தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதுகையின் பெருமை

பகுதி 9

Advertisement

திருமால் தம்முடைய பாதுகையை அணிந்து கொண்டு வரும்போது அந்த பாதுகை எழுப்பக் கூடிய இனிமையான நாதத்தை மட்டுமே வைத்து, ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின் 14வது பத்ததியாக “நாதபத்ததி”யை அருளி இருக்கிறார். இந்த பத்ததியில் இருக்கக் கூடிய ஸ்லோகங்களின் எண்ணிக்கை, 100.100 என்ற எண்ணிற்கு எப்படி ஒரு தனிச் சிறப்பு உண்டோ, அப்படியேதான் இந்த பத்ததிக்கும் தனி ஒரு ஏற்றமும், சிறப்பும் உண்டு. பாதுகையின் நாதத்தில் இதோ நாமும் இணைவோம்.

பாதுகையின் நாதமேதான் இந்த பாதுகா சஹஸ்ரம் என்றே அனுபவித்த ஸ்வாமி தேசிகன், நம்மையும் அப்படியே அனுபவிக்க வைத்திருக்கிறார். பாதுகையின் ஆபரணமாக, வேதம் இருக்கிறது. திருமாலின் திருவடிக்கு ஆபரணமாக இருப்பதும் வேதமே. வேத நாதமே பாதுகையின் நாதமாக இருக்கிறது. பாதுகையின் நாதமானது நம்மை பார்த்து என்னவென்று கேட்கிறதாம் தெரியுமா?

“பெருமாள் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும்போது உங்களுக்கு பிடித்த வண்ணம் இருக்கிறாரா அல்லது என் மீது இருக்கும் போது உங்களுக்குப்பிடித்த படி உள்ளாரா அல்லது அப்பெருமாள் பரமபதத்தில் இருப்பது நன்றாக இருக்கிறதா?” என்று கேட்பது போல இருக்கிறதாம். பாதுகையின் நாதமே மக்களுடைய துன்பத்தைப் போக்கிடும் மந்திரம் போல ஒலிக்கிறதாம்.

மனதில் பல வேண்டுதல்களோடும், வேதனைகளோடும்தானே நாம் தெய்வத்தின் முன் நிற்கிறோம்? அப்படி அபாயம் பல சூழ்ந்த நிலையில் நாம் திருமாலின் திருவடியில் வேண்டி நிற்கும் போது பாதுகை தன்னுடைய “மஞ்ஜு நாதை:” அதாவது தன்னுடைய இனிய நாதத்தால், உங்களுக்கு “அபயம் அளிக்கப்பட்டது” என்று நமக்கு கூறுகிறாளாம்.

``ஸ்ரீவஸோர் மம பாரணாம் திஷந்தீ

மணிபாதாவநி! மஞ்ஜுலை: ப்ரணாதை:

ரமயா க்ஷமயா ச தத்தஹஸ்தம்

ஸமயே ரங்கதுரீண மாநயேதா:’’

``ஸமயே’’ என்றால் இறுதி காலத்தில், ``மணிபாதாவநி’’… மணிகள் பொருந்திய பாதுகா தேவியே, ``த்வம் நீ ரங்கதுரீண மாநயேதா’’ ரங்கநாதனை அழைத்துக் கொண்டு வர வேண்டும். ``ரமயா’’ என்றால் மஹாலட்சுமியோடும், ``க்ஷமயா’’ என்றால் பூமா தேவியோடும் அழைத்துக் கொண்டு வர வேண்டும். பெருமாள் பிராட்டிகளோடு வந்துவிட்டார் என்பதை உனது இனிய நாதம்கொண்டே நீ உணர்த்திட வேண்டும். மணி பாதுகையே என்று வேதாந்த தேசிகர் வேண்டுவதைப் போலவே நாமும் அந்த பாதுகையிடம் வேண்டி நிற்போம். நம் இறுதி காலம் எப்போது வரும் எப்படி வரும் என்றெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால் நிச்சயம் உறுதியாக ஒரு நாள் அது வந்தே தீரும்.

அப்படி அந்த சமயத்தில் பாதுகா தேவியிடம் நாம் இன்று செய்திருக்கும் விண்ணப்பத்தை பாதுகாதேவி திருமாலிடம் தெரிவித்து, அப்பெருமாளை திருமகளோடும் பூமகளோடும் நம் முன் அழைத்து வந்தே தீருவாள் என்றே உறுதியாய் நம்புவோம். மரண காலத்தில் வேதனையுடன் உள்ள எனது காதுகள் என்ற நாக்கில், இனிமை அளிக்கும் விதமாக, மருந்து போன்ற உன்னுடைய நாதத்தை நீ அளிக்க வேண்டும் என்பதும் தேசிகனின் விண்ணப்பமே.

பாதுகையில் இருக்கக் கூடிய ரத்தினங்களோடு சேர்த்து இனி அடுத்த பத்ததியான “ரத்நஸாமாந்யபத்ததி” யின் வழி பாதுகையின் பெருமைகளைப் பற்றி தொடர்ந்து கொண்டாடுவோம்.

திருப்பாற்கடல் போலவே இருக்கக் கூடிய காவிரி சூழ்ந்த திருவரங்கத்தில் அல்லவா பாம்பணை மேல் பள்ளி கொண்டு ரங்கநாத பெருமாள் நமக்கெல்லாம் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்? திருப்பாற்கடலில் அந்த பெருமாளுக்கு மஹாலட்சுமி தாயாரானவள் எப்படி பாதசேவனம் அதாவது திருவடியை பிடித்து விடுகிறாளோ அப்படி இந்த திருவரங்கத்தில் ரங்கநாத பெருமானுக்கு பாதுகா தேவியானவள் பாத சேவனம் செய்கிறாளாம்.

தம் மீது இருக்கக் கூடிய அந்த ரத்னங்களிலிருந்து வரக்கூடிய பிரகாசத்தை, ஒளியையே கைகளாக கொண்டு தம் ஆசை தீர அந்த காவிரிதீர வாசனான ரங்கநாதனுக்கு பாத சேவனம் செய்கிறாள், பாதுகாதேவி என்றே அனுபவிக்கிறார் ஸ்வாமி தேசிகன்.

``கஸ்யாபி பும்ஸ: கநகாபகாயா:

புண்யே ஸலீலம் புளிநே ஶயாலோ:

ஸமீபவ்ருத்திர் மணிபாதுகே! த்வம்

ஸம்வாஹயந்தீவ பதம் கரை: ஸ்வை:’’

தியானம் செய்து ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்பால் இருக்கக் கூடிய பரமபதத்திற்கு செல்ல வேண்டும் என்றே யோகிகள் பொதுவாக பல விதமான முயற்சிகளை மேற்கொள்வார்கள் இல்லையா? அப்படி அவர்கள் பரமபதத்தை அடைய எது எப்படி ஒளி காட்டுகிறதாம் தெரியுமா? பாதுகையில் இருக்கக் கூடிய ரத்தினக் கற்களிலிருந்து வரக்கூடிய ஒளியானது தீவட்டி போல செயல்பட்டு வழி காட்டுகிறதாம். ரங்கநாதனின் அழகிய பாதுகையே.. இந்த உலகில் புதிது புதிதாக குற்றங்கள் புரிந்துவிட்டு.. தவறுகள் செய்து விட்டோமே என மனம் வருந்தி திருவரங்கனின் திருவடியில் தயங்கி தயங்கி வணங்கி நிற்பவர்களை, உனது ரத்தினங்களிலிருந்து வரும் ஒளிகளை கொண்டு அவர்களை அன்பாக அரங்கனின் அருகில் அழைத்து ஆறுதல் சொல்கிறாயே.

உனது கருணையை என்னவென்று சொல்வது?

``ஸம்ஸாரகர்ம ஜநிதாஸு மரீசிகாஸு’’

சம்சாரம் என்பது கடும் வெப்பம் கொண்ட கோடை காலம் போல இருக்கிறது. இதில் உலக விஷயங்களோ கானல் நீராக இருக்கிறது. இந்த கானல் நீரை உண்மை என்று நம்புகின்றன நமது புலன்கள் என்ற மான் குட்டிகள்.

கானல் நீர் என்பது எப்படி நம் தாகத்தை தீர்த்திடாதோ அப்படித்தான் இந்த உலக விஷயங்கள் நமக்கு இன்பத்தை கொடுக்கும் என நம்பி செல்பவர்களுக்கு பரிசாக கிடைப்பது துக்கம் தானே தவிர நிலையான சந்தோஷம் கிடையாது. அதனால் பாதுகையே நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உனது ரத்தினக் கற்களின் பிரகாசத்தை கயிறாக கொண்டு அந்த மான் குட்டிகளின் மீது செலுத்தி அதனை ரங்க நாதனின் திருவடியில் கொண்டு நீ சேர்த்திட வேண்டும்.

ஆம். அப்படித் தானே செய்கிறாள் பாதுகை?… திருமாலின் திருவடிக்கு வாருங்கள்.. அவனது திருமேனி அழகை பாருங்கள் என்று பெருமாளின் திருமேனி அழகை காட்டி அவனது திருவடி அருளை நமக்கு பெற்று தருபவள் பாதுகா தேவியே தானே? பல விதமான வர்ணங்களின் சேர்க்கையாக இருந்து ஒளிரக்கூடிய திருவரங்கனின் பாதுகையை இதோ தமது “பஹுரத்ந பத்ததியின்” வழி கொண்டாடுகிறார் ஸ்வாமி தேசிகன். ஒவ்வொரு யுகத்திலும், பெருமாள் ஒவ்வொரு நிறத்தில் இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. ரங்கநாத பெருமாளின் பாதுகையில் இருக்கும் அந்த ரத்தினக் கற்களில் வஜ்ஜிரக்கல் மற்றும் இந்திர நீலக்கல் என்ற இரண்டு விதமான ரத்தினங்கள் இருக்கின்றனவாம். அவை எதற்காக இருக்கின்றன என ஸ்வாமி தேசிகன் ரசமாக நமக்கு அருளி இருக்கிறார்.

ரங்கநாத பாதுகைகள் “தன்னை அண்டினவர்களுக்குக் காலவரையறைகளால் கட்டுப்படாத ஐஷ்வர்யம் கிடைக்கும்” என்று காட்டுவதற்காகத் தானாம். கட்டுப் படாத ஐஷ்வர்யம், என்பது மோட்சம் தானே? இரவுப் பொழுதை போலவும் பகல் பொழுதை போலவும் இருக்கக் கூடிய இரண்டு ரத்தினங்களை தனக்குள் சிறைபடுத்தி கொண்டு, எல்லா நேரத்திலும் நமக்கு மோட்சம் வழங்க வேண்டும் என்றே விழைகிறாள் போலும், பாதுகாதேவி என்றே வியக்கிறார் ஸ்வாமி தேசிகன். ஸ்வாமி தேசிகனோடு சேர்ந்து நாமும் பாதுகா தேவியை தொடர்ந்து கொண்டாடிக் கொண்டே இருப்போம்.

பாதுகையின் பெருமை தொடரும்...

நளினி சம்பத்குமார்

Advertisement