பாதுகையின் பெருமை
பகுதி 4
திருமாலின் திருவடியைச் சேர்ந்து பெருமை பெற்றவர்கள் பாதுகை, நம்மாழ்வார், கங்கை, ஆதிசேஷன், கருடன். அப்படி ஸ்ரீ ராமபிரானுடன் சேர்ந்து பெருமை பெற்ற ஸ்ரீ ராமரின் பாதுகையை அவர் தம் தம்பியான பரதனுக்கு அளித்ததை, சமர்பித்ததை விசேஷமாக தம்முடைய ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின் நான்காவது பத்ததியான “ஸமர்பணபத்ததி” வழி நமக்கெல்லாம் காட்டி தந்திருக்கிறார் ஸ்வாமி ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன்.
பாதுகாதேவி என்பவள், நம் மீது பரிவு கொண்டு நம்மை எல்லாம் திருமாலிடம் சேர்த்து வைத்து ஒரு குரு அல்லது ஆசார்யன் செய்யும் வேலையை செய்கிறாள். ஒரு ஜீவாத்மா, தான் பரமாத்மாவான திருமாலை அடைந்துவிட வேண்டும் என துடிதுடிக்கும் போது, உடனே அந்த பரமாத்மா தன்னுடைய பிரதிநிதியாக ஆசார்யனை அனுப்பி வைத்து அவர் வழியாக நம்மை தன்னிடம் சேர்த்து கொள்வார் இல்லையா? ராமபிரான் வந்துவிட வேண்டும்.
அவனே வந்து அரியணையில் அமர்ந்திட வேண்டும் என்றல்லவா பரதன் வேண்டி நின்றான்? பரதன் என்கிற ஜீவாத்மா, ஸ்ரீ ராமன் என்கிற பரமாத்மாவை அடைந்துவிட வேண்டும் என்று வேண்டி நின்ற போது, அங்கே ஸ்ரீ ராமபிரான், தன்னுடைய பிரதிநிதியாக பாதுகா தேவியை அல்லவா ஒரு ஆசார்யன் ஸ்தானத்தில் இருக்க அனுப்பி வைத்தார்?
அந்த பாதுகைக்கு பயபக்தியோடு பரதன் 14 வருடங்கள் கைங்கர்யங்கள் செய்து கொண்டிருந்த போது பரமாத்மாவான ராமசந்த்ர மூர்த்தியே பரதன் இருப்பிடம் நோக்கி வந்து விட்டார் அல்லவா? நாமும் அப்படி பெருமானின் பிரதிநிதியான பாதுகையை தியானம் செய்து கொண்டிருந்தால் போதும், அந்த பெருமான் நம்மையும் நிச்சயம் தன்னிடம் சேர்த்து கொள்வான். ஸ்ரீ ராமருக்கு மிகவும் பிரியமானது அவரது பாதுகையே என்பதை அவர் வனவாசத்திற்கு செல்லும் போதே காட்டி விட்டாரே? சமர்ப்பணபத்ததியின் இரண்டாவது ஸ்லோகத்தில்,
“பாதுகையே, ஸ்ரீ ராமன் தனது நாட்டை துறந்து காட்டுக்கு சென்ற போதும், உன்னை மட்டும் மறக்காமல், உன்னை அணிந்து கொண்டு அல்லவா வனவாசத்திற்கு சென்றார்.
ராமபிரானுக்கு பிரியமானவள் பாதுகாதேவி என்பதை அல்லவா இது காட்டுகிறது?” என வியக்கிறார். பக்தர்களாகிய நம்மிடம் கூடுதல் பரிவை என்றுமே காட்டுவது பாதுகையே என்பதை மூன்றாவது ஸ்லோகத்தின் வழிகாட்டி கொடுக்கிறார் ஸ்வாமி தேசிகன். ரத்ன கற்கள் பொருந்திய ஸ்ரீ ராமரின் பாதுகை, ராமரோடு புறப்பட்ட போது தன்னிடம் இருந்த ரத்ன ஒளியையையும், அயோத்யா மக்களிடம் தனக்கிருந்த பரிவை காட்டும் விதமாக ஒலி எழுப்பி கொண்டே சென்றதாம்.
ஸ்ரீ ராமரின் திருவடிகளை கெட்டியாக பிடித்து கொண்டு, என்னவென்று ஒலி எழுப்பியதாம் தெரியுமா “ராமா உன் மீது அதிக அன்பு கொண்டிருக்கும் இந்த மக்களிடம் நான் சீக்கிரம் திரும்பிவிட வேண்டும். பரதனோடு என்னை இவர்களிடம் நீ சீக்கிரம் அனுப்புவாயா?’’ என்று கேட்பது போல ஒலி எழுப்பி கொண்டே சென்றதாம் பாதுகை. சத்ய சங்கல்பனான ஸ்ரீ ராமன், தன் தந்தையான தசரதனின் சொல்லை காப்பாற்ற காட்டிற்கு சென்றார்.
ஆனால், அடுத்த சத்தியமான பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டுமே என்று அந்த சத்தியத்தை நிறைவேற்றும் பொருட்டல்லவா பாதுகையை பரதனின் தலையில் கிரீடம் போல வைத்து பட்டாபிஷேகம் செய்தார்? பகவானுடைய சத்தியத்தை காப்பாற்ற துணை இருப்பவள் பாதுகா தேவியே என்று அருளி இருக்கும் ஸ்வாமி தேசிகன், ஸ்ரீ ராமனுக்கு காட்டில் நடக்க சக்தியை அளித்ததும், பொறுத்துக் கொள்ளும் தன்மையையும் தந்ததும் பாதுகா தேவியே என்கிறார்.
கடுமையான கற்களும் முட்களும் நிறைந்த காட்டில், சிரமமின்றி ராமபிரான் நடக்க பாதுகாதேவியே சக்தி அளித்தாள். பரதனிடம் அந்த பாதுகையை அர்ப்பணிப்பதற்கு முன், அந்த பாதுகையின் மீது சிறிது நேரம் எழுந்தருளி, காட்டு பாதையில் எதையும் தாங்கவல்ல உன் குணத்தை அல்லவா ஸ்ரீ ராமன் சம்பாதித்து கொண்டார்? என்று வியக்கிறார் தேசிகன். இந்த பத்ததியின் கடைசி ஸ்லோகத்தில், “பாதுகையே.. உன்னை தன் தலையில் சுமந்ததால், ராமனை காட்டிற்கு அனுப்பிய கைகேயியின் மகன் இவனே என்ற அபவாதங்கள் வராமல் பரதனை நீ எப்படி காப்பாற்றினாயோ அப்படியே என் தலை மீது நீ இருந்து எனக்கு ஏற்படும் அபவாதங்களை நீ போக்க வேண்டும் என்று பாதுகையிடம் ஸ்வாமி தேசிகன் வேண்டி நின்றதை போல நாமும் வேண்டி நிற்போம்.
பரதாழ்வானோடு பாதுகை நாடு (கோசலை நாட்டிற்கு) திரும்பியதை குறிக்கும் பத்ததியே ஐந்தாவது பத்ததியான “பிரதிப்ரஸ்தாந பத்ததி”.
மிக உயர்ந்த ஸ்ரீ ராமரின் திருவடிகளில் உள்ள பாதுகைகளை முழுமையாக அடியேன் வணங்குகிறேன். எந்த பாதுகையின் கருணையானது அடியவர்களின் விஷயத்திலே, தடங்கல் என்பதே இல்லாமல் இருந்ததோ அப்படிப்பட்ட உயர்வான பாதுகைகளை வணங்குகிறேன்.
“ப்ரஶஸ்தே ராமபாதாப்யாம் பாதுகே பர்யுபாஸ்மஹே
ஆந்ருஷம்ஸ்யம் யயோராஸீதா ஷ்ரிதேஷ்வநவக் ரஹம்”
என்றே இந்த பத்ததியின் முதல் ஸ்லோகத்தை தொடங்குகிறார் ஸ்வாமி தேசிகன். பக்தர்களிடமிருக்கும் கவலைகளை பெருமாளிடம் எடுத்து சொல்லி அந்த கவலைகளை போக்கடிப்பவள் பாதுகாதேவியே. ஒரு உண்மையான பக்தனை உன்னதமான அந்த திருமாலின் திருவடியில் சேர்த்து சந்தோஷமடைபவள் பாதுகையே. இந்த பத்ததியில்,
“அவ்யாஹதாம் ரகுபதேர் வஹத: ப்ரதிஜ்ஞாம்”
என்று தொடங்கும் ஸ்லோகத்தில், தசரத சக்ரவர்த்தி ராமபிரானுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்க போகிறார் என்ற செய்தி கேட்டதும் மிகவும் சந்தோஷப்பட்டாளாம் பூமாதேவி.
ஒரு நாட்டை அரசன் ஆள்கிறான் என்றால், அந்த பூமியை அவன் தோளில் வைத்து சுமக்கிறான் என்றே சொல்வோம் அல்லவா? அப்படி ராம பிரானின் தோளில்தான் அமர போகிறோம் என்று மகிழ்ந்தாளாம் பூமாதேவி.
அது நடக்காமல் ராமபிரான் காட்டிற்கு சென்றதால் வருந்தினாளாம் பூமாதேவி. பூமியின் இந்த வருத்தத்தை அறிந்த பாதுகையானவள், ராமரின் திருவடிகளை பிரிந்து பரதனுடன் சென்றாள். அப்படி சென்ற போது ஒன்று ராமரின் திருவடி என்பது பூமியின் மீது படுவதை எண்ணி பூமாதேவி சந்தோஷமடைந்தாள். இன்னொன்று ராமரின் சிம்மாசனத்தில், ராமரின் பாதுகையே அமர்ந்து அலங்கரிப்பதையும் பார்த்து ஆனந்தம் கொண்டாள் பூமாதேவி. திருமாலின் திருவடி சம்மந்தத்தோடுதான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களின் உண்மையான உள்ள ஆசையை நிச்சயம் நிறைவேற்றியே வைப்பாள் பாதுகா.
பெண்களின் கண்ணீரை துடைக்க வல்லவள் பாதுகையே என்றும் காட்டி தருகிறார் தேசிகன். ராமபிரான் காட்டிற்கு சென்றதும், அங்கிருந்த பெண்களின் கண்கள் மேகங்கள் போல (ராமரின் பிரிவால்) கண்ணீர் மழையை சிந்தியபடியே இருந்ததாம். அப்போது சரத் காலம் போல பாதுகை மீண்டும் வந்ததும், பெண்களின் கண்கள் மழைநீர் போன்ற கண்ணீரை நிறுத்தியதாம். சரத்காலமென்பது மழை நிற்கும் காலம்.
தாய் சிங்கத்திற்குதான் தன் குட்டியின் மீது அதீத பரிவும் பாசமும் இருக்கும். பாதுகை என்ற பெண் சிங்கம் தாய் சிங்கம், ஆண் சிங்கமாகிய ராமபிரான் ராவணன் எனும் மத யானையை பிளக்க காட்டிற்கு போனதும், பரதன் என்ற குட்டி சிங்கத்தின் மீது உள்ள வாத்சல்யத்தால், அந்த குட்டி சிங்கத்தோடு நீ கோசல நாடு என் கிற குகைக்கு திரும்பி வந்து தங்கிவிட்டாய்” என பாதுகையின் பாசத்தை விவரிக்கிறார், வியக்கிறார். நம் மீது பரிவு காட்ட கூடிய அந்த பாதுகையின் பெருமையில் பரிவில் தொடர்ந்து இணைவோம்.
(பாதுகையின் பெருமை பாதுகையின் திருவருளால் தொடரும்…)
தொகுப்பு: நளினி சம்பத்குமார்