நெகிழ்ந்த மனம் பெருக்கும் கண்ணீர்
பிறப்பு முதல் இறப்புவரை மனிதன் எதெதெற்கெல்லாமோ அழுகிறான். பசி, நோய், சோதனைகள், பொருள் இழப்பு, உற்றார், உறவினர் மரணம், வணிகத்தில் நஷ்டம், காதல் தோல்வி, மணவிலக்கு, தேர்வில் தோல்வி என்று பல காரணங்களுக்காக, பல தருணங்களில் மனிதன் கண் கலங்குகிறான். இவையெல்லாம் உலகியல் ரீதியாக வடிக்கும் கண்ணீர். இதற்குப் பயன் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.ஆனால், ஆன்மிக ரீதியான கண்ணீரும் உண்டு. அதற்குக் கிடைக்கும் பலன் ஈடு இணையற்றது.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘இறையச்சத்தின் காரணமாக எவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வழியுமோ அந்தக் கண்களை நரக நெருப்பு தீண்டாது.’’இரக்கம், கருணை, பயபக்தி போன்ற மென்மையான உணர்வுகள் யாருடைய உள்ளத்தில் இருக்கின்றனவோ, அதேபோல் தொழுகை, நோன்பு போன்ற வழிபாடுகளை யார் முறைப்படி நிறைவேற்றுகிறாரோ அவருடைய இதயம்தான் இறைவன் மீது கொண்ட அன்பினால் இளகும்.இதயம் இளகினால்தான் கண்கள் கசியும். இறைக் காதலால் கண்கள் கசியும்போது அந்தக் கண்ணீர்த் துளிகள் நரக நெருப்பையே அணைக்கும் வல்லமையைப் பெற்று விடுகின்றன. … அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) எனும் நபித்தோழர் மிக இனிமையாகக் குர்ஆனை ஓதக் கூடியவர். அவர் ஓதத் தொடங்கினால் கரையாத உள்ளமும் கரையும்.
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் அந்தத் தோழரிடம் வந்து, ‘‘எனக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுங்கள்’’ என்று சொன்னார்.‘‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டிருக்க, தங்களுக்கே தான் ஓதிக் காட்டுவதா?’’ என்று கேட்டார் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்.அதற்கு நபிகளார், ‘‘மற்றவர்கள் இனிமையாக ஓதுவதை நான் கேட்க விரும்புகிறேன்’’ என்று சொன்னார். உடனே அப்துல் லாஹ் திருக் குர்ஆனின் 4ம் அத்தியாயமான அந்நிஸா எனும் பகுதியை ஓதத் தொடங்கினார்.அந்த அத்தியாயத்தின் 41ம் வசனத்தை அவர் ஓதியபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘நிறுத்துங்கள்’’ என்று சொன்னார்.அப்போது நபிகளாரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. நபிமார்கள் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகள் குறித்து மறுமையில் விசாரிக்கப்படும் ஒரு காட்சியை அந்த வசனம் விவரிக்கிறது.‘‘(முஹம்மதே) நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் சாட்சியாளர் ஒருவரைக் கொண்டு வந்து, உம்மையும் இவர்கள் மீது சாட்சியாளராகக் கொண்டு வரும் வேளையில் இவர்கள் என்ன செய்வார்கள் (என்று சிந்தியுங்கள்). எவர்கள் இறைத்தூதரின் சொல்லைக் கேட்காமலும் அவருக்கு மாறு செய்து கொண்டும் இருந்தார்களோ அவர்கள் பூமி பிளந்து தங்களை விழுங்கியிருக்கக் கூடாதா என அந்நாளில் ஏங்குவார்கள். அங்கு அவர்கள் (தம்முடைய) எந்தச் செய்தியையும் அல்லாஹ்விடம் மறைத்திட முடியாது (4:4142).தம்முடைய நபித்துவப் பொறுப்பு குறித்து நாளை மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் எனும் எண்ணம் தோன்றியதுமே நபிகளார் அழத் தொடங்கி விட்டார்கள்.
இந்த வார சிந்தனை
‘‘நபியே, நாம் உம்மை உலக மக்களுக்கு ஓர் அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம்’’ (குர்ஆன் 21:107)
- சிராஜுல் ஹஸன்.