விஜயாலய சோழீஸ்வரம் கோயில்
கோயில் மேற்குநோக்கி கட்டப்பட்டு அதன் அரிய பாணியில் ஈர்க்கிறது. கோயிலின் விமானத்தின் முதல் மற்றும் இரண்டாவது அடுக்கு சதுர வடிவத்திலும், மூன்றாவது வட்ட வடிவத்திலும், ‘கிரீவம்’ மற்றும் ‘சிகரம்’ ஆகியவை வட்ட வடிவத்திலும் உள்ளன. நான்கு மூலையிலும் ‘நந்தி’ சிற்பங்கள் உள்ளன. விமானத்தின் ஒவ்வொரு நிலைகளில் பூதகணங்கள், யாழிகள் மற்றும் அப்சரஸ்களின் சிற்பங் களினால் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது.கருவறைக்கு இருபுறமும் ‘துவாரபாலர்கள்’ கலையழகு மிளிரக் காட்சியளிக்கின்றனர்.
கோயிலின் உட்புறம் வடிவமைப்பில் சுவாரஸ்ய மானது - கர்ப்பக்கிரகம் ஒரு வட்ட வெளிப்புறச் சுவரைக் கொண்டுள்ளது. செவ்வக வடிவமான கோயிலின் பிரதான சுவருக்கும் இடையில் ஒரு சிறிய சுற்றுப்பாதை உள்ளது.நந்திக்குப் பின்புறத்தில் மேலும் இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. ‘‘பதினெண் பூமி விண்ணகரம்’’ என்னும் விஷ்ணு குடைவரைக் கோயிலும், ‘‘பழியிலி ஈஸ்வரம்’’ என்னும் சிறிய குடைவரைக் கோயிலும் அமைந்துள்ளன.
விஜயாலய சோழீஸ்வரம் கோயிலின் வெளிப்புறச் சுவரில் காணப்படும் கல்வெட்டுச் சான்றுகள் சாத்தன்பூதி என்பவர் இக்கோயிலைக் கட்டியதாகவும், மழையினால் இது இடிந்ததன் காரணமாக, மல்லன் விடுமன் என்பவர் இதை விஜயாலய சோழன் காலத்தில் புதுப்பித்தார் என்றும் குறிப்பிடுகின்றது. விஜயாலய சோழன் காலம் முதல் இக்கோயில் ‘விஜயாலய சோழீஸ்வரம்’ என்று வழங்கப்பட்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
காலம்: கல்வெட்டுச் சான்றுகளின்படி பொ.ஆ. 862 இல் முத்தரையர் ஆட்சியாளர் சாத்தன்பூதி என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. விஜயாலய சோழன் (850 - 870) என்ற பெயரால் இந்த கோயில் ‘விஜயாலய சோழீஸ்வரம்’ என்று அழைக்கப்படுகிறது.
அமைவிடம்: நார்த்தாமலை, புதுக்கோட்டை மாவட்டம். இப்பகுதியில் வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ‘நகரத்தார்’ என்று அழைக்கப்படும் வணிகர்களின் குழுவின் பெயரில் அக்காலத்தில் ‘நகரத்தார் மலை’ என்று அழைக்கப்பட்டது.
மது ஜெகதீஷ்