வாழ்நாட்கள் நீடித்திருக்க ஒரே வழி
80 வயது முதியவர் வீட்டுச் சாய்வு நாற்காலியில், அதிகமாக படித்திருந்த தன் 45 வயது மகனுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார். திடீரென்று அங்கு ஒரு காக்கை ஜன்னல் கம்பியில் வந்து உட்கார்ந்தது. தந்தை மகனிடம், “இது என்ன?” என்று வினாவினார். அதற்கு மகன்;
“இது காக்கை” என்று பதிலளித்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக தந்தை கேட்டப் பொழுது மகன்; “இப்போது தானே காக்கையென்று சொன்னேன்” என்று சற்று கோபமாகக் கூறினான். மூன்றாம் முறை அதே கேள்வியைக் கேட்டவுடன், மகன் எரிச்சலுடன் பதிலளித்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு நான்காவது முறையாக தந்தை கேட்டப் பொழுது, “எவ்வளவு முறை அதே கேள்விக்கு பதிலளிக்கிறது?” என்று மகன் கோபப்பட்டான். சற்று நேரத்திற்குப் பிறகு தந்தை அறைக்குச் சென்று ஒரு கிழிந்த நாட்குறிப்பை எடுத்து வந்தார். அது, தன் மகன் பிறந்த தேதியிலிருந்து வைத்திருந்த நாட்குறிப்பு. ஒரு பக்கத்தைத் திறந்து மகனை படிக்கச் சொன்னார். அதிலிருந்த வார்த்தைகள்.
“இன்றைக்கு, என்னுடைய மூன்று வயது மகன் என்னுடன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, ஜன்னல் கம்பியில் இருக்கும் காக்காவைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். 23 முறை, அது என்னவென்று கேட்டான். அன்போடு அவனை அணைத்துக் கொண்டு நான் பதிலளித்தேன்”. தந்தைக்கு கோபம் வரவில்லை; ஆனால் களங்கமில்லாத அந்தக் குழந்தை மேல் அன்புதான் இருந்தது. இன்று உன்னிடம் நான்கு முறை கேட்டதற்கு இவ்வளவு கோபம் வருகிறதே? என்று தந்தை மகனிடம் கூறினார்.
இறைமக்களே, வயதான பெற்றோரைத் தூக்கி எறிந்துப் பேசாதீர்கள்!! அவர்களை சுமையாகப் பார்க்காதீர்கள்!! நீங்கள் அன்போடும் பணிவோடும் இருக்க வேண்டும். இச்சமயத்திலிருந்து எப்பொழுதுமே அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற நினைப்புடன் செயல்படுங்கள்!! சிறு குழந்தைகளாக நாம் இருந்தபோது, மிகுந்த அக்கறையுடன் அவர்கள் நம்மை கவனித்து வந்தார்கள். அவர்கள் நம் மேல் தன்னலமற்ற அன்பை செலுத்தி இருக்கிறார்கள்.
``உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக’’ (உபாகமம் 5:16) என இறைவேதம் கூறுகிறது. பெற்றோர் நம் வாழ்வின் ஆதாரம்; அவர்கள் உழைப்பு, தியாகம், அன்பு அனைத்திற்கும் நன்றி செலுத்தி, அவர்களை மதிப்பதையே தேவன் விரும்புகிறார்.
- அருள்முனைவர். பெவிஸ்டன்