நவராத்திரியின் துவக்கத்தைக் குறிக்கும் அமாவாசை தினம் மகாளய அமாவாசை. நம் வாழ்க்கையில் வழிவழியாக வந்த அத்தனை தலைமுறை மக்களுக்கும் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமான நாளாக மஹாளய அமாவாசை விளங்குகிறது. மகாளயபட்சம் செப்டம்பர் 8 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்குகிறது. மகாளய அமாவாசை செப்டம்பர் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

17. மூன்று அமாவாசை முக்கியம்

மாத அமாவாசை, குல முன்னோர்களுக்கான வழிபாடு என்றாலும், மூன்று அமாவாசை முக்கியமானது. உத்தராயண காலத்தின் துவக்கத்தில் வருகின்ற தை அமாவாசையும் தட்சிணாயன காலத்தின் துவக்கமாக வரும் ஆடி அமாவாசையும் மிக முக்கியமானது. அந்த அமாவாசையில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்களும், செய்தவர்களும், தொடர்ந்து 15 நாட்கள் முன்னோர்கள் வழிபாட்டை இயற்றுவதற்கானது தான் மகாலயபட்சம். ‘‘மறந்தவர்க்கு மகாலயம்’’ என்று ஒரு வழக்கு மொழி உண்டு. ஏதோ ஒரு காரணத்தினால் முன்னோர்கள் வழிபாட்டைச் செய்ய முடியாமல் போய் விட்டவர்களும், ஞாபக மறதியால் மறந்து விட்டவர்களும் மகாலயபட்சத்தில், குழுவாக வரும் முன்னோர்களுக்கு, நீரும் சோறும் தந்து, பசியையும் தாகத்தையும் தீர்ப்பதன் மூலம் நல் வாழ்வு பெறலாம்.

18. ஆடி முதல் தை வரை

பிதுர்கள் எனப்படும் முன்னோர் ஆடி அமாவாசைக்கு வந்து, மகாளய அமாவாசை காலத்தில் இங்கே தங்கி, தை அமாவாசை முடிந்து பூலோகத்திலிருந்து தங்கள் பிதுர் லோகத்திற்கு திரும்பப் புறப்படுகிறார்கள். நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும், நம்முடைய குடும்பங்களில் உள்ள தோஷத்தை நீக்குவதற்காகவும், தங்கள் சக்தியை பயன்படுத்தி நமக்கு நல்லாசிகள் வழங்குவதற்காகவும், நம்மைத் தேடி வருகிறார்கள். மகாளயபட்சம் முன் உள்ள நாட்கள் அவர்கள் வருகை நாட்கள். மகாளயத்துக்கு பின் உள்ள நாட்கள் நம்மிடமிருந்து விடைபெற்றுத் திரும்பச் செல்லும் நாட்கள். அப்படிச் செல்லும் அவர்கள் வழிக்கு வெளிச்சம் தருவதற்காகவே தீபாவளி, கார்த்திகை முதலிய நாட்களில் நாம் தீபம் ஏற்றுகிறோம்.

19. பிதுர் வழிபாடு

இல்லறத்தில் இருப்பவர்களுக்கு, நான்கு கடன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. தேவ கடன், ரிஷி கடன், பூத கடன், பிதுர் கடன். இல்லறத்தான் முக்கியக் கடமையாகப் பித்ருக்களை உபசரிக்கக் கூடிய சடங்கு சொல்லப்பட்டிருக்கிறது.தென்புலத்தார், தெய்வம், விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்து, சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்குத் தலைமையான அறம். அதனால்தான் திருவள்ளுவர் முதல் வழிபாடாக தென்புலத்தார் வழிபாட்டை வைத்தார். அது மிகுந்த சிரத்தையுடனும், கவனத்தோடும் செய்யப்பட வேண்டும் என்பதால்தான் அந்த வழிபாட்டுக்கு சிராத்தம் என்று பெயர் வைத்தார்கள்.

20. முன்னோர்கள் சாபம் கொடுப்பார்களா?

எந்தக் கடனை அடைத்தாலும் அடைக்காவிட்டாலும் நீத்தார் கடனை அடைக்காமல் விடக் கூடாது. நீங்கள் ஒரு கோரிக்கைக்காக குலதெய்வத்தை நாடியோ, இஷ்ட தெய்வத்தை நாடியோ சென்றால், உங்கள் கோரிக்கை பலிப்பதும் பலிக்காமல் இருப்பதும், நீங்கள் நீத்தார் கடனை நிறைவேற்றுகிறீர்களா இல்லையா என்பதைப் பொறுத்ததுதான். நீத்தார் கடனை நிறைவேற்றாமல் நீங்கள் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் அணுக முடியாது. தாத்தாவுக்கு தாத்தா, தாத்தா, அப்பா என்று வரிசையாக வரும் சங்கிலித் தொடரில் இவ்வுலகில் வந்து வாழ்ந்து, அடுத்த சந்ததியை ஏற்படுத்திவிட்டு சென்றவர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடப்பாடு தான் மகாளய வழிபாடு.

எனவே எதை மறந்தாலும் இதை மட்டும் மறக்கக்கூடாது. தெய்வ வழிபாட்டை மறந்துவிட்டால் கூட பிராயச்சித்தம் உண்டு. ஆனால் நீத்தார் வழிபாட்டை மறந்தால் பிராயச் சித்தம் செய்வது கடினம். அது குடும்பத்தில் பலவிதமான தொல்லைகளை உருவாக்கும். அது அவர்கள் கொடுக்கும் சாபத்தினால் அல்ல. அவர்களை மறந்ததால் வந்த விளைவு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

21. பித்ரு பூஜை வீணாவதில்லை

முன்னோர்கள் சிலர் வேறு பிறப்பு பிறந்திருக்கலாம். அல்லது முக்தி அடைந்து இருக்கலாம். மறுபிறவிகள் எடுத்தாலும், முக்தியை அடைந்தாலும் அல்லது பித்ருலோகத்திலேயே இருந்தாலும் பித்ரு பூஜைகள் ஏதோ ஒரு வகையில், பித்ரு தேவதைகளின் மூலம், அவர்களைச் சென்றடைகின்றன. மறுபிறவி பெற்ற பின்னும் அது அவர்களுக்குப் பயன்படுகிறது. அது மட்டுமல்ல, அவர்களை நினைத்துச் செய்யும் நன்றி உணர்வால், நமக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நமது முன்னோர்களில் யார் யார் பிறவா நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என ஆன்றோர்கள், ரிஷிகள் வலியுறுத்தியிருக்கிறார்கள். நாம் செய்யும் பித்ரு பூஜை வீணாவதில்லை.

22. யார் யார் செய்ய வேண்டும்?

1. தாய்/தந்தை இல்லாத ஆண்கள் அவசியம் செய்ய வேண்டும்.

2. குழந்தை இல்லாத, அதே சமயத்தில் கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். சங்க காலத்தில் பெண்கள் செய்த நீத்தார் வழிபாடு பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன.

3. திருமணம் ஆன பின், தன்னுடைய தாய் தந்தையர் மறைந்து விட்டால், அவர்களை பெண் வணங்கலாம். ஆனால் அமாவாசை விரதம் இருப்பதற்கும் தர்ப்பணம் செய்வதற்கும் விதிக்கப்படவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

4. பெண்கள் முறையான விரதம் இல்லாமல் (தர்ப்பணம் செய்யாமல்) கோயிலுக்குச் சென்று தானம் செய்யலாம். வீட்டில் பெரியவர்களை அழைத்து அன்னமிட்டு மரியாதை செய்யலாம். பொதுவாக தில தர்ப்பணமும் சிராத்தமும் ஆண் வாரிசுகள் செய்ய வேண்டும் என்றே சாஸ்திரம் சொல்கிறது.

23. அமாவாசையும் மகாபாரதமும்

மஹாலய அமாவாசைக்கும் மகாபாரதத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த அமாவாசை வருவதற்கு காரணங்கள் சாஸ்திரத்தில் நிறைய இருந்தாலும் செவி வழிக்கதையாக கர்ணன் கதையோடு இணைத்துச் சொல்லப்படுகிறது. மகாபாரதத்தில், குருசேத்திரப் போரில் கர்ணன் இறந்துவிட்டான். வாழும் போது பலருக்கும் அள்ளி அள்ளித் தந்த கர்ணன் தென்திசை உலகமான எமலோகத்திற்குச் சென்றான்.

ஆனால், அவன் சாப்பிட அமர்ந்தபோது அவனுடைய தங்கத்தட்டில், உணவுக்குப் பதிலாக வெள்ளிக்காசுகள், தங்கக்காசுகள் இருந்தன. (எதைத் தருகிறோமோ அது திரும்ப கிடைக்கும்.) வெள்ளிக்காசுகள் வைத்து பசியாற முடியுமா? ஏன் எனக்கு அன்னம் தரவில்லை என்று கர்ணன் கேட்ட போது, “நீ உன்னுடைய முன்னோர்களுக்கான வழிபாட்டைச் செய்யவில்லை” என்றான் யமன். உடனே காலதேவன் அனுமதியுடன் கர்ணன் பூமிக்கு வந்து மகாளயபட்சத்தில் முன்னோர் வழிபாட்டைச் செய்து பித்ருக்கடனை முடித்துக் கொண்டு திரும்பினான். அதன் பிறகு அவனுக்கு ராஜ விருந்து அளிக்கப்பட்டது.

24. எங்கிருந்து இந்த பூஜைகள் தொடங்குகின்றன?

நம் குடும்பத்தில் தந்தை வழி அல்லது தாய் வழியில் ஒருவர் வாழ்ந்து உயிரை விட்ட பிறகு அவருக்கு நீத்தார் என்று பெயர். நீத்தார் என்பது தான் “பிதுரர்.” நீத்தார் வழிபாடு “பிதுரர் பூஜை”. அவர்கள் உயிர் விட்ட திதி முக்கியமானது. அன்றிலிருந்தே அவர்களுக்கான கடமைகள் தொடங்குகின்றன. ஒரு வருடத்தில் 96 தடவை சிராத்தங்கள் ஹிரண்ய ரூபமாகச் செய்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனை ஷண்ணவதி ஸ்ராத்தங்கள் என்பார்கள். பன்னிரண்டு மாதங்களின் மாதப்பிறப்பு - 12, அமாவாசை - 12, அஷ்டகை -12, வ்யதீபாதம் - 13, வைத்ருதி - 13, மன்வாதி - 14, யுகாதி - 4, மஹாளயம் - 16.

25. இத்தனையும் முடியாவிட்டால்?

இத்தனை நாட்களையும் முறையாக அனுஷ்டிக்க முடியாதவர்களுக்கு 12 அமாவாசை தினங்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை, அவர்கள் இறந்த மாதத்தில், இறந்த திதியில் சிராத்தம் அனுஷ்டிக்க வேண்டும். இதுதவிர, ஆண்டுக்கு ஒரு பருவம், அதாவது புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமையில் ஆரம்பித்து, அமாவாசை வரை (மகாளய அமாவாசை), முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தி நீர்க்கடன் செய்யவேண்டிய தினங்களாக அனுஷ்டிக்க வேண்டும். மஹாளயம் முழுதும் 15 தினங்களும் வழிபாடு செய்வது சிறப்பானது. இதற்குச் சக்தியோ, நேரமோ இல்லாவிட்டால், பஞ்சமி முதலோ அல்லது அஷ்டமி, தசமி முதற் கொண்டு அமாவாசை வரையில் செய்யலாம். இதற்கும் சக்தி இல்லாதவன் 15 நாட்களில் விலக்க முடியாத ஒரு நாளில் செய்யலாம்.

26. தர்ப்பணம்

பொதுவாக மூன்று முறைகளில் முன்னோரை வழிபடலாம். ஒன்று எள்ளும் தண்ணீரும் விட்டுத் தர்ப்பணம் கொடுப்பது. மற்றொன்று ஹிரண்ய சிராத்தம், அதாவது நாம் முன்னோராகப் பாவிக்கும் ஒருவருக்கு பாத பூஜை செய்து தட்சிணை கொடுப்பது. மூன்றாவது ஹோமங்கள் செய்வது அன்ன சிராத்தம். இவை மூன்றுமே சிறப்பானவை என்றாலும், குறைந்தபட்சம் எளிமையாக முன்னோர்கள் பெயர் சொல்லி, தர்ப்பணமாவது செய்ய வேண்டியது அவசியம்.

27. எந்த நாளுக்கு என்ன பலன்?

மஹாளய சிராத்த வழிபாட்டில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.

*முதல் நாள் - பிரதமை: பணம் சேரும்.

*இரண்டாம் நாள் - துவிதியை: நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.

*மூன்றாம் நாள் - திரிதியை: நினைத்தது நிறைவேறும்.

*நான்காம் நாள் - சதுர்த்தி: சத்ரு பயம் நீங்கும்.

*ஐந்தாம் நாள் - பஞ்சமி: செல்வம் சேரும்.

*ஆறாம் நாள் - சஷ்டி: புகழும் கீர்த்தியும் உண்டாகும்.

*ஏழாம் நாள் - சப்தமி: பதவி உயர்வுகளில் தடைகள் நீங்கும்.

*எட்டாம் நாள் - அஷ்டமி: அறிவாற்றல் கிடைக்கும்.

*ஒன்பதாம் நாள் - நவமி: திருமணத் தடை நீங்கும். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.

*பத்தாம் நாள் - தசமி: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும், விருப்பங்கள் பூர்த்தியாகும்.

*பதினோராம் நாள் - ஏகாதசி: கலையில் வளர்ச்சி உண்டாகும்.

*பன்னிரண்டாம் நாள் - துவாதசி: ஆடை-ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

*பதிமூன்றாம் நாள் - திரயோதசி: தீர்க்காயுள், ஆரோக்கியம், நல்ல வேலை - தொழில் அமையும்.

*பதினான்காம் நாள் - சதுர்த்தசி: ஆயுள் விருத்தியாகும். எதிர்கால தலைமுறைக்கு நன்மை கிடைக்கும்.

*பதினைந்தாம் நாள் - மஹாளய அமாவாசை: மேற்சொன்ன அனைத்து பலன்களும் கிடைக்கும்.

28. காருணீக பித்ருக்கள்

அமாவாசை தர்ப்பணத்தில் இல்லாத சிறப்பு மகாளய தர்ப்பணத்தில் உண்டு. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைக்கும் இதில் தர்ப்பணம் உண்டு. அதாவது தந்தை வகையைச் சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம். தாயார் வகையைச் சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் முதலானோர் காருணீக பித்ருக்கள் எனப்படுவார்கள்.

பெரியப்பா, சித்தப்பா, அண்ணா, தம்பி, பிள்ளைகள், அப்பாவுடன் கூட பிறந்த தமக்கை, தங்கைகள், மாப்பிள்ளைகள், அக்கா, தங்கைகள், அத்திம்பேர்கள், மனைவி, மாமனார், மாற்று பெண், மைத்துனன், குரு, ஆச்சாரியன், காப்பாற்றிய யஜமானன், நண்பர்கள் கோத்திரம், பெயர் சொல்லி “வர்கத்துவயா வசிஷ்டான் ஸர்வான் காருண்ய பித்ரூன் ஸ்வதா நமஸ்- தர்பயாமி’’ என்ற மந்திரம் சொல்லி தர்ப்பணம் செய்யலாம்.

29. வீட்டு வாசலில் நிற்கும் முன்னோர்கள்

மஹாளயத்திலும் அமாவாசையிலும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நிற்கிறார்கள். தங்களுக்குத் தரப்படும் தர்ப்பணத்தை (எள் கலந்த தண்ணீரை) பெற்றுக் கொண்டு நல்லாசி வழங்குகிறார்கள். அன்றைய தினம் வீட்டில் தர்ப் பணம் செய்து அவர்களுக்கான வழிபாடு இல்லை எனில் அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். மஹாளயபட்சத்தில் ஒவ்வொரு நாளும் செய்யும் பித்ரு சிராத்தமானது, கயா சிராத்தத்திற்கு சமமான பலன் என்றும், மஹா பரணியை 5 மடங்கு பலன் அதிகமாகவும், வ்யதீபாதம் 10 பங்கு அதிகமாகவும் மத்யாஷ்டமி 20 மடங்கு அதிகமாகவும், துவாதசி புண்ய காலத்தை 100 மடங்கு அதிகமாகவும் மஹாளய அமாவாசையை 1000 மடங்கு அதிகமாகவும் புண்ணியத்தை கொடுக்கக் கூடியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு காரணத்தினால், மஹாளயபட்சத்தில், மஹாளய சிராத்தம் செய்ய முடியாவிடில், பிறகு அடுத்த பஞ்சமிக்குள் செய்வதாய் இருந்தால், பிரதமை, ஷஷ்டி, ஏகாதசி, சதுர்தசி, வெள்ளிக்கிழமை கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

30. நீர்க் கடன் செய்ய வேண்டும்

நீத்தார் வழிபாடு என்பது நம் குருதியோடு கலந்தது. ஒரு காலத்தில் அரசர்கள் ஒரே ஒரு பிள்ளை மட்டும் இருந்தால் அவன் தனது சந்ததிகளுக்கு நீத்தார் கடன் செய்ய வேண்டும் என்பதற்காகவே போரில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். நம்முடைய தமிழக கிராம மக்கள், அன்று காலை விரத மிருந்து, அமாவாசை படையல் போட்டு, அதற்குப் பிறகு உணவு உண்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் இதிலிருந்து அவர்கள் விலகுவதில்லை. எனவே, ‘‘நீத்தார் கடன்’’ ஆற்ற வேண்டிய பெருமை யைப் புரிந்துகொண்டு, நம் முன்னோர்களுக்கு, வருகின்ற மகாளய பட்சத்தில் ஒவ்வொருவரும் நீர்க் கடன் செய்ய வேண்டும்.

தொகுப்பு: எஸ். கோகுலாச்சாரி

Advertisement

Related News