தெளிவு பெறு ஒம்
?பெருமாளையே ஆழ்வார் என்று சொல்லுகின்றார்களே.. சரிதானா?
- பவானி, சென்னை.
சரிதான். ஆழ்வார் என்றால் ஆழ்பவர்கள் என்று பொருள். ஒரு விஷயத்தில் ஆழ்ந்து கிடப்பவர்களை ஆழ்வார்கள் என்று சொல்லால் குறிப்பிடுகின்றோம். பக்தியில் மூழ்கி சதாசர்வ காலமும் எம்பெருமானையே நினைத்துப் பாடியவர்கள் ஆழ்வார்கள். அவர்கள் பன்னிருவர். அவர்கள் தமிழில் பாடிய பாமாலை அருளிச் செயல் என்று சொல்லப்படும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். அவர்கள் பண்ணோடு பாடிய தமிழ்ப் பாசுரங்களில் சதாசர்வ காலமும் ஆழ்ந்து கிடப்பவர் பெருமாள்.
ஆழ்வார்கள் பக்தியில் ஆழ்ந்து கிடந்தார்கள் என்று சொன்னால், ஆழ்வார்கள் அருந்தமிழில் பெருமாள் ஆழ்ந்து கிடந்தார். அதனால் பெருமாளையும் ஆழ்வார் என்று சொல்லும் மரபு வைணவத்தில் உண்டு. உதாரணமாக திருக்குடந்தையில் இருக்கக் கூடிய ஆராவமுதப் பெருமாளை ஆராவமுத ஆழ்வார் என்று சொல்வார்கள்.
? அன்பு வேறு, அருள் வேறா?
- வித்யா, திருப்பூர்.
இரண்டும் ஒன்றுதான். ஆயினும் இரண்டு சொல் எதற்கு என்ற கேள்வி எழலாம். அன்பின் நீட்சியை குறிப்பிடும் சொல்தான் அருள். அப்படியானால் அன்பு என்ற சொல்லுக்கும் அருள் என்ற சொல்லுக்கும் என்ன பொருள் வேறுபாடு என்று சிந்திக்க வேண்டும். தனக்கு உரியவர்களிடம் உள்ளது அன்பு. உறவுகளிடம் மட்டுமின்றி அனைவரிடமும் பெருகுகின்ற அன்புக்கு அருள் என்று பெயர். இராமலிங்க வள்ளலார் ‘‘அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிய வேண்டும் ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்” என்று சொல்கிறார் அல்லவா.
இந்த நிலைக்குத்தான் அருள்நிலை என்று பெயர். ஏதாவது ஒரு நிபந்தனையுடன் கூடிய உறவுக்கு அன்பு என்று பெயர் கிடையாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுக்கக்கூடிய குணத்திற்கு தான் அன்பு என்று பெயர். உதார ணமாக ஒரு தாய் தன் குழந்தையுடன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசம் காட்டுவதற்கு அன்பு என்று பெயர். இதே பாசத்தை மற்ற உயிர்களிடமும் காட்டினால் அருள் என்று பெயர்.
? ஜாதகத்தில் ஒரு கிரகம் நீசமானால் என்ன செய்ய வேண்டும்?
- பி.பாலு, சேலம்.
உங்கள் உடலில் ஏதோ ஒரு சத்து குறைபாடு இருக்கிறது உதாரணமாக இரும்புச் சத்து குறைந்து இருக்கிறது. உடனே, நீங்கள் என்ன செய்வீர்கள்? அதைச் சரிசெய்வதற்கு இரும்பு சத்துக்கான உணவுகளை உட்கொள்ளுவீர்கள் அல்லது அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வீர்கள். அதைத்தான் இந்த விஷயத்திலும் செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு ஜாதகத்தில் செவ்வாய் பலம் குன்றி இருக்கிறது நீசமாக இருக்கிறது என்று கொண்டால், அதற்கான பலன் சகோதரர்களிடத்திலே விரோதம் என்று சொல்கிறார்கள்.
இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் என்னதான் விரோதம் இருந்தாலும்கூட நாம் விரோதம் பாராட்டாமல் இருந்தால் அந்த நீசச் செவ்வாயால் வருகின்ற தீய பலன்கள் வராது அல்லது குறைந்துவிடும். இதற்கு கோயில்களில் சென்று பரிகாரம் செய்கின்ற முறை இருந்தாலும் கூட உங்கள் மனதில் அந்த விரோத எண்ணம் இருக்கின்றவரை எத்தனைக் கோயில் போனாலும், எப்படிப் பரிகாரம் கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பணம் வரவேண்டும். இரண்டாம் இடம். அதற்கு நேர் ஏழாமிடம் எட்டாமிடம். கஷ்டப்பட்டு உழையுங்கள். இரண்டாம் இடம் செயல்பட்டு பணம் வரும். மனதில் சந்தோஷம் இல்லை. 9ம் இடம். அதற்கு நேர் மூன்றாமிடம். மற்றவர்களிடம் தொடர்பு, பிரயாணம் செய்யுங்கள். மகிழ்ச்சி வரும்.
?புராணங்களில் சில கதைகள் நம்பும்படி யாகவே இல்லையே, நாம் எப்படிப் படிப்பது?
- பத்ரிசேஷாத்ரி,ஸ்ரீரங்கம்.
திரைப்படங்களை மகிழ்ச்சியோடு பார்க்கிறீர்கள். அதில் நீங்கள் விரும்புகின்ற கதாநாயகன் எந்த ஆயுதமும் இல்லாமல் 100 பேரை அடித்து வீழ்த்துகின்றான். நீங்கள் கைதட்டி ரசித்துப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறீர்கள். இது முடியுமா? இது நம்பும் படியாக இருக்கிறதா என்று எந்தத் திரைப்படத்தைப் பார்த்தாவது நீங்கள் சொன்னது உண்டா? ஆயினும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்து மகிழ்கிறீர்கள். இப்பொழுது உங்களுக்கு இரண்டு மகிழ்ச்சிகள் கிடைக்கின்றன. ஒன்று உங்கள் கதாநாயகன் வெற்றி பெற்று விட்டான். இரண்டாவதாக அவன் ஏதோ ஒரு தீமையைத் தடுப்பதற்காக இத்தனைப் பெரிய சண்டையைப் போட்டு இருக்கிறான்.
அந்தத் தீமை தடுத்து நன்மை நடந்ததால் உங்களுக்கு மகிழ்ச்சி. இந்த இரண்டு செய்திகளையும், அந்த நம்பத்தகாத காட்சி உங்களுக்குச் சொல்லுகிறது. புராணங்களை, புராணங்களின் நிகழ்ச் சிகளை நீங்கள் நம்ப வேண்டாம். திரைப்படம்போல பாருங்கள். நல்ல கருத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒத்து வரவில்லை என்றால் விட்டு விடுங்கள். இன்னொரு உதாரணத்தைச் சொல்லுகின்றேன். இராமாயணத்தைப் படிக்கும்பொழுது புஷ்பக விமானம் என்று ஒன்று வருகிறது. ஒரு 200 வருடங்களுக்கு முன் அந்த கதையைப் படித்தவர்கள் இப்படி ஒரு விமானம் இருக்க முடியுமா? வானில் பறப்பது சாத்தியமா என்று நினைத்திருப்பார்கள்.
ஆனால், இன்று வேறு கிரகங்களுக்கே செல்லக்கூடிய வாகனங்களை எல்லாம் தயாரித்து விட்டார்கள். எனவே, புராணங்களில் உங்களுக்குப் பயன்படக்கூடிய ஏதாவது ஒரு செய்தி இருக்கும். அதை எடுத்துக் கொள்ளுங்கள். வீணே புராணங்களை விமர்சனம் செய்வதால் நமக்குத்தான் நஷ்டம். அந்தக் கதைகள் எல்லாம் மருந்தின் மீது தடவப்பட்ட இனிப்பு போன்றவை. தடவப்பட்ட இனிப்பு நோயை குணப்படுத்தாது. அது மருந்து உட்கொள்வதற்குத் தான் உதவும். உள்ளே இருக்கக்கூடிய மருந்து தான் வேலை செய்யும். கதைகளுக்குள் இருக்கும் கருத்துக்களை வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். தத்துவங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
?வால்மீகி ராமாயணத்தில் சீதையை இராவணன் கையால் பலவந்தமாக எடுத்துச் சென்றான் என்று வருகிறது. கம்பராமாயணத்தில் அவன் பர்ணசாலையோடு சீதையை எடுத்துச் சென்றான் என்று வருகிறது. இரண்டும் ராமாயணம்தான். இரண்டிலும் ஒரு நிகழ்ச்சியே இப்படி வித்தியாசமாக வருகிறது?
- மெய்யப்பன், விக்கிரவாண்டி - விழுப்புரம்.
இரண்டு இராமாயணத்திலும் உள்ள வேறுபாட்டைச் சொல்லுகிறீர்கள். இரண்டு இராமாயணத்திலும் சீதையை இராவணன் கடத்திச் சென்றதும் அசோக
வனத்தில் கொண்டுபோய் தனிச்சிறையில் வைத்ததும் வருகிறதல்லவா. அங்கே முக்கியமானது அந்த நிகழ்ச்சிதானே தவிர வேறு அல்லவே. இரண்டிலும் நன்றாகத் தானே இருக்கிறது. கதையின் சுவைக்காகவும் அந்தந்த பிராந்தியத்தின் நடைமுறை ஒழுக்கம் பண்பாடு போன்றவற்றை பிரதிபலித்தும் கவிஞர்கள் சிறு சிறு மாற்றங்களைச் செய்வார்கள். மூலக் கதையை பாதிக்காத வரை அந்த மாற்றங்களை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.
? சில கோயில்களில் ஒரே ஒரு ராஜகோபுரம்தான் இருக்கிறது. ஆனால், சீர்காழி சிதம்பரம் போன்ற கோயில்களில் நான்கு வாசல்கள் இருக்கின்றனவே, என்ன காரணம்?
- கலையரசி, ஆடுதுறை.
நான்கு வேதங்களையும் பிரதிபலிப்பதற்காக நான்கு ராஜகோபுரங்களை வைத்திருப்பதாக சில பெரியவர்கள் சொல்கிறார்கள். உதாரணமாக கிழக்கு ராஜகோபுரம் ரிக் வேதத்தைக் குறிப்பிடுவதாகச் சொல்கிறார்கள். எந்த வேதத்தின் உள்ளே நுழைந்தாலும் கடைசியில் அதனுடைய உபநிஷத பாகமாகிய பரபிரமத்தைத்தான் தரிசிக்க இருக்கின்றோம். உபநிடத பாகத்தின் கீழ் அவன் எழுந்தருளி இருக்கிறான் என்பதை காண்பிப்பதற்காகத்தான் வேதத்தின் உச்சி பாகமான உபநிடதத்தை குறிக்கும் வண்ணம் கூம்பு வடிவில் உள்ள கருவறையின் கீழ் இறைவன் காட்சி தருகின்றான்.
?ஞாபக மறதி நீங்குவதற்கு ஏதாவது மந்திரங்கள் இருக்கிறதா?
- மதுமிதா, கோவை.
அந்த மந்திரங்களும் மறந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? ஞாபகமறதி என்பது நம்முடைய மூளையின் சக்தி, வயதின் காரணமாக குறைவதால் வருவது. இன்னொரு விஷயமும் சொல்லுகின்றேன். பல நேரங்களில் இந்த ஞாபகமறதிதான் நம்மை துக்கங்களிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. ஞாபக மறதி இல்லாமல் இருப்பதற்காக மார்க் டிவைன் என்ற அறிஞர் ஒரு கருத்தைச் சொல்லுகின்றார். நீங்கள் எப்பொழுதும் உண்மையே பேசினால் அந்த விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதனால் ஞாபக மறதியும் வராது” என்கிறார். அதைத்தான் வேதத்தில் எப்பொழுதும் உண்மையைப் பேசு என்று சொன்னார்கள்.
?கண்களால் பார்ப்பதுகூட பல நேரங்களில் பொய்யாகப் போய்விடுகிறதே?
- கார்த்திக், சென்னை.
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பது ஒன்றே மெய் என்று அந்த காலத்தில் சொல்லி வைத்தார்கள். ‘‘உன் கண் உன்னை ஏமாற்றினால்” என்ற திரைப்படப் பாடலிலும் இதை ஒரு கவிஞர் சொல்லி இருப்பார். கண்களால் பார்ப்பதைவிட இதயத்தால் பாருங்கள். அது எப்பொழுதும் பொய் சொல்லாது.
?அருளாளர்கள் பாடுகின்ற பொழுது தன்னுடைய நெஞ்சைப் பார்த்துதான் பாடுகிறார்கள், ஏன்?
- சு.மணிகண்டன், ராஜபாளையம்.
நீங்கள் சொல்வது உண்மைதான் ‘‘வணங்கு என் மனமே”, ‘‘வணங்கு என் நெஞ்சே...” ‘‘தொழுது எழு என் மனமே...” என்ற வார்த்தைகளை அருட்பாடல்களில் நிறையப் பார்த்திருக்கிறோம். இதற்கு என்ன காரணம் என்று சொன்னால், நாம் பக்தியைச் செலுத்துகின்ற பொழுது திரிகரண சுத்தியோடு ஈடுபட வேண்டும். அதாவது நம்முடைய செயல், நம்முடைய சொல், நம்முடைய மனம் - இது மூன்றும் ஒன்றாக இணைந்து ஈடுபட்டால்தான் அந்த பக்தி சித்தியாகும்.
ஆனால், இந்த மூன்றிலும் சொல்லையும் செயலையும் பலவந்தப்படுத்தி ஈடுபடுத்திவிடலாம். உதாரணமாக தெய்வத்தைப் பார்த்தவுடன் கைகூப்பி வணங்கலாம். ஏதோ ஒரு மந்திரத்தை எங்கோ பார்த்துக் கொண்டு சொல்லலாம். ஆனால், உங்கள் கைகள் வணங்கினாலும் வாய் தன்னிச்சையாக மந்திரத்தைச் சொன்னாலும் மனம் ஏதோ ஒரு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும். அதை மட்டும் நீங்கள் வற்புறுத்தி உங்கள் வழிக்கு கொண்டு வர முடியாது. அதனால்தான் அருளாளர்கள் மனதிடம் போய் கெஞ்சுகிறார்கள். மனது வசப்பட்டு விட்டால் சொல்லும் செயலும் அதோடு இணைந்து விடும்.
?சொர்க்கம் நரகம் எல்லாம் உண்மையில் காண முடியுமா?
- வெங்கடேஷ், திருச்சி.
கட்டாயம் காணமுடியும். நம் வீட்டில் எல்லோரும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் பேசாமல் உம் மென்று இருக்கிறார்கள். இப்பொழுது வீடு எப்படி இருக்கும்? நரகமாக இருக்கும். அதே வீட்டில் சந்தோஷமாக ஒருவருக்கொருவர் உற்சாகமாகப் பேசிக்கொண்டு மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். இப்பொழுது எப்படி இருக்கும்? சொர்க்கம்போல இருக்கும். எனவே, சொர்க்கமும் நரகமும் நாம் வாழும் வாழ்க்கையிலேயே காண முடியும்.
? நம்மை தாழ்வாக சிலர் நினைக்கிறார்களே என்ன செய்வது?
- ராஜ், சென்னை.
உங்கள் சம்பந்தம் இல்லாமல் உங்களை யாரும் தாழ்மையாக நினைத்துவிட முடியாது. அவர்கள் தாழ்வாக நினைப்பதைவிட நீங்கள் உங்களையே தாழ்வாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் பொருள். அடக்கமாக நைச்சிய பாவத்தோடு இருப்பது என்பது வேறு. தாழ்வு மனப்பான்மையோடு இருப்பது என்பது வேறு. அடக்கத்தோடு இருங்கள்..தாழ்வு மனப்பான்மை யோடு இருக்க வேண்டாம்..
தேஜஸ்வி