பாதுகையின் பெருமை
பகுதி 5
திருமாலின் திருவடியை தாங்கி நிற்கும் பாதுகா தேவி, எண்ணிலடங்கா கல்யாண குணங்களின் இருப்பிடமாக இருக்கிறாள். பக்தர்களின் மீது அவள் காட்டும் பொறுமையில் பூமா தேவியை போலவும், தயை கொண்டு அதாவது கருணை கொண்டு பக்தர்களை திருமாலின் திருவடியில் சேர்ப்பிப்பதில் அவள் ஸ்ரீதேவி தாயார் போலவும் தானே அடியவர்களுக்கு அனுகிரஹம் புரிந்து கொண்டிருக்கிறாள்? அப்படி அடியவர்களின் புகலிடமாக இருக்க க்கூடிய பாதுகாதேவி, ராஜ்யஅதிகாரமேற்று, சிம்மாசனத்தில் அமர்ந்து, ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு ஆட்சி அதிகாரம் செய்வதை தம்முடைய ஸ்ரீபாதுகா சஹஸ்ரத்தின் ஆறாவது பத்ததியான ‘‘அதிகாரபரிக்ரஹ பத்ததியின்” வழி நமக்கெல்லாம் காட்சி தருகிறார் ஸ்வாமி தேசிகன். பரிக்ரஹம் என்றால் ஏற்றுக் கொள்ளுதல் என்பதே பொருள்.
பாதுகை என்பவள் அயோத்தியில் இருக்கும் போது அந்த ஊரே கோலாகலமாக எங்கும் சந்தோஷ கோலத்தையே தன்னிடம் கொண்டு அலங்காரமாய் இருக்கிறது. ஆனால், அந்த பாதுகை ஆனவள் அந்த ஊரை விட்டு வெளியேறி விட்டால் சந்தோஷத்தை மொத்தமாக தொலைத்துவிட்டு தவிக்கிறது. அயோத்திக்கு எஜமானியாக இருக்கக்கூடிய அந்த பாதுகாதேவியேதான் தனக்கும் எஜமானி என்றே இந்த ஆறாவது பத்ததியின் முதல் ஸ்லோகத்தை ஆரம்பிக்கிறார் ஸ்வாமி தேசிகன்.
ஒரு தொண்டனுக்குரிய சாம்ராஜ்ய செல்வமாக இருக்கக்கூடிய அந்த பாதுகையை பரதனுக்கு கொடுத்தருளினார் ராமபிரான். அப்படிப்பட்ட அந்த உயர்ந்த பாதுகையை சிம்மானசத்தில் ஏற்றி ஆராதித்ததால் தானே பரதன் சகல விதமான புகழையும் பெற்றான்? என்று மூன்றாவது ஸ்லோகத்தில் விளக்கும் தேசிகன், அடுத்த ஸ்லோகத்தில், “ஏ பாதுகையே! உன்னை விட்டு வேறு எதிலும் தங்கள் மனதை திருப்பாமல் தியானிப்பவர்களுக்கு, அவர்கள் கேட்காமலேயே பல நன்மைகளை பரிசாக அளிக்கிறாயே, என்ன வியப்பு இது என்று வியக்கும் ஸ்வாமி தேசிகன், பரதன் உன்னை அப்படி தியானித்ததால் தானே அவன் கேட்காமலேயே அவனுக்கு ராஜ்யாதிகாரம் என்பது உன் திருவருளால் கிடைத்தது என்கிறார்.
“ராஜ்யம் ததா தஸரதா தநு ராமத ப்ராக்”
- என்று தொடங்கும் 12வது ஸ்லோகத்தில், மனு குலம் என்பது பெரும் பாக்கியம் பெற்ற குலமாக மாற நீயே காரணமானாய் எப்படி தெரியுமா? தசரதருக்கு பிறகும், ஸ்ரீ ராமனுக்கு முன்னும் நீ சிம்மாசனத்தை அலங்கரித்ததால் என்கிறார். இனி ஏழாவது பத்ததியான “அபிஷேக பத்ததியில்”, ஸ்வாமி தேசிகனோடு சேர்ந்து நாமும் பாதுகைக்கு நடைபெற்ற பட்டாபிஷேகத்தை கொண்டாடுவோம். இந்த பத்ததியின் முதல் ஸ்லோகத்தில்,
“பாஹி ந: பாதுகே யஸ்யா:
விதாஸ்யந் அபிஷேசநம்
ஆபிஷேசநிகம் பாண்டம்
சக்ரே ராம: ப்ரதக்ஷிணம்”
என்று, பாதுகையே ராமபிரான் வனவாசம் செல்வதற்கு முன், தனது பட்டாபிஷேகத்திற்காக தயாராக வைக்கப்பட்டிருந்த பொருட்களை ஒரு முறை வலமாக வந்து (பிரதட்சிணம்) தன் பார்வையை (கடாட்சத்தை) அப்பொருட்களின் மீது செலுத்தினானே. இதன் மூலம் உனக்கு அப்போதே பட்டாபிஷேகம் நடத்தப்பட்டுவிட்டது. அப்படிப்பட்ட பாதுகையே நீ எங்களை காத்தருள வேண்டும் என்ற வேண்டுதலை அந்த பாதுகையிடமே முன்வைக்கிறார் தேசிகன்.
வசிஷ்ட முனிவர், ராமரின் பட்டாபிஷேகத்திற்காக குறித்திருந்த நாளில், தான் முடிசூட்டி கொள்ளாமல் வனவாசத்திற்காக புறப்பட வேண்டி இருக்கிறதே என துளியும் வருத்தம் அடையாமல், தன் பட்டாபிஷேகத்திற்காக அங்கே சேகரிக்க வைக்கப்பட்டிருந்த உயர் ரக பொருட்கள் வீணாகி விடக்கூடாது மாறாக, தனக்கு பிரியமான பாதுகைக்கு அது பயன்பட வேண்டும் என்று எண்ணியபடியே தன் திருவடியில் இருந்த பாதுகைகளோடு அந்த பொருட்களை பிரதட்சணமாக சுற்றிவந்தார் என்று இந்த ஸ்லோகத்திற்கு ரசமான விளக்கத்தை ரசித்து சொல்வர் பெரியோர்கள்.
இக்ஷவாகு குல குருவான வசிஷ்டர் ஆசை ஆசையாக அயோதிக்கு பரதனின் தலை மேல் அமர்ந்து வந்த பாதுகையை சிம்மாசனத்தில் அமரவைத்து அமர்க்களமாக பட்டாபிஷேகம் நடத்தியதை ஐந்தாவது ஸ்லோகத்தில் குறிப்பிட்டு, ஆறாவது ஸ்லோகத்தில், பாதுகைக்கு செய்விக்கப்பட்ட பட்டாபிஷேகத்தை தம் கவி திறனையும் கற்பனையும் கலந்து நம் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.
“பாதுகையே நீ ரத்ன சிம்மாசனத்தில் எழுந்தருளி அற்புதமாக சாஸ்திரப்படி பட்டாபிஷேகத்தை ஏற்றுக்கொண்டாயே அது எப்படி இருந்தது தெரியுமா? பொன் நிறமான மலையாக இருக்கக்கூடிய மேரு மலையை போலவே பொன் நிறத்தில் இருக்கிறாள் பாதுகா. அவள் மீது புனித அபிஷேக நீரானது சேர்க்கப்பட்ட போது, மேரு மலையைவிட பாதுகையே நீ உயர்ந்தும், உன் மீது சேர்க்கப்பட்ட புனித நீர் கங்கையைவிட புனிதமானதாகவும் தோன்றியதே என்கிறார் தேசிகன். இப்படி உவமைகள் பல பொதிந்த ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின் எட்டாவது பத்ததியான “நிர்யாதநாபத்ததி” யில், அற்புதமாக பட்டாபிஷேகம் செய்து கொண்டு, 14 வருடங்கள், ஆட்சி செய்த பாதுகா தேவி, ராமபிரான் வனவாசத்தை நிறைவு செய்து கொண்டு திரும்ப அயோத்திக்கு வர, ராமபிரானின் திருவடிகளிலே மீண்டும் அந்த பாதுகைகளை பரதன் எப்படி சேர்த்தான் என்பதை சொல்லும் பத்ததி இது.
“அபிஷேகோத்ஸவாத் தஸ்மாத் யஸ்யா நிர்யாத நோத்ஸவ:
அத்யரிச்யத தாம் வந்தே பவ்யாம் பரத தேவதாம்”
என்ற முதல் ஸ்லோகத்தில், ரங்கநாத பாதுகையே உன்னை நான் ஆராதிக்கிறேன். உலகமே போற்றும் படியாக உன்னுடைய பட்டாபிஷேகம் (அபிஷேகோத்ஸ்வாத்) நடந்தேறியது. ஆனால் அதைவிட சிறப்பாக எந்த விழா நடந்தது தெரியுமா? ராமபிரான் வனவாசத்தை விட்டு திரும்பியதும், பரதன் பாதுகையே உன்னை அந்த ராமபிரானிடம் திரும்ப கொடுக்க நடத்தப்பட்ட வைபவம் (நிர்யாத நோத்ஸவ) இருக்கிறதே அது மேலும் அதீத கோலாகலத்துடன் (அத்யரிச்யத தாம் வந்தே) நடந்தது. பெருமாளின் திருவடியை விட்டு பிரிந்த வருத்தத்தில் 14 வருடங்கள் இருந்த பாதுகா தேவி மீண்டும் அத்திருமாலின் திருவடியிலேயே சேர்ந்து விட்டதை எண்ணி பாதுகை, ராம பிரான், உலகத்தோர் என அனைவருமே சந்தோஷமடைந்ததால், மகிழ்ச்சி என்பது அங்கே சற்று கூடுதலாகவேகூடி இருந்தது.
“கிம் சதுர்தஷபிரேவ வத்ஸரை”
- என்று தொடங்கும் ஸ்லோகத்தில், “ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நீங்கள் இருவரும் பதினான்கு ஆண்டுகள் மட்டும்தான் அரசாண்டீர்கள் என்பது இல்லை. ராமபிரானின் திருவடிகள் எப்பொழுதுமே மூவுலகிற்கும் ராஜாவாக இருக்கும் போது, நீங்கள் இருவருமே எப்பொழுதுமே யெளவராஜ்யம் பெற்று, இளவரசர்களாகவே இருந்து வருவீர்கள் என்கிறார்.
“நீரில் இருந்து நெருப்பு உண்டானது” என்பது வேத வாக்கு. அந்த வேத வாக்கை பாதுகை உணர்த்தினாள் என்பதை வெகு அழகாக ரசித்து “தேவி! த்வயா ஸ்நபநஸம்பதி ஸம்ஷ்ரிதாயாம்” என்ற ஸ்லோகத்தின் வழி காட்டி கொடுக்கிறார் ஸ்வாமி தேசிகன். பாதுகையின் மேல் பட்டாபிஷேகத்தின் போது சேர்க்கப்பட்ட அந்த நீரானது பெருகியபடியே இருந்ததாம். அந்த நீர் அக்னியாக மாற்றம் பெற்று, (ராவணன், அனுமானின் வாலில் தீ வைத்த போது) அனுமானின் வாலில் சென்று அமர்ந்து, இலங்கையை எரித்தது என்றே அனுபவிக்கிறார் தேசிகன். வேதத்தின் கூற்றான நீரில் இருந்து நெருப்பு உண்டானது என்பது, இந்த நிகழ்வின் வழியாக அங்கிருந்த மக்களுக்கு தெளிவாக உணர்த்தப்பட்டதாம்.
“ஸம்ப்ரேக்ஷ்ய மைதிலஸுதா மணிபாத ரக்ஷே”
- என்று தொடங்கும் ஸ்லோகத்தில், “பாதுகையே! ஸ்ரீராமனை எதிர்கொண்டு அழைக்க வந்த பரதன், உன்னை தன் சிரஸில் (தலையில்) எழுந்தருளப்பண்ணி கொண்டு வருவதை பார்த்த சீதா பிராட்டி தன் இருகைகளை கொண்டு வணங்கினாள். அவள் தனது கண்களால் ஜாடை செய்து தனது தோழியான தாரை போன்றவர்களையும், உன்னை வணங்குமாறு கூறினாள் என்கிறார் சுவாமி தேசிகன். அப்படிப்பட்ட உயர்ந்த ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட அந்த பாதுகையை தொடர்ந்து நாமும் இத்தொடரின் வழி வணங்குவோம்.
(பாதுகையின் பெருமை பாதுகையின் திருவருளால் தொடரும்…)
தொகுப்பு: நளினி சம்பத்குமார்