பிங்களா தேவி என்ற யோகினி
சும்ப நிசும்பன் என்ற அரக்கர்களை வதைக்க, அந்த பராசக்தி பார்வதி தேவியின் உடலில் இருந்து மகா சரஸ்வதியாகத் தோன்றுகிறாள். பிரம்மாவின் தர்ம பத்தினியான மஹா சரஸ்வதியை காட்டிலும் வேறானவள் இந்த தேவி. முழு முதல் பொருளான அன்னை ஆதி பராசக்தியின் வடிவமாகக் கருதப்படுபவள் இந்த மகா சரஸ்வதி. இந்த அம்பிகை சும்ப நிசும்பர்களோடு சண்டையிடும்போது, அவளுக்குத் துணை புரிய, அவளது உடலில் இருந்து பல தேவிகள் தோன்றினார்கள். பிரம்மனின் சக்தியின் வடிவமான பிராம்னி தேவி, ஈசனின் சக்தியின் வடிவமான மகேஷ்வரி என்று விரியும் அந்த யோகினிகளின் பட்டியலில் சப்த மாதாக்களும் அடக்கம்.
சும்ப நிசும்பர்களுடனான போர் உச்சத்தை அடைகிறது. போரில் சும்பனின் சேனை மொத்தத்தையும் அழிக்கிறாள் அம்பிகை. அதன் உச்சமாக அவனது சகோதரனான நிசும்பனும் அழிக்கப்படுகிறான். யாரும் இல்லாத தனி மரமாக யுத்த களத்தில் தன்னந்தனியாக நிற்கிறான் சும்பன். அப்போது அம்பிகையை பார்த்து கேட்கிறான், ‘‘பெரிய வீராங்கனையாக உன்னை நீயே நினைத்துக்கொள்ளாதே! உன்னுடன் இத்தனை ஆட்கள் இருப்பதாலேயே உன்னால் இந்த வெற்றியை அடைய முடிந்தது” என்று இறுமாப்பாக பேசுகிறான். அவனது அறியாமையை கண்ட அம்பிகை புன்சிரிப்பு செய்கிறாள்.
‘‘மூடனே, பலப்பல யோகினிகளாக நான் காட்சி தந்தாலும் உண்மையில் நான் ஒருத்தியே. இந்த உலகம் அனைத்தும் நானே. என்னை அல்லால், இந்த உலகில் இரண்டாவது பொருள் இல்லை.\” என்று பதில் சொன்னாள். அப்படி அவள் பேசிக்கொண்டே இருக்கும் போது அவளது உடலின் உள்ளே அனைத்து யோகினிகளும் புகுந்து மறைந்து விட்டார்கள் என்று தேவி பாகவதமும், தேவி மகாத்மியமும் சொல்கிறது. அதன் படி பார்க்கும் போது, யோகினிகள் என்பவர்கள், அம்பிகையின் ஆற்றலின் ஒரு அம்சம் என்பதையும், அம்பிகையின் ஒரு வடிவமே இந்த யோகினிகள் என்றும் புரிந்து கொள்ளலாம்.
இந்த யோகினிகள் அனைவரும் அம்பிகைக்கு சதா சேவை செய்து கொண்டே இருக்கிறார்கள் என்பதையும், இவர்கள் எண்ணிக்கையில் எண்ணில் அடங்காத அளவு இருக்கிறார்கள் என்பதையும், ‘‘கடாக்ஷ கிங்கரி பூத கமலா கோடி சேவிதா” என்ற லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் ஒரு நாமா நமக்கு காட்டிக் கொடுக்கிறது.அதே போல ‘‘மஹாசதுஷ் சஷ்டி கோடி யோகினி கன சேவிதா” என்ற நாமம், இந்த யோகினிகள் எண்ணிக்கையில் அறுபத்தி நான்கு கோடி பேர்கள் என்று சொல்கிறது. சில அம்பிகை உபாசகர்கள், முக்கியமான யோகினிகள் அறுபத்தி நான்கு பேர்கள் என்றும் சொல்கிறார்கள்.
இந்த அறுபத்து நான்கு யோகினிகளின் பட்டியல் ஒவ்வொரு நூலில் ஒவ்வொரு மாதிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. எது எப்படி இருந்தால் என்ன, யோகினிகள் என்பவர்கள் அம்பிகையின் ஆற்றலின் ஒரு பகுதி என்றும் அவர்கள் எப்போதும் அம்பிகையை சேவித்தபடியும் இருக்கிறார்கள் என்றும் சுருக்கமாகச் சொல்லலாம்.இந்த யோகினிகள் ஒரு சாதகன் அல்லது உபாசகன் தனது ஆன்மிக சாதனையில் அல்லது வாழ்வில் முன்னேறும் போது, அவர்களுக்கு உதவிபுரிகிறார்கள். அதே சமயம், உபாசகன் கெட்ட எண்ணம் கொண்டவனாக இருந்தால், அவனுடைய சாதனையைத் தடுக்கிறார்கள். மொத்தத்தில் அம்பிகையை உபாசிப்பவர்களுக்கு உறுதுணையாக இருந்து, அவர்களை அம்பிகையை நோக்கி இட்டுச் செல்லும் முக்கிய பொறுப்பு இந்த யோகினிகளுக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையல்ல.
இப்படி பலப்பலவாக உள்ள யோகினிகளில் மிகவும் முக்கியமான இடத்தை வகிப்பவர் பிங்களா தேவி ஆவாள். இந்த யோகினியை பற்றி இந்தக் கட்டுரையில்காண்போம் வாருங்கள்
கிளிமுகம் கொண்ட யோகினி
பிங்களா யோகினி என்பவள், அறுபத்து நான்கு யோகினிகளில் நான்காவது யோகினியாக திகழ்பவள். அழகிய கிளி முகமும், அற்புதமான மனித உடலும் கொண்டவள். இந்தக் கிளி முகத்தின் பின்னே ஒரு பெரிய தத்துவமே இருக்கிறது. அதைக் காண்போம் வாருங்கள்.கிளியானது தனது காதில் ஒலிப்பதைக் கேட்டு, அப்படியே திரும்பி சொல்லும். இது ஒரு அற்புதமான குணம்.
ஆதி காலத்தில், வேதங்களை யாரும் எழுதி வைக்கவில்லை. குரு சொல்வதை கேட்டு, சிஷ்யன் அதை மீண்டும் மீண்டும் சொல்லி மனனம் செய்வான். பிறகு அந்த சிஷ்யன் மற்றொருவனுக்குச் சொல்ல அவர் அதை மீண்டும் மீண்டும் சொல்லி மனனம் செய்வார்.
இப்படி எழுதி வைக்காமல், வாய் மூலமாகவே நான்கு வேதங்களும், பல சந்ததிகளுக்குக் கடத்தப்பட்டது. ஆகவே, வேதங்களுக்கு எழுதாக் கிளவி என்று பெயர். அதாவது எழுத்து வடிவில் இல்லாத ஞானம் என்று பொருள்.அதே போல வேதங்களுக்கு ஸ்ருதி என்றும் பெயர் உண்டு. அதாவது குரு சொல்வதை கேட்டு, அதை மீண்டும் மீண்டும் சொல்லி மனனம் செய்வதால், வேதத்திற்கு காதால் கேட்டு அறியப்படும் ஞானம் என்ற பொருள் படும்படி ஸ்ருதி என்று பெயர்.
அது மட்டுமில்லாமல் மந்திர உபாசகர்கள், தங்களுக்கு உபதேசமான மந்திரத்தை நியம, நிஷ்டையோடு மீண்டும் மீண்டும் சொல்வதால், அந்த மந்திரமும் சித்தி ஆகிறது. அந்த மந்திரமே உபாசகன் உபாசகனே மந்திரம் என்னும் உயர் நிலையை அடைந்து, இறைவனோடு இரண்டறக் கலக்கிறான் சாதகன்.இப்படி வேதமந்திரங்கள் ஒரு தலைமுறையில் இருந்து மற்ற தலைமுறைக்கு ஆதி காலத்தில் கடத்தப் பட்டது, காதால் கேட்டு, மீண்டும் மீண்டும் சொல்வதால்தான். அதே போல மந்திரங்கள் சித்தி ஆவதும், குருவிடம் முறையாக அந்த மந்திரங்களைக் கேட்டு, மீண்டும் மீண்டும் வாக்காலும் மனதாலும் அதை உச்சரிப்பதால் தான்.
இரண்டிற்கும் கேள்வி ஞானமும், கேட்ட ஞானத்தை மனதிற்குள் தக்க வைத்துக்கொள்ள, செய்யும் முயற்சியும் மிக முக்கியம். இந்த இரண்டின் உருவகமாகத் தான், சொன்னதை மீண்டும் மீண்டும் அப்படியே சொல்லும் கிளி இருக்கிறது.ஆகவே கிளி முகம் கொண்ட இந்த பிங்களா தேவி, தேவியின் உபாசகர்களுக்கு கேள்வி ஞானத்தையும், கேட்டதை மனதில் தக்க வைக்கும் ஞானத்தையும், மந்திர சித்தியையும் விரைவில் தருகிறாள் என்பதை, இந்த யோகினியின் கிளி முகம் நமக்கு காட்டிக் கொடுக்கிறது.
அம்பிகையின் கையில் கிளியும் பிங்களா தேவியும்
அம்பிகைக்கு சுகப் பிரியா என்று ஒரு திருநாமம் உண்டு. அதாவது கிளிகளின் மீது அதீத பிரியம் கொண்டவள் என்று இதற்கு பொருள். இதன் பின்னும் ஒரு பெரிய
தத்துவம் இருக்கிறது.அம்பிகைக்கு, மிகவும் பிடித்தவை கிளிகள் என்றால், வேதத்தை முறையாக கற்பவர்கள் மீதும், மந்திரத்தை சரியாக உபாசிப்பவர்கள் மீதும், அம்பிகைக்கு அபரிமிதமான அன்பு உண்டு என்பதையே அது குறிக்கிறது. இப்படி கிளிகள் கேள்வி ஞானத்தின் அடையாளமாக இருப்பதால் தான், காஞ்சி காமாட்சி, மதுரை மீனாக்ஷி, என்று அனைத்து தேவியரின் கையிலும் கிளிகள் இருக்கின்றன.
மேலும், இந்த கிளிகள், அம்பிகையிடம் ஒரு பக்தன் வைக்கும் கோரிக்கையை நன்றாக கேட்டு, அதை மீண்டும் மீண்டும் அம்பிகைக்கு நினைவு படுத்துவது போல அம்பிகையின் கையில் அமர்ந்து கொண்டு பக்தனின் கோரிக்கையை அம்பிகையின் செவியின் அருகே சென்று மீண்டும் மீண்டும் சொல்கிறது. இதனால் பக்தனின் கோரிக்கையும் விரைவில் நிறைவேறுகிறது. கிளி முகம் கொண்ட பிங்களா தேவி, தன்னுடைய இனிமையான குரலில் அடியாரின் கோரிக்கையை அம்பிகைக்கு மீண்டும் மீண்டும் உணர்த்தி, அடியாரின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறாள்.
பிங்களா தேவியும் யோகா சாஸ்திரமும்
வலது நாசியில் சுவாசம் நடக்கும் நேரத்தில், உடலில் தந்தையின் உயிர்ப்புத்தன்மையின் செயல்பாடுகள் நிகழும். இந்த நேரத்தில் உடலில் துடிக்கும் நாடியை ஆண் நாடி அல்லது தந்தை நாடி அல்லது பிங்கலை நாடி என்றும் சொல்கிறோம். இந்த பிங்கலை நாடியில் சூரிய சக்தி இருப்பதால் இதை சூரிய நாடி என்றும், சூரியகலை என்றும் கூட அழைக்கிறார்கள். இந்த நாடி உடலில் செயல்படும்போது, சங்கீதம், உபதேசம், கற்றல் ஆகிய பணிகளைச் செய்யலாம். ஆக கிளியின் முகம் கொண்ட இந்த பிங்களா தேவியின் அருள் இருந்தால் உடலில் சூரிய சக்தி சீர்படும். சங்கீதம் போன்ற கலைகளில் தேர்ச்சி பெறலாம்.
பிங்களாதேவி கிளியின் முகம் கொண்டவள். ஆண் நாடி எனப்படும் பிங்கலை நாடிக்கு அதிபதி ஆவாள். ஆகவே இவளை, தத்தை முகம் கொண்ட தத்தை என்று சொல்லலாம். தமிழ் இலக்கியத்தில் தத்தை என்றால் கிளி என்றும், அழகான இளம் பெண் என்றும் இரண்டு பொருள் உண்டு.அவள் தனது கழுத்தில் மிகப்பெரிய மாலை ஒன்றை அணிந்து கொண்டு இருக்கிறாள். அதன் இரண்டு பகுதிகளையும் தனது இரண்டு கைகளினாலும் பிடித்து இருக்கிறாள். இது பிங்கலை நாடி வழியாக பிராண சக்தி உடல் முழுவதும் செல்வதையும், அதனால் உடலில் உள்ள சூட்சுமமான யோகச் சக்கரங்கள் தூண்டப்படுவதையும் குறிக்கிறது.
பிங்களா தேவியால் வரும் சித்திகள்
இந்த யோகினி, சூரிய சக்தி வடிவமானவள். அதனால் நமது மூளையின் இடது பக்கத்தையும், உடலின் வலது பாகத்தையும் இவள் கட்டுப்படுத்துகிறாள். இதன் காரணமாகவே அவள் ஒரு அழகான கிளியின் முகத்தைத் தனது முகமாகப் பெற்றிருக்கிறாள். கிளி பகலில் விழித்திருப்பது. சுறுசுறுப்பானது,சாத்வீக உணவான பழங்களை மட்டுமே புசிப்பது, பேசக்கூடிய ஆற்றல் படைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக நீண்டதொலைவு பறக்கும் ஆற்றல் பெற்றது. பிங்களா தேவி தன்னை வழிபடும் சாதகருக்கு இது போன்ற சித்துக்களை அளித்து வாழ்வில் முன்னேற்றம் தருகிறாள் என்பது ஐதிகம்.
இவளை மனத்தில் நிறுத்தி வழிபட்டால் பேச்சு வன்மை பெருகும், பெண்களுக்கு இனிய குரல்வளம் உண்டாகும். சாந்தகுணமும், அனைவரையும் கவரும் அழகும் வளரும்.
எப்படி வழிபடுவது?
யோகினிகளை வழிபடும் முறையை ஒரு தேர்ந்த குருவிடம் இருந்து உபதேசம் பெற்று அதன் படி, அவரது வழிகாட்டுதலோடு தான் வழிபட வேண்டும். தான்தோன்றித் தனமாக செய்யும் வழிபாடு ஆபத்தில் முடியலாம். ஆகவே தேர்ந்த குருவிடம் சென்று அவர் சொல்படி நடப்பது தான் முறை. இருப்பினும் பிங்களா யோகினியின் அருளைப் பெற வேண்டும் என்று நினைப் பவர்கள், அந்த பராசக்தியை உள்ளம் உருக வழிபட்டாலே போதும், யோகினிகளின் அருள் தானாகவே கிடைக்கும்.
ஜி.மகேஷ்