? வீட்டுக்கு வருபவர்களுக்கு தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. என்ன காரணம்?
- ராதா, திருச்சி.
தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப்பெயர். வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள், கன்யா குழந்தைகள் வந்தால் கட்டாயம் தாம்பூலம் தருதல் வேண்டும். குறைந்த பட்சம் மஞ்சள், குங்குமமாவது தர வேண்டும். வெற்றிலையில் முப்பெருந் தேவியரும் வசிப்பதால் , வெற்றிலை சத்தியத்தின் சொரூபமாக பார்க்கப்படுகிறது, எல்லா தெய்வபூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல். நிச்சயதார்த்தத்தின் போது சத்தியத்தின் சொரூபமாகிய வெற்றிலை பாக்கை மாற்றி கொள்கிறார்கள்.
? வீட்டிற்கு நீளம் அதிகம் இருக்க வேண்டுமா? அகலம் அதிகம் இருக்க வேண்டுமா?
- சுபாஷ் குமார், சென்னை.சாத்திரப்படி நீளம் தான் அதிகம் இருக்க வேண்டும். நீளமானது அகலத்தை போல ஒன்றரை மடங்கு இருக்க வேண்டும் அப்படி இருந்தால் நன்மை. அதனால்தான் மனை கூட 40 அடி அகலத்திலும் அதன் ஒன்றரை மடங்கான 60 அடி நீளத்திலும் போட்டு வைப்பார்கள். அதைத்தான் ஒரு கிரவுண்ட்(2400 சதுர அடி ) என்று சொல்லுவார்கள்.
?சங்கு ஊதும் பிள்ளையார் பற்றித் தெரியுமா?
- மணிகண்டன், பண்ரூட்டி.
பிள்ளையார் வடிவங்கள் எண்ணற்றவை.சில வித்தியாசமாகவும் இருக்கும்.நீங்கள் சொல்லும் சங்கு ஊதிப் பிள்ளையார் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் நவகிரஹ சன்னதிக்கு இடது புறத்தில், தேவசபை மண்டபத்தின் சுவரில், கோஷ்ட தெய்வமாக, மேற்கு நோக்கிய வடிவமாக அருள்கிறார்.சிறு குழந்தை ஒன்று சங்கூதும் வடிவத்தில் அமைந்த அதிசய வடிவம். நற்குழந்தைப் பேறு கிடைக்கப் பெறவும், குழந்தைகளுக்கு நேரிடும் பாலாரிஷ்ட தோஷங்கள் நீங்கவும், குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்கள் நீங்கவும் சங்கு ஊதிப் பிள்ளையாரை வழிபடுவது நலம் தரும்.
?நஹி நிந்தா நியாயம் என்றால் என்ன?
- பார்த்த சாரதி, தேனி.
ஒருவரின் கோட்பாட்டை ஆதரிக்க தர்க்க சாஸ்திரம் (இயங்கியல், தர்க்கம் மற்றும் பகுத்தறிவு அறிவியல்) ‘‘நஹி நிந்தா நியாய” என்று சாஸ்திரம் முன்மொழிகிறது. கைசிக புராணத்தில் வராஹ அவதாரத்துக்கு எந்த தோஷமும் இல்லை என்று சொல்ல வேண்டும். அப்போது மற்ற அவதாரங்களைப் பற்றிய குறைவு சொல்லப்படுகிறது. மத்ஸ்ய அவதாரத்துக்கு என்ன தோஷம் என்றால் மத்ஸ்யம்(மீன்) என்பது சமுத்திரத்தில் இருக்கக்கூடியது. அதுவே இன்னும் கரை சேரவில்லை. நாம் அவனை நம்பினால் நம்மைக் கரை சேர்ப்பானா? அடுத்து. கூர்ம அவதாரம் என்பது எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பது.
அவன் காப்பானா ? ந்ரு ஸிம்ஹ அவதாரத்தில் தலை ஒன்றும் உடம்பு வேறொன்றுமாக உள்ளது. எனவே நம்பமுடியாது. வாமன அவதாரத்தில் கபடம் தெரிகிறது. பரசுராம அவதாரமோ கோபம் உடையது. ராமனோ சரணாகத ரக்ஷணம் என்று காட்டிலே பல இடங்களில் திரிந்து துன்பப்பட்டவன்.. க்ருஷ்ணன் திருடுபவன். பொய் சொல்பவன். ‘ஏலாப் பொய்கள் உரைப்பானை' என்கிறாள் ஆண்டாள். அவன் வார்த்தையை நம்ப முடியாது. எனவே வராகர் உயர்ந்தவர். வராகரின் ஏற்றத்தைச் சொல்லும்போது மற்ற அவதாரங்களைக் குறைவு சொல்வதைப்போல் சொல்லி வராகரின் ஏற்றத்தைச் சொல்வதுதான் ‘நஹி நிந்தா ந்யாயம்’.இது தவிர சாஸ்திரத்தில் வேறு நியாயங்களும் உண்டு.
1-சமுத்ர வ்ருஷ்டிந்யாயம் -
மழை கடலில்பெய்தால் என்ன பயன்? படித்தும் பண்பில்லாதவன் படிப்பு கடல்மழை போல்தான்.அதைப்போல தானமும் சத்பாத் ரத்தில் (தகுதி உள்ளவர்க்கு) தருதல்வேண்டும்.
2-ஸ்யாளக சுனக ந்யாயம்.
ஒருவன் தன் மச்சானின் பெயரை நாய்க்கு வைத்துதிட்டினானாம் .நேராகத் திட்டாமல் வேறுவிதமாய் கு(க)தருவது ஸ்யாளசுனக ந்யாயம்.
3-சுந்தோபசுந்த ந்யாயம்
சுந்தன் உபசுந்தன்னு இரண்டு அரக்கர்கள் ஒரே பெண்ணை காதலித்தார்கள் இருவரும் அவளை அடைய சண்டையிட்டு இரண்டு பேரும் மடிந்தார்கள் .சண்டையிட்டும் யாருக்கும் லாபமில்லை . இதையே சுந்தோபசுந்த ந்யாயமென்பர்.
4-பல வத்சஹகார ந்யாயம்
மாமர நிழலுக்காக ஒதுங்கியவன் மாம் பழம் விழ அதையும் சுவைத் தானாம் .நிழலுக்கு ஒதுங்கியவனுக்கு பழமும்கிடைத்தது போல் இரண்டு லாபத்தை அடைபவரைக் குறிக்கும் ந்யாயம்.
? வாழ்க்கையில் நிம்மதி இன்மைக்கு காரணம் என்ன?
- திவ்யா சங்கரன், மதுரை.
ஒப்பீடு தான் காரணம். நாம் எல்லோரும் மற்றவர்கள் வாழ்க்கையோடு நம் வாழ்க்கையை ஒப்பிட்டு வயிற்றில் அல்சர் வந்து கஷ்டப்படுகின்றோம் .A tree does not compete with the trees around it.It just grows .மரங்களுக்கு இருக்கும் இந்த எண்ணம் மனிதர்களுக்கு இல்லாததால் ஏதோ ஒரு விதத்தில் தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொண்டு கஷ்டப்படுகிறார்கள் நிம்மதி இல்லாமல் இருக்கின்றார்கள் 2000 கோடி இருந்தாலும் 2100 கோடி வைத்திருப்பவனைப் பார்த்து நிம்மதி இழப்பான். இது பரவாயில்லை. இன்னொரு உதாரணம்.
இரண்டு பேரும் ஏழ்மையில் இருக்கிறார்கள். முதலில் ஒருவன் நன்கு முன்னேறி விட்டான். அடுத்தவன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறான். இப்பொழுது முதலில் முன்னேறியவன் தன் அளவுக்கு அவன் முன்னேறி விடுகின்றானே என்ற நினைத்து நிம்மதி இழப்பதும் உண்டு. இதற்கெல்லாம் காரணம் ஒப்பீடுதான். கவியரசு கண்ணதாசன் ஒரு அழகான கவிதை எழுதினார் இந்தக் கவிதையைப் புரிந்துகொண்டால் நிம்மதி இழக்கமாட்டீர்கள்
அவரவருக்கு வைத்த சோறு
அளவெடுத்து வைத்தது
இவை இவற்றில் வாழும் என்று
இறைவன் சொல்லிவிட்டது
நவ நவங்ளான ஜோதி
நாளும் நாளும் தோன்றலாம்
அவை முடிந்த பின்னர் உந்தன்
ஆட்டம் என்ன தோழனே?
?தசாவதாரங்கள் என்று பத்து அவதாரங்களைச் சொல்லுகின்றார்கள். அதில் கல்கி இன்னும் அவதாரம் செய்யவில்லையே. இருந்தும் கல்கி ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்கள் பஞ்சாங்கத்திலும் போட்டு இருக்கிறார்கள். உண்மையில் கல்கி ஜெயந்தி ஆகிவிட்டதா?
- முத்துவேல், சேலம்.
யுகங்கள் நான்கு.கிருத,திரேதா,துவாபர, கலியுகம் என்பார்கள். இந்த நான்கு யுகங்களை சதுர் யுகம் என்று சொல்வார்கள். ஒவ் வொரு சதுர் யுக முடிவிலும் பிரளயம் வரும். பிறகு மறுபடி உலகம் சிருஷ்டிக்கப்படும் இப்படி இந்த உலகம் பலமுறை பிரளயத்தில் அடங்கி மறுபடி சிருஷ்டிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி நடந்த ஒவ்வொரு யுகத்திலும் எம்பெருமானின் அவதாரம் நடந்தது .அந்த அடிப்படையில் பாத்ர பத சுத்த த்விதீயில் கல்கி பகவான் அவதரித்ததாகப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது இது ஏற்கனவே நடந்து முடிந்த சதுர்யுகத்தில் நடந்த ஜெயந்தி. அதைத்தான் கொண்டாடிவிடுகின்றோம்.நாம் வாழும் இந்த சதுர் யுகத்துக்கு இனிமேல் தான் கல்கி அவதரிக்க இருக்கின்றார். அவர் விஷ்ணு யஸஸ் என்பவ ரின் புத்திரனாக அவதரிப்பார் என்று இருக்கிறது.”சாஸ்தா பவிஷ் யதி கலேர் பகவான் யுகாந்தே” என்று மத் பாகவதத்தில் வருகிறது.
? விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்தை பெண்கள் செய்யலாமா ?
- கலைச்செல்வி, நெய்வேலி.
தாராளமாகச் செய்யலாம். செய்து கொண்டிருக்கிறார்கள்.
? வேதத்தில் ஒன்றுமே இல்லை அது வெறும் பழம் பஞ்சாங்கம் தான்
என்றெல்லாம் சொல்லுகின்றார்களே?
- பரணிகார்த்திக்கேயன், தூத்துக்குடி.
வேதத்தை முழுமையாகப் படித்து விட்டு சொல்பவர்கள் குறைவு.வேதத்தின் அருகில் கூட போகாதவர்கள் இப்படிப் பேசக்கூடாது. குறைந்த பட்சம் மொழிபெயர்ப்பாவது வாசித்து விட்டுப் பேச வேண்டும். உதாரணமாக அதர்வ வேதத்தில் எத் தனையோ விஷயங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
1.நம் உடலில் உள்ள நாடிகள், தமனிகள், நூறு சிரைகள் ஆயிரம் தமனிகளைப் பற்றிய குறிப்புகள் பல நோய்களுடன் பல உறுப் புகளைப் பற்றிய விளக்கம் தலைமுடி, எலும்பு, ஸ்ராவம், மாமிசம், மஜ்ஜை, கணு, தொடை, பாதம், முழங்கால் தலை, கை, முகம், புட்டம், தனம், விலா,நாக்கு, கழுத்து, தோல் முதலியவற்றைப் பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன.
2.பிள்ளைப் பேறு பெறுதல் குறித்த சிகிச்சை முறைகள் அதர்வண வேதத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆணின் உடலில் விந்துக் குறைவு, அலித்தன்மை ஆகியவற்றைப் போக்கும் முறைகள் கூறப்பட்டுள்ளன.கர்ப தோஷ நிவாரணத்திற்கு மூலிகை, மந்திரம், ஹோமம் முதலியனவும் கூறப்பட்டுள்ளன.
3.வைட்டமின் D குறைபாடு குறித்து மருத்துவர்கள் சொல்கிறார்கள். சூரிய ஒளி சிகிச்சையால் இதய நோய் முதலியன தீரும் வகை ரிக் வேதத்தில் 1-50-11-13 ல் விளக்கப்பட்டுள்ளது.
4.இனம் தெரியாத நோய்களுக்குச் சிகிச்சை முறைகள் ராஜயக்ஷ்மா, கிராஹி, இதயநோய் முதலியன ரிக்வேத 10-97, 105-137-161-167ல் குறிப்பிடப்பட்டுள்ளன. மேல்நாட்டுக்காரர்கள் இதனால் வேதம் பயில்கிறார்கள். வேதம் பயிலாததால் நிச்சயம் வேதத்துக்கு நஷ்டமல்ல.
? தயிர் பாவாடை உற்சவம் என்று ஒரு உற்சவம் இருப்பதாக ஒரு நண்பர் சொன்னார் எங்கே அது நடக்கிறது?
- சுரேஷ்குமார், தஞ்சை.
திருச்சி அருகே மணக்கால் என்ற ஊரில் உள்ள சப்தமாதர் ஆலயத்தில் இது நடக்கிறது.நவராத்திரி நாட்களில் நங்கையர் அம்மன் என்று அழைக்கப்படும் கௌமாரிக்கு லட்சார்ச்சனை நடை பெறுகிறது. 10-ம் நாள் அர்த்த மண்டபம் முழுவதும் சாதத்தை வடித்து தயிரைக் கலந்து நிரவி விடுவார்கள். சிறப்பு பூஜைக்குப் பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள். இதை ‘தயிர்ப் பாவாடை உற்சவம்’ என்கிறார்கள்.
?தினம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பூஜை அறையில் சரஸ்வதி தேவியைத் துதிப்பது போல் எளிய ஸ்லோகம் ஏதாவது இருக்கிறதா?
- ராஜகண்ணப்பன், திண்டுக்கல்.
இருக்கிறது இதோ
ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே
காமரூபிணி வித்யாரம்பம்
கரிஷ்யாமி ஸித்திர்பவதுமே ஸதா
? நவக்கிரகங்கள் வீதி உலா வருவதுண்டா?
- பார்வதி குமரவேலன், மேட்டூர்.
பொதுவாக வருவதில்லை ஆனால் இதிலும் ஒரு தலத்தில் விதிவிலக்கு உண்டு அந்த தலம் எது தெரியுமா? கும்ப கோணத் துக்கு அருகிலுள்ள சூரியனார் கோயில். தமிழகத்தில் சூரியனுக்காகத் தனிக்கோயில் அமைந்துள்ள ஒரே இடம். இங்கு மட்டுமே. எல்லா நவகிரக உற்சவ மூர்த்திகளும் தை மாத பிரம்மோற் ஸவத்தில் திருவீதி உலா வரும். இந்த ஆலயத்தில் உள்ள நவக்கிரகங்கள் சாந்த சொரூபிகளாக அடியவர்களுக்கு அருள் வழங்கும் நிலையில் அபய ஹஸ்தத்துடன் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. நவக்கிரகங்கள் எல்லாவற்றுக்கும் பஞ்சலோக விக்ரகங்கள் உள்ள திருத்தலம். இந்தத் தலத்தில் மட்டுமே சூரியனுக்குத் திருக் கல் யாணம் நடக்கும். இதைத் தரிசிப்பதால் திருமணத் தடைகள் அகலும்.
தேஜஸ்வி