தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மங்களகரமான வாழ்விற்கு வழிகாட்டும் வீர மங்கள ஆஞ்சநேயர்

திருத்தணியில் இருந்து சுமார் 15 கி.மீ., தூரம் பயணித்தால், அழகான பசுமையான நல்லாட்டூர் என்னும் கிராமத்தை அடையலாம். அங்கு மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை செய்யப்பட்ட ``ஸ்ரீ வீர மங்கள ஆஞ்சநேயஸ்வாமி’’ கோயில் கொண்டு தன்னுடைய கடாட்சத்தை பரப்பி வருகிறார். நல்லாட்டூர் அனுமனை பற்றி தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? நானும் இந்த கட்டுரைக்காக அனுமனை காண ஆவலாக புறப்பட்டு சென்றேன்.

பசுமையான கிராமம்

காலையில் திருத்தணிக்கு சென்றவுடன் அங்கு இருப்பவரிடத்தில் நல்லாட்டூர் எங்கு உள்ளது? பேருந்து வசதி இருக்கிறதா? என்று விசாரித்தேன். குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பேருந்து வசதி இருப்பதை அறிந்து கொண்டேன். ஆகையால், திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து, ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு, நல்லாட்டூருக்கு புறப்பட ஆயத்தமானேன். திருத்தணியில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தை எட்டியவுடன் வேலஞ்சேரி என்னும் ஒரு ஊர் வருகிறது. அதன் பிறகு, மெதுவாக நகரங்கள் மறைந்து, போக்குவரத்து நெரிசல்கள் இல்லாது, கண்களுக்கு இதமான தென்னை மரங்களும், செடி கொடிகளும் படர்ந்து காணப்பட்டன. அப்படியே தாளவேடு, தும்பிகுளம், பூனிமாங்காடு ஆகிய கிராமத்தை கடக்கக் கடக்க, ரோட்டின் இருபுறத்திலும் விவசாய நிலங்கள் செல்வ செழிப்போடு காணப்பட்டன. அதுவும், கரும்பு பயிரிடப்பட்டு ஆங்காங்கு வளர்ந்திருந்தது. ``சதாசிவ கோனா’’, ``கைலாச கோனா’’, ஆகிய இரண்டு மிக பெரிய மலைகள், தூரத்தில் காணப்பட்டது. அங்கு நீர்வீழ்ச்சி இருக்கிறது. அந்த மலைகளை கடந்து சென்றால், சிவன் கோயில் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல்களை ஆட்டோ ஓட்டுநர் மூலமாக நான் தெரிந்துக் கொண்டேன். மொத்தத்தில், திருத்தணி முதல் நல்லாட்டூர் வரையிலான 15 கி.மீ., பயண தூரம், ஓர் இயற்கையின் அழகும் அமைதியும் கொஞ்சும் பயணமாக அமைந்திருந்தது.

மனம் அமைதியானது

கொசஸ்தலை ஆற்றின் அருகே வந்ததும், செந்தூர நிறம் கொண்ட மிக பெரிய உயரமான தியான நிலையில் ஆஞ்சநேயர் நம் கண்ணெதிரே தென்பட்டார். அப்போதே புரிந்து கொண்டோம், ஸ்ரீ வீர மங்கள ஆஞ்சநேயஸ்வாமி கோயிலை அடைந்துவிட்டோம் என்று..! கோயிலின் வளாகத்திற்குள்ளே சென்றதும், மூச்சுத்துளியும் கேட்கக் கூடிய அமைதி. அருகில் கொசஸ்தலை ஆற்றின் சலசலவென ஓடும் தண்ணீரின் ஓசை.. சுற்றிலையும் காற்றில் அசைந்தாடும் மரச்செடி களின் சப்தங்கள். இவை அனைத்தும் மனதிற்குள் பிரச்னை என்னும் வடிவில் புழுங்கி தேங்கி இருந்த அத்துணை அழுக்குகளையும் சுத்தம் செய்து, மனது இலகுவாகி, பாரம் குறைந்ததை நன்கு உணர முடிந்தது.அதை உணர்ந்த மகிழ்ச்சியோடு மூலவரான ``ஸ்ரீ வீர மங்கள ஆஞ்சநேயஸ்வாமியை’’ காண நேராக சந்நதி அருகில் சென்றோம். உயர்ந்த இரு புருவங்களை கொண்டும், வாயில் செந்தூரத்தை தரித்துக் கொண்டும், உடலில் தங்க கவசத்தை தகதகவென சாற்றிக் கொண்டும் காட்சியளித்தார், வீர மங்கள ஆஞ்சநேயர். நன்கு தரிசித்து வேண்டிக் கொண்ட பிறகு, வீர மங்கள ஆஞ்சநேயரை பற்றியும், கோயிலை பற்றியும் மேலும் பல தகவல்களை அறிந்துக் கொள்ள, கோயிலின் அர்ச்சகரான ரெங்காச்சாரியிடத்தில் பேச்சுக் கொடுத்தோம். அவரும் மிக ஆர்வமாக நம்மிடத்தில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியதாவது;

பிரதிஷ்டை செய்ய என்ன காரணம்

தமிழகம் - ஆந்திர எல்லையில் ஒட்டியுள்ள திருத்தணிக்கும் - நகரிக்கும் நடுவில் நல்லாட்டூர் என்னும் கிராமம் உள்ளது. நல்லாட்டூர் என்று சொன்னாலே, வீர மங்கள ஆஞ்சநேயர்தான் அனைவரின் நினைவிலும் முதலில் தோன்றும். வீர மங்கள ஆஞ்சநேயர் கோயில் அருகிலேயே கொசஸ்தலை ஆறு பாய்ந்து ஓடுகிறது. இங்கு சுவாமி, வலது கையில் அபயஹஸ்தத்துடனும், இடது கையில் கதை இல்லாது சௌகந்திகா பூவை வைத்துக் கொண்டும், வலது புறமாக அனுமனின் தலைக்கு மேலே வால் சென்றும், வால் நுனியில் சிறிய மணி ஒன்றை இருப்பதையும் காண முடியும்.வீர மங்கள ஆஞ்சநேயஸ்வாமிக்கு கிரீடம் கிடையாது. காரணம், தலையில் கொண்டைப் போல் தலைமுடியானது சுருட்டி காணப்படும். அதே போல், இடுப்பில் சிறிய வாள் ஒன்றும், காதில் மிக பெரிய குண்டலம் ஒன்றையும் தரித்துக் கொண்டிருக்கிறார். பொதுவாகவே வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமார்கள் இத்தகைய தோற்றத்தில்தான் காணப்படுவார்கள். இவரும் அப்படியே இருக்கிறார்.விஜய நகர சாம்ராஜ்ஜிய அரசனான கிருஷ்ணதேவ ராயருக்கு ``குஹு’’ என்னும் ஒரு தோஷம் ஏற்படுகிறது. அதனை போக்க அன்றைய விஜய நகர சாம்ராஜ்ஜியத்தில் கிருஷ்ணதேவ ராயருக்கு ராஜ குருவாக இருந்த ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், சில தோஷபரிகாரங்களை தெரிவிக்கிறார். அதில், ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்து வழிபட ஆலோசனை வழங்கியிருக்கிறார். அதன்படி, கிருஷ்ணதேவராயர் பூஜைகளை மேற்கொண்டு, தோஷ நிவர்த்தியாகி, ஆட்சியை மீண்டும் கைப்பற்றி, ராஜாவாகியிருக்கிறார்.

சௌகந்திகா என்றால் என்ன?

ஒரே ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்ததற்கே இத்தகைய பலன் கிடைக்கிறது என்றால், நாடு முழுவதிலும் பிரதிஷ்டை செய்தால், மக்கள் அனைவரும் துன்பமின்றி வாழ்வார்கள் அல்லவா! என்ற உயரிய நோக்கத்தோடு கிருஷ்ணதேவ ராயர், வியாசராஜரிடத்தில் சொன்னதாகவும், வியாசராஜர் பல அனுமன்களை பிரதிஷ்டை செய்ததாகவும், அப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட அனுமன்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனுமனின் கையில் சௌகந்திகா புஷ்பமும், வாலில் மணியுடனும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக, செவி வழிச் செய்தியாக கூறப்படுகிறது.

``சௌகந்திகா’’ என்றால் ``மங்களகரம்’’ என்று பொருள். ஆதலால், ``ஸ்ரீ வீர மங்கள ஆஞ்சநேயர்’’ என்று பெயர். முற்காலத்தில் இக்கோயில் மிகவும் சிறியதாக மட்டுமே காணப்பட்டது. அதாவது கொசஸ்தலை ஆற்றின் அருகில் சிறிய சந்நதியில் வீர மங்கள அனுமன் காட்சியளித்தார். காலப் போக்கில், இவ்வூரில் வசித்து வந்த சக்ரவர்த்தி என்பவர், இந்த வீர மங்கள ஆஞ்சநேயரை தரிசனம்

செய்துவிட்டு சென்றிருக்கிறார்.

கனவில் கோயில் கட்டினார்

மிக பெரிய அளவில் கோயில் ஒன்றை கட்டுவது போலவும், அதில் வீர மங்கள ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்வதுபோலவும், அன்று இரவில் கனவு கண்டுயிருக்கிறார், சக்ரவர்த்தி. மறுநாள் விடிந்ததும், வீர மங்கள ஆஞ்சநேயர் கோயிலை நாம் கனவு கண்டதை போல் ஏன் பெரியதாக கோயில் கட்டக் கூடாது? என்று அவருக்குள் ஒரே யோசனை. அதுபோலவே... சிறுகச் சிறுக கோயிலின் திருப்பணிகளை மேற்கொண்டு, அவர் கனவில் தோன்றியபடியே கோயிலை கட்டிமுடித்து, அனுமனை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அதுதான் தற்போதுள்ள கோயிலின் தோற்றம். அந்த சமயத்தில், ராமர் - சீதா - லட்சுமணர், விநாயகர், விஷ்ணு துர்கை, நவக்கிரக சந்நதி ஆகிய சந்நதிகளையும் பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று முதல், சக்ரவர்த்திதான் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று நடத்தி வருகிறார்.2023 - ஆம் ஆண்டில், இக்கோயிலில் சக்கரத்தாழ்வார் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோயில் முழுவதிலும் வண்ணம்தீட்டப்பட்டு, மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். அருகில் இருக்கும் கிராம மக்கள் அனைவரும் வந்து விடுவார்கள். மேலும், கார், வேன் போன்ற வாகனங்களில் வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

ஆற்றங்கரை ஓரத்தில் அனுமன், ஏன்?

பெரும்பாலான வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமார்கள், ஆறு, குளம் போன்றவற்றை ஒட்டியே அமைந்துள்ளது. காரணம், ஆறுகள், குளங்கள் போன்றவற்றின் அருகில் சந்நிதானம் இருப்பது மிகவும் விசேஷம். இன்னொரு காரணம், ஆற்றங்கரை ஒட்டி ஸ்வாமிகளின் சந்நிதானம் அமைந்தால், அபிஷேகம் மற்றும் பூஜைகளை மேற்கொள்வதில் எளிமையாக இருக்கும் என்பதாலும், வியாசராஜர் ஆற்றங்கரை அருகிலேயே அனுமனை பிரதிஷ்டை செய்திருக்கிறார். தமிழக - ஆந்திர மாநிலத்தில் இருக்கும் சினிமா பிரபலங்களும், அரசியல் கட்சியினரும் வீர மங்கள ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கிறார்கள். அவர்கள் நினைத்த காரியங்கள் நடைபெறுவதாகவும் கூறுகிறார்கள். அதே போல், இங்கு வருகின்ற பக்தர்களுக்கு வீர மங்கள அனுமன், வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பதாகவும், தாமாகவே முன்வந்து பக்தர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.வீர மங்கள ஆஞ்சநேயருக்கு எதுவும் செய்யவேண்டாம். மனமுருகி பிரார்த்தனை செய்துக் கொண்டு சென்றாலே போதும், வீர மங்கள ஆஞ்சநேயர், மங்களகரமான வாழ்விற்கு வழிகாட்டுவார்.

திருமலைக்கு பாதை யாத்திரை

நல்லாட்டூர் வீர மங்கள ஆஞ்சநேயருக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால், அருகிலேயே கொசஸ்தலை ஆறு ஓடுகிறது. இந்த ஆறு, ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அணை வழியாக அம்மாபள்ளி என்னும் இடத்தில் திறந்துவிடப்பட்டு, கதேரப்பள்ளி, கொல்லகுண்டா வழியாக தமிழக எல்லைப் பகுதிக்குள் வந்து, பூண்டி ஏரியில் கலக்கிறது. ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கொசஸ்தலை ஆறு நிரம்பி ஓடும். தை மாதம் பொங்கல் வரை தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த சமயத்தில், குடும்பத்தாரோடு கார் - வேன்களில் வந்திருந்து கொசஸ்தலை ஆற்றில் குளித்துவிட்டு, வீர மங்கள ஆஞ்சநேயரை தரிசித்துவிட்டு செல்வதை, பல பக்தர்களும் வழக்கமாக வைத்துள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, திருத்தணி ஆகிய இடத்தில் இருந்து புரட்டாசி மாதத்தில், திருப்பதிக்கு நடைபயணம் மேற்கொள்பவர்கள், இரவு நேரம் வந்துவிட்டால், இக்கோயிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில், ஆற்றில் தண்ணீர் இருந்தால் அங்கு குளிப்பார்கள், இல்லையெனில் கோயிலேயே குளித்துவிட்டு மீண்டும் தங்களின் நடைப் பயணத்தை மேற்கொள்வார்கள். என்று தன் பேச்சை நிறைவு செய்தார்.

பிற கோயிகள்

நல்லாட்டூரில் இருந்து சில கி.மீ., தூரத்திலேயே பல கோயில்கள் இருக்கின்றன.

* குறிப்பாக, நாகலாபுரம் என்னும் இடத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ``ஸ்ரீ வேத நாராயண சுவாமி’’ கோயில் உள்ளது. இங்கு சுவாமி மச்சாவதார வடிவில் காணப்படுகிறார்.

* மேலும், புத்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில், ``நாராயணவனம்’’ என்னும் இடத்தில், ``ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி’’ கோயில் உள்ளது. இதுவும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்டதுதான்.

* நகரி செல்லும் வழியில், ``புக்கா’’ என்னும் இடத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் ``சிவா - விஷ்ணு’’ ஆலயம் இருக்கிறது. இவ்வாலயம் புராதன மிகுந்த கோயிலாகும்.

* அதே போல், சிறிது தூரத்தில், ``வடமலைப்பேட்டை’’ (Vadamalapet) என்னும் இடத்தில் இருக்கும் ``அப்ளை குண்டா’’ (Apply Gunda) ``ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரா’’ கோயில் ஆகியவை நல்லாட்டூர் வீர மங்கள ஆஞ்சநேயர் கோயிலிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கோயில்களாகும்.

ஸ்ரீ அதே போல், திருத்தணிக்கு மிக அருகில் இருக்கும் மத்தூர் (Maddur) என்னும் இடத்தில், ``அருள்மிகு மகிஷாசுர மர்த்தினி’’ கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் பழமையானது. மூன்றே மூன்று கோயில்தான் மிகவும் பழமைவாய்ந்தது. ஒன்று திருத்தணி முருகன் கோயில், இன்னொன்று மகிஷாசுர மர்த்தினி கோயில், மூன்றாவது இந்த நல்லாட்டூர் வீர மங்கள ஆஞ்சநேயர் கோயில். கார் - வேன்களில் வரும் பக்தர்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

பிரசாதம்

வடைமாலை இங்கு பிரதானம். அதுபோக தயிர் சாதம், சனிக்கிழமை, அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் புளியோதரை.

விழாக்கள்

வருடாவருடம் அனுமன் ஜெயந்தி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஹோமங்களும், லட்சார்ச்சனையும் நடைபெறும். அதே போல், மாதம் தோறும் வருகின்ற அமாவாசையில், காலை 10.00 மணிக்கு வீர மங்கள ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்று, வடைமாலை சாற்றப்

படும். இது தவிர, சனிக் கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும், இங்கு ராமர் சந்நதி இருப்பதால், ராம நவமி அன்று ராமருக்கு அபிஷேகமும் கல்யாண உற்சவமும் நடைபெறும். கோயில் தொடர்புக்கு: ரங்காச்சாரியார் - 6303852166.

ரா.ரெங்கராஜன்

Related News