தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இறைவன் உங்களைத் தேடி வருவான்

வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசமீன்ற

Advertisement

தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்

மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க, தந்தம்

ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே.

இந்தப் பாசுரம் திருமங்கையாழ்வார் இயற்றிய திருக்குறுந்தாண்டகம் என்ற நூலில் உள்ளது. அழகான தமிழ்ப்பாசுரம். இதை வாசிக்கும் பொழுது அந்த மூன்றாவது வரியை வாசித்துவிட்டு சற்று நேரம் யோசியுங்கள்.

“மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர்”

எப்படியோ கஷ்டப்பட்டு இந்த மானிட ஜென்மம் கிடைத்திருக்கிறது. ஆனால், இதை நாம் உணர்ந்திருக்கிறோமா, மதிக்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வாழ்வின் நிறைவில் மூன்று முக்கியமான விஷயங்கள் உண்டு. திருப்தி, மகிழ்ச்சி, அமைதி. (Satisfaction, Happy, Peace)

திருப்தி இல்லாதவன் மகிழ்ச்சி அடைவதில்லை; மகிழ்ச்சி அடையாதவன் அமைதி அடைவதில்லை; அமைதி அடைய முடியாதவன் நிம்மதியாக வாழ்வதும் இல்லை; கடைசி காலத்தில் நிம்மதியாகச் சாவதும் இல்லை. அவன் எடுத்த மனிதப்பிறவி அவனுக்கும் மற்றவர்களுக்கும் உபயோகம் இல்லாமல் போய்விடுகிறது.

யோசித்துப் பாருங்கள். அழகான ஆகாயம்; அற்புதமான கடல்; கண்ணுக்கு இனிய மலை; கருத்துக்கு இனிய சோலைகள்; கொட்டும் நீர் அருவி; குதூகலமாக ஓடும் ஆறு; நிரம்பிய ஏரி; பூத்துக்குலுங்கும் மலர்கள்; நம்மைச் சுற்றி இத்தனை விஷயமும் இருக்கிறது. அத்தனையும் அழகு; இனிமை; அதோ வானில் கூட்டமாகப் பறக்கும் பறவைகளைப் பாருங்கள். புல்வெளிகள் மேயும் கறவைகளைப் பாருங்கள். ஏன் ஒரு சர்க்கரைத் துகளை இழுத்துக் கொண்டு வரிசையாகச் செல்லும் எறும்புகளைப் பாருங்கள்.

எத்தனை உற்சாகம்! எத்தனை இயல்பு!

ஆனால், அழகான காட்சிகளைக் காணும் கண்கள் இருந்தும், அழகான இசையைக் கேட்கும் காதுகள் இருந்தும், அழகான சொற்களைப் பேசும் வாய் இருந்தும், நம்மால் முழுமனதோடு இவைகளோடு இணைந்து வாழ முடியவில்லையே.

“என் வாழ்வில், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; சந்தோஷமாக இருக் கிறேன்; அமைதியாக இருக்கிறேன்” என்று மனதார மலர்ந்த முகத்துடன் சொல்லக்கூடிய மனிதர்களைச் சந்தித்து இருக்கிறீர்களா?

அப்படி யாராவது ஒருவர் இருந்தால் வள்ளுவர் சொல்வதுபோல் அவர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள். தெய்வத்துக்கு சமமானவர்கள். தங்கள் மனித வாழ்வில் மாண்பினையும் மதிப்பினையும் உணர்ந்தவர்கள்.

எல்லா விலங்குகளை விட அதிகமான ஆற்றலையும் அறிவையும் படைத்ததாகச் சொல்லிக் கொள்கின்ற மனிதன், அந்த விலங்குகள் இயல்பாக இயற்கையோடு இணைந்து எந்தத் துக்கமும் இன்றி வாழ்வது போல வாழ்வது இல்லையே.

நாம் ஒரு விஷயத்தை நோக்கி நடக்கின்ற பொழுது, இருக்கும் விஷயத்தை இழந்து கொண்டிருக்கிறோம். ஆரோக்கியமாக வாழ்வதற்காக எத்தனையோ விஷயங்களையும் கருவிகளையும் கண்டுபிடிக்கும் மனிதன் அந்தத் தேடலில் தன்னுடைய ஆரோக்கியத்தை தொலைத்து விடுகிறான். தனி மனிதர்கள் மட்டுமல்ல. நாடு, மாநிலம், ஊர், தெரு என்று தனித்தனி அமைப்பில் கூட்டமாக வாழும் மனிதர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஊர், நாடு என்று சொன்னாலும், அதில் ஒரு இணக்கம் இல்லாததால் தானே, உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும், ஒன்றுக்கொன்று பகையாகவும் நட்பாகவும் இருக்கின்றன.

பகையை வெல்வதற்காக நட்பு.

சில நேரங்களில் நட்புக்காக பகை.

இது வேடிக்கையாகவும் வியப்பாகவும் இல்லையா.

சாப்பாட்டுக்காகவும், சுகாதாரம், கல்விக்காகவும் செலவிட வேண்டிய பணத்தையும் நேரத்தையும் அனேகமாக எல்லா நாடுகளும் போர்க் கருவிகளை வாங்குவதற்காகவும் அதற்கான தயாரிப்புகளிலும் செலவிடுவது முரண்பாடு அல்லவா.

ஆம்; மனிதகுலம் முழுமையும், திருமங்கையாழ்வார் சொல்வது போல “மானிடப் பிறவியை மதிக்கிலர்”.

சிங்கம் சிங்கத்தோடு போர் புரியாது; பகைமை கொள்ளாது; யானை யானையோடு போர் புரியாது; பகைமை கொள்ளாது. ஆனால், மனிதர்கள் மனிதர்களோடு போர்புரிகிறார்கள். பகைமை கொள்கிறார்கள். பகை அச்சத்திலேயே வாழ்கிறார்கள். அமைதியாக வாழ முடியாமல் தவிக்கிறார்கள்.

எதை அடைந்தாலும், எதிலும் திருப்தி இன்றி, மேலும் மேலும், இருப்பதை அனுபவிக்க முடியாமல், பரபரப்போடு அலைகிறார்கள், என்ன காரணம்?

கிடைத்த பிறவியை அவர்களுக்கு மதிக்க தெரியவில்லை.

மனிதர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமான எண்ணிக்கையில் மற்ற உயிரினங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

அத்தனைக்கும் இந்த உலகில் சொந்தம் உண்டு.

இந்த உலகை அழிக்கும் எந்தக் கருவியும் பகுத்தறிவு இல்லாத அவைகளிடம் இல்லை.

ஆனால், ஒரே ஒரு அணு ஆயுதத்தால் இந்த உலகத்தையே இல்லாமல் செய்து விடக் கூடிய சக்தி, இன்றைக்கு பகுத்தறிவு படைத்த மனிதனிடம் மட்டுமே இருக்கிறது.

ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் அச்சம் இருக்கிறது.

ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையில் கூட அச்சம் இருக்கிறது. போட்டி இருக்கிறது. பொறாமை இருக்கிறது. அதனால் ஒரு விதமான அமைதியின்மையும் மகிழ்ச்சியின்மையும் இருந்துகொண்டே இருக்கிறது.

நோயைப் பற்றிய கவலை, வேலையைப் பற்றிய கவலை, பணத்தைப் பற்றிய கவலை, என ஏதோ ஒரு கவலையில் மனிதன் இருந்து கொண்டே இருக்கின்றான்.

யோசியுங்கள். மனிதனின் மார்தட்டிக் கொள்ளும் அறிவியல் அறிவுக்கு பிரபஞ்சம் காட்டிய சின்ன விளையாட்டுப் போக்குதான் கொரோனா.

800 கோடி மக்களும் சேர்ந்து அதைக் கட்டுப்படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

இந்த உலகத்தில் மகிழ்ச்சிக்காக பணத்தையும், அதிகாரத்தையும், தொழில் சாம்ராஜ்யத்தையும், இன்னும் என்னென்னமோ வைத்துக் கொண்டிருந்த, அத்தனை கோடீஸ்வரர்களும் இரண்டு ஆண்டு காலம் அச்சத்திலேயே வாழ்ந்தார்கள்.

மனிதன் உருவாக்கியது அல்ல கொரோனா.

மனிதன் வாழும் வாழ்க்கையும் செயல்களும் உருவாக்கியதுதான் கொரோனா.ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி ஏதோ ஒரு அச்சத்தோடும் கவலையோடும் இருந்தால், அவருடைய சக்தி போய்விடும், அவன் தனக்குத்தானே ஒரு பலவீனத்தையும் நோயையும் உருவாக்கிக் கொள்கிறான் என்பார்கள்.

இந்தக் கொரோனாவை, மனிதனின் எதிர்மறை சிந்தனையும், எதிர் காலத்தைப் பற்றிய அச்சமும் தான், உருவாக்கியதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

மருந்து இல்லை, என்று நினைத்தபோது இது வேகமாகப் பரவியது.

மருந்து கண்டுபிடித்து விட்டோம், என்ற எண்ணம் வந்த பொழுது, இதன் பரவல் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.

இங்கே மருந்தை விட அச்சமும், அச்சமின்மையும் தான் வேலை செய்தது.

இப்படிப்பட்ட அச்சம் வராமல் செய்வதுதான் இறை உணர்வு.

மனிதன் இந்தப் பிரபஞ்சத்தின் பேராற்றலையும் அதை இயக்கும் இறைவன் என்ற சக்தியையும் உணர்ந்து கொண்டு, தன்னை ஒப்படைக்கும் பொழுது, தாயின் மடியில் நிம்மதியாக உறங்கும் குழந்தையைப் போல மகிழ்ச்சியோடு இருக்கின்றான். திருப்தியோடு இருக் கின்றான். ஆனந்தத்தோடு இருக்கின்றான்.

நிலையாமையை நினைத்துக்கொண்டு நிலைக்கும் படி வாழ்கிற வாழ்க் கைதான் ஆன்மிக வாழ்க்கை.

ஆன்மிகம் என்றால் கோயிலுக்குப் போவது மாவிளக்குப் போடுவது அர்ச்சனை செய்வது என்று மட்டும் நினைத்துக் கொள்ள வேண்டாம். அவையும் தேவைதான்.

ஆனால் நிஜமான ஆன்மிகம் என்பது மனிதர்களாக, மனிதாபிமானத்தோடு வாழ்வது; திருப்தியோடு வாழ்வது; மகிழ்ச்சியாக வாழ்வது; அமைதியோடு வாழ்வது; அகத்தில் அழுக்கு இன்றி வாழ்வது; எல்லோரும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்வது.

இப்படி வாழ்ந்தால் மனிதப் பிறவியை முறையாக வாழ்கின்றீர்கள் என்று பொருள்.

இந்த உணர்வு வந்துவிட்டால் கோயிலுக்கு நீங்கள் போனாலும் போகா விட்டாலும் இறைவனுக்கு அருகில் இருப்பதாகவே அர்த்தம்.

இறைவனை நீங்கள் தேட வேண்டிய அவசியம் இல்லை; இறைவன் உங்களைத் தேடி வருவான்.

Advertisement