தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அளவற்ற செல்வமருளும் கீழரங்கம் பெருமாள்

மார்க்கண்டேய ரிஷி புறவுலகை முற்றிலும் இழந்து வேறொரு நிலையில் கிடந்தார். இப்போது ஆற்றருகே நடந்தான் கோபாலன். புல்லாங்குழலை உதட்டோரம் வைத்து மெல்லியதாக இசைத்தான். காதுகளுக்குள் காவிரியின் சிரிப்பும் பசும்புற்களின் மணமும், பசுக்களின் குளம்புக் குதியலும் சட்டென்று கண்விழிக்க வைத்தன. அதிர்ந்தார். அவதாரக் கண்ணனாக கண்ணுக்குள் நின்றவன் கண்ணெதிரே நிற்கிறானே என்று குழைந்தார். மெல்லிய விசும்பலாக கிருஷ்ணா... கோபாலா... கோவிந்தா... என்று தமக்குள் பீறிட்டெழுந்த ஒட்டு மொத்த உணர்வையும் அடக்க முடியாது அரற்றினார்.

Advertisement

கண்ணனின் மந்தகாச புன்னகையும், சுடர்விட்டு ஒளிரும் வதனத் திருமுகமும் அவரை நெகிழ்த்தியது. பரந்தாமனின் பாதம் பணிந்தார், காவிரிச் சாரலும், கண்ணனின் அருளும் அவர் மீது மாரிமழையாகப் பொழிந்தது. யாருக்குக் கிட்டும் இப்பாக்கியம் என்று பாதத்தை இறுக்கினார். அந்த அன்புப் பிடிக்குள் அகப்பட்டான் கண்ணன். மின்னல்போல் அவர் நெஞ்சினின்று வேறொரு ஆசையும் மேலெழுந்தது. அழகிய கோபாலனாக நிற்கிறாயே அரங்கனாக பள்ளிகொண்டருள்வாயா என்று தலை தூக்கி முகம் பார்த்தார். பணிவாக எழுந்தார். எம்பெருமான் மெல்ல வளர்ந்தார். காவிரி தாண்டி அலைகடலாடும் வங்கக்கடற்கரையோரம் ஒய்யாரமாக கிடந்த கோலத்தில் திருவரங்கனாக திருக்காட்சி அளித்தார். வங்கக் கடலோரம் பாற்கடல் பரந்தாமனாக கிடந்ததைக் கண்டவர், எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்று தெரியாது, திசை புரியாது அரங்கனாக திருக்கண் வளர்ந்த தலம் நோக்கி ஓடினார். அந்த ஒய்யாரக்கோலம் பார்த்து தன்வயமிழந்தார். அழகிய பாக்கள் பேரலையாக அவர் நாவில் புரண்டு எழுந்தன. தான் கண்ட அற்புத அனுபவத்தை சமஸ்கிருத ஸ்லோகங்களாக மொழிந்தார். ‘‘அம்ருத ரஸஜரீனாம்....’’ என்று தொடங்கும் ஸ்லோகத்தின் பொருள் உயர்வானது.

இப்பேர்ப்பட்ட மகரிஷி தரிசித்த அரங்கனை நாமும் தரிசிக்கலாம். பஞ்சரங்க ஷேத்ரங்கள் என்று ஐந்து அரங்கனின் ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஸ்ரீ ரங்கம், வடரங்கம், ஆதிரங்கம், மேலரங்கம், கீழரங்கம் போன்றவை ஆகும். பஞ்சரங்கத்தில் தென் அரங்கம் என்பது ஸ்ரீ ரங்கம் ஆகும். அதுபோல இத்தலம் கிழக்கு அரங்கமாகும். அதுவே கீழையூர் என்றாயிற்று. கோயிலை கீழரங்கம் என்கிறார்கள். ஸ்ரீ ரங்கத்தின் அபிமான தலம் இது.

சோழர்காலத் திருப்பணியை அதிகம் கொண்ட ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது. இவ்வூரிலேயே பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது பூஜித்த சிவன்கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. இதையும் தரிசித்து வரலாம்.

துவஜஸ்தம்பம் தாண்டி நேராக மகா மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பக் கிரகம் என்று வரிசையாக அமைந்துள்ளன. மார்க்கண்டேய மகரிஷியை மனதிற்குள் நினைத்த வண்ணம் ஆவலோடு கருவறை நெருங்குகிறோம். அருகே நகரும்போதே பேரலை வீசினாலும் கடலின் மத்தியில் மையமிட்டுள்ள பேரமைதிபோல ஓருணர்வு நம்மைச் சூழ்கிறது.

பெருமாள் சந்நதி சுமார் 15 அடி உயரத்தில் திருவெண்ணாழி பிரகாரத்துடன் கூடியதாக உள்ளது. அரங்கன் மார்க்கண்டேய மகரிஷிக்குக் காட்டிய கோலம் கம்பீரமும், அமைதியும் கலந்த யோகியைப் போலுள்ளது. அவர் கிடந்தகோலத்தின் பிரமாண்டம் பிரமிப்பை அளிக்கிறது. மார்க்கண்டேயரின் யோக தவத்தை முன்னிறுத்தி, உலகம் அனைத்தும் தமக்குள் தேக்கி யோக சயனத்தில் ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டருளுகிறார். வளைந்தெழும் ஆதிசேஷன் குடையாக கவிழ்ந்திருக்கிறான். ‘‘குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி’’ என்பதுபோல மேற்கே திருமுடியையும், கிழக்கே திருவடியையும், வடக்கே பின்புறமாக தெற்கு நோக்கி சேவைசாதிக்கும் அழகுபார்க்க ஆயிரம் ஜென்மம் புண்ணியம் புரிந்திருக்க வேண்டும். அருகேயே மார்க்கண்டேயரும் முகம் முழுதும் பரந்திருக்கும் பேரின்பத்தோடு சேவை சாதிக்கிறார். இவற்றையெல்லாம் உற்று நோக்கும்போதே காம்பினின்று உதிரும் மலர்போல மனம் தன்னை விடுவித்துக்கொள்ளும் மாயம் நிகழ்கிறது.

ஆயிரம் நூற்றாண்டுகள் கடந்து புரண்டாலும் தன் நிலையிற் பிறழாத பரந்தாமனின் யோகநிஷ்டையை காட்டும் சூட்சும தலம் இது. காலமிலாப் பெருவெளியில் அலையும் அனுபவத்தை, பெருவானில் சிறுபுள்ளிபோல் இருக்கும் ஒன்றுமில்லா தன்மையை உணர்த்தும் மகோன்னதமான சந்நதி. வேண்டும் வரங்களை இச்சந்நதியில் கேட்டுப்பெறுதலல்லாது, அரங்கனே பாத்திரம்பார்க்காது அள்ளிக் கொடுக்கிறான். மார்க்கண்டேயர் ஆனந்த மயமாக தரிசித்ததால் பெருமாள் குடிகொண்டருளும் விமானத்திற்கே ஆனந்தவிமானம் என்று பெயர். அழைத்த குரலுக்கு வருவான் ஆயர்பிள்ளை என்பதுபோல முதலில் கோபாலனாக மகரிஷிக்கு தரிசனம் கொடுத்தார். அதனாலேயே இங்கு உத்ஸவமூர்த்திக்கு ஆயனார் என்று திருநாமம். மூலவருக்கு முன்பு ஆயனாரும் நின்றருள்கிறார். உத்ஸவத் தாயாரின் திருநாமம் அதிரூபவல்லித்தாயார் என்பதாகும்.

கருவறை மூலவர் மாலவனின் அருட்சாரலில் மூழ்கியெழுந்து மற்ற சந்நதிகளை சேவிப்போம்.

மகாமண்டபத்தில் வலதுபுறம் ஸ்ரீ ராமர் சந்நதியும், இடதுபுறம் கிருஷ்ணர் சந்நதியும் உள்ளன. ராமரோடு சுக்ரீவன் எழுந்தருளியுள்ளான். இதுபோன்ற விக்ரகங்கள் மிகச் சில இடங்களில்தான் காணப்படுகின்றன. ஸ்ரீ கோபாலனுடன் நர்த்தன கிருஷ்ணன், சந்தான கிருஷ்ணன் ஆகியோரும் எழுந்தருளியுள்ளது சிறப்பம்சமாகும். கோபாலன் பொன் ஓலையை ஒரு காதில் ஆபரணமாக சூடிக்கொண்டிருக்கும் கோலம் காண்பதற்கரியது.

மகாமண்டபத்தை தாண்டி வரும்போது வலப்புறம் தாயார் சந்நதி உள்ளது. தாயாரின் திருநாமம் ரங்கநாயகி. இக்கோயிலின் வடக்கே உள்ள பத்மதடாகம் எனும் புஷ்கரணியில் எம்பெருமானை மணந்துகொள்ள தாயார் தவம் செய்தார். இவ்வூரிலிருந்து 1 கி.மீ. தூரமுள்ள திருமணங்குடி எனும் ஊரில் பெருமாளை திருமணம் செய்து கொண்டார். திருமணங்குடியில் இப்போது சிறு மண்டபம் போன்றுதான் அவ்விடம் காணப்படுகிறது. எனவே திருமணம் கைகூடுவதற்காக பலபேர் வேண்டிக்கொண்டு வருகிறார்கள். ரங்கநாயகி அதிரூபவல்லியாக பேரழியாக இங்கு ஜொலிக்கிறாள். ரங்கநாதரின் யோக சயனத்தை கண்ட பிரமிப்பு அவளையும் சாந்தமாக்கியதுபோலும், தாயாரும் தவக்கோலம்போல் பேரமைதியில் முகிழ்த்திருக்கிறாள். எல்லாம் நாராயணன் செயல் என்று சரணாகதியை போதிக்கும் விதமாக அமர்ந்திருக்கிறாள். இத்தலமே ஒரு தவக்குகையை நினைவுபடுத்துவது போலுள்ளது.

தாயார் சந்நதிக்கு முன்னுள்ள பால ஆஞ்சநேயரின் பக்தியில் நெக்குருகி, பிராகாரத்தை வலம் வருகிறோம். சற்று மேடாக உள்ளது. இடது புறமாக ஓரத்தில் தாயாரின் சந்நதியைப் போலவே மூன்றடுக்கு சிறிய விமானத்துடன் ஆண்டாளின் சந்நதி அமைந்துள்ளது. இங்குதான் பெரிய திருக்குளம் அமைந்துள்ளது. தாமரை பூத்துக்குலுங்கும் தடாகம் மனதை சட்டென்று பூக்கூடையாக மாற்றுகிறது. எப்போதும் இதமான காற்றும், தாயாரே தவம் செய்த தடாகமாதலால் கண நேரத்தில் மனம் ஒருமையாகிறது. கோயில், மூர்த்தம், தீர்த்தம் மூன்றும் புண்ணியமென்பர். அது இங்கு நிதர்சனம். தென்மேற்கே ஸ்வாமி தேசிகன் சந்நதியும் மண்டபத்தோடு அமைந்துள்ளது.

கீழையூர் என்கிற கீழரங்கம் நாகப்பட்டினத்திலிருந்து - திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Advertisement