செல்வங்களை கொட்டிக் கொடுக்கும் கௌபேரி யோகினி
லலிதா சஹஸ்ர நாமத்தில், `‘மஹா சதுஷ் ஷஷ்டி கோடி யோகினி கன சேவிதா’’ என்ற நாமம் வரும். அதாவது அம்பிகையை சதா, அறுபத்தி நான்கு கோடி யோகினிகள் சேவித்துக் கொண்டே அதாவது வணங்கிக்கொண்டே இருக்கிறார்கள். அம்பிகையின் ஆணையை சிரமேற்கொண்டு செய்து முடிக்கும் தேவிகள்தான் யோகினிகள் ஆவார்கள். அதிக சக்தி வாய்ந்தவர்களும்கூட. அபூர்வமான பல சக்திகளை உடையவர்கள் இவர்கள். தேவியை உபாசனை செய்யும் சாதகனுக்குத் தேவையான உதவிகளை செய்து அவர்களுக்குத் தேவையான சித்திகளை தந்து, அம்பிகையை உணரவும் அடையவும் உதவுபவர்கள் இவர்கள். இவர்கள் எண்ணிக்கையில் பல கோடி இருந்தாலும், இந்த பல கோடி யோகினிகளில் முக்கியமான யோகினிகள் அறுபத்தி நான்கு பேர்கள் ஆவார்கள். அவர்களுள், அதிக சக்தி வாய்ந்த ஒரு யோகினியான ``கௌபேரி தேவியை’’ பற்றி காண்போம் வாருங்கள்.
மார்க்கண்டேய புராணத்தில் கௌபேரி மார்க்கண்டேய புராணத்தின் ஓர் அங்கமாக கருதப்படுகிறது ‘தேவி மகாத்மியம்’ என்று அழைக்கப்படும் ‘துர்கா சப்த ஷதி’. இதில் பகவத்கீதையை போலவே எழுநூறு ஸ்லோகங்கள் இருப்பதாலும், பலன் தருவதில் கற்பக விருட்சம் போல இருப்பதாலும் இதை பகவத் கீதைக்கு சமமாகவும், அம்பிகையின் அருள் வழங்கும் பெட்டகமாகவும் கருதுகிறார்கள். இப்படி பெருமை மிக்க துர்கா சப்த ஷதியை பாராயணம் செய்பவர்கள், முதலில் தேவி கவசத்தை பாராயணம் செய்துவிட்டே தொடங்குகிறார்கள். அதில் பதினாறாவது ஸ்லோகம் பின்வருமாறு இருக்கிறது.
``ரக்ஷேத் உதீச்சயாம் கௌபேரி ஈசான்யாம் சூலதாரிணி’’
அதாவது ‘குபேரனுடைய சக்தி வடிவமான கௌபேரி, என்னை வடக்கில் இருந்து பாதுகாக்கட்டும்’ என்று இதற்கு பொருள். எட்டு திக்குகள் இருக்கின்றன. இந்த எட்டுத் திக்கையும் பாதுகாக்க ஒவ்வொரு திக்குக்கும் ஒரு தேவன் உண்டு. இவர்களை லோக பாலகர்கள் அதாவது உலகத்தை காப்பவர்கள் அல்லது திக் தேவதைகள் என்று சொல்கிறோம். அந்த வகையில் வடக்கு திக்குக்கு அதிபதியாக விளங்குபவர் குபேரன். ‘இவரது சக்தியானது என்னை வடக்கில் இருந்து காக்கட்டும்’ என்று, தேவி கவசம் சொல்வது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள்! அதுமட்டுமில்லை, தேவி கவசத்தில், தேவியின் வடிவங்கள் தன்னை காக்கட்டும் என்றுதான் வழிபடுவார்கள். அந்த வகையில், குபேரனின் சக்திக் கவசத்தில் குறிப்பிடப்படுவதால் அளப்பரிய அம்பிகையின் சக்தியில் ஓர் அங்கமாக இந்த கௌபேரி யோகினியை கருதலாம் என்றும் தெரியவருகிறது.
புராணங்களில் கௌபேரி தேவி
அந்தகாசுரன் என்ற அரக்கன், பார்வதி தேவியை கடத்திச் சென்றான். அம்பிகையை மீட்க, சினம்கொண்ட சிவன், அந்தகன் மீது போர் தொடுத்துச் சென்று அவனைத் தாக்கினார். ஆனால், அங்குதான் விபரீதமே நடக்கிறது. பூமியில் விழும் அந்தகனின் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் புதியதாக ஒரு அந்தகாசுரன் தோன்ற ஆரம்பித்தான். இப்படி அவனது ஒவ்வொரு ரத்தத் துளியில் இருந்தும் தோன்றிய அந்தகாசுரனால், உலகமே நிறைந்தது. அப்போது ஈசனுக்கு உதவும் வகையில், பார்வதி தேவியானவள், அனைத்து தேவர்களையும் கட்டளையிட, அனைத்து தேவர்களும் தங்கள் தங்கள் சக்தியை ஒன்று திரட்டி, தங்களைப் போலவே ஒரு தேவியை தோற்றுவித்து, அந்தகனை அழிக்க ஈசனுக்கு துணையாக
அனுப்பினார்கள்.
அதன் படி, குபேரன், தனது சக்தியை பெண் வடிவமாக திரட்டி, அந்தகாசுரனுடனான போரில், சிவ பெருமானுக்கு உதவி புரிய அனுப்பினார். இப்படித்தான் கௌபேரி தேவி தோன்றியதாக அக்னிபுராணம், சிவபுராணம் போன்ற நூல்கள் சொல்கின்றன.
சித்ரலேகையும் குபேரனும்
குபரனின் மனைவி சித்திரலேகை அல்லது சித்ரரேகை என்று அழைக்கப் படுகிறாள். இவள் யக்ஷர்களின் தலைவியாக கருதப்படுகிறாள். யக்ஷி, சவ்வி, ரித்தி, மனோரமா, பத்ரா போன்ற பெயர்களாலும் இவள் அழைக்கப்படுகிறாள். குபேரனுக்கும் இந்த தேவிக்கும் பிறந்தவர்களே, நளகூபரர்கள். ஒருமுறை யக்ஷன் ஒருவன், குபேரனிடம் கொடுக்க வேண்டிய பண மூட்டையை, தவறுதலாக சித்ரரேகை அல்லது சித்திரலேகை என்று அழைக்கப்படும் அவரது மனைவியிடம் தந்து விடுகிறான். இதனால் கடும் கோபம் அடைந்த குபேரன், தனது தேவியை பிரிந்து பல காலம் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே குபேரனை வணங்கும் போது, அவரோடு சேர்த்து அவரது மனைவியான சித்ரலேகையையும் சேர்த்தே வணங்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
நளகூபரி யோகினியும் கௌபேரி யோகினியும்
நளகூபரர்கள், ஒருமுறை மது அருந்திவிட்டு, யக்ஷ கன்னிகைகளோடு ஜலக்கிரீடை செய்து கொண்டிருக்கும் போது, அந்த வழியே வந்த நாரதரை அவமதித்து விடுகிறார்கள். இதனால் கோபமுற்ற நாரதர், அவர்களை அர்ஜுன மரமாக போகும் படி சபிக்கிறார். அவர்கள் இருவரும் தங்கள் தவறை உணர்ந்து, நாரதரிடம் மன்னிப்பு கேட்க, அந்த ஸ்ரீஹரியின் அருளால் உங்களுக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்று ஆசி வழங்கினார்.
அதன்படி, அந்த இரட்டையர்கள், பிருந்தாவனத்தில் இரண்டு அர்ஜுன மரங்களாக அருகருகே வளர்ந்தார்கள். கண்ணன், யசோதையால் உரலில் கட்டப்பட்ட போது, கண்ணன் அந்த உரலையும் உருட்டிக் கொண்டு இந்த இரண்டு மரங்களுக்கு இடையே செல்ல, மரங்களாக இருந்த நளகூபரர்களுக்கு மோட்சம் கிடைத்தது என்று சொல்வார்கள். இந்த நளகூபரர்களின் சக்தி நளகூபரி என்று அழைக்கப் படுகிறாள். பலகோடி யோகினிகளில் ஒருத்தியான இவள் கழுத்தின் பின் பக்கத்தை காப்பதாக சொல்லப்படுகிறது.
சனீஸ்வரரும் கௌபேரி தேவியும்
கௌபேரி தேவி அல்லது பத்ரா என்று அழைக்கப்படும் இவள், குபேரனின் மகாராணி ஆவாள். இவள் சூரிய பகவானும் சாயா தேவியும் பெற்ற தவப்புதல்வி ஆவாள். முக்கியமாக சனீஸ்வரனின் சகோதரியும் ஆவாள். ஆகவே இவளது வழிபாடு ஜாதகத்தில் சனி தோஷத்தை நீக்க உதவுவதாக சொல்கிறார்கள்.
ஆலகால விஷமும் கௌபேரி தேவியும்
யோகினிகளின் வரிசையில் முக்கியமான யோகினியாக கருதப்படும் கௌபேரி, பாற்கடலை கடைந்த போது, உற்பத்தியான விஷமான ஹாலாஹலத்தை பருகும் பொழுது, சிவபெருமானுடன் சேர்ந்து ஒரு பகுதியை இவள் அருந்தியதாக நம்பப்படுகிறது. இந்த செயல், உலக நலனுக்காக தன்னை அர்ப்பணிக்கும் தன்னலமற்ற தியாகத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இப்படி தன்னலம் பாராமல் உலக நலனுக்காக விஷம் உண்டதால், உலகிற்கே மங்களம் வழங்கும் உயர்ந்த பதவி இந்த யோகினிக்கு வழங்கப்பட்டது என்று சொல்கிறார்கள். இந்த புராண கதையை மறுப்பவர்களும் உண்டு.
கௌபேரி தேவியின் வழிபாடு தரும் நன்மைகள்
கௌபேரி தேவியின் வழிபாடு, முன்பே செய்த பாவ கர்மாக்களின் விளைவுகளைத் தணிக்கச் செய்யும் என்று சொல்லப்படுகிறது. ஆலகால விஷத்தையே உலகிற்காக சிவனோடு உண்டு உதவி புரிந்த இந்த யோகினி, நமது கர்மங்கள் என்னும் விஷத்தையும் செயல் இழக்கச் செய்கிறாள்.செல்வமும் ஐஸ்வர்யமும் பெரும்பாலும் பேராசையின் விஷத்தை உருவாக்குகின்றன. அந்தச் செல்வத்துடன் கூடவே வரும் பேராசை எனும் விஷத்தை நீக்குபவள் கௌபேரி தேவி.விஷத்தை அருந்துவது என்பது ஒரு உவமை மட்டும்தான். அதாவது, தனது பக்தர்களின் மனதில் உள்ள அனைத்து தீய எண்ணங்கள் என்னும் விஷத்தையும் நீக்கி, அவர்களுக்கு ஆன்மிக வாழ்க்கையிலும் முன்னேற உதவி புரிகிறாள்.
உடல் ரீதியாகப் பார்த்தால், நமது உடலின் துவாரங்களை (துளைகள்) காக்கும் தேவியாக இவள் கருதப்படுகிறாள். உடலின் துளைகள் வழியே உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. எனவே, உடல் மற்றும் மனதில் உள்ள விஷங்களை நீக்கி அவற்றைத் தூய்மையுடன் வைத்திருக்கக் காரணமான முக்கிய தேவியாக கௌபேரி விளங்குகிறாள்.
திருப்பதியில் கௌபேரி தேவி
திருப்பதி கோயிலில் ஒரு குபேரன் சந்நதி இருப்பதாக சொல்லப்படுகிறது. அங்கே இந்த கௌபேரி தேவியின் சக்தியை உணர முடிகிறது என்று சில தேவி உபாசகர்கள் சொல்கிறார்கள். திருப்பதியில் இருக்கும் இந்த குபேரன் சந்நதி பலரும் அறியாத ஒரு விஷயமாகதான் இன்றும் இருக்கிறது. வெகு சிலரே இதைப் பற்றி அறிந்தவர்களாக இருக்கிறார்கள். திருப்பதியின் செல்வச் செழிப்புக்கு இந்த தேவியும் ஒரு வகையான காரணம் என்றும் சொல்கிறார்கள். அதை சிலர் மறுப்பதும் உண்டு.
எப்படி வழிபடுவது?
அபரிமிதமான செல்வச் செழிப்பை வழங்கும் இந்த கௌபேரி தேவியை, குபேரனின் மனைவியாக சித்ரரேகை அல்லது சித்ரலேகையின் வடிவில், குபேரனை வணங்கும் போது கூடவே சேர்ந்து வழிபடுகிறார்கள். தாந்த்ரீக முறையில் இந்த யோகினியை ஒரு தேர்ந்த குருவின் வழிகாட்டுதலோடு வணங்குவதே சாலச் சிறந்தது. இல்லையேல் மனம் உருகி அந்த அம்பிகையை வழிபட்டாலே அனைத்து யோகினிகளின் அருளும், தானே கிடைக்கும். காரணம், அம்பிகையின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிய படி அவளைச் சுற்றி இந்த யோகினிகள் இருப்பதாலும், அம்பிகை சொல்வதை சிரமேற்கொண்டு செய்து முடித்து அம்பிகையின் இன்னருளுக்கு காத்திருப்பவர்களாக இந்த யோகினிகள் இருப்பதாலும், அம்பிகையின் அருள் இருந்தாலே யோகினிகளின்அருளும், தானே தேடி வரும்.
ஜி.மகேஷ்