ரகசியங்களுக்கெல்லாம் ரகசியமான அம்பிகை
அகுலா - ஸமயாந்தஸ்தா - ஸமயாசார தத்பரா
அந்தர்முக அதாவது உள்முகமான பூஜையில் என்ன பத்ததி? அதாவது என்ன வழிமுறை என்று பார்ப்போமா! மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் வரையிலும் ஒவ்வொரு சக்கரத்திலும் அம்பிகைக்கு வெளிப்புறமாக எப்படி பூஜை செய்கிறோமோ, அதுபோல உள்ளே குண்டலீணியாக இருக்கக் கூடிய அம்பாளை, மூலாதாரத்தில் அம்பாளுக்குரிய உபசாரம். ஸ்வாதிஷ்டானத்தில், மணிப்பூரகத்தில்…. என்று வந்து, அங்கு தூப தீப நிவேதனங்களெல்லாம் செய்து, அப்படியே விசுக்தி, ஆக்ஞா சஹஸ்ராரத்திற்கு கொண்டுபோய் சிவசக்தி சாமரஸ்யத்தை, சிவசக்தி ஐக்கியத்தை தியானம் பண்ணி, இந்த உபாசகன் அந்த அந்தர்முக பூஜையை செய்ய வேண்டும்.
இந்த சாதகன் வெளியில் இருக்கக் கூடிய ஸ்ரீ சக்ரத்தை பூஜை செய்தான் அல்லவா? இவன் அப்படியே தன் சரீரத்தில் அந்தர் ஆத்மாவாக தன் சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், அநாகதம், மணிபூரகம், விசுக்தி, விசுக்திக்கும் ஆக்ஞாவிற்கும் நடுவே இருக்கின்ற இந்திர யோனி என்கிற இடம். ஆக்ஞாவிற்கும் சஹஸ்ராரத்திற்கும் இடையே இருக்கின்ற பிரம்மரந்திரப் பகுதி. அந்த பிரம்ம ரந்திரத்திற்கும் மேலே இருக்கக் கூடிய சஹஸ்ராரம். இந்த ஒன்பது ஸ்தானங்கள் அந்தர்முக பூஜை செய்யும்போது நவாவரணமாக உள்ளன. வெளியே மேருவில் நவாவரணம் போன்று, உள்ளுக்குள் நவாவரணமாக இருப்பதை பூஜிக்கிறான்.
அந்தர்முக நவாரவரண பூஜையினால் யார் அறிந்து கொள்ளப்படுகிறாளோ அவளுக்கே சமயாசார தத்பரா என்று பெயர்.
மீண்டும் நாம் இந்த மூன்று நாமங்களை பார்ப்போமா?
அகுலா - ஸமயாந்தஸ்தா - ஸமயாசார தத்பரா இந்த மூன்று நாமங்களும் நமக்கு எதைக் காண்பித்து கொடுக்கிறது?
அந்தர்முகமாக, நமக்கு ஆத்ம சொரூபமாக இருக்கக் கூடிய அம்பாளை உபாசிக்கக் கூடிய, அந்தர் முக பூஜையை காண்பித்துக் கொடுக்கிறது. அந்த அந்தர்முக பூஜைக்கு சமயாசாரம் என்று பெயர். அந்த சமயாசாரம் அல்லது சமய மார்க்கம் மூலமாக இந்த உபாசகன் அம்பாளை அந்தர் முக பூஜை செய்கிறான். அதுதான் இந்த மூன்று நாமங்களினுடைய விஷயம்.இவ்வளவு காலமாக பஹிர்முகமாக அதாவது வெளிப்புறமாக பார்த்த அம்பாள் அப்படியே அந்தர்முகமாக உள்முகமாக திருப்புகிறாள். குலாசாரத்தில் எல்லாமே வெளிப்படையாக இருக்கும். ஸ்தூலமாக இருக்கும். மஹா மேரு, ஸ்ரீ சக்ரம், பூஜையை பூஜை திரவியங்களை வெளிப்படையாக பார்க்க முடியும். சமயாசார முறையில் அந்தர்முகமாக சூட்சுமமாக இருக்கும். நமக்குள்ளேயே நவாவரணம், நமக்குள்ளேயே ஸ்ரீ சக்ரம். நமக்குள்ளேயே அம்பாளுடைய ரூபம். நமக்குள்ளேயே மஹா மேரு. நமக்குள்ளேயே பூஜா திரவியங்கள்.
இங்கு புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். பூஜை பண்ணக் கூடியவனும் ஆத்மாதான். அவன் பண்ணக் கூடிய பூஜையும் ஆத்மாதான். அந்த பூஜையினால் அறிந்து கொள்ளக் கூடிய, மகிழக்கூடிய அம்பாளும் ஆத்மாதான். ஆத்மாவிலேயே பூஜை நடக்கிறது. ஆத்மாவே பூஜையாகிறது. ஆத்மாதான் பூஜையை ஏற்றுக்கொள்ள கூடிய அம்பாளாக இருக்கிறது. இதுதான் சமயாசாரம் என்று சொல்லக் கூடிய அந்தர்முக உபாசனை. இந்த அந்தர்முக உபாசனையைத்தான் இந்த மூன்று நாமாக்களும் நமக்கு காண்பித்துக் கொடுக்கிறது.
இந்த மூன்று நாமங்களுக்கு மூன்று கோயில்கள் சொல்ல வேண்டும். ஏன் ஒரு கோயில் சொன்னால் போதாதா? மூன்று கோயில்கள் சொல்வதற்கு காரணங்கள் உண்டு?
ஸ்ரீ சக்ரம் என்பது அந்தர்முகமாக ரகசியமாக சூட்சுமமாக இருக்கிறது என்று பார்த்தோமா? எந்தெந்த கோயில்களிலெல்லாம் அம்பாள் சூட்சுமமாக அந்தர்முகமாக இருக்கிறாளோ… அந்த மூன்று கோயில்களும் சூட்சுமமான இணைவில் உள்ளன.
ஒரு கோயில் கேரளாவில் உள்ளன. இன்னொரு கோயிலானது கேரளாவிற்கும் கர்நாடகாவிற்கும் பொதுவான ஒரு இடத்தில் இருக்கிறது. இன்னொரு கோயில் கர்நாடகத்தில் இருக்கிறது.
கேரளாவில் இருக்கக்கூடிய சோட்டாணிக்கரை பகவதி கோயில். அதற்கடுத்து கொல்லூர் மூகாம்பிகை கோயில். அதற்கடுத்து சிருங்கேரி சாரதாம்பாள் கோயில். ஏன் இந்த மூன்று கோயில்களை சொல்கிறோம் எனில், இந்த மூன்று கோயில்களிலேயும் அம்பாள் சூட்சும சொரூபியாக இருக்கிறாள்.
சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் ஆதிசங்கரர் கையினால் வரையப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ சக்ரம் இருக்கிறது. ஆனால், அந்த ஸ்ரீ சக்கரத்தை வெளிப்படையாக பார்க்க முடியாது. அம்பாளுடைய மூல ஸ்தானத்தில் ரகசியமாக இருக்கிறது.
அதற்கடுத்து கொல்லூர் மூகாம்பிகையில் அம்பாளுக்கு கீழே சொர்ண ரேகையுள்ள ஒரு லிங்கம் இருக்கும். ஆனால், உண்மையில் அந்த லிங்கம் எதுவெனில், அந்த மூகாம்பிகை கோயிலுக்கு அடியில் பூமிக்கு கீழே பெரிய ஸ்ரீ சக்ரம் இருக்கிறது. அந்த ஸ்ரீ சக்ரத்தினுடைய பிந்து ஸ்தானம் மட்டும் லிங்கமாக வெளிப்பட்டிருக்கிறது. பூமிக்கு கீழே பெரிய விஸ்தாரமான ஸ்ரீ சக்ரம் இருக்கிறது. அந்த விஸ்தாரமான ஸ்ரீசக்ரத்தின் பிந்து ஸ்தானம்தான் மூகாம்பிகைக்கு கீழே இருக்கக் கூடிய அந்த லிங்க சொரூபம். மூகாம்பிகை கோயிலிலேயும் அந்த ஸ்ரீ சக்ரம் என்று சொல்லக் கூடியது மறைமுகமாக இருக்கிறது.
மேலே சொன்ன இரண்டு கோயில்களில் உள்ள ஸ்ரீ சக்ரத்தை சங்கரரே பிரதிஷ்டை செய்கிறார்.
இந்த இரண்டு கோயில்களுக்கும் முற்பட்ட கோயிலில் அம்பாள் சூட்சுமமாக இருக்கக் கூடிய கோயில் இருக்கிறது. அதுதான் கேரளாவில் இருக்கக்கூடிய சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயிலாகும். இங்கு அம்பாள் பூரணமாக, மகா ஷோடசியாக, ராஜராஜேஸ்வரியாக சூட்சும சொரூபியாக அம்பாள் இருக்கிறாள். அம்பாள் இங்கு சுயம்புவாக இருப்பதால், அம்பாளின் உருவமே வெளிப்படையாக தெரியாது. உருவமே ரொம்ப ரகசியமான உருவம். அந்த உருவத்திற்கு கீழே, ரகசியமான ஸ்ரீ சக்ரம் இருக்கிறது. ரகசியமான சக்ரத்திற்கு மேலே ஒரு சுயம்பு மூர்த்தம் இருக்கிறது. அந்த சுயம்பு மூர்த்தம் மிகமிக ரகசியமான சூட்சுமமான மூர்த்தம். இன்று கூட நாம் மூர்த்தத்தின் மேலே போட்டிருக்கக் கூடிய கவசத்தைத்தான் தரிசனம் செய்ய முடியும். நிர்மால்ய தரிசனத்தின்போது மட்டுமே நம்மால் சூட்சுமமான திருமேனியை பார்க்க முடியும்.
இந்த கோயிலும் சூட்சுமமாக இருப்பதாலும், இந்த மூன்று ஆலயங்களிலும் சூட்சுமமாக அம்பாள் இருப்பதால், இந்த மூன்று கோயில்களிலும் மகா காளி, மகாலட்சுமி, மகா சரஸ்வதி ஐக்கிய சொரூபிணியாக, லலிதா மகாதிரிபுரசுந்தரியாக, சண்டிகா பரமேஸ்வரியாக, ராஜராஜேஸ்வரியாக இந்த மூன்று கோயில்களிலேயும் இருக்கிறாள்.
சிருங்கேரி சாரதையும் அப்படித்தான். கொல்லூர் மூகாம்பிகையும் அப்படித்தான். சோட்டாணிக்கரை ராஜராஜேஸ்வரி பகவதியும் அப்படித்தான்.
சோட்டாணிக்கரையில் சூட்சுமமான திருமேனி ரகசியமாக இருக்கிறது. சூட்சுமமான ஸ்ரீ சக்ரமாக உள்ளது.
மூகாம்பிகை ஸ்ரீ சக்கரம் சூட்சுமமாகவும் ரகசியமாகவும் இருக்கிறது. பிந்து ஸ்தானம் மட்டும் பார்க்க முடியும்.
சிருங்கேரி சாரதையில் மொத்த ஸ்ரீ சக்ரமும் ரகசியமாக இருக்கிறது. அம்பாள் உருவத்தை மட்டுமே பார்க்க முடியும். இப்படி மூன்று ஆலயங்களையும் மூன்று நாமங்களுக்குச் சொல்லலாம்.
(சுழலும்...)