மந்திரங்களின் இடையே குறுக்கீடு வேண்டாம்
சப்தபதி என்கிற பெண்ணின் கைகளை பிடித்தபடி ஏழு அடி நடந்து முடிந்த பின்னாலே செய்ய வேண்டிய அடுத்த காரியம் பிரதான ஹோமம். மனைவி வலது கையால் கணவனைத் தொட்டுக் கொண்டே இருக்க மணமகன் கீழே சொல்லப்படும் மந்திரங்களைச் சொல்லி பதினாறு ஹோமங்களைச் செய்ய வேண்டும். பிரதான ஹோமங்கள் தேவதைகளின் மகிழ்ச்சிக்காகச் செய்யப்படுகின்றன.
முதல் மந்திரம் சோமாய ஜனிவதே ஸ்வாஹா.
என்ன பொருள் தெரியுமா?
இந்தப் பெண்ணை அடைந்தவனான சோமனுடைய மகிழ்ச்சிக்காக இந்த ஆகுதியைத் தருகின்றேன். நெய்யை சமர்ப்பிக்கின்றேன்.
அடுத்த மந்திரம் - கந்தர்வாய ஜனிவிதே ஸ்வாஹா.
கந்தர்வனின் மகிழ்ச்சிக்காக இந்த நெய்யை சமர்ப்பிக்கின்றேன்.
அடுத்த மந்திரம் - அக்னயே ஸ்வாஹா.
அக்னியின் மகிழ்ச்சிக்காக நெய்யை அளிக்கின்றேன்.
அடுத்த மந்திரம் - கன்யலா பித்ரு யோயதி ததிலோக மவ தீக்ஷாம தாஸ ஸ்வாஹா இவள் கன்னியாக இருந்தாள். தந்தை முதலிய உறவினர்களை விட்டுவிட்டு கணவன் வீட்டிற்குச் செல்கின்றாள். (முன் இருந்த நிலையை விட்டுவிட்டு வேறொரு இடத்திற்கு வருவதாகப் பொருள்). அதற்காக அக்னியில் இந்த ஹோமம் செய்கின்றேன்.
இந்த நான்கு மந்திரங்களும் யஜுர் வேத மந்திரங்களாகும். இதற்குப் பின்னாலே பன்னிரண்டு ரிக் வேத மந்திரங்களால் ஹோமம் செய்யப்பட வேண்டும். அதிலே இந்திரன், வருணன் போன்ற தேவதைகளை வரவழைத்து அவர்களுக்கு மரியாதை தரப்படுகின்றது.
தேவர்களெல்லாம் மந்திரப் பூர்வமாக திருமண மேடைக்கு வந்திருக்கிறார்கள். அந்த தேவர்களையெல்லாம் தியானித்து அவர்களிடத்திலே பல்வேறு விதமான பிரார்த்தனைகளை வைப்பதைத்தான் இந்த மந்திரங்கள் குறிப்பிடுகின்றன.இதிலே நல்ல செல்வம் கேட்கப்படுகின்றது. குழந்தைகள் கேட்கப்படுகின்றன. சொத்து சுகங்கள் பிரார்த்திக்கப்படுகின்றன. தீர்க்க ஆயுள் பிரார்த்திக்கப்படுகின்றது. இந்த பிரதான ஹோமத்தால் திருப்தியடைந்து தேவர்கள் மணமக்களுக்குப் பரிசாக அவர்கள் கேட்கும் வரங்களைத் தந்துவிட்டு செல்வதினால் இந்த ஹோமங்கள் விடத்தக்கதல்ல.
பாகவத சம்பிரதாயத்தில் எல்லா தேவதைகளுக்கும் அந்தர்யாமியான பகவான் விளங்குவதால் பகவானுக்கே நேரடியாக ஆழ்வார்களின் பாசுரங்களைச் சொல்லி பிரார்த்தனை செய்தாலும் அதுவும் நலம்தான். இருந்தாலும் அதிகாரிகள் இருக்கின்றபொழுது வேத மந்திரங்களைச் சொல்வது சிலாக்கியமானது. அதை நாம் ஏன் இழக்க வேண்டும்? தற்சமயம் நடைபெறும் பல திருமண வைபவங்களில் பிரதான மந்திரங்களைக் கேட்கக்கூடிய வாய்ப்பு மிக அரிதாகவே இருக்கின்றது. பதினைந்து இருபது நிமிடங்களில் சில காரியங்களைச் செய்து நேரடியாக திருமாங்கல்யத்தை எடுத்துக் கட்டச்செய்து அட்சதைகளை தூக்கிப் போட்டுவிட்டு உடனடியாக மணமக்களுக்குப் பரிசு பொருட்களை தந்து விட்டுச் செல்வதுபோல திருமண வைபவங்கள் நவீனமாகிவிட்டன.
யாரோ நம் குடும்பத்துக்குச் சம்பந்தமில்லாதவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு நேரம் ஆகிவிடுமே என்று கவலைப்பட்டு மந்திரப்பூர்வமாக நம்மைத்தேடி வந்திருக்கும் தேவதைகளையும் பித்ருக்களையும் உதாசீனப்படுத்துவது நம் கண்ணுக்கும் மனசுக்கும் தெரியவில்லை. விபரமறிந்தவர்கள் எடுத்துச் சொல்வதில்லை. சொன்னாலும் கேட்பதில்லை.அர்த்தங்களை இழந்த அரைகுறை திருமண வைபவத்தை செய்வதைவிட பதிவுத் திருமணம் மேலானது. அதிகபட்சம் ஒரு மணிநேரம் ஒண்ணரை மணிநேரம் நடக்கக்கூடிய வைதீகக் காரியங்களைப் புரிந்து கொள்ளாமலும், பொறுமை இல்லாமலும் நாம் புறக்கணித்து வருகின்றோம். எல்லா வைதீகக் காரியங்களையும் ஒரு கடமைபோல் காசு பணம் செலவழித்துச் செய்கின்றோம். நம்முடைய எண்ணங்கள் எல்லாம் வந்திருக்கும் தேவதைகளை வணங்கி முறையாக வழியனுப்பி வைப்பதில் இல்லை.
அவர்களையெல்லாம் வரவழைத்து அரைகுறை மந்திரங்களால் பூஜித்து அலட்சியப்படுத்தி அதே நேரத்தில் சின்னஞ்சிறு உலக மரியாதைக்காக மனிதர்களை கவுரவிக்கின்ற ஒரு செயலை செய்து வருகின்றோம். அதனால் மேடையில் இருக்கக்கூடிய பிதுர் தேவதைகளும், சக்தி வாய்ந்த தேவதைகளும் நம்மை அழைத்துவிட்டு அலட்சியப்படுத்துகின்றார்களே என்று கோபம் அடைகின்றனர். இதனைப் புரிந்து கொள்ளும் சக்தி நமக்கு இல்லாதது துரதிஷ்டமானது. இனியாவது இந்த மந்திரங்களின் பொருளையும் மரபையும் செய்ய வேண்டிய செயல்களின் முக்கியத்துவத்தையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.