கல்யாண வரமருளும் ஸ்ரீ கல்யாண ஷண்முகர்
ஈசன் வீற்றிருக்கும் திருத்தலங்களில் தானும் உடனிருந்து தனது அற்புத பக்தர்களின் குறைகளை தீர்த்து திருவருள் புரிந்து வருகின்றார், வடிவேலழகன் முருகன். அப்படி முருகன் தனது அருள் மழையால் அடியார்களின் உள்ளம் குளிரச் செய்யும் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது அவல்பூந்துறை. நம் தமிழகத்தில் இரண்டு பூந்துறைகள் உள்ளன. ஒன்று, திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சிந்து பூந்துறை. இது பாண்டிய நாட்டு வைப்பு தலங்களுல் ஒன்றாகத் திகழ்கிறது. மற்றொன்று, ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள இந்த அவல்பூந்துறை. இது கொங்கு நாட்டு வைப்புத்தலங்களுல் ஒன்றாகப் போற்றப்படுகின்றது.
சேர - சோழ - பாண்டியர்களான மூவேந்தர்களின் கொங்குமண்டலத் தலைநகரங்களுல் ஒன்றாக இந்த அவல்பூந்துறை விளங்கியுள்ளது. மற்றவை நசியனூர் மற்றும் வெள்ளோடு ஆகும். சோழர் காலத்தில் கொங்கு மண்டலம் மேல் பூந்துறை நாடுகள் மற்றும் கீழ்ப்பூந்துறை நாடுகள் என்று இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் மேல் பூந்துறை நாட்டின் தலைநகரமாக இந்த அவல்பூந்துறையும், கீழ்ப்பூந்துறை நாட்டின் தலைநகரமாக திருச்செங்கோடும் திகழ்ந்துள்ளன.பூவனமாக பூத்துக் குலுங்கிய ஊர் என்பதால், பூந்துறை ஆனது இப்பதி. பயிர் நிலங்களும் இங்கு பெருமளவில் இருந்ததால் (அவல் = பயிர் செய்யப்பட்ட பூமி) அவல்பூந்துறை என்று அழைக்கப்பட்டது.
``மேன்மை பெறு பூந்துறை, பொன் மேவும் பூந்துறை, பொன் உலகோர் பூந்துறை’’ என்றெல்லாம் பலவாறு புகழ்ந்துள்ளனர் புலவர்கள். அப்பர் தனது அடைவுத் திருத்தாண்டகத்தில் இப்பதியை வைப்புத் தலமாக புகழ்ந்து பாடியுள்ளார். கொங்கு தேசத்தின் புலவர்களில் ஒருவரான காளியண்ண புலவரால் இந்த பூந்துறை புராணம் இயற்றப்பட்டுள்ளது. இலக்கியச் சிறப்பில் சிறந்து விளங்குகின்றது இந்த பூந்துறை நாடு. இந்த அவல்பூந்துறையை மக்கள் வழக்கில் பூந்துறை என்று அழைக்கின்றனர். கொங்கு நாட்டில் உள்ள 43 மேற்கு பார்த்த சிவாலயங்களில் ஒன்றாக போற்றப்படுகின்றது. இந்த அவல் பூந்துறை. ஆதியில் தேவி பார்வதி இங்கு பூந்தோட்டம் அமைத்து, காவிரி தீர்த்தத்தால் சிவபெருமானை அபிஷேகம் செய்து பலவகை புஷ்பங்களால் அர்ச்சித்து, தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்கி, ஈசனது ஓர் பாகத்தில் ஒடுங்கியதாக தலபுராணம் எடுத்துக் கூறுகின்றது.
பேருந்து சாலையை ஒட்டி ஆலயம் பெரிய அளவில் முன்புறம் விசாலமான இடைவெளியுடன் அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய ஐந்துநிலை ராஜகோபுரம் நம்மை கவர்ந்திழுக்கின்றன.
வெளியே நேராக கொங்கு நாட்டு கோயில்களுக்கே உரிய தீபஸ்தம்பமும், நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. கோபுரத்திற்கு வெளியே முகமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளே செல்ல, மேல்புறம் தளம் போடப்பட்டுள்ளது. நேராக பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தி.
இடதுபுறம் வள்ளி மற்றும் தெய்வானை உடனான ஆறடி உயரத்தில் ஸ்ரீ கல்யாண ஷண்முகர், தென்முகம் பார்த்தபடி தனிச் சந்நதியில் அருள்புரிகின்றார். ``என்னை வணங்குபவர்களை எமன் எளிதில் நெருங்க முடியாது என்கின்றார்’’ இந்த ஆறுமுகக்கடவுள். பக்கத்தில் ஸ்ரீ சோமாஸ்கந்தர் உற்சவவிக்ரஹமாக அருள்பாலிக்கின்றார்.
அற்புதமான கந்தனின் அருள் தரிசனம் முடித்து, சிவன் சந்நதிக்கு விழைகின்றோம்.
சற்று உயரமான சந்நதி அமைப்பு. இரு பக்கமும் துவாரபாலகர்கள். படிகளில் ஏறி அர்த்தமண்டபத்தில் நின்றபடி அய்யனை துதிக்கின்றோம். கருவறையில் தாந்தோன்றி லிங்கமாய் தயை புரிகின்றார் புஷ்பவனேஸ்வரர். இவரை பூவனநாதர் என்றும் பூந்துறைநாதர் என்றும்கூட அழைத்திடுவர். திருப்பணியின்போது இவரை நகர்த்திட எண்ணி, லிங்கத்தை சுற்றி பள்ளம் தோண்டினர். சுமார் 10 அடிக்கும் மேலாக இவரது பாணம் பூமிக்குள் செல்வதால் மூலவரை நகர்த்தும் முயற்சியை கைவிட்டனர், திருப்பணிக் குழுவினர். ஈசனின் மகிமையை யார்தான் உணர்வர்??
சுவாமி தரிசனம் முடித்து, ஆலய வலம் வருகையில்... நவகிரகங்கள் மற்றும் வலம்புரி கணபதியை வணங்குகின்றோம். மேடை மீது சுயம்பு லிங்கமும், தர்மசம்வர்த்தினி அம்பிகையையும் காண்கின்றோம். பைரவர், காசிலிங்கம் மற்றும் சிவசூரியன் வீற்றருள்கின்றனர். சிவனது கோஷ்ட மாடங்களில் முறையான தெய்வங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக அம்பிகையின் தனிச் சந்நதி அமைந்துள்ளது. சுவாமி சந்நதிக்கும் அம்பாள் சந்நதிக்கும் இடையில் ஒரு கிணறு உள்ளது. அகலமான மகாமண்டபம். பின்னர் அந்தராளம் மற்றும் கருவறை. அம்பிகையாக ஸ்ரீ பாகம்பிரியாள் நான்கு கரங்களுடன் நின்றவண்ணம் எழில் சிந்துகின்றாள். கிழக்கு நோக்கிய காசி விஸ்வநாதர் - விசாலாட்சி அம்மன் தனித்தனி சந்நதிகளில் உள்ளனர்.
ஈசான பாகத்தில் தல விருட்சமான வன்னி மரமும் அதன் கீழே வன்னி விநாயகரையும் தரிசிக்கின்றோம். உடன் நாகராஜர்களும் உள்ளனர். மரங்கள் பல உள்ளே உள்ளதால் பசுமையாக இருக்கின்றது ஆலயம். அனைத்து சிவாலயவிசேஷங்களும் இங்கு சிறப்புற அனுசரிக்கப்படுகின்றன. அதோடு, முருகனுக்கு உகந்த தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தர்சஷ்டி, கார்த்திகை ஆகியனவும் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகின்றன. பிரதி மாத சஷ்டியில் சண்முகர் திரிசதி அர்ச்சனையும், தீபாராதனையும் நடைபெறும். மார்கழி மாதம் திருவாதிரை அன்று முன்தினம் நடராஜருக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மறுநாள் காலை ஆருத்ரா தரிசனம்.
அதுபோல் புரட்டாசி மாதத்தில் ஊரில் உள்ள தாமோதர பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று, அலங்கார கோலத்தில் சிவன் ஆலயத்திற்கு வந்து, ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ புஷ்பவனேசரை கூட்டிக்கொண்டு நகர்வலம் வந்து, பின், அவரவர் தம்தமது ஆலயங்களை அடைந்திடுவர். இந்த வருடாந்திரத் திருவிழா இங்கு விமர்சையாக நடைபெறுகின்றன. இந்து சமய அறத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும். தினமும் இரண்டு காலபூஜைகள் நடைபெறுகின்றன.
கடைசியாக 2019ஆம் ஆண்டு இவ்வாலய குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
தற்போது விரிவாக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திருமணத்தடை நீடிப்பவர்கள், இங்கு வந்து முருகனுக்கு நான்கு பூமாலைகள் சாற்றி, அதில் இரண்டு மாலைகளை பெற்றுச் செல்கின்றனர். பின்னர் திருமணம் முடிந்து வந்து ஷண்முகருக்கு அபிஷேகம் நடத்தி, பச்சை வஸ்திரம் சாற்றி கந்தனுக்கு பிடித்த தேனும் - தினைமாவும் படைத்து வணங்குகின்றனர். தொழில் தடை, எதிரிகளால் ஏற்படும் பயம் அகியவற்றிற்கு செவ்வாய்க் கிழமையில் வழிபட்டு, நிவர்த்தி அடைகின்றனர் பக்தர்கள் என்கின்றார் ஆலய அர்ச்சகர் சிகாமணி குருக்கள்.
வழி: - ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டத்தில், ஈரோட்டில் இருந்து அரச்சலூர் வழியாக காங்கேயம் மற்றும் தாராபுரம் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அவல்பூந்துறை.