செல்வாக்கும் உயர்பதவியும் தானே தேடி வரும்
ஜோதிட ரகசியங்கள்
சூரியன் லக்னத்தில் இருந்தால், பித்த சரீரம் உள்ளவராக இருப்பார். ஆனால் கம்பீரமாக இருப்பார். மெல்லிய உடல் வாகு கொண்டவராக இருந்தாலும், கண்களால் எதிரிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. உஷ்ண நோய்களாலும் இருமல் மற்றும் சுவாசப் பிரச்னைகளாலும் சிரமப்படும் அமைப்பு இருக்கும். சூரியன் இரண்டாம் இடத்தில் இருந்தால், பேச்சில் கவர்ச்சியும் கம்பீரமும் இருக்கும். மூன்றாம் இடத்தில் இருந்தால், சகோதரர்கள் நல்ல நிலையில் இருப்பார்கள். வீரிய ஸ்தானம் என்பதால் எதையும் துணிச்சலோடு எதிர்கொள்வார்கள். நான்காம் இடத்தில் சூரியன் இருப்பது தாயாருக்கு நல்லதல்ல. காரியத் தடங்கல்கள் ஏற்படும். வெளிநாட்டு புகழ் கிடைக்கும். சரீரம் மெலிந்திருக்கும்.
பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் சூரியன் அமர்வது, தகப்பனார் விஷயத்தில் சில கண்டங்களைத் தரலாம்.
ஆனால், நுண்கலைகளில் வல்லவர் களாக இருப்பார்கள். சங்கீதம் போன்ற கலைகளில் நல்ல ஆர்வம் இருக்கும்.
ஐந்தாம் இடம் புத்திர ஸ்தானம் என்பதால், அங்கே சூரியன் அமர்வதால் பிள்ளைகளுக்கு பிரச்னைகள் வரலாம். ஆறாம் இடம் உஷ்ண கிரகமான சூரியன் அமர்வதால், வயிறு சம்பந்தப்பட்ட ஜீரணப் பிரச்னைகள் வரலாம். இந்த இடத்தை அஷ்டமாதிபதி பார்த்தால், நிச்சயம் வயிற்றில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும்.
செவ்வாய் பார்த்தாலும் கிட்டத்தட்ட இப்படித்தான். ஆனால், கலைத்தொழில் உயர்வு கிடைக்கும். பொதுவாக ஏழாம் இடத்தில் சூரியன் அமர்வது சிறப்பாகச் சொல்லப்படவில்லை. களத்திர ஸ்தானம் என்பதால், கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளும், பிரிவும் ஏற்பட வாய்ப்புண்டு. எட்டாம் இடத்தில் சூரியன் அமர்வதால் தீர்க்காயுள் இருந்தாலும் ஆரோக்கியப் பிரச்னைகள் தலைதூக்கும். ஒன்பதாம் இடம் பாக்கியஸ்தானம். அங்கே சூரியன் அமர்வது தந்தையாருக்கு நல்லதல்ல. தந்தையின் ஸ்தானத்தில் தந்தைக்குரிய காரக கிரகமான சூரியன் அமர்வதால் தந்தைக்கு கண்டங்களும் பிரிவும் ஏற்படலாம். ஆனால், ஒன்பதாம் இடம் பாக்கியஸ்தானம் என்பதால் இந்த இடத்தில் சகல சாஸ்திர பண்டிதனாகவும் வேத நிபுணராகவும் படிப்பில் கெட்டிக்காரன் உள்ளவனாகவும் இருக்கும் வாய்ப்பு உண்டு.
பத்தாம் இடம் காரிய ஸ்தானம், கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம், ஜீவனஸ்தானம் என்றெல்லாம் சொல்வார்கள். பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பது ஜோதிட மொழி. பத்தாம் இடத்தோடு சூரியன் தொடர்பு பெற்றிருந்தால் அவர்கள் எந்த முயற்சியும் இல்லாமல்கூட அரசாங்கத்தில் ஏதேனும் ஒரு நல்ல பதவியில் இருப்பார்கள். அவர்கள் படிக்காதவர்களாக இருந்தாலும்கூட அரசாங்கத்தில் செல்வாக்கு உள்ளவர்களாக இருப்பார்கள். சிறந்த நிர்வாகிகளாக திகழ்வார்கள். 11-ஆம் இடம் ஆசைகள் நிறைவேறும் இடம்.
அங்கே சூரியன் அமர்வதன் மூலமாக தனலாபம், தொழில் லாபம் அதிகரிக்கும்.
பதவிகளும் கௌரவமும் தானாக வந்து சேரும். மோட்ச ஸ்தானமாகிய 12-ஆம் இடத்தில் சூரியன் அமர்வது பக்தியை ஏற்படுத்தும். தான தருமத்தில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். இவைகளெல்லாம் பொதுவான பலன்கள். சில ஜாதகங்களில் இந்த பலன்கள் அப்படியே பொருந்துவதைப் பார்க்கலாம்.
ஜாதக பலன்களை நிர்ணயிக்கும் போது, சூரியன் நின்ற நிலை, ஸ்தான பலம், சூரியனோடு இணைந்திருக்கும் கிரகங்கள், சூரியனைப் பார்க்கும் கிரகங்கள் எனப் பல விஷயங்களைக் கணக்கிட்டுத்தான் பலன் கூற முடியும். ஆனால், ஒரு விஷயம் நிச்சயம். சூரியன் பலம் பெற்றிருந்தால், குரு முதலிய சுப கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால், சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்களின் சாரம் பெற்றிருந்தால் நிச்சயம் அவர்கள் செல்வாக்கான வாழ்க்கையைப் பெற்றே தீருவார்கள். ராமருடைய ஜாதகத்தில் கடக லக்கினத்திற்கு பத்தில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பார். சந்திர கேந்திரத்திலும் லக்ன கேந்திரத்திலும் குரு கேந்திரத்திலும் சூரியன் இருக்கும் அற்புதமான அமைப்பு.அதனால் சிறந்த குணவானாகவும் எல்லோரையும் வெல்பவராகவும் பல்லாண்டு காலம் சிறந்த ஆட்சியாளராகவும் ராம ராஜ்ஜியத்தை தந்தார். ஆத்மகாரகனான சூரியன் வலுப்பெற்று விட்டால் அதற்கு நிகரான ஒரு விஷயமே இல்லை என்று சொல்லலாம்.
ரவி யோகம், புத ஆதித்ய யோகம், திரிலோச்சன யோகம் போன்ற யோகங்கள் சூரியனால் ஏற்படுகின்றன. சூரியன் 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் இருந்தால், ரவி யோகம் ஏற்பட்டு அரசு வேலை, வீடு, நிலம், பொன், பொருள் சேர்க்கை போன்ற பலன்களைத் தரும். சூரியன் மற்றும் புதன் இணைந்திருந்தால், புத ஆதித்ய யோகம் ஏற்பட்டு புத்திசாலித்தனம், தெளிவான மனநிலை, தன்னம்பிக்கை போன்ற பலன்கள் கிடைக்கும். சூரியன் முதல் வீட்டில் இருக்க திரிலோச்சன யோகம் என்பார்கள். சந்திரன் அல்லது செவ்வாய் 5, 9-ஆம் இடங்களில் இருந்தால், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் சிறந்து விளங்கலாம். சூரியன் மற்றும் சந்திரன் சேர்க்கையால் ராஜயோகம் ஏற்படும். பொதுவாக இதை அமாவாசை யோகம் என்று சொல்வார்கள்.
அரசு பதவியில் அமரலாம் அல்லது அரசாங்கத்தை இயக்கும் அமைப்புக்கு வரலாம். சூரியன் மற்றும் செவ்வாய் சேர்க்கையால் மனஅமைதி ஏற்படும். கடின உழைப்புத்திறன் மற்றும் உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட ஆர்வத்தைத் தரும். ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் சிம்ம ராசியில் இணைந்து இருந்தால், இந்த யோகம் அவருக்கு அரசாங்கத்தில் உயர்ந்த பதவியைப் பெற்றுக்கொடுக்கும்.
மிகச்சிறந்த தத்துவ அறிவையும். என்னுடைய நண்பர்கள் எல்லோருடைய ஜாதகங்களையும் நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக அரசாங்கப் பதவியில் சம்பளமும் ஓய்வூதியமும் பெறும் அவர்கள் ஜாதகத்தில் ஏதாவது ஒரு வகையில் சூரியன் பலம் பெற்றிருக்கிறார். என்னுடைய ஜாதகத்திலேயே கும்ப லக்கனம் ஐந்துக்குரிய புதனும் ஏழுக்குரிய சூரியனும் லக்ன கேந்திரத்தில் அமர்ந்திருக்க, நான் 36 ஆண்டுகள் அரசு உதவி பெறும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். சாதாரண மக்களின் ஜாதகத்திலிருந்து உலகின் சிறந்த அரசியல் தலைவர்கள் வரை உள்ள ஜாதகங்களில் சூரிய பலம் இருப்பதைக் காண முடிகிறது.