வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
உலகில் இருக்கக் கூடிய அத்தனைப் பழங்களும் ஒருமுறை ஒன்று சேர்ந்து பிரமாண்டமான மாநாட்டை நடத்தின. தலைமையேற்றுப் பேசிய பழம் ஒன்று, உலகில் உள்ள பழங்களில் எந்தப் பழம் அதிகச் சுவையுடையதும், சிறப்புடையதுமாக உள்ளது? என்ற கேள்வியுடன் தன் தலைமை உரையை முடித்துக் கொண்டது.
பழங்கள் ஒன்றுக்கொன்று தொண்டையில் குசுகுசுவெனப் பேசின. ஆப்பிள் பழம், செர்ரிப்பழம், அன்னாசிப் பழம், கொய்யாப்பழம், மாதுளம்பழம், மாம்பழம் என ஒவ்வொன்றும் தானே அதிகச் சுவை உடையது என்று கூறி மார்தட்டின. ஆனால், திராட்சைப்பழம் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியுடன் இருந்தது. பிற பழங்கள் தனது பங்குக்கு திராட்சைப்பழமும் எதையாவது பேசும் என்று எதிர்பார்த்தன. ஆனால், அதுவோ மவுனம் காட்டியது.
இதனால் மற்ற பழங்கள் திராட்சை பழத்தை பார்த்து இழிவாக சிரித்தன. அப்போது பலாப் பழம் ஒன்று உருண்டு வந்தது. அது திராட்சைப் பழத்தைப் பார்த்து அன்புடன் கேட்டது.
‘‘திராட்சையே... நீ ஏன் மவுனமாக நிற்கிறாய்? எனக்குத் தெரியும். உலகில் உள்ள பழங்களிலேயே அதிக சிறப்புப் பெற்றவனும், நலம் அளிப்பவனும், சுவை நிரம்பியவனும் நீதான் என்று! ஆனால், அதையும் தாண்டிய ஒரு சிறப்புத் தகுதி உன்னிடம் உண்டு. அதை நீயே உன் வாயால் சொல்ல வேண்டும். அப்போதுதான் மற்றப் பழங்களும் உன் தகுதி பற்றி அறிந்து கொள்ளும்,” என்று கூறியது.
திராட்சைப் பழம் அமைதியாகக் கூறியது. “அண்ணா, நீங்கள் எல்லாருமே தனித்தனியாகவே வருகிறீர்கள். தனித்தனியாகவே விற்பனை செய்யப்படுகிறீர்கள். ஆனால், நாங்களோ, ஒரு கூட்டமாக, கொத்தாக வளருகிறோம். நாங்கள் ஒருவர் வளர்வதற்கு மற்றவர்களுக்கு இடம் தருகிறோம். விட்டுக் கொடுத்து வாழ்கிறோம். விற்பனைக்குப் போகும் போதும் கொத்தாகவே செல்கிறோம். தனியாக நாங்கள் விலை போவதில்லை.
‘‘எங்களைச் சாறாக்கிக் குடிக்கும் போது கொத்துக் கொத்தாகவே அழிந்து போகிறோம். வாழ்விலும், வளர்ச்சியிலும், மரணத்திலும் நாங்கள் இணை பிரியாமல் இருக்கிறோம். அதனால்தான் நாங்கள் சிறந்தவர்கள் என்ற அங்கீகாரத்தை மனிதர்களிடமிருந்து அடைந்திருக்கிறோம். வேறு காரணமில்லை! ''என்றது. மற்ற பழங்கள் வெட்கத்தால் தலைகுனிந்தன.
ஆம், இறைமக்களே, ‘‘வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக் கடவோம்''(கலாத்தியர் 5:26) என இறைவேதம் எச்சரிக்கிறது. தற்பெருமை பிற பழங்களை தலை குனியச் செய்தது. உங்களை விட நல்லவர்கள், சிறந்தவர்கள், சாதனையாளர்கள் மற்றும் வெற்றியாளர்கள் என ஏராளமானோர் உங்களை சுற்றி பலர் மௌனமாக இருக்கிறார்கள். அவர்கள் மௌனமாக இருப்பதினால் அவர்களை சாதாரணமாக எண்ணி விடாதிருங்கள். எனவேதான் இறைவேதம் “ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையுள்ளவர்களாக கருதுங்கள்” என அறிவுறுத்துகிறது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை மறந்து விடாதிருங்கள்.
- அருள்முனைவர். பெவிஸ்டன்.