பிளக்கப்பட்ட அனுமன் ஒன்றாக சேர்ந்த அதிசயம்!
யெல்கூர் பகுதி
கர்நாடகாவில், பிஜப்பூர் என்னும் ஒரு சிற்றூர் இருக்கிறது. இதனை தற்போது `விஜயபுரா’’ (Vijayapura) என்றும் அழைக்கிறார்கள். இங்கிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தால் ``நிடகுண்டி’’ (Nidagundi) என்னும் இடம் வரும். அங்கிருந்து நடக்கும் தூரத்தில் யெல்கூர் பகுதி வரும். இதனை யாழ்கூர் என்றும் அழைக்கிறார்கள். இங்குதான் யெல்குரீஷா அனுமனை தரிசிக்கலாம். கடந்த பல இதழ்களில், அனுமனை நாம் தரிசிக்கும் போது, அருகிலேயே ஆற்றங்கரை இருப்பதை அறிந்திருப்போம். இந்த அனுமன் அருகிலும் ``கிருஷ்ணா நதி’’ ஓடுகிறது.
மேலும், இப்பகுதியில்தான் மிக முக்கிய உற்பத்தி நிலையங்களில் ஒன்றாக விளங்கும், ``நீர்மின் உற்பத்தி’’ (Hydropower generation) நிலையமும் செயல்பட்டு வருகிறது. இக்கோயிலில் இருந்து மிக அருகில், ``அல்மாட்டி’’ என்னும் கிராமம் உள்ளது. இங்கு, ``அல்மாட்டி அணை’’ (Almatti Dam) மிகவும் பிரபலம். இந்த அணையை வண்ணமையமிக்க ஒளி விளக்கால் அலங்கரிக்கப்பட்டதால், இரவு நேரத்தில் இவ்வணை பல வண்ணங்கலால் ஒளிவீசுகிறது. இதன் அழகை காண, மங்களூர் [கர்நாடகா] மற்றும் சோலாப்பூர் [மகாராஷ்டிரா] இடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலை (எண்.13) வழியாகச் செல்லும்போது, பலரும் இந்த அணையை ரசித்துவிட்டு செல்கிறார்கள்.
அழகிய ராஜகோபுரம்
ஆனால், இங்கு வசிப்பவர்களுக்கு இதெல்லாம் பெருமையாக கருதவில்லை. புகழ்பெற்று, பக்தர்களுக்கு அருள்புரியும் ``யெல்குரீஷா’’ அனுமனையே பெருமையாக கருதுகிறார்கள். காரில் செல்வதாக இருந்தால், NH13-ல் இருந்து யெல்கூர் கிராமத்தை அடைய இரண்டு முதல் மூன்று கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். பேருந்தில் வந்தால், NH13-ல் அமைந்துள்ள நிடகுண்டியில் இறங்கி, பின்னர் யெல்கூர் கிராமத்தை அடைய ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டும். யெல்கூர் கிராமத்திற்குள் நுழையும் போதே, கோயிலின் மூன்று நிலை ராஜகோபுரம் உங்களை கோயிலுக்கு வரவேற்கும். ராஜகோபுரத்தில் உள்ள முதல் அடுக்கில், யோக நிலையில் உள்ள ஆஞ்ச நேயரை காணலாம். இவரைக் கண்டாலே... மனம் லகுவாகி லயித்து போகிறது. அதே போல், ராஜகோபுரத்தில் இன்னும் சில தெய்வீக சிற்பங்களை நம்மால் காணமுடிகிறது.
ராஜகோபுரத்தின் நுழைவாயிலிலிருந்தே, அனுமனின் தரிசனத்தைப் பெறலாம். கோயிலின் உள்ளே சென்றதும், சற்று தூரத்தில் இரண்டு தூண்களினால் அமைக்கப்பட்ட வளைவு ஒன்று தெரிகிறது. அதன் இருபுறத்திலும் இரண்டு துவாரபாலகர்கள் காட்சியளிக்கிறார்கள்.
இந்த வளைவின் வழியாக உள்ளே நுழைந்ததும், ஒரு பெரிய மண்டபம் ஒன்று காணப்படுகிறது. இதன் இடது பக்கத்தில், மடப்பள்ளி [சமையலறை] என்ற ஒரு தனி அறை காணப்படுகிறது. இங்குதான் அனுமனுக்கு பிரசாதம் தயாரிக்கப்பட்டு, தினமும் நிவேதிக்கப் படுகிறது.
ஏழு கிராமங்கள்
அனுமனை தரிசித்துவிட்டு, கோயிலை சுற்றிப் பிரதட்சணமாக வரும்போது, மகாராஷ்டிர கோயில்களில் காணப்படும் பாணியில் கர்ப்பகிரகத்தின் மீதுள்ள விமானத்தைக் காணலாம். சுவர்களில் ராமாயணக் காட்சிகளும், ஸ்ரீ மத்வாச்சாரியாரின் காட்சிகளும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
முன்னொரு காலத்தில், ஸ்ரீ ராமச்சந்திரபிரபு அயோத்தியிலிருந்து பதினான்கு வருட வனவாசம் மேற்கொண்டபோது, பாரதம் முழுவதிலும் பயணம் செய்தார். அப்போது, ``யெல்கூர்’’ பகுதிக்கும் வந்திருக்கின்றார். கிருஷ்ணா நதிக்கரை ஒட்டியுள்ள பகுதியால், இங்கு ராமர் சில காலம் தங்கியிருந்தார். இதனை மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், தான் சஞ்சாரம் மேற்கொள்ளும் காலத்தில், இவ்விடத்திற்கு வரும்போது, தன் ஞானதிருஷ்டியால் யெல்கூரில் ராமர் தங்கியிருந்ததை அறிகிறார். ஆகையால், இங்கும் ராமபிரானின் நினைவாக ஒரு அனுமனை பிரதிஷ்டை செய்கிறார்.
யெல்கூர், ``எலு உரு’’ என்பதிலிருந்து பெற்றது, அதாவது நாகசம்பிகா, சந்திரகிரி, அலலாதினே, யலகுரு [யெல்கூர்], கச்சனகுட்டே [காஷினகுந்தி], பூதிஹாலா, மசுதி ஆகிய ஏழு கிராமங்களை ஒருங்கிணைந்ததே யெல்கூர் ஆகும்.
கர்நாடகாவை பொருத்தவரையில், ஒவ்வொரு கிராமத்திலும், கிராம தெய்வமாக அனுமானுக்கு ஒரு கோயில் இருப்பதை நம்மால் பார்க்கமுடியும். ஆனால், இந்த ஏழு கிராமங்களையும் சேர்த்துப் பார்த்தால், யெல்கூரில் மட்டுமே ஒரே ஒரு அனுமன் (ஸ்ரீ யெல்குரீஷா) கோயில் இருப்பதை காணமுடிகிறது.
இரண்டாக பிளந்த அனுமன்
ஒரு காலத்தில்,ஸ்ரீ யெல்குரீஷா அனுமனின் சிலைக்கு ஆபத்து ஏற்படவே, இக்கோயிலின் அர்ச்சகர், இதே கிராமத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு, யெல்குரீஷா அனுமனை எடுத்துச் சென்று, அங்குள்ள ஒரு இடத்தில் மறைத்துவைத்து விடுகிறார். அனுமனின் சிலைக்கு ஆபத்து விலகியதும், சில ஆண்டுகளுக்கு பின்னர், மறைத்து வைத்திருந்த அனுமனை அர்ச்சகர் எடுக்கும்போது, எதிர்பாராதவிதமாக கைநழுவி அனுமன் கீழே விழுந்து இரண்டாக உடைந்துவிடுகிறார். இதைக் கண்ட அர்ச்சகர் அதிர்ச்சியடைந்து பிரம்மம் பிடித்தவர்போல் ஆகிறார். ஊர் மக்கள் அனைவரும் அர்ச்சகரை வசைபாடுகிறார்கள். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத அர்ச்சகர், தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது ஒரு அசரீரி கேட்கிறது.
``அர்ச்சகரே.. கவலை வேண்டாம். எனது மகிமையை ஊர் மக்களுக்கு எடுத்துரைக்கவே நான் இரண்டாக பின்னமானேன். மீண்டும் என்னை அதே இடத்தில் வைத்துவிட்டு, ஏழு நாட்கள் வரை சந்நதி வெளியில் இருந்தே என்னை பூஜித்து வா...’’ என அனுமன் அசரீரியாக கூறினார்.
இதைக்கேட்ட அர்ச்சகர், உடைந்த அனுமனை துணியால் சுற்றிக்கொண்டு, மீண்டும் யெல்கூரில் வைத்துவிடுகிறார். அனுமன் கூறியதை போலவே, தினமும் காலை - மாலை என இருவேளைகளிலும் சந்நதி வெளியில் நின்றுக் கொண்டே, மானசீகமாக பூஜைகளை செய்துவந்தார், அர்ச்சகர். இதைக் கண்ட ஊர் மக்கள், அர்ச்சகருக்கு பைத்தியம் பிடித்து
விட்டதாக கருதினார்கள்.
ஒன்று சேர்ந்த அனுமன்
இப்படியாக ஆறரை நாட்கள் கடந்தாகிவிட்டன. சந்நதி உள்ளே, மூடிய கதவுகளுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிய அர்ச்சகரின் மனதில் ஒருவித ஆர்வம் (Curiosity) ஏற்பட்டது. அதன் காரணமாக, கதவுகளை அர்ச்சகர் திறந்து பார்த்தார். என்ன ஆச்சரியம்! இரண்டு துண்டான அனுமனின் சிலை, மீண்டும் ஒன்றாக இணைந்து பழைய நிலைக்கே காணப்பட்டது. ஆனால், ஏழு நாட்களுக்கு முன்னதாகவே அர்ச்சகர், சந்நதி கதவுகளை திறந்து பார்த்ததால், அனுமனின் கீழ்ப் பகுதிகளில் உள்ள ஒரு சில துண்டுகள் மட்டும் ஒன்றாக இணைக்கப்படாமல், அப்படியே விலகி இருந்தன. இன்றும்கூட அனுமனின் சில பகுதி இணைக்கப்படாமல் பிரிந்து இருப்பதைக் காணலாம். இதனைக் கண்ட அர்ச்சகர், ஆனந்த கண்ணீரில் மிதந்தார். ஊர் மக்களும் ஆச்சரியத்தில் பரவசமானார்கள். அர்ச்சகரிடத்தில் மன்னிப்பு கோரினர்.
``கிருஷ்ணா நதி நீரால் தனக்கு அபிஷேகம் செய்யப் படவேண்டும் என்றும், அதன் பிறகு மீண்டும் ஒரு பிரதிஷ்டை செய்ய வேண்டும்’’ என்றும் ஒரு அசரீரி அர்ச்சகருக்கு கேட்டது. அதன்படி, மீண்டும் யெல்குரீஷா அனுமன் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
அர்த்த சிலா வடிவம்
காலம் உருண்டோடின... மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தில், ஸ்ரீ யெல்குரீஷா அனுமனின் தினசரி பூஜைகளை முறையாகச் செய்வதற்காக, ஸ்ரீ பாஜிராவ் என்பவர், சுமார் 480 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கினார். அந்த நிலத்தில்தான் தற்போது இக்கோயில், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ யெல்குரீஷா அனுமன், சுமார் ஏழு அடி உயரம் கொண்டவர். ``அர்த்த சிலா’’ வடிவத்தில், பிரம்மாண்டமான தோற்றத்தில் அருள்கிறார். மேலும், அவரது தோள்களைத் தொடும் அளவிற்கு ஒரு பெரிய குண்டலத்தை காதில் அணிந்திருப்பதைக் காணலாம். அவரது இடது பாதத்தின் கீழ், ஒரு அசுரன் நசுக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறான். அனுமனின் நீண்ட வால், வலது புறமாக அவரது தலைக்கு மேலே உயர்ந்து, இடது பாதத்திற்கு அருகில் தரையைத் தொடும் அளவிற்கு மிக பெரியதாக தடுமனாக காணப்படுகிறது.
கிருஷ்ணா நதி நீரில் அபிஷேகம்
தினமும் அர்ச்சகர், கிருஷ்ணா நதிக்கரைக்கு சென்று, அங்கேயே குளித்து, அனுமனுக்கு அபிஷேகம் செய்ய கிருஷ்ணா நதி நீரை ஒரு குடத்தில் எடுத்து வருகிறார். இதனை ``மகாபூஜை’’ என்று அழைக்கப்படுகிறது. இப்பூஜை, மதியம் செய்யப்படுகிறது. மேலும், பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் ஆகியவையும் அந்த சமயத்தில் அனுமனுக்கு செய்யப்படுகிறது. அபிஷேகத்திற்குப் பிறகு, அனுமனுக்கு சந்தனம், குங்குமம் ஆகிய திரவியங்கள் சாற்றப்பட்டு, பல மலர்களால் அர்ச்சனையும் அலங்காரமும் செய்யப்படுகின்றன. அதன் பின்னர், யெல்குரீஷா அனுமனுக்கு நிவேதனம் செய்து, மகா ஆரத்தி காட்டப்படுகிறது. இந்த பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றார்கள்.
ஸ்ரீ ராம நவமி, குடீபத்வா (மராத்தியரின் பண்டிகைகளில் ஒன்று), அனுமன் ஜெயந்தி போன்ற உற்சவங்கள் இந்தக் கோயிலின் பிரசித்தி பெற்ற விழாவாகும். மேலும், அனுமன் ஜெயந்தி அன்று இறைவனுக்கு `‘டோலோற்சவம்’’ (Dolotsavam - ஊஞ்சல் சேவை) நடத்தப்படுகிறது. அதுபோக, கார்த்திகை மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
உத்தராதி மடத்தின் கோசாலை
ஸ்ரீ யெல்குரீஷா கோயிலுக்குப் பின்னால், சுமார் 4 ஏக்கர் நிலத்தில் ஒரு கோசாலை ஒன்றும் உள்ளது. இந்த கோசாலையை ஸ்ரீ உத்தராதி மடத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோசாலையில் 35 பசுக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.