ராசிகளின் ராஜ்யங்கள் மீன ராசி
மீன ராசி என்பது காலபுருஷனுக்கு பன்னிரண்டாம் (12ம்) பாவகத்தை குறிக்கிறது. நீர் ராசியாக உள்ளது. தனுசு ராசிக்கும் மீன ராசிக்கும் அதிபதியாக வியாழன் இருக்கிறார். ஆனால், இரு ராசிகளுக்கும் ஏராளமான வேற்றுமைகள் உண்டு.
இந்த ராசியானது உபய ராசியாக வருவதால் இது இரட்டைத் தன்மையாக உள்ளது. வியாழன் தனத்தை கொடுப்பவன் மட்டும் அல்லது தனத்தை செலவு செய்யும் அமைப்பாக வருகிறது. அதுமட்டுமன்றி, முக்தியை குறிக்கும் ராசியாக இருப்பதால், இதில் உள்ள குருவானவர் முக்தி நிலையை நோக்கி பயணிக்க ஆசீர்வாதத்துடன் உபதேசமும் செய்கிறார் என்றே புரிந்து கொள்ள வேண்டும். இதில், சனி பகவான் பயணிக்கும் காலத்தில் ஏராளமான கோயி்ல்கள் முக்கியமாக நீர்நிலை மற்றும் மலைகளுக்கு அருகே கோயில்கள் புனரமைக்கப்படும் காலமாக உள்ளன. மற்ற கிரகங்களைப் போல அல்லாமல் வியாழனுக்கு துணைக்கோளாக தொண்ணூற்று ஒன்பது நிலாக்கள் உள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த காரணத்தால் ஈர்ப்புவிசை அதிகமாக உள்ள வியாழன் உள்ளார். பூமியை பாதுகாத்து சுபிட்சம் தரும் கிரகமாக வியாழன் உள்ளது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
மீனராசியின் சிறப்பு...
மீன ராசியில் கிரகங்கள் இருந்தால், நல்ல தூக்கத்தை பெறும் அமைப்பை உடையவர்களாக உள்ளனர். அதாவது எல்லா கிரகங்களுக்கும் அந்த கொடுப்பினை இல்லை. மீனத்தில் சுபகிரகங்கள் இருந்தால் அந்த பாக்கியம் உண்டு.
இந்த ராசியின் சிறப்பு என்னவெனில், இந்த ராசியில்தான் சுக்ரன் உச்ச பலத்தை பெறுகிறார். புதன் நீச பலனை அடைகிறார்.
மீன ராசிதான் ராசி மண்டலத்தில் பாதத்தை குறிக்கிறது. ஆகவேதான், பெரியோர்களை, குருமார்களை நமஸ்காரம் செய்யும்பொழுது நாம் ஆசீர்வாதத்தை முழுமையாக பெறுவதற்கு அவர்களின் கால்களில் விழுந்து வணங்குகிறோம்.
ஒருவரின் ஜாதகத்தில் இந்த மீனமும், அவர்களுடைய பன்னிரண்டாம் பாவகமும்தான் முக்தியடையும் நிலையைப்பற்றிச் சொல்கிறது. 12ம் பாவகத்திற்கு நெருக்கமாக வியாழன் இருந்தால் முக்திக்கான வழியை குருவே அருள்செய்வார் என்றும். லக்னாதிபதியே குருவாக இருந்து 12ம் பாவகத்தை பார்த்தால் பெரியோர்களின் ஆசியால் அவரே அறிந்துகொள்வார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஏராளமான பயணங்களையும் இந்த ராசிதான் குறிப்பிடுகிறது. ஆன்மிக யாத்திரை மற்றும் ஆன்மிக பயணங்கள் யாவையும் இந்த ராசிதான் ஏற்படுத்துகின்றது.
இந்த ராசிக்குள் சனி வரும்பொழுது யானைகள், விலங்குகள் யாவும் பாதிப்படைகின்றன. அதிலும் குறிப்பாக செ்வ்வாய் - சனி ஆகிய கிரகங்கள் ஒன்றையொன்று சப்தமாக பார்க்கும் பொழுது கோயில்களில் பிரச்னைகள், கோயில்களுக்கு அருகில் உள்ள தொந்தரவுகள் ஆகியவை நிகழ்கின்றன.
மீன வீட்டில் உள்ள சந்திரன் பொருளாதாரத்தை கண்டிப்பாக வளர்ச்சியடையச் செய்வான் என்பது மீனராசிக்காரர்களுக்கு சிறப்பான செய்தி. ஆனால், எவ்வாறு அந்த பொருளாதாரத்தை கையாள்கிறார்கள் என்பது அவர்களின் திட்டங்களால்தான் சரியாக செயல்படும்.நாட்டின் பொருளாதாரம்கூட மீன ராசிக்குள் சனி பிரவேசிக்கும் காலத்தில் சில சிக்கல்களை உருவாக்கும். நீர் தொடர்புடைய தொழில் செய்பவர்கள் பாதிப்படைவார்கள் குறிப்பாக மீன் பிடிப்பவர்கள் பாதிப்படைய வாய்ப்புகள் உண்டு.
இந்த ராசியின் தொடர்பு உடையவர்களுக்கு கலையின் மீது ஈர்ப்பும் தொடர்பும் கண்டிப்பாக இருக்கும். காரணம் என்னவெனில், சுக்ரன் இந்த ராசியில் உச்சம் பெறுகிறான் என்பதால் கூட இருக்கலாம். முடிவெடுப்பதில்தான் சில சிக்கல்களை உருவாக்கிக்கொள்கிறார்கள்.
பொதுவாகவே மீனராசிக்காரர்கள் கொஞ்சம் செலவு செய்வதை குறைத்து கஞ்சத்தன்மை உண்டான குணம் இருக்கும். ஆனால், செலவு இவர்களை சும்மாவிடாது செலவு வைத்துக் கொண்டே இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
மீனராசியின் புராணங்கள்...
கிரேக்க புராணத்திலும்கூட பிஸஸ் என மீனத்தைத்தான் அழைக்கின்றனர். அதிலும் இரண்டு மீன்கள் உள்ளது. ராசியின் இரட்டைத்தன்மையை குறிக்கிறது.
அதன்படியே கிரேக்கர்களின் புராணத்தில் காதல் கடவுகள் அஃப்ரோடைடின் இரண்டு மகன்களும் ஓர் அரக்கனுக்கு பயந்து ஓடுகின்றனர். பயத்தின் உச்சத்திற்கு சென்ற அவர்கள் இருவரும் தங்களை ஒரு கயிற்றால் பிரியாமல் கட்டிக்கொண்டு மீனாக உருவெடுத்து ஒரு நீருக்குள் குதித்து தப்பிக்கின்றனர். இந்த அன்பின் வெளிப்பாடாகவே அவர்களை மீனராசியின் அதிபதிகளாக அலங்கரிக்கப்படுகின்றனர்.
இந்திய புராணத்தின்படி, பிரளயம் உருவாகிய பின்பு விஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு பூமியில் உள்ள உயிர்களை காக்கிறார். அவ்வாறு அவர் செய்ததால் மீண்டும் உலகத்தில் உயிர்கள் உண்டாகி விரிவடைகிறது என்றும் இதன் அடையாளமாக மீன ராசியில் இரட்டை மீன்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
மீனராசியுடன் தொடர்புடைய இடங்களும் பெயர்களும்
இந்த ராசியானது நீர்நிலையுடன் தொடர்புடைய ராசியாக ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது. இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடங்கள் மற்றும் இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ள கோயில்கள் யாவும் இந்த ராசியுடன் தொடர்பு கொள்கின்றன. அதுமட்டுமின்றி மீன்கள் அதிகமாக வாழக்கூடிய நீர்நிலைப் பகுதிகள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதுமட்டுமின்றி மலைகளுக்கும் காடுகளுக்கும் இடையே உள்ள கோயில்களுடன் கூடிய நீர்நிலைகள் இந்த ராசியை குறிக்கின்றன.
சந்திர சேகர், நித்ய ராஜன், செல்வராஜ், ரேவதி, விஜயா, சுந்தரேஸ்வரன், அழகன், மனோஜ்குமார், குணசேகர், செந்தில்குமார், ராம்குமார், குமார், விஷால், திவ்யபாரதி, சரஸ்வதி, கிஷோர் குமார், சசிகுமார் இது போன்று இன்னும் ஏராளமான பெயர்கள் வருகின்றன...
மீன ராசிக்கான பரிகாரங்கள்...
*குருமார்களை நமஸ்கரித்து ஆசீர்வாதம் வாங்குவது சிறந்த பரிகாரம் ஆகும். ஆசிரியராக இருக்கலாம், வேதம் படித்தவராக இருக்கலாம்...
*வியாழன்தோறும் குருவின் மந்திரங்களை உச்சரிப்பதும் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பான பரிகாரம்.
*கோயில்கள், மசூதி, சர்ச் ஆகிய வழிபாட்டுத்தலங்களில் உழவாரப்பணி நடைபெறும்போது அதில் கலந்து கொண்டு சேவை செய்தல் சிறப்பான பரிகாரம்.
*இனிப்பான உணவினை அல்லது கொண்டைக்கடலையை நைவேத்தியம் செய்து அதனை இறைவனுக்கு படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு கொடுத்தல் யாவும் சிறப்பான பரிகாரமாகும்.