?காதுகுத்தி கடுக்கண் போடுகின்றார்கள், என்ன காரணம்?
- கணேசன், சென்னை.
காதுமடலில் குத்துவது என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். நல்ல விஷயங்களை மட்டுமே காது கேட்க வேண்டும் என்பதற்கான ஒரு கௌரவமாகவே, காதுக்கு பொன்னாலான கடுக்கன் (கர்ண பூஷணம்) போடுகிறார்கள். நல்ல விஷயங்களைக் கேட்கின்ற காதுக்கு செய்யப்படும் உபசாரம் அது.
?கடைசி நினைவு பகவானைப் பற்றியதாகவே இருக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள்?
- த. சத்தியநாராயணன், அயன்புரம்.
கடைசி மூச்சு விடும்போது என்ன நினைவு இருக்கிறதோ அதுவே அடுத்த ஜென்மத்துக்கு வழிவகுக்கும் என்பது பெரியோர்கள் சொன்ன சாஸ்திர உண்மை. தவ வலிமை படைத்த ஜட பரதன், ஒரு மான் குட்டியைப் பார்த்து, அதனைத் தான் காப்பாற்ற வேண்டும், இல்லாவிட்டால் அதற்கு உயிர் போய்விடும் என்ற அதனையே நினைத்துக்கொண்டு உயிர் விட்டான். மோட்சம் பெற வேண்டிய அவனுக்கு அந்த எண்ணத்தினால் மறுபிறப்பு கிடைத்தது. பொருள் ஆசையோடு உயிர் விட்டால் அந்தப் பொருளை அடைவதற்கே ஒரு பிறவி எடுக்க வேண்டும். இறைவனை நினைத்து உயிர் பிரிந்தால், பிறவி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை; இறைவனையே அடைந்து விடலாம் என்பதால் தான் இறக்கும் போது பகவான் நினைவு வேண்டும் என்று சொன்னார்கள். அவர்களுக்கு நினைவு வர வேண்டும் என்பதற்காகத்தான் சுற்றி உள்ளவர்களும் அந்திம நேரத்திலே பகவான் நாமாவைச்
சொல்லுகின்றனர்.
?கண்ணனுடைய முக்கியமான மூன்று தலங்களில் அதாவது குருக்ஷேத்ரம் துவாரகை பிருந்தாவனம் இவைகளில் எது சிறந்தது?
- கே. பிரபாவதி, கன்னியாகுமரி.
மூன்றுமே சிறந்ததுதான். தர்ம க்ஷேத்ரமாகிய குருக்ஷேத்திரத்தில் அவன் பகவத் கீதையைச் சொன்னான். துவாரகை மோட்ச புரி. ஆனால் பிருந்தாவனம் பிரேம பாவமாகிய ஆனந்தம் பொங்கிப் பூத்த இடம். ராதை மிக விரும்பிய இடம். கோபியர்கள் கொஞ்சி விளையாடிய இடம். ஒவ்வொருவரும் ஆனந்தத்தின் உச்சியை அடைந்த நிலம். ஆண்டாள் கண்ணனைத் தேடி பல திவ்ய தேசங்களைப் பாடுகிறாள். நிறைவாக அவள் கண்ணனை எங்கே கண்டதாகப் பாடினாள் தெரியுமா. “வினதைச் சிறுவன் சிறகென்னும் மேலாப் பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே’’ என்று பிருந்தாவனத்தில் கண்ணனைப் பார்த்ததாகச் சொல்லுகின்றாள். பக்தியின் ஞான பாவம் பிடிபட்ட இடம் குருக்ஷேத்திரமும் துவாரகா புரியும் என்றால், பக்தியின் பிரேம பாவம் வெளிப்பட்ட இடம் பிருந்தாவனம்.
?சில பரிகாரங்கள் வினோதமாக இருக்கிறது. இப்படி எல்லாம்
சாஸ்திரத்தில் இருக்கிறதா?
- துரை. இராமகிருஷ்ணன், எரகுடி.
சாஸ்திரத்தில் இருக்கிறதா இல்லையா என்று தேடினால் உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியாது அனுபவத்தில் சொன்னதாகச் சிலர் சொல்கின்றார்கள். அதை சிலர் நம்புகின்றார்கள். நம்புங்கள். சாஸ்திரத்தைப் போட்டுக் குழப்பி விடை தேடாதீர்கள்.
?தசவித தீபங்கள் என்கிறார்களே, அது என்ன தசவித தீபங்கள்?
- சுதா, சிவகங்கை.
தீபங்களை 10 விதங்களில் ஏற்றலாம்.
1. தரையில் வரிசையாக ஏற்றலாம்.
2. கோலம் போட்டு அதில் அகல்களை வட்டமாக வைத்து ஏற்றலாம்.
3. ஏதேனும் சித்திரம் வரைந்து அந்த சித்திரத்திற்கு தகுந்தபடி தீபங்களை வைத்து ஏற்றலாம்.
4. மாலை வடிவில் தீபங்களை
ஏற்றலாம்.
5. கீழிருந்து மேலாக அடுக்கு
தீபங்களை ஏற்றலாம்.
6. வீட்டின் மேல் முற்றத்தில் ஆகாச தீபம் ஏற்றலாம்.
7. ஜலத்தில் மிதப்பது போல் தீபம் ஏற்றலாம். ஜல தீபம் என்று பெயர் வடநாட்டில் போடும் ஆறுகளில் இப்படி ஜல தீபம் ஏற்றும் வழக்கம் உண்டு.
8. ஓடம் போல் செய்து அதில் தீபம் வைத்து ஜலத்தில் விடலாம்.
9. கோயில் கோபுரங்களில் தீபங்கள் ஏற்றலாம். சில கோயில்களில் மோட்ச தீபம் என்று ஏற்றுவார்கள்.
10. வீடு முழுவதும் தீபங்களால் விசேஷ நாட்களில் அலங்கரிக்க வேண்டும்.
இப்படி 10 விதங்களில் தீபங்களை ஏற்றலாம்.
?கனவுகள் வருவது நல்லது தானா?
- சந்தோஷ்குமார், திருச்சி.
எந்த மாதிரியான கனவுகள் வருகின்றன என்பதைப் பொறுத்துத்தான் பதில் சொல்ல முடியும். இதற்கென்று உள்ள சாஸ்திரத்தை சொப்பன சாஸ்திரம் என்று சொல்கிறார்கள். இந்தக் கனவுகள் எதிர் காலத்தில் நடக்கக்கூடிய சில விஷயங்களின் குறி காட்டிகளாகவும் அமைந்திருக்கும். இன்னும் பல நேரத்தில் பல்வேறு விஷயங்களால் முடிவெடுக்க முடியாமல் திணறுகின்ற போது அந்த பிரச்னையை எதிர் கொள்ளும் வழிமுறையும் கனவில் கிடைக்கும்.
?மனித மனம் எப்படி இருக்க வேண்டும்?
- மகேஸ்வரி, திருக்கோவிலூர்.
குழப்பம் இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும். கவியரசு கண்ணதாசன், ‘‘மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா” என்று ஒரு பாடலில், “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்;வாசல் தோறும் வேதனை இருக்கும்; வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை- எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி கிடைக்கும்” என்று பாடினார். பொதுவாகவே கவிஞர்கள் பிரச்னை களைச் சொல்வார்கள் தீர்வைச் சொல்ல மாட்டார்கள். வாலிக்கு வாழ்க்கைத் தந்த இந்தப் பாடலில் கண்ணதாசன் தீர்வையும் சொல்லியிருக்கிறார். ஒரு நண்பர் ஒரு செய்தியை அனுப்பி இருந்தார். நம் மனம் எப்படி செயல்படுகிறது என்பதை அந்தச் செய்தி எடுத்துரைக்கிறது. கூட்டமா இருக்கும் பஸ்ல ஒரு சீட்டாவது கிடைக்காதா என ஏங்கும் மனம்... காலியாக இருக்கும் பஸ்ஸில் எந்த சீட்டில் உட்காரலாம் என குழம்பித் தவிக்கும்...இது தான் மனிதனின் மனம்...யோசித்து பாருங்கள்.எப்படி இருக்கிறோம் , எப்படி இருக்கக் கூடாது என்பது புரியும்.
?நிறைய படித்தவர்களும் அறிவு குறைபாடு உடையவர்களாக இருக்கிறார்களே?
- கார்த்திக், பெங்களூர்.
எவ்வளவு உணவு சாப்பிடுகிறோம் (படிக்கிறோம்) என்பது முக்கியம் கிடையாது அதில் எவ்வளவு ஜீரணமாகிறது (வாழ்க்கைக்கு உதவுகிறது. பின்பற்றப் படுகிறது) என்பது முக்கியம். பல பேருக்கு சாப்பாடு ஜீரணமாகாமலே அப்படியே வந்து விடுகிறது. அதனால் படித்த படிப்பு எந்த விதத்திலும் உபயோகம் இல்லாமல் போய் விடுகிறது. படிப்பு என்பது நம்முடைய இயல்பான அறிவை மூடி இருக்கக் கூடிய அழுக்குகளை நீக்குவது. கல்வியின் நோக்கம் ஒருவனை அமலத்துவமாக்குவது. இந்த அடிப்படையில் கற்றவர்களுக்கு அறிவுக் குறைபாடு வருவதற்கு வாய்ப்பு இல்லை.
?ஆன்மிகத்தில் ஆன்மா என்று சொல்லுகின்றார்கள். ஆன்மா தான் நிரந்தரமானது, அழிவதில்லை; என்று சொல் கின்றார்கள், இப்படிச் சொல்வதற்கு ஏதாவது சான்று இருக்கிறதா?
- ராமகிருஷ்ணன், திண்டிவனம்.
ஏன் இல்லை? நம்முடைய உடல் தினம் அழிகிறது. தினம் தினம் படைக்கப்படுகிறது ஒவ்வொரு செல்லும் புதிதாகத் தோன்றி கொண்டே இருக்கின்றது. பழைய செல்கள் மடிந்து கொண்டே இருக்கின்றன பௌதிகமான உடம்பு தினம் அழிந்து அழிந்து உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றது. ஆனால், இது தெரிவது கிடையாது ஆனால் உங்களுக்குள் இருக்கும் ஆன்மா எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கின்றது இதை உணர்ந்தாலே போதும் அழியக்கூடிய உடலிலே ஆன்மா நிரந்தரமாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அருள்ஜோதி