பாதுகையின் பெருமை
பகுதி 8
திருவரங்கனின் பாதுகையில் சமர்ப்பிக்கப்படும் புஷ்பங்களை பற்றி தனக்கே உரித்தான கவி நயத்தோடு ஸ்லோகங்களை அருளி இருக்கிறார், ஸ்வாமி தேசிகன். தன்னுடைய ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின், “புஷ்ப பத்ததி” யில். பெருமாளின் திருவடியில் நாம் அர்ச்சனை செய்யும் பூக்கள் தானாகவே திருமாலின் பாதுகையை சென்று அலங்கரிப்பதை நாம் பார்த்திருப்போம்.
திருமால் அசுரர்களை அழிப்பதற்காக புறப்படுகிறார். அவருடைய வெற்றியை கொண்டாட, தேவர்கள் ஆகாயத்திலிருந்து பூ மழையை தூவுகிறார்கள். அவர்கள் சிந்திய அந்த மலர்கள் எல்லாம் அடைந்திருப்பது மாதவனின் பாதுகையை தானே? அப்படிப்பட்ட அந்த பாதுகையை நான் சரணம் அடைகிறேன் என்றே இந்த பத்ததியின் முதல் ஸ்லோகத்தில் அருளி இருக்கிறார் ஸ்வாமி தேசிகன்.
திருமால் தன்னுடைய திருவடி தாமரையை பாதுகையின் மீது சமர்ப்பிக்கிறார்.தன் திருகைகளையே தாமரையாக கொண்ட அந்த திருமகளோ,அந்த கைகளையே பாதுகைக்கு சமர்ப்பிக்கிறாளாம்.
தேவர்கள் எல்லாம், எப்படி எந்த புஷ்பங்களை உயர்வான அந்த பாதுகைக்கு சமர்ப்பிக்கிறார்கள் என்றால், முதலில் பரமசிவன் தன் தலையில் இருக்கும் கங்கை நீரை கொண்டு பாதுகைக்கு அபிஷேகம் செய்து பின் தலையில் சூடி இருக்கும் அந்த பிறை சந்திரனையே தாழம்பூ இதழாக சமர்பிக்கிறார். தடையற்ற செல்வத்தை தாங்கள் பெற வேண்டி அப்ஸ்ரஸ் பெண்கள் எல்லாம் கற்பக மரத்தின் மலர்களை கொண்டு பாதுகையை பூஜிக்கிறார்கள்.
‘பரிசரணநியுக்தை: பாதுகே! ரங்கபர்து:
பவநதநயமுக்யைரர் பிதாம் த்வத்ஸமீயே
விநதவிதிமுகேப்யோ நிர்விஸேஷாம் த்விரேபா:
கதமபி விபஜந்தே காஞ்சநீம் பத்மபங்க்திம் (343)
“ரங்கபர்து பாதுகையே”, ரங்கநாதனின் பாதுகையே, “த்விரேபா:” வண்டுகள், “கதமபி விபஜந்தே” “பவநதநய முக்யைர்” என்று அனுமனால் பெருமாளின் பாதுகையில் சமர்ப்பிக்கப்பட்ட “காஞ்சநீம் பத்மபங்க்திம்” தங்க புஷ்பத்தை, தாமரையை பார்க்கிறது. அதே சமயம், “விதி முகேப்ய:” வான நம் தலைஎழுத்துக்களை எழுத கூடியவரான ஹிரண்ய கர்பன் என்றே பெயர் கொண்ட தங்க முகங்கள் கொண்ட ப்ருஹ்மா தன் நான்கு தலைகளையே தாமரை மலர் போல திருமாலின் திருவடியில் சமர்ப்பித்திட, அனுமன் சமர்ப்பித்த தாமரை மலர்கள் எது, ப்ருஹ்மாவின் முகங்கள் எது என்றே கண்டுபிடிக்க முடியாமல், சிறிது நேரம் கழித்தே கண்டுபிடித்தது. திருமாலின் பாதுகை அவ்வப்போது தங்க தாமரை மலர்களால் அர்ச்சிக்கப்பட்ட பாதுகையாகவே இருக்கிறது என்றே தெரிகிறதல்லவா?
இனி அடுத்த பத்ததியான “பராக பத்ததி” யோடு பாதுகையை கொண்டாடு வோம். இந்த பத்ததியில் திருமாலின் பாதுகையிலிருந்து பட்டு வரக்கூடிய தூள்,துகள், பொடியினால் நமக்கு கிடைக்கக் கூடிய பராக அனுக்ரஹத்தை பற்றி, ஸ்வாமி தேசிகன் பரக்க சாதித்து அருளுகிறார். திருமாலின் திருவடி தூள் என்பதை சகல விதமான பாவங்களையும் போக்க வல்லது.
பாந்து வ: பத்மநாபஸ்ய பாதுகா கேளிபாம்ஸவ:
அஹல்யாதேஹ நிர்மாண பர்யாய பரமாணவ:
என்று இந்த பத்ததியின் முதல் ஸ்லோகத்தில், அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்ததன் வழியாக அந்த பாதுகையின் துகள்களுக்கு இருக்கக் கூடிய மகிமை நமக்கெல்லாம் தெரிய வந்தது இல்லையா? திருமாலின் திருவடி தூள் பட்டதால் தானே கல்லானவள் பெண்ணாக மாறினாள்? அந்த பாதுகையின் துகள்களே நம்மையும் காக்கட்டும் என்று விண்ணப்பிக்கிறார் ஸ்வாமி தேசிகன் இந்த ஸ்லோகத்தில்.
இந்த அகலிகையின் சாப விமோசன வைபவத்தை தான் பாட்டாகவே பாடி கொண்டிருப்பார்களாம் தண்டாகாரண்யத்தில் இருக்கக் கூடிய ரிஷிகளின் ஆஸ்ரமங்களில் என்று “ஜநித முநிகளாத்ராந் தண்டகாரண்ய பாகாந்” என்கிறார் ஸ்வாமி தேசிகன்.பாதுகையை அணிந்து கொண்டு தானே அந்த ரங்க நாத பெருமாள் உற்சவகாலங்களின் போது பல்வேறு வாகனங்களின் விசேஷமாக திருவீதி உலா கண்டருள்வார்?
அப்படி பெருமாள் திருவீதி உலா வரும் போது அவருடைய பாதுகைகளிலிருந்து துகள்கள் எழும் அல்லவா? அவை தேத்தாங்கொட்டை எப்படி கலங்கின தண்ணீரை சுத்தம் செய்திடுமோ அப்படி தான் பாதுகையே உனது அந்த துகள்கள் என்பது பக்தர்கள் மீது பட்டாலோ அல்லது அவர்கள் உனது அந்த துகள்களை பற்றி நினைத்தால் கூட போதும் நீ அவர்களுடைய கலங்கிய மனதை தெளிவான மனதாக மாற்றி விடுகிறாயே என 352 வது ஸ்லோகத்தில் வியக்கும் ஸ்வாமி தேசிகன், ரங்கநாதனின் பாதுகையின் பெருமையை பற்றி நன்கறிந்த பெரியவர்கள் என்ன செய்கிறார்களாம் தெரியுமா?
தங்கள் இல்லத்தில் உள்ள குழந்தைகளை பிடித்திருக்கும் கர்வம் என்ற பிசாசை ஓட்டுவதற்காக, அந்த பாதுகையின் தூகள்களை குழந்தைகளின் மீது தடவுகிறார்களாம். நம்மை காப்பாற்றி கொள்ள கூடிய சக்தி நம்மிடம் கிடையாது. நம்மை படைத்தவனான அந்த பரம்பொருளால் மட்டுமே நம்மை காப்பாற்ற இயலும் என்ற நற்புத்தி அப்போது தானே அந்த குழந்தைகளுக்குள் புகும் என்பதாலேயே..
இந்திரன் முதலான தேவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? அவர்கள் அசுரர்களுக்கு எதிராக போர் தொடுக்க புறப்படுவதற்கு முன், பாதுகையின் தூகள்களை தங்களது தலைகளில் தடவி கொண்டு கிளம்புகிறார்களாம். அவர்களது தலைகளுக்கு கவசமாக அந்த தூகள்களே செயல்படுவதால், தனியாக வேறு எதையுமே தங்களது தலைகளை பாதுகாக்கும் கவசங்களாக அணிந்து கொள்ளாமல் அவர்கள் செல்கிறார்களாம்.
கெளரியின் பதியான பரமசிவன் என்ன செய்கிறாராம் தெரியுமா? ரத்தின கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையை தனது திருவடியில் அழகாய் அணிந்து கொண்டு அரங்க நாதன் உற்சவ காலங்களில் பல புறப்பாடுகள் கண்டருளுகிறார் இல்லையா? அப்போது அந்த வீதிகளிள் உள்ள புழுதி முழுதுமாக கிளம்பி, பாதுகைகளின் மீது படர்ந்து விடுகிறதாம். உடனே உன்னை வணங்கியபடி பரமசிவன், தன்னிடம் உள்ள யானைத்தோலை கொண்டு மிருதுவாக உன்னை துடைத்து விடுகிறார்.
பெரியாழ்வார் திருமொழியில், “எய்ப்பு என்னை வந்து நலியும் போது, அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே” என்று ஒரு பாசுரம் வரும். பகவானே, என்னுடைய இறுதி காலத்தில், மரண தருவாயிலில் நான் இருக்கும் போது உன்னை நினைக்க கூடிய சக்தியற்ற நிலையில் நான் இருப்பேன். அதனால் அப்போதைக்கு இப்பொழுதே சொல்லி விடுகிறேன்.
அந்த தருணத்தில் நான் உன்னை நினைக்காவிட்டாலும் நீ என்னை நினைத்து கருணையோடு எனக்கு நற்கதி அருள வேண்டும் என்று, அதைப் போலவே இந்த பராக பத்ததியின் 369 வது ஸ்லோகத்தில், “பாதுகையே என் கடைசி காலத்தில் நீ ரங்கநாதனை தாமதம் சிறிது மின்றி என்னிடம் அழைத்து கொண்டு வர வேண்டும்.
கற்பூர பொடி போன்ற உன் துகள்களால், என் சகல பாவங்களையும் நீக்கிட வேண்டும் என்று விண்ணப்பிக்கும் ஸ்வாமி தேசிகன், 379வது ஸ்லோகத்தில், பாதுகையை ஆராதிப்பவர்களின் குடும்பத்தில் பல தலைமுறையினர் தொடர்ந்து பாதுகையை ஆராதனை செய்யும் பேற்றாய் பெறுவார்கள் என்றே அருளி இருக்கிறார்.நம்மையும் நம் தலைமுறையினரையும் அந்த பாதுகா தேவியே பார்த்து கொள்ளட்டும், பார்த்து காத்து கொள்ளட்டும். அவளின் மீது பக்தி செலுத்திட அவளே தம் திருவிழி காட்டி வழி காட்டட்டும் என்ற பிரார்த்தனையோடு பாதுகையின் திருவருளில் தொடர்ந்து இணைவோம்.
பாதுகையின் பெருமை தொடரும்...
தொகுப்பு: நளினி சம்பத்குமார்