நவராத்திரி தகவல்கள்
*கொலு பொம்மைகளை அடுக்கும்போது முதலில் மரப்பாச்சி பொம்மைகளை வைக்க வேண்டும். அதேபோல, நவராத்திரி முடியும் நாள் மறக்காமல் மரப்பாச்சி பொம்மைகளை படுக்க வைக்க வேண்டும். தினமும் இரவு கொலுவுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும்.
*சுவாமி பொம்மைகளை மட்டும் ‘தீம்’ அடிப்படையில் கொலுப்படிகளில் வைக்கலாம். ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு என்று படிப்படியாக பொம்மைகளை வைக்க வேண்டும். நவராத்திரியின் சிறப்பே அதுதான்.
*முளைகட்டிய கேழ்வரகை பார்க் மணலில் தூவினால் அழகாக இருக்கும்.
*பழைய குக்கர் கேஸ்கட்டை இரண்டாக வெட்டி, அதன்ேமல் கலர் பேப்பரை ஒட்டி, பூங்கா மண்ணில் ஊன்றி வைத்தால், அழகிய அலங்கார வளைவுகள் கிடைக்கும்.
*டிசைன் செய்த டப்பாக்களில் மண்ணை அடைத்து அதில் ஒருநாள் முன்பே ஊறவிட்ட கடுகு, வெந்தயத்தை தெளிக்கவும். கம்பீரமாக வளரும். இதை கொலுவின் முன் வைத்து சுற்றி கோலம் போட்டால் பார்க்க அழகாக இருக்கும்.
*ரங்கோலி கோலம் போட்டவுடன் அதன் மீது கலர் ஜிகினாத் தூள்களை தூவி விட்டால் காண்பவர் கண்களைக் கவர்ந்திழுக்கும்.
*கொலு முடிந்ததும் பொம்மைகளை பேக்கிங் செய்யும் போது, அட்டைப் பெட்டிகளில் தனித்தனியாக மண், பீங்கான், பேப்பர் பொம்மை வகைகளை பிரித்து வைக்க வேண்டும். துணி சுற்றி வைத்தால் காலப்போக்கில் பொம்மைகளின் நிறம் மங்கலாகி விடும்.
*நவராத்திரியில் செய்யக்கூடாதவை: மிளகாய் வறுத்தல், இடித்தல், சண்டை போடுதல், குழந்தைகளை திட்டுதல், ஊசி நூல் உபயோகப்படுத்துதல், தலைவிரிக் கோலமாக இருத்தல் - இவையெல்லாம் தவிர்க்க வேண்டியவை.
- விஜயலட்சுமி, வேலூர்.