அபயக்கரமும் கருனை கடலும்
அங்கே ஸ்வாமிநாதனிடம், “எனக்கு ஒரே பையன். வயசு இருவத்தாறு ஆகிறது. பேரு ஸ்ரீ ராம். நாங்கல்லாம் தஞ்சாவூர் ஜில்லா. இப்போ மெட்ராஸ். நான் மத்திய அரசாங்கத்தில் வேலை பண்றேன். பையன் கனடாவில் தனியார் கம்பெனிலே உயர்ந்த பதவியிலும் நல்ல சம்பளத்திலும் இருக்கான். அவன் நாளக்கி மெட்ராஸ் வரான். அவனுக்கு மூணு வருஷமா கல்யாணத்துக்குப் பெண் பாத்துண்டிருக்கேன். ஒண்ணுமே அமையலே. நாங்கல்லாம் காஞ்சி காமகோடி மடத்து பக்தாள்.
மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள் பெரியவாளை தரிசனம் பண்ணி, பையனுக்குக் கல்யாணம் தட்டிண்டே போற மனக் குறையை சொன்னேன். அவர்தான் `‘திருமலைலே ஸ்ரீ நிவாஸனை பிரார்த்திச்சுண்டு ஒரு கல்யாண உற்சவம் பண்ணிவை.
உடனே ஆயிடும்னார்’’. அது நடக்க இன்னிக்குத்தான் பிராப்தம் வந்தது. அந்த பெரியவா அனுகிரகம் இருந்தா உங்க பொண்ணேகூட எங்க மாட்டுப் பெண்ணா வந்துடலாம்” என்று சொல்லி முடித்தார், மஹாதேவன்.அந்த தருணத்திலேயே இருவரும் ஜாதகப் பரிவர்த்தனை செய்து கொண்டு, ஒரு பெரிய ஜோஸ்யரிடம் கொண்டு போய் ஜாதகங்களைக் காண்பித்தனர். ஜாதகத்தை பார்த்த ஜோஸ்யர் பொருத்தங்களும் தீர்க்கமாக அமைந்துள்ளதாகக் கூறினார்.
இரு குடும்பத்தாருக்கும் பரம சந்தோஷம். அன்றிரவே அனைவரும் சென்னை திரும்பினர். கனடாவிலிருந்து ஸ்ரீ ராம் வந்து சேர்ந்தான். அவனுக்கு லட்சுமியை பிடித்து விட்டது. லட்சுமிக்கும் அவனை ரொம்பப் பிடித்துவிட்டது.
இனி...
இருபது நாட்களுக்குள் ஒரு சுபமுகூர்த்தம் பார்த்து சென்னையில் ஒரு பெரிய கல்யாண மண்டபத்தை ஏற்பாடு செய்துவிட்டார், ஸ்வாமிநாதன். இவற்றையெல்லாம் ஏற்பாடு செய்து முடித்துவிட்டு, இரு வீட்டாரும் ஒரு நாள் மாலை காஞ்சி மகானை தரிசிக்கப் புறப்பட்டனர். அன்றும் தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். இரவு ஒன்பது மணி சுமாருக்குத்தான் இரு குடும்பமும் மகாஸ்வாமிகளை பார்க்க முடிந்தது. பெரியவா, தன் புருவங்களுக்கு மேலே இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு அவர்களைக் கூர்ந்து நோக்கினார்.
ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தன இரு குடும்பமும். ஸ்வாமிநாதனுக்குப் பின்னால் நின்றிருந்தார், மஹாதேவன். முன்பு போலவே அபரிமிதமாக வாங்கிச் சென்றிருந்த கல்கண்டு, திராட்சை, முந்திரி இத்யாதிகளை மூங்கில் தட்டுகளில் வைத்து சமர்ப்பித்துவிட்டு, கைகட்டி நின்றார் ஸ்வாமி நாதன்.
பெரியவா முகத்தில் ஒரு சந்தோஷம். ஸ்வாமி நாதனையே சற்று நேரம் பார்த்துக் கொண்டு இருந்தவர், திடீரென சற்று உரத்த குரலில், “ஏண்டாப்பா ஸ்வாமிநாதா, இந்த ஸந்யாஸிக்காக ஒம்பதாவது தடவயா ஸ்ரீ நிவாஸனுக்குத் திருக்கல்யாணத்த நடத்தி வெச்ச உடனேயே காரியம் பூர்த்தி ஆயிடுத்து. பேஷ்… பேஷ்! உன் பெண் லட்சுமி குடுத்து வெச்சவதான்!” என்று சொல்லிவிட்டு, சிரித்தார். ஸ்வாமிகளே தொடர்ந்தார்;
“ஸ்வாமி நாதா… அன்னிக்கு நீ ரொம்பவும் வருத்தப்பட்ட. உன் பொண்ணுக்கு பூர்வ ஜன்ம விவாஹம் நடைபெறுவதைத் தடுக்கக்கூடிய தோஷம் இருக்குன்னு மனசுலே பட்டது. அந்த தோஷ நிவர்த்திக்காகத்தான் அகிலாண்டேஸ்வரியின் தாடங்க தரிசனத்தையும், ஸ்ரீ நிவாஸ திருக்கல்யாணத்தயும் பண்ணச் சொன்னேன்.
இப்ப புரியறதா நோக்கு?” சொல்லிவிட்டு வாய்விட்டுச் சிரித்தார் ஸ்வாமிகள். “உன் சம்பந்தியா வரப்போறது யாரு? என்று கேட்டார். ஸ்வாமிநாதனுக்குப் பின்னால் நின்றிருந்த மஹாதேவன் முன்னால் வந்து ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்து, “நான்தான் பெரியவா அவருக்கு சம்பந்தியா வரப் போறவன்… எல்லாம் உங்க அனுகிரகம்” என்றார். உடனே பெரியவா மூக்கின்மேல் விரலை வைத்து, “யாரு? நன்னிலம் மஹாதேவனா? நீ மூணு மாசத்துக்கு முன்னாடி, கனடாவுல வேலை பாக்கற உன் பையனுக்கு ஒரு பெண் ஜாதகமும் சரியா பொருந்த மாட்டேங்கறதுனு குறைப்பட்டுண்டு வந்து சொன்னே.
ஒன்னையும் திருமலை ஸ்ரீ நிவாஸனுக்குத் திருக்கல்யாண உற்சவம் பண்ண சொன்னதா ஞாபகம். அது சரி… நீ எப்ப திருக்கல்யாண உற்சவம் பண்ணினே?” என்று கேட்டார். உடனே மஹாதேவன், “நானும் அதே நாள்லதான் திருக்கல்யாணம் பண்ணினோம் பெரியவா. திருமலைலேயே பேசி முடிவு பண்ணிட்டோம். எல்லாம் உங்க ஆசீர்வாதம்!” என்றார்.“க்ஷேமமா இருங்கோ” என ஒரு தாயின் கருணையோடு மனதார ஆசீர்வதித்தார் பெரியவா...
ரமணி அண்ணா