ஆழ்வார் பிரான் ஆன கதை!!
வையத்து வாழ்வீர்காள்: பகுதி-3
பின்பழகிய பெருமாள் ஜீயர், ஆழ்வார்கள் பற்றி உபன்யாசத்தைத் தொடராக நிகழ்த்தி வந்தார். காஞ்சி நகரில் இது நிகழ்வது குறித்து அவரது குரு நம்பிள்ளைக்குக் கூடுதல் ஆனந்தம். கூட்டம் மொத்தமும் ‘திருமழிசை ஆழ்வார்’ பற்றிய உபன்யாசம் என்றதும் ஆர்வம் மிகுந்திருந்தனர். உபன்யாசம் துவங்கியது.“அன்றொரு நாள், அத்ரி, ப்ருகு, வசிஷ்டர், பார்க்கவர், ஆங்கீரசர் என முனிவர்களின் குழு பிரம்மனைச் சந்தித்தது.
“பிரம்மனே! வந்தனம். நாங்கள் முனிவர்கள் எல்லோரும் அமைதியான, அதே சமயம் இந்த உலகிலேயே மிகவும் உன்னதமான ஒரு இடத்தில் தவம் புரிய விழைகிறோம். தாங்கள் தயை கூர்ந்து எங்களுக்கு ஏற்ற, உகந்த இடத்தைத் தேர்வு செய்து அருள வேண்டும்’’“தொண்டை மண்டலத்தில் மகிசாரக சேத்ரம் எனும் இடம் இவ்வுலகிலேயே மிகமிக உன்னதமானது. நான் சொல்வதை மெய்ப்பிக்கச் சற்று நேரத்தில் ப்ரம்மலோக தச்சன் விஷ்வகர்மா இங்கு வரவிருக்கிறார்.”சொல்லி முடித்த சில கணங்களிலேயே விஷ்வகர்மா அங்கு தோன்றினார்.
ஒரு பெரிய துலாபாரத்தின், இடது தட்டில் உலகில் உள்ள அனைத்து இடங்களையும் இட்டார். வலது தட்டில் பிரம்மா குறிப்பிட்ட அந்த மகிசார சேத்ரம் எனும் இடத்தையுமிட்டார். வலது எடை அதிகமாக இருந்ததைக் கண்டு எல்லோரும் அந்த இடத்தின் மகிமையை உணர்ந்தார்கள். பூமியிலேயே மகிமை நிறைந்த தலமாக அது இருந்ததனால் அந்தப் பெயர் வந்ததாக பிரம்மன் குறிப்பிட்டார்.
முனிவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. பிரம்மனை வணங்கி, தவத்தைத் தொடங்கினார்கள். தவம் நிறைவடைந்து, எல்லா முனிவர்களும் அங்கிருந்து விடை பெற, பார்க்கவ முனிவர் மட்டும் தன் மனைவி கனகாங்கியுடன் அங்கேயே வசிக்கலானார். தீர்க்க சத்ர யாகம் என்ற ஒரு வேள்வியை நிகழ்த்தினார். அதன் பலனாக அவரின் மனைவி கருவுற்றார்.துவாபரயுகத்தின் இறுதிப் பகுதியில், விபவ வருடம், தை மாதம், மக நட்சத்திரம், வியாழக்கிழமையன்று ஒரு குழந்தையையும் ஈன்றாள்.
ஆனால், அந்தக் குழந்தை எந்தவொரு அசைவுமின்றி, கை, கால் என எதுவுமின்றி ஒரு சதைப்பிண்டமாகப் பிறந்திருந்தது. அதை எண்ணி பெற்றோர் மனம் கலங்கினார்கள். தாங்கள் செய்த வினையின் பயன் எனத் தங்களை நொந்து கொண்டார்கள். மனதைக் கல்லாக்கிக் கொண்டு, குழந்தையை ஒரு பிரம்புக் காட்டில் கிடத்தி விட்டுச் சென்றனர். திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே அவர்கள் நகர்ந்து சென்றது, அந்த ஊரின் பெரிய பிராட்டியாரின் மனதைப் பிசைந்தது. சுதர்சனச் சக்கரத்தின் அம்சமாகப் பிறந்த குழந்தை அல்லவா! தனது அருள் பார்வையை குழந்தையின் மேல் பதிக்க, குழந்தை அசைந்தது. அழுதது. கை, கால்கள் முளைத்தன. உயிருள்ள ஒரு ஆண் குழந்தையாக உருவெடுத்தது.
அழுகைக் குரல் தொடர்ந்தது. பிராட்டியார் சென்றால், பின்தொடர்வது பெரிய நாயகன் அல்லவா? அவ்வூரின் பெரிய நாயகன் ஜெகன்னாதர் குழந்தையின் எதிரில் தோன்றினார். அவரைப் பார்த்த குழந்தை சிரித்தது. பெருமாளின் திவ்ய தரிசனம் தொடர்ந்திட வேண்டுமென குழந்தை அடம் பிடித்து அழ, நகர முடியாமல் பெருமாள் ஒரு இனிய அவஸ்தையை அனுபவித்தார். பொதுவாகக் குழந்தை பாலுக்காக அழும், ஆனால், இந்தக் குழந்தை பெருமாளின் ஆராவமுதத்திற்கு அழுதது என்பது போலத்தானிருந்தது. பகவானைப் பார்த்தபடியே இருக்கத்தான் எல்லோருக்கும் தோன்றும். இந்தக் குழந்தை தெய்வீகக் குழந்தை அல்லவா? பகவானின் அருகாமை தொடர, அழுகையைத் தொடர்ந்தது. பகவான் பிரிய மனமின்றி, அங்கிருந்து மெல்ல நகர்ந்தார்.
அழுகுரலைக் கேட்டு, அங்கு பிரம்பு அறுத்துக் கொண்டிருந்த திருவாளன் என்பவர் ஓடோடி குழந்தை அருகில் வந்தார். குழந்தையைக் கையில் ஏந்தினார். குழந்தைப் பேறு இல்லாத தனக்கு இறைவன் அளித்த வரமோ! என்று ஆனந்தத் துள்ளலுடன் வீட்டை அடைந்தார். அவரின் மனைவி பங்கயற்செல்வி குழந்தையையும் அவரையும் பார்த்தார். கண்களிலே நீர் பொங்கியது. “இன்று அதிகாலையில் ஒரு கனவு. நம் பிராட்டியார், பகவானின் சுதர்சன சக்கரத்தை அவரிடமிருந்து எடுக்கிறார்.
அதை நம்மிடம் அளித்து ஆசி கூறுகிறார். அந்தக் கனவைப் பற்றி நான் எண்ணிக்கொண்டிருந்தேன். நீங்கள் இந்தக் குழந்தையுடன் நிற்பதைப் பார்க்கையில், கனவுக்கும் இந்த நிகழ்விற்கும் தொடர்பு உள்ளது என எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கும் அது போலத் தோன்றுகிறது அல்லவா?”சந்தோஷத்தில் அவருக்குப் பேச்சு வரவில்லை. இருவரும் குழந்தையை உச்சி முகர்ந்தார்கள்.
“இது பகவானின் குழந்தை. அவரின் ஆசியில் இனி நம் குழந்தை. இந்தக் குழந்தையின் சாயல் யாரைப் போலிருக்கிறது என்று தெரிகிறதா? நம் இல்லமருகில் உள்ள ஆசிரமத்தில் இருந்தாரே பார்க்கவ முனிவர், அவரின் சாயலை ஒத்திருக்கிறது அல்லவா! அதனால் நாம், குழந்தைக்கு ‘பார்க்கவகுமாரர்’ எனப் பெயர் சூட்டுவோம்.” என்றார்.குழந்தை அழுகையை நிறுத்தி மெல்லச் சிரித்தது.
இருவரும் நெல்லைப் பரப்பி அதில் பெயர் எழுதினார்கள். பிரம்புத் தொட்டிலில் குழந்தையையிட்டு தாலாட்டினார்கள். குழந்தை பால், நீர், ஆகாரம் என எதையும் உட்கொள்ளவில்லை. கழிவுகள் எதுவும் வெளியேறவுமில்லை. இறை அனுபவத்திற்காக மட்டுமே, குழந்தை அழுவதும் சிணுங்குவதும் செய்கிறது என்பது அவர்களுக்குச் சிறிது நாட்களிலேயே புரிந்துபோனது. குழந்தையைப் பராமரிப்பது என்ற ஒன்றே அங்கு இல்லை. குழந்தைதான் அந்தக் குடிலை இறைவிடமாக மாற்றிக்கொண்டிருந்தது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். மகிழ்ந்தார்கள். நன்றியில் நனைந்தார்கள். கண்ணா! கண்ணா! என்று கொண்டாடியபடி குதூகலித்தார்கள்.” இதை பின்பழகிய பெருமாள் ஜீயர் விவரிக்கையில் அவர் கண்களில் நீர் தளும்பியது.
“இந்தக் குழந்தையும் கண்ணன் போலத்தான்.
ஆண்டாள் நாச்சியார் பாடியபடி,
‘ஒருத்தி மகனாய்ப்பிறந்தோ ரிரவில்
ஒருத்தி மகனா யொளித்து வளர...’
அந்தக் கண்ணன், தேவகி வசுதேவருக்கு மகனாகப் பிறந்து, யசோதை நந்தகோபருக்கு மகனாக வளர்ந்ததைப் போல,
நம் ஆழ்வாரும், கனகாங்கி பார்க்கவ முனிவருக்கு மகனாகப் பிறந்து, பங்கயற்செல்வி திருவாளனுக்கு மகனாக வளர்ந்தார்.’’
கேட்டுக்கொண்டிருந்த கூட்டம் மொத்தமும் ‘கண்ணா! கண்ணா!’ என ஆர்ப்பரித்தது. உபன்யாசம் தொடர்ந்தது.
குழந்தையைப் பார்க்க எல்லோரும் வந்த வண்ணம் இருந்தார்கள். ப்ராக்ஞன் என்கிற ஒரு முதியவர், குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம், அந்த ஜெகன்னாதரே குழந்தையாகத்தரிசனம் தருவதாக எண்ணுவார். “உலகைக் காக்கும் பரம்பொருள் தாங்கள்! இப்படி ஒன்றுமே உண்ணாமல் இருப்பது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. தயை கூர்ந்து கொஞ்சம் பாலையாவது அருந்த வேண்டும்.” மனதிற்குள் ப்ரார்த்தனை ஓடியது. தினமும் ஒரு வெள்ளிச்சொம்பில் பாலைக் கொண்டுவந்து நின்றபடி ப்ரார்த்தனை செய்வார்.
பக்திக்கு ஆண்டவன் மட்டுமல்ல, அடியார்களும் இறங்கித்தானே ஆகவேண்டும். அவரின் ப்ரார்த்தனை பலித்தது. ஒரு நாள் குழந்தை அவர் அளித்த பாலைப் பருகியது. எல்லோருக்கும் ஆனந்தம். தினமும் இது நிகழ்ந்த வண்ணமிருந்தது.ஒரு நாள் வழக்கம்போல், ப்ராக்ஞன் அளித்த பாலைச்சிறிது அருந்தி விட்டு, குழந்தை “மீதமுள்ள பாலை நீயும் உன் துணைவியும் அருந்துங்கள்” என்று கூறிவிட்டுச் சிரித்தது.பாலை அருந்திய அடுத்த நொடியே அவர்கள் இருவரும் இளமைத் தோற்றத்தை அடைந்தார்கள். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘கணிகண்ணன்’ எனப் பெயரிட்டார்கள்.
கணிகண்ணன், நம் பார்க்கவ குமாரரிடம் எல்லாக்கலைகளையும் கற்றார். அவரிடமே சிஷ்யனாகவும் ஆகிவிட்டார். நம்பவே முடியாத ஒரு விஷயம், இத்தனை நிகழ்வுகளும் பார்க்கவ குமாரரின் ஏழு வயதிற்குள் நடந்தேறியது.முனி குமாரராகையால், அந்தச் சிறிய வயதிலேயே பார்க்கவ குமாரருக்குஐம்புலன்களை அடக்கி அஷ்டாங்க யோகம் செய்ய வேண்டும் என்ற வேட்கை அதிகமாயிற்று. அதற்கு இந்த உலகுக்கெல்லாம் மூலகாரணமான பரம்பொருள் யார் என்பது தெரிய வேண்டும். தெரிந்த பின்பே தெளிவு வரும். தெளிவான பின்பே, அத்தகைய பரம்பொருளைத் தியானிக்க வேண்டும். நிஷ்டையில் அமர வேண்டும் என்றும் எண்ணினார்.
உலகில் பிறந்த அனைவருக்கும் முழுமையான தெளிவும்என்பது, என்றும் எதிலும் வருவதற்கான வாய்ப்பே அமையாது. இதுதான் இந்த நாள் வரை உள்ள உலக நியதி.
நம் பார்க்கவ குமாரருக்கும் ஒரு தெளிவு ஆரம்பத்தில் தோன்றவில்லை. அவர் ஒவ்வொரு சமயத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார். அந்தச் சமயத்தைப் பற்றி அறிந்து கொண்ட பின், ‘இதுவல்லவே நான் தேடி வந்தது’ என்று தோன்றும். அடுத்தசமயத்தில் இணைவார். இப்படியே சாக்கியம், உலுக்யம், சமணம், பாதஞ்சல்யம் முதலான சமயங்களையும், சைவம், மாயாவாதம், ந்யாயம், வைசேஷிகம் போன்ற முரண்பட்ட உட்சமயங்களையும் நன்கு கற்றார்.
அவற்றில் உள்ள நிறை குறைகளைக் கண்டு கொண்டார். இறை மறுப்பு என்ற நிலைப்பாட்டைக் கூட எடுத்தார். ஆனால் எதுவும் மெய்ப்பொருளைக் காட்டவல்லதன்று என அவர் முடிவுக்கு வந்தார். அப்பொழுது நிகழ்ந்த நிகழ்வு மிக மிக முக்கியமானது.”இதைச் சொல்லிவிட்டு, பின் பழகிய பெருமாள் ஜீயர் ஒரு இடைவெளி விட்டார். குருவைப் பார்த்தார்.
மெல்லிய புன்னகையுடன், குரு நம்பிள்ளை பேசத் தொடங்னார்.
“இப்பொழுது நான் சொல்ல இருக்கும் கதை, இவரின் ஆறாயிரப்படி குரு ப்ரபாவத்தில் குறிப்பிடப்படவில்லை. இதன் ஸ்வாரஸ்யம் கருதி உங்களிடம் நான்விவரிக்கிறேன். எல்லா சமயங்களுக்கும் சென்று வந்த நம்மவர் இறுதியாக சைவ சமயத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சிவனின் மேல் ஏராளமான பாடல்களைப் பாடினார். உங்களுக்கு மிகவும் தெரிந்த, ப்ரசித்தி பெற்ற சிவவாக்கியர் இவரே!”கூடியிருந்தோர் அனைவரும் ஆச்சரிய மடைந்தார்கள்.
என்ன! நம் பார்க்கவ குமாரர் என்கி நம் திருமழிசை ஆழ்வார்தான் சிவவாக்கியரா!! என்கிற உங்கள் ஆச்சரியம் எனக்குப் புரிகிறது. ஆராய்ச்சியை விடுத்து, ஆழ்வார்கள் அனுபவத்தில் திளைப்போம். எல்லோருக்கும் ப்ரசித்தமானவராக அவர் இருந்தார். கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து,
‘ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடி..’
என்று பாட, கூட்டம் கைதட்டியது.
“இங்கு ஒரு விஷயத்தை மனதில் கொள்ளவேண்டும். நாம் எந்த மதத்தையும், சமயத்தையும் குறைவாகப் பார்க்கும் எண்ணத்தில் உள்ளவர்கள் அல்லர். இதை நினைவில் ஏற்றிக்கொள்ளுங்கள். முதல் மூன்று ஆழ்வார்களும் தோன்றியிருந்த காலகட்டமது. மூன்று ஆழ்வார்களும் பல கோவில்களுக்கு விஜயம் செய்தார்கள். மங்களாசாசனம் செய்வித்தார்கள்.
மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார் நம்மவரைப் பற்றிக் கேள்வியுற்றார். ஒரு ஆச்சார்யனின் நேரடி சிட்சையின்றி நம்மவர் ஒரு நிலையான முடிவுக்கு வராமலிருப்பதாக அவருக்குப் பட்டது. அவரை வைணவ நெறியில் திருப்ப, திருவுள்ளம் கொண்டார். நேரே அவரைச் சந்திக்கச் சென்றார்.அவரைக் கண்டார். அவரின் மெளனம் பேயாழ்வாரின் மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கியது. வீணான வாதங்கள் எந்த நல்ல முடிவையும் எட்டாது என முடிவெடுத்தார்.
தோட்டத்தில் அமர்ந்திருந்த நம்மவர் கண்களில் படும்படி, நாராயணின் நாமத்தைச் சொல்லியபடி, துளசிச்செடிகளை நடத் தொடங்கினார். ஆனால், வழக்கம்போல நடாமல், வேர்களை வானத்தை நோக்கியும், இலைகள் பூமியில் பதியும்படியும் தலைகீழாக நட்டு வைத்தார். நடும்பொழுது அவரை ஓரக்கண்ணால் பார்த்தார். பிறகு, அறுத்து முடியப்பட்ட கயிற்றில், அடிபாகமே ஓட்டையான குடத்தைக் கட்டி, நீர் எடுத்து அச்செடிகளுக்கு ஊற்ற முயன்றார்.சிவவாக்கியர் இதைக் கண்ணுற்றார். வேர் வெளியில்! அதற்கு ஓட்டைக் குடத்தில் நீர் ஊற்றல் வேறா? என மனதில் நினைத்தார்.
தலையில் அடித்தபடி, அவரைப் பார்த்து,
“நீர் சரியான அரைப்பித்தன்!” என்றார்.
அவர் பேசக் காத்திருந்ததைப் போல,
“நான் அரைப்பித்தனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். ஆனால், நீ ஒரு முழுப்பித்தன். அதுவும் பித்தன் என்று அறியாத பித்தன்.” என பேயாழ்வார் பதிலுரைத்தார்.
“என்ன சொல்கிறீர்.?’’
“வேரான நாராயணனை விட்டுவிட்டு, செடிகளின் பகுதிகளாக இருக்கும் மற்ற தெய்வங்களைத் தேடித்தேடி அலைகிறாயே?அது பித்தன் செயல்தானே!
அது மட்டுமா? நீ தேடித்தேடிக் கண்டுகொள்ள முயற்சிக்கிறாயே அதற்கு நீ தேர்ந்தெடுத்த வழி ஒரு ஓட்டைக் குடம் போன்றது.
நாராயணின் பெருமையை வேதங்கள் சொல்வதை நீ மறந்தனயோ? “இதைக் கேட்டவுடன் சிவவாக்கியரான பார்கவ குமாரருக்குத்தன் பிறப்பும், ஜெகன்னாதரும் பிராட்டியும், அவர்கள் தன் மேல் காட்டிய பிரியமும் வாத்சல்யமும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வந்தது. ஒரு பூ பூக்கும் நேரம் போதும் ஒரு பெரிய மாற்றம் நிகழ! அவருள்ளும் ஞானப்பூ பூத்தது.
வெறும் சதைப் பிண்டமாக இருந்தவன் நான். எனக்கு உடல் கொடுத்தவன், உயிர் கொடுத்தவன், உணர்வு அளித்தவன், நான் ஒரு ஜீவனாக இன்று நிற்பதற்கு ஒரே காரணமானவன், நமையாளும் நம்பெருமாள்தானே!அதை நான் எப்படி மறந்து போனேன்! என்னுள் நிறைந்தவனை இத்தனைக் காலம் எங்கெங்கோ அலைந்து, திரிந்து தேடி யிருக்கிறேனே! என்னை விட ஒரு மூடன் உண்டா? நான் எவ்வளவு பெரிய அபாக்கியவான்.
தொகுப்பு: கோதண்டராமன்