ராசிகளின் ராஜ்யங்கள் கும்ப ராசி
கும்ப ராசி என்பது காலபுருஷனுக்கு பதினோராம் (11ம்) பாவகத்தை குறிக்கிறது. காற்று ராசியாக உள்ளது. சனி பகவான் மகரத்திற்கும் கும்பத்திற்கும் சிறிய மாற்றத்தை உருவாக்குகிறார். தொழில் லாபத்தை விருத்தி செய்யும் காரியத்தை செவ்வனே செய்கிறார். முப்பது வருடங்களுக்கு ஒவ்வொரு முறை சனி பகவான் கும்பத்தை கடக்கும் காலத்தில் எப்பொழுதும் புதிய தொழில்களை உருவாக்குவதும் ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் தொழில் நிறுவனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதும், கடினமான உழைக்கும் சிலருக்கு பதவிகளை தருவதும், பல ஆண்டு காலம் பதவிகளில் இருந்தவர்கள் பதவிகளிலிருந்து மாற்றம் அடைவதற்குமான செயல்களை செய்வதில் மாற்றத்தை புதிய தொழில்நுட்பத்தை செய்கிறார்.
சிலரை கஷ்டங்களிலிருந்து விடுவிக்கிறார். சிலருக்கு புதிய பொறுப்புகளை உருவாக்கித் தருகிறார். கர்வத்தில் உள்ளவர்களின் கர்வத்தை களையெடுக்கிறார்.
கும்ப ராசியின் சிறப்பு...
கிரேக்க புராணங்களில் கும்பராசியானது அமிர்தம் நிரப்பியிருக்கும் குடமாக அடையாளப்படுத்தப்படுகிறது. காலபுருஷனுக்கு வெற்றி ஸ்தானமாகவும் லாப ஸ்தானமாகவும் வருவதால், கும்ப ராசியில் சனி பகவான் பிரவேசித்து வெளிவரும் காலத்தில் உலகம் முழுவதும் ஏராளமான மாற்றத்தை உருவாக்குவார்.
கும்பம் என்பது கோபுர கலசமாக இருப்பது மட்டுமின்றி, வியாழன் வீட்டிற்கு அருகாமையில் இருப்பதனால் ஏராளமான கோயில்கள், புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
காற்று ராசியாக இருப்பதனால் புயல், அதீத கனமழை, மேக வெடிப்புகள், வான விபத்துகள் ஆகியவை நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. வானியல் தொடர்பான தொழில் நுட்பம் மற்றும் இயந்திரவியல் போன்றவற்றில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தும். வானியலில் புதிய மாற்றங்களையும் கண்டுபிடிப்புகளையும் உருவாக்கும். அவை நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உபயோகமானதாக அமையும்.
கும்ப ராசி ஸ்திர ராசியாக இருப்பதனால் இங்கு வந்துள்ள சனிபகவான் தருகின்ற மாற்றங்களின் நீட்சியானது குறைந்த பட்சம் 25 வருடங்கள் வரை நீடித்திருக்க வாய்ப்புகள் உண்டு. எந்தவொரு தொழிலிலும் கும்ப ராசிக்கு சனி பகவான் வந்து செல்லும் பொழுது சிலருக்கு ஏற்றத்தையும் சிலருக்கு மாற்றத்தையும் உருவாக்குவார்.
கும்ப ராசியானது அரசியலிலும் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதை மறக்க வேண்டாம். சிம்ம ராசிக்கு ஏழாம் பாவகமாக வருவதால் புதிய சர்ச்சைகள், புதிய வியூகங்கள், புதிய கட்சிகள், புதிய தலைவர்கள் போன்றவற்றை சந்திக்க வேண்டிய சூழ்நிலையை காலம் கண்டிப்பாக செய்யும். முப்பது ஆண்டு காலம் நிகழ்ந்த மாற்றத்திற்கே மற்றொரு மாற்றத்தை தரும் அமைப்பாக கும்ப ராசி ஏற்படுத்தும்.
கும்பராசியின் சிறப்பு என்னவெனில், இதில், எந்த கிரகமும் உச்சம் பெறுவதில்லை அதே சமயம் நீசமும் அடைவதில்லை. ஆகவே, இந்த ராசியானது சமநிலை தன்மையோடு இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். சனிக் கிரகத்திற்கு திரிகோண வீடாக வருவதால் எல்லாம் சிறப்புற நடைபெறும் என்பதை நம்பலாம்.
கும்ப ராசியானது கன்னி ராசிக்கு ஆறாம் பாவகமாக வருவதால் மருத்துவத்திலும் கும்ப ராசி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நோய்களை குணமாக்குவதற்கான புதிய மருந்துகளை மருத்துவ யுக்திகளை கண்டறிகிறது.
மாற்றத்திற்கு மாற்றம் தரும் ராசி எதுவெனில் கும்பம் என்பதை உறுதியாக சொல்லலாம்.
சினிமா துறைக்கு மாற்றம் தரும் அமைப்பாக உள்ளது. புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் கலைஞர்களை கொண்டு வரும்.
அதிகமாக தொழிலாளர் சார்ந்த பிரச்னைகளையும் தொழிநுட்பங்களில் மாற்றம் ஏற்படுத்தும் காலமாக இருக்கும் என்பது உறுதி. தொழிலாளர்களுக்கு முதலாளிகளுக்குமான புரிதலை உருவாக்கும் காலம். காரணம் முதலாளி நோக்கம் லாபமாகவும் தொழிலாளியின் நோக்கம் உத்யோகமாகவும் இருப்பதால் சனியின் பயணம் மாற்றத்தை கட்டாயம் செய்யும்.
கும்ப ராசியின் புராணங்கள்...
கிரேக்க புராணத்தின் கடவுளான சியஸ் ஒரு பெரிய கழுகு வடிவமாக தன்னை மாற்றிக்கொண்டு தனது கருணைக்கு பாத்திரமான அரசர் மற்றும் இளவரசர் ட்ராய் மற்றும் மக்கள் எல்லோரையும் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக தங்க வைத்து அவர்களுக்கு அமிர்தத்தை பரிமாறும் தேவதையாக மாறி அமிர்தத்தை அளித்தார். பின்பு, ஆசீர்வதித்து சென்று மறைந்தார். அவரின் அருளைப் பெற்ற எல்லோரும் அவரை வானில் நட்சத்திரக்கூடத்தின் நடுவே கும்பம் என்னும் சின்னமாக வைத்து வழிபடுகின்றனர். இதிலிருந்து அவர்கள் நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாக கிரேக்க புராணங்கள் சொல்கின்றன.
நமது இந்தியப் பாரம்பரியத்தின்படி, பாற்கடலை கடைவதற்கு தேவர்களும் அசுரர்களும் இருந்தனர். இருந்தாலும் மரணத்தை வெற்றி கொள்ளும் அமிர்தத்தை தேவர்கள் பெறுவதற்காக மஹா விஷ்ணு தோன்றி அந்த அமிர்தத்தை தேவர்களுக்கு எவ்வாறு தர வேண்டும் என்ற மாயத்தை செய்து தேவர்களுக்கு அளித்தான் மாயவன் பெருமாள். ஆனாலும், ஒரு அரக்கன் உண்டதால், அவனை கண்டறிந்து வெட்டுப் பட்டும் அவன் மரணமின்றி வாழும் ஆசிர்வாதத்தை பெற்றதால். அவர்களே ராகு-கேது என்ற சாயா கிரகமாக மாறினர். அவர்களே ஒவ்வொரு நல்லவர்கள் உள்ளே உள்ள கர்மத்தை சேகரிக்கும் பணியை செய்கின்றனர்.
கும்ப ராசியுடன் தொடர்புடைய இடங்களும் பெயர்களும்
கும்ப ராசியானது மலைகள் சூழ்ந்த பகுதிகளையும் காடுகளையும் உழைக்கும் மக்களையும் சிறிய தொழில் செய்யும் இடங்களையும் தொழிற்சாலை மற்றும் கூட்டமாக பணியாற்றும் இடங்களையும் குறிப்பிடுகின்றது. அரசு வேலை செய்பவர்களைவிட சுயதொழில் செய்யும் நபர்கள் இந்த ராசியுடன் அதிக தொடர்புடன் இருக்கின்றனர். வனத்திற்குள் உள்ள நிலங்களில் பயிர்களை பயிரிடும் மக்கள் இந்த ராசிக்குள் வருகின்றனர். இவர்கள் வேலை செய்யும் பகுதிகளில் அதிக சர்ப்பங்கள் இருக்கும்.
கும்பராசியுடன் தொடர்புடைய நிலங்கள் யாவும் சமதளமாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. காற்று ராசியாக இருப்பதால் காற்றாலைகள் அதிகம் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
சந்திரேஸ், வாசு, நாகராஜ், கபிலன், கனகவேல், மாரிதாஸ், ப்ரியன், ராகுல், வாசுதேவன், சந்திரா, சக்திராஜ், சசிரேகா, செல்வா, செல்வன், செல்வி போன்ற பெயர்களை உருவாக்கும். இன்னும் ஏராளமான பெயர்களும் உண்டு...
கும்பராசிக்கான பரிகாரங்கள்...
கும்ப ராசிக்கான சிறந்த பரிகாரம் என்ன மலையில் உள்ள கோயில்களை தரிசனம் செய்வது சிறப்பாகும்.
மலையில் உள்ள வனப்பகுதியில் பத்திரகாளியையோ துர்கையையோ வழிபாடு செய்வது சிறந்த பலன்களை தரும்.
மலையில் உள்ள சிவன், விநாயகர், முருகன், நரசிம்மர், அம்மன் யாரையும் வழிபடலாம்.