தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இசைக்காகவே ஊத்துக்காடு

பகுதி 3

Advertisement

அந்த உணவுச் சாலையை ஏற்பாடு செய்தவர், தஞ்சை மன்னர் சாம்பாஜி. பலகாலமாகத் தீராத வயிற்று வலியால், துயரப்பட்டு வருகிறார். என்னதான் ராஜ வைத்தியம் செய்தும் வயிற்றுவலி தீரவில்லை.அவர்கள் சொன்ன தகவல்களின் சாரம் இதுதான். அவர்கள் எல்லாம் பேசிக்கொண்டே, உணவையும் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஊத்துக்காடோ, அதன் பிறகு உணவில் கையே வைக்க வில்லை. அனைவரும் எழுந்த போது, அவரும் எழுந்து கை-கால்களைக் கழுவிக்கொண்டு. வெளியில் வந்தார்.

வீதிக்கு வந்தவர், தஞ்சாவூரை நோக்கி நடக்கத் தொடங்கினார்; ‘‘இந்த ஊட்டுப்புரைக்கு யார் வருகிறார்கள் - யார் போகிறார்கள் என்றே தெரியாது. வரும் அவ்வளவு பேர்களுக்கும் வயிற்றுப்பசி தீர,உணவளிக்கும் மன்னருக்கு வயிற்று வலியா? இங்கு நாம் உணவு உண்டதற்கு நன்றிக்கடனாக, ஏதாவது செய்ய வேண்டும்’’ என்று எண்ணியபடியே நடந்தார்.தஞ்சாவூரை அடைந்த ஊத்துக்காடு. அரண்மனை வாசலை நெருங்கிய நேரம்! ஒரு பல்லக்கு வந்தது. ‘‘ஏய்! மந்திரவாதி! மந்திரவாதி!’’ என்று கூவியபடியே மக்கள் சிதறி ஓடினார்கள்.

கூச்சலால் கவனம் சிதறிய ஊத்துக்காடு, வந்து கொண்டிருந்த பல்லக்கைப் பார்த்தார்; சிதறி ஓடியவர்களில் ஒருவரைப் பிடித்து விசாரித்தார். அகப்பட்டவர், அச்சத்தில் இருந்த போதும், சில

தகவல்களைக் கொட்டி விட்டு ஓடினார்.அவர் கொட்டியவை: பல்லக்கில் வரக் கூடியவர் மந்திரவாதி. சிறுதெய்வ உபாசனை மூலம், சில சித்துகள் கைவரப்பெற்றவர்; அதன்மூலம் மன்னரிடம் தனி மதிப்பும் மரியாதையும் பெற்றவர்.

அந்த மந்திரவாதி நினைத்திருந்தால், மன்னரின் வயிற்றுவலியை என்றோ போக்கியிருக்கலாம். ஏதோ செய்வதைப்போல நடித்து, ராஜமரியாதை பெறுகிறாரே தவிர, அரசரின் நோய் தீர்வதில் அக்கறை இல்லை அவருக்கு.மந்திரவாதி பயணம் செய்யும் பல்லக்கில் முன் பக்கம் மட்டும் தான், ஆட்கள் தூக்கி வருவார்கள். பின் பக்கம் ஆட்களே இல்லாமல், பல்லக்கு தூக்கப்பட்டு வரும். அதைப் பார்த்தே மக்கள் பயப்படுவார்கள்.

ஊத்துக்காடிடம் அகப்பட்டவர் இந்தத் தகவல்களைச் சொல்லி விட்டு, ஊத்துக்காடு கைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, ‘‘பல்லக்கு பக்கத்துல வந்துடுத்து! பக்கத்துல வந்துடுத்து!’’ என்று கத்தியபடியே ஓடிவிட்டார்.மந்திரவாதியைப் பற்றிய தகவல்களைக் கேட்ட ஊத்துக்காடு வருந்தினார்; ‘‘தெய்வமே! இது என்ன சோதனை? சக்தி மிக்க மந்திரங்களைக் கொண்டு பூஜை செய்து, சித்துகளான சக்தியைப் பெற்று, இப்படியா கெட்டவழியில் உபயோகப்பட வேண்டும்?’’ என்று அவர் நினைத்துக் கொண்டிருந்த போதே பல்லக்கு நெருங்கி விட்டது.

ஊத்துக்காடு பல்லக்கைப் பார்த்தார். அடுத்தவர் கண்களுக்குத் தெரியாதது, அவர் கண்களுக்குத் தெரிந்தது. பல்லக்கின் பின் பகுதியைத் தீயசக்திகள் சில, தூக்கி வருவதை ஊத்துக்காடு பார்த்தார்; உள்ளத்தில் கோபம் கொப்பளித்தது; ஒரே ஒரு விநாடிதான், ஊத்துக்காடு அத்தேவதைகளை உற்றுப் பார்த்தார்.உத்தமரான ஊத்துக்காடு பார்த்த பார்வையின் சக்தியைத் தாங்காமல், அத்தேவதைகள் அப்படியே விலகின. அதே விநாடியில் பல்லக்கு கீழே விழுந்தது. நிலைகுலைந்த மந்திர வாதி, மக்கள் மத்தியில் தன் கௌரவம் போனதைப் பார்க்க விரும்ப வில்லை; விழுந்த நிலையிலேயே சற்று நிமிர்ந்து பார்த்தார்.

ஊத்துக்காடு நிற்பது மந்திரவாதிக்குத் தெரிந்தது. பார்த்த பார்வையிலேயே ஊத்துக்காடின் பெருமையைப் புரிந்து கொண்டார் மந்திரவாதி; ‘பளிச்’சென்று எழுந்து ஊத்துக்காடு திருவடிகளில் விழுந்தார்; ‘விருட்’டென்று எழுந்து, வேகமாகப் போய் விட்டார்; திரும்பிக்கூடப் பார்க்க வில்லை.நடந்தவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரண்மனைக் காவலர் சிலர் ஓடிவந்து, ஊத்துக்காடைப் பணிந்து வணங்கி, மரியாதையுடன் மன்னரிடம் அழைத்துப் போனார்கள்.

வந்தவரை வரவேற்ற அரசர், மனம் விட்டுப்பேசினார்; ஊத்துக்காடும் அவ்வப்போது பேசினார்;ஆனால் மறந்துபோய்க் கூட, அவர் தன்னைப்பற்றி முழுமையாகக் கூற வில்லை. மந்திர வாதி தன்னை ஏமாற்றி, செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருந் தாரே தவிர, மற்றபடி ஏதும் செய்யவில்லை என்பது, மன்னருக்குப் புரிந்தது.‘‘மன்னா! அடியேனும் ஏதோ, கொஞ்சம் பாடுவேன். அந்தப் பாடலை, மன்னர் கேட்டால், நன்மை உண்டாகும் என அடியேன் நம்புகிறேன்’’ என்றார் ஊத்துக்காடு.

ஏற்கனவே ஊத்துக்காடு பார்த்த பார்வையால் மந்திர வாதிக்கு நேர்ந்ததை, சேவகர்கள்மூலம் கேட்டு அறிந்திருந்த மன்னர், ஊத்துக்காடு சொன்னதற்கு ஒப்புக்கொண்டார்; ‘‘தாங்கள் பாடுங்கள்! நான் கேட்கிறேன்’’ என்றார்.ஊத்துக்காடு கண்ணனை வேண்டிப்பாடினார். மன்னரும் பக்தியுடன் கேட்டார். நேரம் செல்லச் செல்ல, மன்னரின் நோய்க் கொடுமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது; கூடவே மனதி லும் உடம்பிலும் சொல்ல முடியாத ஒரு புது உத்வேகம் பரவியது. மன்னர் மனம் கொண்ட மகிழ்ச்சியை முகம் வெளிப்படுத்தியது.

வந்தவேலை முடிந்தது என, ஊத்துக்காடு அமைதியாக எழுந்தார்; ‘‘மன்னா! கண்ணன் அருளால், இனிமேல் இந்த நோய் தங்களைத் தீண்டாது. எனக்கு விடை கொடுங்கள்!’’ என்றார்.

மன்னரின் கண்களில் கண்ணீர் கசிந்தது; கைகளைக் கூப்பிய அவர், ‘‘துயர் தீர்த்த தங்களுக்கு ஏதாவது கைம்மாறு செய்ய, என் உள்ளம் விரும்புகிறது. தங்களுக்கு என்று ஏதாவது செய்ய விரும்புகிறேன். ஊர்கள், பல்லக்கு, பணிவிடை செய்ய ஆட்கள் எனத் தாங்கள் எது கேட்டாலும் தர, நான் தயாராக இருக்கிறேன். தயவுசெய்து தாங்கள் வேண்டியதைக் கேளுங்கள்!’’ என்றார்.ஊத்துக்காடு மென்மையாகப் புன்முறுவல் பூத்தார்; அவர் மனதில் இருந்தது வார்த்தைகளாக வெளிப்பட்டது.

‘‘மன்னா! தோற்றத்தால் மட்டுமல்ல; வாழ்க்கை முறையிலும் நான் துறவி தான். எங்கள் பாட்டனார் ராமசந்திர வாதூலர் காலத்தில், ஊத்துக்காடு முதலான பகுதிகள் எல்லாம் இறையிலி நிலங்களாகப்பெற்று, அனுபவித்து வந்தார். அதெல்லாம் எங்கள் தந்தையார் காலத்தில், அரசாங்கத்தாலேயே பறிமுதல் செய்யப்பட்டன. பிறகு எங்கள் மூத்தவர் (அண்ணன்) இங்குவந்து, அரசவையில் பாடி மன்னரிடம் இருந்து, இழந்துபோன உரிமைகளை மறு படியும் பெற்றார்.

‘‘அவர் போனபின், அந்நிலங்கள் எல்லாம் ஆளுவார் இல்லாமல் கிடக்கின்றன. என் தாயாரும் போய் விட்டாள். இப்போது தன்னந்தனி ஆளாக இருக்கும் எனக்குப் புதிதாக என்ன வேண்டும்? கண்ணன் திருவருள் இருக்கிறதே! அது போதாதா எனக்கு? நீஙகள் விரும்புவதால், ஒன்றே ஒன்று கேட்கிறேன்.‘‘தெய்வ வழிபாடும் இசை வழிபாடும் மட்டுமே எனது குறிக்கோள். திருத்தலங்கள் தோறும் சென்று பாடி, இறைவனை வழி பட விரும்புகிறேன். போகும் இடமெல்லாம் உணவளிக்கும்படி, ஏற்பாடு செய்தால் போதும். மற்றபடி நீங்கள் தருவதாகச் சொன்ன அனைத்துமே, எனக்கு உலகத்தொடர்பை உண்டாக்கி விடும்.

என் இசை வழிபாடு கெடும். மேலும் இங்கு நடந்தஎதையும் நீங்கள் வெளியே சொல்லக்கூடாது’’ என்றார்.மன்னர் வியந்தார். அதன்பின் மன்னர் உத்தரவு பெற்று அங்கிருந்து புறப்பட்டார் ஊத்துக்காடு. அவர் பெருமை அறிந்து மன்னர் வியக்கலாம்; மக்கள் வியக்க வேண்டாமா? அதற்கு உண்டானதைத் தெய்வம் செய்தது.

நீடாமங்கலத்தில் வாழ்ந்து வந்த நீலகண்ட சிவாச்சாரியார் என்பவர் இல்லத்தில், திருமணம் நடந்தது. அந்தக் காலத்தில் எல்லாம் ஐந்து நாட்கள் கல்யாணம் நடக்கும். திருமணத்திற்கு முந்தைய நாள்; இரவு நேரம்; மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது.பெரிய ருத்ரபசுபதி பிள்ளை மிகவும் அற்புதமாக நாகசுரம் வாசித்தபடி, ஊர்வலத்தின் முன்னே வந்து கொண்டிருந்தார்.ஊரில் இருந்த சங்கீத மேதைகளும் ரசிகர்களும் ஆர்வத்தோடு கேட்டு ரசித்தபடி வந்து கொண்டிருந்தார்கள்.

ஊர்வலம் ஊட்டுப்புரையை நெருங்கியது; நின்றது. அங்கு இருந்தவர்கள் எல்லாம்,வீதிக்கு வந்து ருத்ரபசுபதி பிள்ளையின் இசையை அனுபவிக்கத் தொடங்கினார்கள். ஊத்துக்காடும் அங்குதான் இருந்தார்; ஆனால் அவர் வீதிக்கு வரவில்லை; திண்ணை ஓரமாக ஒட்டியபடி நின்றிருந்தார்.ஊத்துக்காடு நிற்பதை, ருத்ரபசுபதி பார்த்தார். உடனே, உடலை ஒடுக்கிப் பணிவோடு இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பி, ஊத்துக்காடை வணங்கி விட்டு, மறுபடியும் இசைக்கத் தொடங்கினார்.

வாசிப்பில் மேலும் விறுவிறுப்பு கூடியது. அனைவரும் அதில் மயங்கி நின்றபோது, ஊத்துக்காடும் அந்த இசையில் மனதைப் பறிகொடுக்கத் தொடங்கினார்; வாசிப்பில் வசம் இழந்து நிமிர்ந்தார்; உற்றுக் கேட்டார்; மெள்ளமெள்ள நகர்ந்து கூட்டத்தின் முன்னால், ருத்ர பசுபதியின் அருகில் வந்து விட்டார். வாசிப்பு ஓங்கஓங்க, பரவசத்தின் உச்சிக்கே போய் விட்டார் ஊத்துக்காடு.அவ்வாறு ஊத்துக்காடு வந்து நிற்கவும், ருத்ரபசுபதி சில விநாடிகள் வாசிப்பை நிறுத்தினார். உடனே, ‘‘அற்புதமாக வாசிக்கிறாயே அப்பா! எங்கு கற்றாய்?’’ எனக் கேட்டார் ஊத்துக்காடு.‘‘எல்லாம் தங்களிடம்-தங்கள் அருள்தான் சுவாமி!’ என்றார் ருத்ரபசுபதி.

‘‘எப்படி?’’ என்பதைப்போல, ஊத்துக்காடு பார்க்க, ருத்ர பசுபதி தொடர்ந்தார்; ‘‘ஆம் குருநாதா! தங்கள் இசையைக் கேட்டு மெய்ம்மறந்த அடியேன், அடியேனைச் சீடனாக ஏற்குமாறு வேண்டினேன். அருள் கிடைக்கவில்லை. மானசிகமாகத் தங்களையே குருவாக ஏற்று, மறைமுகமாகக் கேட்டுப் பயிற்சி செய்தேன்.‘‘குருநாதரான தங்கள் திருமுன்னால் வாசித்து அரங்கேற்றும் சந்தர்ப்பம் வாய்க்காதா என்று ஏங்கினேன். அதற்கு இன்றுதான், திருவருள் வாய்த்தது. அடியேன் தவறை மன்னித்து, அடியேனுக்கு ஆசிர்வாதம் செய்ய வேண்டும்’’ என்று கண்களில் கண்ணீர் கசியக்கூறிய ருத்ரபசுபதி, தாம் நிற்கும் இடம் புழுதி படர்ந்த வீதி என்பதையும் பொருட்படுத்தாமல், அப்படியே ஊத்துக்காடின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.

ஊத்துக்காடு ஒன்றுமே பேசவில்லை. அவரும் நாதசுர வித்வானும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட கூட்டம், ‘‘ஆகா! ஆகா!’’ என்றது அவர்கள் பார்வை ஒட்டுமொத்தமாக ஊத்துக் காடின் மேலேயே இருந்தது.மன்னரிடம் கூட, தன்னைப்பற்றி வெளியிடக்கூடாது என்று தடைஉத்தரவு பெற்ற ஊத்துக்காடு, இப்போது தன் பெருமை ருத்ரபசுபதியின் மூலமாக, ஊர் மக்கள் முன்னால் வெளியானது குறித்து வருந்தினார்; கூட்டத்தை விலக்கிக் கொண்டு அமைதியாக அங்கிருந்து அகன்றார்.

தஞ்சை மன்னரால் வெளியிடப்படக் கூடாது என்றதை, ருத்ர பசுபதியால் வெளிப்படுத்தி விட்டது தெய்வம்.ஊத்துக்காடு பாடல்களான, ‘தாயே யசோதா, காயாம்பூ வண்ணனே, ராஸ விலாஸ’ எனும் மூன்று பாடல்களையும் நாதசுரத்தில் இசைத்து, ஊரார் அனைவரையும் நாத வெள்ளத்தில் ஆழ்த்தினார் ருத்ரபசுபதி.

ஊத்துக்காடு அங்கிருந்து அகன்றதும், ஊரார் அனைவரும் வியந்தார்கள்; ‘‘ருத்ர பசுபதி சங்கீதத்தில் மேதாவி; மகாமேதாவி! அவரே போற்றித்துதித்து வணங்குகிறார் என்றால் ஊத்துக்காடு எவ்....வளவு பெரிய மேதாவியாக இருக்க வேண்டும்!’’ என்று ருத்ரபசுபதியைச் சூழ்ந்து கொண்டு கேள்விமேல் கேள்வியாகக் கேட்கத் தொடங்கினார்கள்.

(அடுத்த இதழிலும் தொடரும்...)

- பி.என். பரசுராமன்

Advertisement