?திருமால் ஆலயங்களுக்குச் சென்று திரும்பும்போது ஆலயத்தில் உட்கார்ந்துவிட்டு வரக்கூடாது என்கிறார்களே...ஏன்?
- ரவி, திருக்கடர்.
திருமாலை வணங்கிவிட்டு வீடு திரும்பும்போது மகாலட்சுமியும் நம்முடன் நம் வீட்டிற்கு வருகின்றாள் என்பது ஐதீகம். ஆலயத்தில் நாம் உட்கார்ந்து வந்தால் லட்சுமிதேவி நம் வீட்டிற்கு வராமல் கோயிலிலேயே தங்கிவிடுவதாகக் கூறுவார்கள். அதனால்தான் திருமாலை தரிசித்த பின் ஆலயத்தில் அமர்வதில்லை. ஆனால், இதுபோன்ற சம்பிரதாயங்கள் எல்லாம் அவரவர் மனப் பக்குவத்தைப் பொறுத்தது. உடல் நலிவுற்றவர் கோயிலை வலம் வந்த அயர்ச்சியில் சற்றே ஓய்வெடுப்பதற்காக, கோயிலை விட்டுப் புறப்படுமுன் உட்கார நேரலாம். வேறுசிலர் தியானம் செய்யலாம். ஆகவே இதெல்லாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சம்பிரதாயம் அல்ல என்பதை உணர வேண்டும்.
?குத்துவிளக்கு பூஜையை எப்படிச் செய்ய வேண்டும்? தனியாக வீட்டிலும் செய்யலாமா? அதனால் கிடைக்கும் பயன் என்ன?
- கந்தசாமி, பெரும்பாக்கம்.
கடவுளை ஜோதி சொரூபமாகப் பார்த்து வழிபடுவதே குத்துவிளக்கு பூஜை. பெண்களுக்கு குத்துவிளக்கு ஒரு மங்களகரமான அடையாளம். அதனால் அதை பூஜையில் இணைத்துக் கொள்வதும் பொருத்தமாகவே அமைகிறது. இதைப் பெண்கள்தாம் செய்ய வேண்டும். வீட்டில் தனியாகவும் செய்யலாம். கோயிலில் குழுவாகவும் செய்யலாம். துர்க்கா ஸ்தோத்திரம் சொல்லி, எல்லோரும் பூஜை செய்யவேண்டும். சப்த ஸ்லோகி என்ற ஸ்லோகங்களை ஏழு தடவை கூறி வழிபட்ட பிறகு ஏழு முறை பிரதட்சிணம் வந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்லபடியாக திருமணம் நடக்கவும், மணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கவும், பொதுவாகவே குடும்பத்தில் கல்வி, செல்வம் போன்ற வளங்கள் பெருகவும் குத்து விளக்கு பூஜை செய்யலாம். எல்லா தேவதைகளும் அந்த ஜோதி உருவத்தில் ஆவாகனம் செய்யப்படுவதும், அவர்களுடைய ஆசிகள் நமக்கு எல்லா நன்மைகளையும் தருவதும்தான் இதன் தத்துவம்.
?சிலர் பாதயாத்திரை சென்று கடவுளை தரிசிக்கிறார்களே, ஏன்?
- எஸ். நிவாசன், பெருங்களத்தூர்.
பாதயாத்திரையை ஒரு வேள்வியாகவே ஆன்மிகர்கள் பலர் கருதுகிறார்கள். உடலை வருத்திக் கொண்டு இறையருளை நாடுவது என்பது, தனக்குள் இருக்கும் அகங்காரத்தைக் குறைக்க உதவுகிறது. பாதயாத்திரை என்று மட்டுமல்ல, உணவு எதுவும் உட்கொள்ளாமல் பட்டினி இருந்து குறைந்தபட்சம் அந்த ஒரு நாளாவது தம் தேவைகளை முற்றிலுமாகத் தவிர்த்து விரதம் இருப்பதும் அத்தகைய ஒரு வேள்விதான். ‘நான்’ என்ற அகந்தை குறையும் போது இறைவனின் அருள் ஓடோடி வந்து நம் மனசுக்குள் புகுந்துகொள்கிறது.
?ஆன்மாவில் எழுகின்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதுதான் ஆன்ம சாந்தி என்கிறார்களே, சரியா?
- ஜி. குணசீலன், உடையார்பாளையம்.
ஆன்மாவுக்கு ஆசை மட்டுமல்ல, உணர்வுகளோ, பிறப்பு இறப்போ எதுவும் கிடையாது. பகவத் கீதையில், ‘ஆன்மாவுக்கு அழிவில்லை’ என்கிறார் பகவான் கிருஷ்ணர். ஒருவர் வாழ்நாளில் அவரது உயிருக்குள் ஆன்மா உறங்கிக் கொண்டிருக்கும். உயிர் பிரியும், உடல் வீழும். ஆனால், ஆன்மா மட்டும் அடுத்த பிறவிக்காக, அடுத்த உயிருக்காக, அடுத்த உடலுக்காகக் காத்திருக்கும். மனசாந்தியைத்தான் ‘ஆன்ம சாந்தி’ என்று குறிப்பிடுகிறீர்களோ? ஆன்மாவைப் பொறுத்தவரை சாந்தி என்பதே தேவைப்படாத ஒன்று என்பதால் மன சாந்திக்கு தியானம், யோகா போன்ற சாத்வீகமான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
?தன்னை அதிகமாக வணங்குபவர்களையே இறைவன் அதிகமாக சோதிக்கிறாரே, ஏன்?
- சு. அனந்தராஜ், சென்னை- 3.
படித்தவர்களுக்குதானே பரீட்சை? சோதனைக்குட்படுவது, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு வருத்தம் தரத்தக்க விஷயமாகவே இருக்காது. அதன்மூலம் பாடம் கற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவர்கள் அடைந்திருப்பார்கள். ஒரு திரைப்படத்தில் சொல்லி யிருப்பதுபோல, ‘கடவுள், தன் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு சோதனைகள் தருவார். ஆனால், கைவிட்டுவிட மாட்டார்!’
?தமிழ் ஆண்டுகளின் அறுபது பெயர்களும் தமிழில் இல்லாமல் வடமொழியில் உள்ளனவே, ஏன்?
- ப.த. தங்கவேலு, பண்ருட்டி.
பிரபவ, விபவ, சுக்கில என்று ஆரம்பித்து, அஷய வரை வருகின்ற அறுபது ஆண்டுகளும் தமிழ் வருடங்கள் அல்ல; இந்திய வருடங்கள். தமிழ்நாட்டில் மட்டும் இந்த வருடங்களின் பெயர்களை உபயோகிப்பதில்லை. இந்தியத் திருநாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவானதே இந்த வருடங்கள். தற்போது நடந்து வருகின்ற (தமிழ்) வருடம் என்பது வடஇந்தியாவில் ஒன்றாகவும், தென்இந்தியாவில் வேறொன்றாகவும் இருக்கும். ஆனால் வருடங்களின் பெயர்கள் எல்லாம் ஒன்றுதான். இந்த அறுபது வருடங்களும் வடமொழியில் உள்ள வருடங்களின் பெயர்களே ஆகும். கால நிர்ணயத்தைக் குறிப்பிடும் வானவியல் சார்ந்த நூல்கள் எதுவும் தமிழகத்தில் இயற்றப்படவில்லை. வடமொழி நூல்களின் மொழிபெயர்ப்பு நூல்கள்தான் தமிழில் உள்ளன. வடமொழியின் அடிப்படையில் உள்ள வருடங்களின் பெயர்களைத்தான் நாம் தமிழில் தத்து எடுத்துக்கொண்டுள்ளோம்.
?பிரணவ மந்திரத்தோடு சேர்த்து இறைவன் பெயரை எந்நேரமும் கூறி வருகிறேன். இவ்வாறு நான் எந்நேரமும் பிரணவ மந்திரத்தை உச்சரிக்கலாமா? அல்லது ஆசனம் போட்டு அமர்ந்துதான் கூற வேண்டுமா?
- கணேஷ், திசையன்விளை.
குருநாதரிடமிருந்து முறையாக உபதேசம் பெற்ற மந்திரம் என்றால் குருநாதரின் வழிகாட்டு தலின்படியே ஜபம் செய்ய வேண்டும். ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடி தியானித்து முதலில் மானசீகமாக குருநாதரை வணங்கி விட்டுத்தான் ஜபம் செய்யத் துவங்க வேண்டும். இதுபோன்ற சக்தி வாய்ந்த மந்திரங்களை ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடி ஜபிப்பதே பலன் தரும். கவனத்தை வேறு எங்கோ வைத்துக் கொண்டு உதடுகள் மாத்திரம் மந்திரத்தை ஜபிப்பதில் பலன் இல்லை. ஸ்லோகங்கள் என்பது வேறு, மந்திரம் என்பது வேறு, அதிலும் பிரணவ மந்திரம் என்பது ஓம்காரத்தைக் குறிக்கும். அகார, உகார, மகாரத்தின் இணைவான ஓம்காரத்தின் உண்மையான பொருளை உணர்ந்துகொண்டு ஜபிப்பவர்கள், ஆசனத்தில் முறையாக அமர்ந்துதான் ஜபம் செய்வார்கள். உங்கள் குருநாதரின் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்ளுங்கள்.
அருள்ஜோதி