ஆழ்வார் பெருமாளாகிய கதை
வையத்து வாழ்வீர்காள்: பகுதி-6
‘ராஜாதிராஜ ராஜ கம்பீர ராஜகுல திலக ...’ கட்டியம் கூறிய காவலனை போதும் என்பதாக அரசர் குலசேகரர் கையசைத்து நிறுத்தினார். ஆரவாரம், கொண்டாட்டம் போன்றவைகளில் அவருக்கு என்றுமே நாட்டமில்லை. அவரின் மனநிலையை நன்றாகவே தலைமையமைச்சர் வேங்கைநாதன் உணர்ந்திருந்தார். இப்படி ஒரு அரசர், அதுவும் சேர, சோழ, பாண்டிய நாடுகளை தன் வெண்கொற்றக் குடைக்குள் அரசாள்பவர், எப்போதும் ஒரு ஆண்டியைப் போலச் சிந்திப்பதும் செயல்படுவதும் கவலையை அளித்தது. குறிப்பாக அரசாள்பவருக்கு இப்படிப்பட்டச் செயல்பாடு நல்லதல்ல என்பது அவரின் அபிப்ராயம்.
ஆண்டவன் அருளினால்தான் இங்கு எல்லாமே நடக்கிறது என்பது அரசரின் எண்ணமாக இருந்தது. ஆண்டவன் மேல், அதுவும் ராமன் மேல் அவர் கொண்டுள்ள பக்தி எல்லாவற்றையும் கொண்டு சேர்க்கும் என்பது அவரின் திடமான நம்பிக்கை.“இன்று மாசி மாதம் புனர்வசு நட்சத்திரம். உங்களின் பிறந்த நாள். உங்களின் தந்தையார், சந்திர குலத்து அரசரான திடவிரதர் காட்டிய வழியில் நீதி தவறாமல் ஆண்டு வருகிறீர்கள். உங்களின் பிறந்த நாளை ஆட்டம் பாட்டங்களுடன் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளோம். தாங்கள் கலந்து கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் வேண்டினார்.
“உங்கள் எல்லோரின் வாழ்த்துகளுக்கும் நன்றி. நீங்கள் கொண்டாடுங்கள். எனக்கு ப்ரியமான விஷயம் என்றும் ஒன்றுதான். என் ராமனைத் துதிக்க வேண்டும். ராமனின் கோவிலுக்குச் சென்று அங்கு நடைபெறும் ராமாயண உபன்யாசம் கேட்க வேண்டும். மெய்மறந்து அதில் கரைய வேண்டும்.”அரசவை மொத்தமும் எழுந்து நின்று வாழ்த்தியது. அரசர் நேராகக் கோவிலுக்குச் சென்று ராமனை வணங்கினார்.
ராமனை வணங்கும் போதெல்லாம் அவருக்கு நெக்குருகி போகும். அந்த ஆனந்த அழுகை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. பின் உபன்யாசம் நடக்கும் கோவில் மண்டபத்தை அடைந்தார். வால்மீகி ராமாயணத்திலிருந்து ஸ்லோகங்களைக் கூறி மிகவும் நேர்த்தியாக உபன்யாசகர் விளக்கமளித்துக் கொண்டிருந்தார். ராமன் தனித்து நின்று அரக்கர்களுடன் போரிடும் காட்சியை விவரித்துக் கொண்டிருந்தார்.
அரசர் குலசேகரருக்கு மனதில் போர்க்களம் காட்சியாய் விரிந்தது. ராமனின் வலது புறத்திலிருந்து ஒருவன் வாள் கொண்டு வீச வருகிறான். இடது புறத்திலிருந்து மற்றொருவன் அவரைத் தாக்கத் தயாராகிறான். சற்றுத் தொலைவிலிருந்து வேறொருவன் ராமன் மேல் அம்பை எய்வதற்கு குறி பார்க்கிறான். இவை போதாதென்று பின்புறத்திலிருந்து ஒருவன் தாக்க முற்படுகிறான்.
என் ராமன் இப்படி தனியனாக போர் செய்ய வேண்டியிருக்கிறதே? நான் இருக்கையில் அவருக்கு ஏன் இந்த நிலை? அரசரின் கை கால்கள் பரபரத்தன. தான் ராமாயணத்தின் ஒரு நிகழ்வைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்ற நிலையை முற்றிலும் மறந்தார்.
“படை வீரர்களே! புறப்படுங்கள். யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, தேர்ப்படை எல்லாமும் புறப்படட்டும். நான் தலைமை ஏற்கிறேன். அங்கே என் ராமன் தனியனாக போரிட்டுக் கொண்டிருக்கிறான்.”அடுத்தக் கணமே குதிரையில் அமர்ந்தார். புறப்பட்டார். அவரின் மனது ராமனையே நினைத்திருந்தது. ராமரைக் காக்க வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் மட்டுமே முழுவதுமாக வியாபித்திருந்தது. உபன்யாசத்தில் ஒரு நிகழ்வைக் கேட்டுக்கொண்டிருக்கிற உணர்வே அவரிடத்திலில்லை.
அரசரின் கட்டளையை மீறவும் முடியாமல், இல்லாத ஒரு போருக்குச் செல்லவும் முடியாமல் படைகள் மொத்தமும் தவித்தன.அமைச்சர் வேங்கையனுக்கு அரசரின் எண்ணவோட்டம் புரிந்துபோனது. விவரங்களைக் கூறி விளக்கமளித்தாலும் கேட்கும் மன நிலையில் அரசர் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.அமைச்சர் ராமனைப் பிரார்த்தித்தார். அவருக்கு ஒரு யோசனை உதித்தது.
தன் தலைமையில் ஒரு படையைத் திரட்டினார். அரசர் சென்ற வழியின் எதிர் திசையில் பயணித்தார். படைகளுடன் அரசரை எதிர்கொண்டார்.அரசருக்குப் படையுடன் அமைச்சரைச் சந்தித்ததில் மிகுந்த வியப்பு. அவர் கேள்வியைக் கேட்கும் முன் வேங்கையன் அரசரை வணங்கினார்.“அரசே! நீங்கள் போருக்குச் செல்ல வேண்டாம். ராமன் போரில் வென்றுவிட்டார். அவருக்கு நாங்கள் துணை நின்று போரிட்டோம்.”“உண்மையாகவா? என் ராமன் வென்று விடுவான் என்பது எனக்குத் தெரியும்.
ஆனாலும் அவரைச் சுற்றி அத்தனை போர் வீரர்கள் இருந்தார்களே! அவர் எப்படியிருக்கிறார்? எனக்கு அவர் வீரத்தில் சந்தேகமில்லை. ஆனாலும் என் மனது தசரதன் போல கலங்குகிறது. அஞ்ஞானம்தான். ஆனாலும் நான் கிளம்பிவிட்டேன். என் மனத் திருப்திக்குச் சென்று வருகிறேனே? அவரை நேரில் பார்த்துவிட்டால் என் மனது சமாதானம் அடையும்.”
வேங்கையனுக்கு அரசரைப் பார்க்க மிகவும் வருத்தமாயிருந்தது.
“தேவையில்லை. ராமன் வென்றுவிட்டார்.”எந்தச் சமாதான வார்த்தைகளும் அரசரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அமைச்சர் வேறு வழியின்றி ராமரைத் துதித்தார். “ராமா! தாங்கள் ஒருவர்தான் எங்கள் அரசரைக் காக்க முடியும். உங்களின் நாமத்தைச் சொல்லி அவரிடம் பேசுகிறேன். உங்கள் மேல் உள்ள பக்தியில் அவர் தன்னிலை மறந்திருக்கிறார்.” அமைச்சர் மனதில் ராமருடன் பேசினார். “அரசே! ராமர் போர் முடிந்துத் திரும்பிவிட்டார். சீதாதேவியார் அவருடன் இருக்கிறார்.’அதோ அங்கே பாருங்கள்.”
“ராமன் திரும்பிவிட்டாரா? தேவியுடன் இருக்கிறாரா? உண்மையாகவா? நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. என் ராமன்! என் ராமன்!’’
ராமனுக்கு ஆழ்வாரின் குரல் கேட்டது. மனதிற்கினியான் உடனே அரசர் முன் சீதாவுடன் தோன்றினார். தேவியார் ராமரின் தொள்களைத் தொட்டு போரில் தோன்றிய விழுப்புண்களை ஆற்றிக்கொண்டிருப்பதை அரசர் கண்ணுற்று அமைதியானார். ஆனந்தம் கொண்டார். பின் நாடு திரும்பினார்.
நாடு முழுவதும் அரசர் இப்படி நடந்துகொண்டாராமே என்ற பேச்சுதான் நிரம்பியிருந்தது. அரசரின் காதுக்கும் எட்டிவிட்டது. தன் பக்தி எப்படி மற்றவர்களால் பார்க்கப்படும் என்பதை உணர்ந்தார். தன்னைப் பற்றி மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்கையில் என்ன சொல்லித் தன் தரப்பைக் கூற வேண்டும் என்று புரியாமல் தவித்தார். இந்த அரச வாழ்வில் ஆர்வம் சிறிதும் இல்லை என்ற நிலைப்பாடு மாறவுமில்லை. அரண்மனையில் கண்ணுறக்கமின்றி புரண்டபடி இருந்தார். எங்கிருந்தோ ஒரு தாலாட்டுப் பாடல் கேட்டது.
மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே,
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய், செம்பொன்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே,
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ.
எண்திசையும் ஆள்பவனே! தாலேலோ!
பாடிக்கொண்டே வந்தது தன் மகள் என்பது தெரிந்ததும் அரசருக்கு புன்னகை மலர்ந்தது. “எல்லா விஷயங்களும் கேள்விப்பட்டேன். உங்கள் மனதில் என்றுமுள்ள ராமன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்.” “ புரிகிறது. ஆனாலும் நான் நானாகவே இருந்துவிட விரும்புகிறேன். எனக்கு இந்த அரசாட்சியை உன் அண்ணனிடம் ஒப்படைத்துவிட்டு ஸ்ரீரங்கம் சென்றுவிட மனது என்றுமே விழைகிறது. எப்பொழுது ஸ்ரீரங்கம் செல்வேன் அரங்கனைத் துதிப்பேன் என்று மனது துடிக்கிறது.”“விதை விதைத்தவுடனே முளைத்து விடாதுதானே! பக்தியிலும் பொறுமை மிக முக்கியமல்லவா? நீங்கள் ஆற்ற வேண்டிய பணி இன்னும் இருப்பதாக நம் ராமன் நினைத்திருப்பார்.” “உன் வார்த்தைகள் ஆறுதலை மட்டுமல்ல எனக்கு ஒரு மார்க்கத்தையும் காட்டுவதாக உணர்கிறேன்.”
“விஸ்வாமித்திரர் இயற்றியதாகச் சொல்லப்படும் சுப்ரபாதம் ‘கெளசல்யா சுப்ரஜா ராமா’ ராமனைத் துயில் எழுப்புவதாகச் சொல்வார்கள். நீங்கள்தான் ராமனுக்குத் தாலாட்டுப் பாடிய முதல்வர். எல்லாத் தாய்மார்களும் அந்தப் பாடலைப் பாடுகிறார்களோ? இல்லையோ? குழந்தைகள் இந்தப் பாடலைப் பாடினால்தான் தூங்குகிறார்களாம். குழந்தையை எழுப்புவதைவிடத் தூங்க வைப்பதுதானே சாதனை!”
“என்னைப் புகழ நீ என்ன வேண்டுமானாலும் சொல்லுவாய். என்னைப் பலப்
படுத்த உன்னிலிருந்து ராமன் பேசுகிறான் என்றே நான் கருதுகிறேன்.”
“உங்களுக்கும் ராமனுக்கும் எல்லாம் ஒத்துப்போகிறது! உங்களுக்கும் ராமனுக்கும் புனர்பூச நட்சத்திரம். நீங்களும் அவரும் அரசர். அவருக்கு குலதெய்வம் ஸ்ரீரங்கநாதர். உங்களுக்கும் எல்லாமே ஸ்ரீரங்கநாதர்தான். நான் ஒன்று சொல்லலாமா? நீங்கள் ராமாயணம் எழுதுங்களேன். உங்களின் ராமபக்தி அதைச் செய்விக்கும். வால்மீகி, துளசிதாசர் போன்றோர் எழுதினாலும், என் தந்தை தமிழில் எழுத அதை நானும் இந்த நாடும் படித்துக் கொண்டாடுவோம். ராமா என்ற நாமம் சொன்னாலே நல்லதெல்லாம் நடக்கும். ராமாயணமே எழுதினால் உங்கள் எல்லா எண்ணமும் ஈடேறும். உளமார நீங்கள் நினைப்பதும் நிறைவேறும்.”
“ஆஹா! அற்புதம்! எனக்கும் அத்தகு ஒன்றை எழுத வேண்டும் என்று மிகுந்த ஆவல். என் மனம் இப்பொழுது தெளிவாகிவிட்டது. உன்னை நமஸ்கரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.” என்று சொல்லி மகளை உச்சி முகர்ந்தார். கண்களில் நீர் பனித்தது.“உங்கள் ராமாயணம் நூலை நானும் நீங்களும் ஸ்ரீரங்கம் சந்நதியில் சமர்பிக்கிறோம். உங்கள் ஆசியுடன் நான் அதற்கு மெட்டமைத்துப் பாடுவேன். உங்களை இயற்ற வைக்கப்போகும் ராமன், என்னையும் இசைக்க வைக்கட்டும்.”
அன்றிலிருந்து அரசரின் முழுக்கவனமும் ராமாயணத்தில் திரும்பியது. வைணவ அடியார்களை உபசரித்து மகிழ்வது அவருக்கு உயிரைப்போல உயர்ந்த விஷயமாக இருந்தது. அடியவர்கள் ஒரு நாள் அரண்மனைக்கு வராமல் போனால் கூட அவர் மனம் வாடியது.அரசர், அடியவர்கள் சூழ இருக்கையில் மகிழ்வாக இருப்பதை உணர்ந்த தலைமையமைச்சர் தினமும் நான்கு அடியவர்கள் வருகை புரியுமாறு ஏற்பாடு செய்தார்.
ஆனால், அந்த யுக்தியே அவருக்கும் அரசாங்கத்திற்கும் பெரும் சோதனையை அளித்தது. வந்த அடியார்கள் எல்லோரும் அரண்மனையிலேயே வாசம் செய்ய அரசர் பணித்தார். அடியவர்களின் கூட்டம் பெருகியது.அடியவர்கள் சூழ்ந்திருக்க எப்பொழுதும் அரசவையில் பக்தியே தளும்பியது. ரங்கனைப் பற்றிப் பாசுரங்களைப் பாடி மகிழ்ந்தனர்.இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அமைச்சர் தவித்தார். அரசரிடம் சென்று முறையிட்டு அடியவர்களை வெளியேற்றவும் முடியவில்லை.
ஒரு நாள் ஸ்ரீராம விக்கிரகத்திற்கு ஆராதனை முடிந்து, அணிவிக்க ரத்தின மாலையைத் தேட, அது காணாமல் போயிருந்தது. அதை மறைத்து வைத்திருந்த அமைச்சரே ஒன்றும் அறியாதவர் போல, “என் சந்தேகம் இந்த வைணவ அடியார்கள் மேல்தான். அவர்களுக்குத்தான் இந்தப் புத்தி இருக்கும். யாரும் அவர்கள் மீது சந்தேகப்பட மாட்டார்கள் அல்லவா? நம் அரசர் அவர்களுக்குக் கொடுக்கின்ற மரியாதையைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். எல்லோரையும் சோதனைச் செய்ய வேண்டும்.”
அரசர் பதறினார். “எந்த ஒரு உண்மையான வைணவனும் திருடுகிற இழிச்செயலைச் செய்யத் துணிய மாட்டான். என்னை நீங்கள் சந்தேகப்பட்டிருந்தால் கூட நான் பொறுத்துக்கொள்வேன். வைணவனைச் சந்தேகப்படுவதும் அந்த அரங்கனைச் சந்தேகிப்பதும் ஒன்றுதான். யாரங்கே! ஒரு குடத்தில் கொடிய விஷமுள்ள பாம்புகளை அடைத்துக் கொண்டு வா. அரங்கன் மேல் சத்தியம் செய்து அதில் நான் கையைவிட்டு இங்கே உள்ள வைணவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிப்பேன்.”
அரசரைத் தடுத்த போதும், அரசர் இணங்க மறுத்தார். அரசர் ஆணையை ஏற்று பாம்புகள் நிறைந்த குடம் மேடையில் வைக்கப்பட்டது. கூடியிருந்த வைணவர்களுக்குத் தங்கள் பொருட்டு இந்தச் சூழல் நேர்ந்ததாக வேதனையுற்றார்கள். அரசர் அடியெடுத்து குடமிருந்த மேடையை நெருங்கினார்.கூட்டம் பிரார்த்தித்தது. எங்கும் அரங்கா! அரங்கா! எனும் கோஷம். அரசரின் மகள் ஒடோடி வந்து தடுத்தாள். அரசர் அவளை அமைதி படுத்தினார்.அமைச்சர் காலில் விழுந்து பொறுத்தருள வேண்டினார்.
“இது எனக்கானச் சோதனை அல்ல. என் அரங்கன் மேல் நான் கொண்ட பக்தியும் என் உயிரினும் மேலான வைணவ அடியார்கள் மேல் நான் கொண்ட அபிமானமும் என்னைக் காக்கும்.” உறுதியுடன் குடத்தில் கையை விட்டார். புன்னகையுடன் வானைப் பார்த்தார். அரங்கனின் அருளால் எந்த அரவமும் அவரைத் தீண்டவில்லை. அரங்கிலிருந்தோர் அனைவரும் நிம்மதியுடன் மகிழ்வும் அடைந்தார்கள். தலைகுனிந்தபடி அமைச்சர், “பழியைச் சுமத்தி வைணவ அடியார்களை விரட்டவேண்டும் என்ற இந்தப் பாவச் செயலை நான் செய்தேன். என்னைத் தூக்கிலிடுங்கள். மன்னா!” என்று கூறியபடி அரசர் காலில் மண்டியிட்டார்.
“எழுந்திரு! இது அரங்கனின் லீலை. நீ வெறும் கருவி. நான் முடிவெடுத்துவிட்டேன். என் புதல்வன் இனி அரசாள்வான். நீங்கள் அனைவரும் இந்த நாட்டைக் காப்பாற்றி மக்களுக்கு நன்மை செய்வீர்களாக! அரங்கன் உங்களுக்குத் துணை நிற்பான். என் நீண்ட நாள் காத்திருப்பிற்கு இன்று நல்ல முடிவு வந்துவிட்டது.”அடியார்கள் கூட்டம் பின் தொடர குலசேகரர் ஸ்ரீரங்கம் நோக்கிப் பயணித்தார்.’’ என்று சொல்லி பின்பழகிய பெருமாள் ஜீயர் சற்று இடைவெளி விட்டார்.உபன்யாசம் கேட்டுக் கொண்டிருந்த அடியவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தது. பின் உபன்யாசத்தைத் தொடர்ந்தார்.
“ஆழ்வார் என்பவர் இந்தக் குலத்தில்தான் பிறந்திருக்க வேண்டும் என்ற எந்த நியதியும் இல்லை. அத்துணைப் பெரிய அரசாங்கத்தை விட அரங்கனின் பாதமே தஞ்சம் என குலசேகரர் வருவதற்கு ஒரே காரணம் அவர் நாராயணன் மேல் கொண்ட பக்தி மட்டுமே!
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக் கையால் அடி வருடப் பள்ளிகொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே!!
- என்று உருகி உருகி பாடியது மெய்யானது. ஒரு எண்ணத்தை மனதில் வடித்து அது கைகூடவேண்டும் என்கிற வைராக்கியத்தில் இருந்தால் அந்த எண்ணம் ஈடேறிவிடும். திருவரங்கம் வந்தடைந்த ஆழ்வாருக்கு எல்லையில்லா ஆனந்தம்.இவரைப் பெருமாள் என்றுதான் எல்லோரும் அழைக்கக் கேட்டிருப்பீர்கள். குலசேகர ஆழ்வார் எதனால் குலசேகரப் பெருமாள் ஆனார் தெரியுமா?
கோவில் என்றால் அது ஸ்ரீரங்கம் கோவிலைத்தான் குறிக்கும். மலை என்றால் அது திருமலையைத்தான் குறிக்கும்.அதுபோல பெருமாள் என்றால் ராமனைத்தான் குறிக்கும். பெருமாள் எனும் ராமனையே தொழுது கொண்டிருந்த குலசேகரர், ‘பெருமாள்’ என்று அழைக்கப்படலானார். குலசேகரர் எனும் அரசர் குலசேகர ஆழ்வாராக மாறிப் பின் குலசேகரப் பெருமாள் எனப் போற்றப்படுகிறார். வானும் மண்ணும் மாறாதவரையில் அவருக்கு மட்டுமே அந்தத் திருநாமம் பொருந்தும். அவர் எழுதிய பாசுரங்கள் அதனாலேயே பெருமாள் திருவாய்மொழி என்று வழங்கப்படுகிறது. பெருமாளின் மார்பில் அணியும் ‘கவுஸ்துவம்’ என்பதே குலசேகரராக அவதரித்ததாகக் கூறுவார்கள்.
- (வளரும்)
தொகுப்பு: கோதண்டராமன்