ஆழ்வார் பெருமாளாகிய கதை
வையத்து வாழ்வீர்காள்: பகுதி-7
அவர் எழுதிய பாசுரங்கள் அதனாலேயே பெருமாள் திருவாய்மொழி என்று வழங்கப்படுகிறது. பெருமாளின் மார்பில் அணியும் ‘கவுஸ்துவம்’ என்பதே குலசேகரராக அவதரித்ததாகக் கூறுவார்கள். என்பது வரை சென்ற இதழில் பார்த்தோம்.
இனி...
அன்று புனர்வசு நட்சத்திரம். ஸ்ரீரங்கம் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தைக் கட்டிமுடித்து திருவாராதனைக்கு நாள் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நாளுக்காகத்தானே அவர் காத்திருந்தார். அவர் எழுதிய ‘குலசேகர ராமாயணம்’ சுவடிகளை அரங்கனின் காலடியில் சமர்ப்பித்தார். பத்துப் பாடல்களில் மொத்த ராமாயணமும் அமைந்திருந்தது. அருகிலிருந்த அவர் மகள் மெல்லிய குரலில்
அதிலிருந்து ஒரு பாசுரத்தைப் பாடினாள்.
``மனமருவு வைதேகி பிரிய லுற்றுத் தளர்வெய்திச்
சடாயுவைவை குந்தத் தேற்றி வனமருவு கவியரசன் காதல் கொண்டு....................’’
- என தொடங்கும் அருமையான பாசுரத்தை அரங்கன் உட்பட அனைவரும் பாசுரத்தில் கட்டுண்டுப் போனார்கள்.
அரங்கன் மார்பிலிருந்த செண்பக மாலை நழுவி குலசேகரரை ஆசிர்வதிப்பது போல விழுந்தது. அவர் நிறைய பாசுரங்களை எழுதினார். உங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்த பாசுரம் ஒன்றை என் சீடன் இங்கே, இப்பொழுது பாடுவான்.
``வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே!’’
‘வித்துவக்கோடு’ ஊரிலுள்ள உலகளந்தப் பெருமாளைத் தொழுது எழுதிய பாசுரமிது. குலசேகரப் பெருமாள் என்றதுமே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, திருவேங்கடமுடையானிடத்தில் அவர் வேண்டிய வரங்கள். அவர்களுக்கிடையேயான உரையாடல். அது அவரின் பக்தியின் உச்சம். அன்று புரட்டாசி சனிக்கிழமை. பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாள். கருட வாகனத்தில் மலையப்பன் எழுந்தருளிச் சேவை சாதித்திருந்தார். குலசேகரப் பெருமாள், திருமலையில் அவரைத் தரிசித்தபின் வைகுண்ட மண்டபத்தில் அமர்ந்திருந்தார். எண்ணம் முழுவதும், திருவேங்கடமுடையானைத் தரிசித்த அந்த ஒரு கணம் மனதில் நிலை கொண்டிருந்தது. அந்த ஒரு கணப்பொழுது எவ்வளவு அபரிமிதமான சந்தோஷத்தை அளித்தது. வாழ்நாள் முழுவதும், எப்பொழுதுமே அவரைப் பார்த்துகொண்டே இருக்கும் பாக்கியம் கிட்டினால் எப்படியிருக்கும்! நினைக்க நினைக்க மனது பரபரத்தது.
அப்படி ஒரு பாக்கியத்தை மலையப்பனைத் தவிர யார் அளிக்கக்கூடும்? மனதைக் குவித்து மலையப்பனைத் துதித்தார். குலசேகரரைப் பார்த்த சந்தோஷம்
மலையப்பனுக்கும்! குலசேகரருக்கு மலையப்பனிடம் வரம் வேண்டிப் பிரார்திக்க வேண்டும் என்ற தவிப்பு. மலையப்பனுக்கு, குலசேகரருடன் உரையாட வேண்டும் என்ற துடிப்பு. குலசேகரர் எப்படிப்பட்ட பிறவி வேண்டும் என்று ஒவ்வொன்றாய், பாசுரமாய் இறைஞ்சினார். அவர் மனதில் மலையப்பன் ஒவ்வொன்றாய் மறுத்தபடி உரையாடியது மிகவும் அழகு!
முதலில் நம்மவர் ஆரம்பித்தார்.
``வேங்கடவா! எனக்கு மனமிறங்கி ஒரு வரம் அருள வேண்டும். தாங்கள் அருள்வீர்கள் என்ற நம்பிக்கையுண்டு’’ என்றார்.``கேட்பது குலசேகரப் பெருமாள் அல்லவா! கொடுக்கத்தான் வேண்டும். கேள்!’’ என்றார் மலையப்பன்.``எனக்கு மனிதப்பிறவிகூட வேண்டாம். திருமலையில் உள்ள புஷ்கரணியில் ஒரு நாரையாகப் பிறக்கிற வரம் அருள வேண்டும்!’’ ``நாரையாகவா? இறக்கை உண்டு என்பதனால் பறந்து போக வாய்ப்புள்ளது. எப்பொழுதும் அங்கேயே இருக்கவும் முடியாதே. அது வேண்டாமே!’’``சரி..! சரி..! அப்படியென்றால், நாரையாக வேண்டாம். என்னை அந்தப் புஷ்கரணியில் ஒரு மீனாகப் பிறக்கச் செய்யுங்களேன்!’’``மீனாகவா? எப்பொழுதும் நீரிலேயே இருக்க வேண்டியிருக்கும். நீர் வற்றிப்போனால், திருமலையில் வாழ முடியாதே! அது வேண்டாமே!’’
``ஓஹோ! அப்படியென்றால் மீனாகப் பிறவி வேண்டாம். என்னை, உங்கள் வாய்நீரை உமிழுகையில் பொற்கலத்தில் பிடிக்கும் தொண்டனாக ஆக்கிவிடுங்கள்.
உங்களைத் தரிசிக்க பின்னிட்ட சடையுடைய ஈசன், பிரம்மன், இந்திரன் மற்றுமுள்ள தேவர்கள் என எப்பொழுதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது. அந்தக் கூட்டத்தைத் தாண்டிவர, உங்களின் அந்தரங்க கைங்கர்யத் தொண்டனாக இருந்து விட்டால் என்னை யாரும் தடுக்கமாட்டார்கள். எளிதில் எனக்கும் உங்கள் அருகாமை கிடைத்துவிடும். அருளுங்களேன்.!’’
``பொன்வட்டில் பிடிக்கும் கைங்கர்யமா? விலையுயர்ந்த பொருளை வைத்துக்கொண்டு நீ அவஸ்தைதான் படவேண்டும்’’ ``அதுவும் சரிதான். எனக்கு இந்த மனிதப் பிறவியே வேண்டாம். தங்களுக்கு மிகவும் பிடித்த செண்பக மலர்களைத் தரும் மரமாக ஆக்கிவிடுங்களேன். மரம் ஒரு போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யப் போவதில்லை.
மலர்களும் உங்கள் பாதம் வந்து சேரும். திருமலையை புஷ்ப மண்டபம் என்று தானே அழைப்பார்கள். அது எனக்குக் கூடுதல் சந்தோஷம். திருமலையில் தங்களைத் தவிர யாரும் மலர்மாலை அணியமுடியாது. பூக்கும் மலர்கள் அனைத்தும் தங்களுக்கே!’’ ``நல்லது. ஆனால், யாராவது மரத்தை வெட்டி எடுத்துச் சென்றுவிட வாய்ப்பு உள்ளதே! மரத்தால் மறுத்தும் சொல்ல முடியாதே!’’
``அதுவும் சரியில்லையா? உபயோகம் உள்ள மரம் என்பதனால் யாராவது எடுத்துச் செல்லக்கூடும். தாங்கள் ஏன் என்னை திருமலையில் ஒரு ஓரத்தில் முட்புதராக ஆக்கிவிடக் கூடாது? யாரும் என்னைத் தீண்டக்கூட மாட்டார்கள். எனக்கும்கூட ஒரு தவம் செய்வதுபோல ஆகும்’’``அதிலும் ஒரு சிக்கல் உண்டு. நிர்வாகம் புரிவோர் பாதையைச் சரிசெய்வதாகச் சொல்லி அதையும் அகற்றிவிட்டால்? உன் எண்ணம் ஈடேறாதே! வேறு ஏதாவது கேளேன்’’.
``முட்புதர் என்றால் அகற்றக்கூடும். என்னை திருமலையில் ஒரு கற்பாறையாக ஆக்கிவிட்டால், எதுவும் செய்ய முடியாது அல்லவா?’’
``ஆக்கிவிடலாம். ஆனால், எங்காவது கோயில் கட்டவேண்டும் அல்லது மண்டபம் கட்டவேண்டும் என்பதற்காக பாறையை உடைத்து எடுத்துச் சென்றுவிடுவார்களே!’’
இப்படியே மலையப்பனுக்கு குலசேகரரை இன்னும் பாசுரங்கள் பாட வைத்துப் பார்க்க ஆசை. ஒவ்வொன்றாய் மறுத்தபடி இருந்தார்.
``பாறை என்பதினால் உடைத்துச் சென்றுவிடலாம். யாருமே கவர்ந்து செல்ல இயலாத ஒரு காட்டாறாய் என்னை மாற்றிவிடுங்களேன். இதற்காவது மறுப்பு
சொல்லமாட்டீர் என நினைக்கிறேன்’’``நீ எப்போதும் திருமலையில் வாசம் செய்ய விரும்புகிறாய். காட்டாறாய் பிறந்தால் ஏதோ சிறிது காலம், நீர் வெள்ளமாய் போகும். மற்ற காலங்களில் நீராவது வெள்ளமாவது. வறட்சி மட்டுமே மிஞ்சும். உனக்கு அது தேவையா?’’
``வேண்டாம்! வேண்டாம்! ஏழுமலை ஏறித்தானே பக்தர்கள் வருகிறார்கள். என்னை பக்தர்கள் நடந்து வரும் அந்தப் பாதையாக ஆக்கிவிடுங்களேன். பக்தர்கள் காலடி என்மேல் பட்டாலே போதும். அது பெரும் பாக்கியம்தான்’’``ஒரு விபரத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் அந்தப் பாதையிலேயே வர வேண்டும் என்ற நியதி ஒன்றுமில்லை. காலம் மாறும். பாதைகளும் மாறிவிடும். பக்தர்கள் வேறு பாதையில் பயணித்தால்?’’``எட்டு பாசுரம் பாடிவிட்டேன். என்னிடம் கருணை கொண்டு தாங்கள், நான் பிரார்த்திப்பதை அருளித்தான் ஆகவேண்டும்.
``செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!!’’
தங்களைத் தரிசனம் செய்ய வானவர்கள் மற்றும் எனையோர்கள் யார் வந்தாலும் என் மீது அவர்கள் பாதம் படும்படி தங்கள் சந்நதியில் ஒரு படியாக ஆக்கிவிடுங்கள். தங்களின் பவளவாயைப் பார்த்தபடி நான் இருக்கவேண்டும். அளித்தேன் உனக்கு! என்பது மட்டும் தாங்கள் சொன்னால் போதும்’’ என்றதும், இதற்கு ஒரு பதிலையும் சொல்லாமல் வேங்கடமுடையான் மெளனம் சாதித்தார்.
``தங்கள் மெளனத்தை சம்மதம் என்று எடுத்துக் கொள்ளட்டுமா நான் ஒரு மூடன் என்று தோன்றுகிறது. என்னைப் படைத்தத் தங்களுக்கு எனக்கு என்ன அருளவேண்டும் என்று தெரியாதா? நானாக ஒவ்வொன்றாய் கேட்பதைவிட திருமலையில் ஏதாவது ஒன்றாகத் தாங்களே ஆக்கிவிடுங்கள் என்றல்லவா நான் கேட்டிருக்க வேண்டும்” பின்பழகிய பெருமாள் ஜீயர், “நம்மவரின் எண்ணப்படி, ‘குலசேகரப்படி’ வேங்கடமுடையானின் சந்நதியில் இருப்பது அவரின் பக்திக்குச் சான்று. குலசேகரப் பெருமாளின் கதை நமக்கெல்லாம் உணர்த்துவது ஒன்று மட்டுமே. பெருமாளின் மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைவது மட்டுமே நாம் செய்யயக் கூடியதும், செய்யவேண்டியதும். பெருமாள் திருமொழி உரைப்பதும் அதுவே.
``நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே
நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே’’
- என்ற பாசுரமும் அதைத்தான் குறிப்பிடுகிறது’’ என்றுகூறி முடித்தார்.
கோதண்டராமன்