திருவாப்பனூர், திருஆப்புடையார் கோயில்
சோழாந்தகன் என்ற மன்னன் ஒரு சிவபக்தன் இவனது ஆட்சியில் காலம் தவறாமல் மழை பொழிந்து விளைச்சல் பெருகி மக்கள் இன்பமாக வாழ்ந்தனர். இதற்கு காரணம் இவனது சிறந்த சிவபக்திதான். இவன் எப்போதும் சிவபூஜை செய்த பின்புதான் சாப்பிடுவான். ஒருமுறை இவன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். அப்போது ஓர் அழகிய மானை பார்த்தான். விரட்டினான், ஆனால், இவனது பிடியில் சிக்கவில்லை. மானை விரட்டிய களைப்பால் மயங்கிய மன்னன் நடு காட்டில் விழுந்து விட்டான். பயந்து போன பாதுகாப்பு வீரர்கள் மன்னனின் களைப்பு தீர உணவை அருந்தக் கூறினர். சிவபூஜை செய்யாமல் சாப்பிடமாட்டேன் என்பதை உறுதியாக தெரிவித்தான். புத்திசாலி அமைச்சர் ஒருத்தர், அந்த காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஆப்பு அடித்தார். அதை காட்டி ''மன்னா, இங்கே ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது. நீங்கள் அதை பூஜை செய்த பின் உணவருந்தலாமே'' என்று யோசனை கூறினார். களைப்பிலிருந்த மன்னனும் அந்த ஆப்பை சுயம்புலிங்கம் என நினைத்து வணங்கி உணவருந்தி விட்டான். களைப்பு நீங்கிய பிறகுதான், தாம் வணங்கியது லிங்கம் அல்ல. அது ஓர்ஆப்பு என்பதை உணர்ந்து மிக வருந்தினான். இறைவா! நான் இதுநாள் வரை உன்னை பூஜித்தது உண்மையானால்ர், நீ இந்த ஆப்பில் வந்து என்னை அருள்பாலிக்க வேண்டும்'' என மன்றாடினான். மன்னனின் பக்திக்கு மகிழ்ந்த இறைவன் அந்த ஆப்பிலே தோன்றி அருள் பாலித்தார். சிவன் ஆப்பு உடையார் ஆனார். அந்த ஊர் ஆப்பனூர் ஆனது.
பிரம்ம தேவனின் வழியில் வந்த புண்ணிய சேனன் ஒரு சிவபக்தன். இவன் செல்வத்திற்கு அதிபதியாவதற்காக அகத்தியரின் ஆலோசனைப்படி, இத்தலத்திற்கு வந்து கடும் தவம் இருந்தான். தவத்தினால் மகிழ்ந்த ஆப்புடையார் - சுகந்த குந்தளாம்பிகையுடன் தோன்றி புண்ணிய சேனனின் விருப்பத்தை நிறைவேற்றினார். இதனால் அகங்காரம் பிடித்து சிவனின் அருகில் இருந்த அம்பிகையின் அழகில் மயங்கினான். இதனால் இவன் கண்ணும் போனது உயிரும் போனது. இறைவனின் கருணையால் மீண்டும் உயிர் பெற்றான். தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டான். மன்னித்த ஆப்புடையார், இவனை ‘குபேரன்' என்று அழைத்து மீண்டும் வாழ்வு தந்தார். அன்று முதல் சங்கநிதி, பதுமநிதி என்ற இரு செல்வங்களோடு வடக்கு திசையை காத்து வந்தான்.
இந்த தெய்வத்திற்கு சூரியன், சந்திரன், வியாழன், சுக்ரன், சனி நாமகரணம் செய்துள்ளது.
* பௌர்ணமி நாளில் ஆப்பனூர் சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை எடுத்து விவசாய நிலங்களில் தெளித்தாலோ கிணற்றுப் பகுதியில் பதித்தாலோ வற்றாத நீரும் செல்வ செழிப்போடு விவசாயமும் செழிக்கும்.
* லக்னத்தில் குரு உள்ளவர்கள் படிப்பில் சிறு தாமதம் ஏற்படும் அவர்கள் இங்கு வந்து ஆப்புடையாருக்கு தேனும் தினையும் நைவேத்தியமாக வழங்கி சாப்பிட்டு வந்தால் படிப்பில் மேன்மேலும் வளர்ச்சி அடைவார்கள்.
* 10ம் பாவகத்தில் சூரியன் உள்ளவர்களின் முதலீடு சில சமயம் ஏற்ற இறக்கங்களோடு இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அவர்கள் கோதுமை மாவில் வெல்லம் கலந்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்தால் முதலீடு இரட்டிப்பாகும்.
* பௌர்ணமி நாளில் ஒரு மகா வில்வ செடியும் ஒரு அத்தி மர செடியும் இத் தலத்தில் நட்டு பராமரித்து வர எப்பேர்பட்ட கர்மாவும் நவகிரக தோஷமும் நீங்கி வாழ்வில் வளமுடன் வாழ்வார்கள்.
மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து சிம்மக்கல் வழியாகவும் கோரிப் பாளையத்திலிருந்து செல்லூர் வழியாகவும் திருவாப்புடையார் கோயிலுக்கு வரலாம்.