மனனம் எனும் மகாசக்தி
நமது ஞான மரபில் சிரவணம், மனனம், நிதித்யாசனம் என்று மூன்று விஷயங்களை சொல்வார்கள். இந்த மூன்றும் உங்களின் ஆன்மிக வாழ்க்கையில் முக்கியமானவையாகும். அதில் முதலாவதாக சிரவணம் என்பது முதலில் காதால் குருவின் சொற்களை கேட்டல் என்று இங்கே எடுத்துக் கொள்வோம். அல்லது வாழ்வினைக் குறித்த தேடலில் உள்ளோர் அது குறித்த பழமையான நூல்களையும் குருமார்களின் சொற்களையும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் தீவிரமாக இருத்தல். இதற்கடுத்து வரும் விஷயம்தான் முக்கியமானது. அதாவது மனனம்.
மனனம் என்பதை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விஷயத்தை, சொற்களை, பதிகங்களை, பாசுரங்களை, மந்திரங்களை திரும்பத் திரும்ப மனதில் தேக்கி வைத்துக் கொள்ளுதல் என்றும் நாம் புரிந்து கொண்டிருப்போம். மீண்டும் மீண்டும் மனதை பழக்கி அதைக் கிளிப் பிள்ளைபோல் திரும்ப சொல்வதே என்றும் சொல்வதுண்டு. ஆனால், மனனம் என்பது மனதை, புத்தியை கூர்மைப்படுத்துவது.
ஒரு மந்திரத்தை ஒருமுறைக்கு மேல் பலநூறு முறை சொல்லும்போது மந்திரம் தன்னளவில் தன்னுள் பொதிக்கப்பட்டிருக்கும் சக்தியை வெடிக்கச் செய்து வெளிப்படுத்துகின்றது. இங்கு வெடித்தல் என்பதை மந்திர மயமாக மனதை மாற்றுதல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல மனனத்திற்குரிய விஷயங்கள் பெரும் ஞானியரால் அளிக்கப்பட்டிருப்பதால் அந்த மந்திரத்தின் இலக்கை நீங்கள் அறிந்திருக்கிறீர்களோ இல்லையோ அது தன் வேலையைச் செய்தே தீரும். திருப்புகழை மனனமாகச் சொல்பவருக்கு திருப்புகழின் இலக்காக இருக்கும் முருகப் பெருமானின் அந்த பிரம்ம தத்துவம் நாளடைவில் மனதில் பிரசன்னமாகத் துவங்கும். அருணகிரிநாதரின் வாக்கு மனதை துளைப்பதோடு மட்டுமல்லாமல் துடைத்து எறிந்து அப்பாலுள்ள ஞான நெருப்பான முருகப்பெருமானிடமே கொண்டுபோய் சேர்க்கும். இது எல்லா ஞானியர், நாயன்மார்கள், ஆழ்வார்களின் பாசுரங்களுக்கும் பொருந்தும். அதனால்தான் ஆதிசங்கரர் சிரவணம் எனும் யோகத்திற்கு அடுத்தபடியாக மனனம் என்பதை வைத்தார்.
குருவின் திருவாக்கிலிருந்து வரும் உபதேச மொழிகள் என்றுமே தோலால் மூடப்பட்ட செவிப்பறையில் மோதி திரும்பி விடுவதில்லை. அது என்றுமே செவியைத் தாண்டி இருதயத்தை நோக்கிச் செல்லும் நேர் அம்பு. அதனாலேயே குருவின் வாக்கை நமது மரபு மகாவாக்கியமான உயர்ந்த நிலையில் வைத்து கைகூப்புகின்றது. அந்த மகாவாக்கியமானது ஞானத்தின் அருகே ஜீவனை நகர்த்துகிறது. எனவே, மனனம் என்பது மூளையின் திசுக்களில் சென்று தேங்குவதல்ல. மந்திரம் என்பதன் பொருளே அது மனனம் செய்பவரை காப்பாற்றுகின்றது என்பதேயாகும். எனவே, நம் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு மனனம் செய்ய நிறைய மந்திரங்களை, பதிகங்களை, பாசுரங்களை கொடுப்போம். அது நின்று காக்கும்.
