அழகன் குடி கொண்ட ஆறுபடை வீடுகள்
சங்கப் பாடல்களில் முருகப்பெருமானின் பிறப்பு, தோற்றம், பெயர், வாகனம் , கொடி, ஆயுதம் பற்றிய பல குறிப்புகள் உண்டு. முருகனுக்குரிய பெயர்களாகச் சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, கடவுள், மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் போன்ற பல பெயர் குறிப்புகள் உண்டு.பழந்தமிழ் நூலான பரிபாடலில் கடுவன் இளவெயினனார் 81 வரிகளில் முருகனின் அத்தனைச் சிறப்புகளையும் பாடுகின்றார்.
அதில் உள்ள சில வரிகள் இது.
அவை வாயும் அல்ல, பொய்யும் அல்ல,
நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்;
சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை;
சிறப்பினுள் உயர்பு ஆகலும்,
பிறப்பினுள் இழிபு ஆகலும்,
ஏனோர் நின் வலத்தினதே;
“முருகா! நீ எல்லை இல்லா தவன்.
இந்த உலகமும் நீ.ஆதலின் உன்னைச் சிறப்பித்துப் போற்றுவதால் உனக்குச் சிறப்பு வரப் போவதில்லை. சிறப்புக்கும் சிறப்பு நீ.எல்லாரும் நின் ஆற்றலுக்கு உட்பட்டவர்கள் என்ற வரிகள் பிற்கால முருகன் பற்றிய நூல்களுக்கு முன்னெடுத்துக் கொடுக்கும்.சங்க நூலான குறுந்தொகையில் முருகனது திருவடியின் நிறத்திற்கும், அழகிற்கும் தாமரை மலர் உவமையாகச் சொல்லப்படுகிறது. முருகப் பெருமான் அணிந்துள்ள ஆடையானது சிவப்பு நிறம் பொருந்திய மணியினை ஒத்ததாய் அமைந்துள்ளது.
அகநானூறு 20ஆம் பாடலில்
‘‘நெடு வேள் மார்பின் ஆரம் போல,
செவ் வாய் வானம் தீண்டி,
மீன் அருந்தும் பைங் காற்
கொக்கினம் நிரை பறை உகப்ப”
என்ற துவக்க வரிகளின் மூலம் முருகனின் சிவந்த மேனிக்குச் செவ்வானமும், அவ்வானத்தையொட்டி வரிசையாகப் பறந்து செல்லும் கொக்கிற்கு முருகனது மார்பிலணிந்த முத்தாரமும் உவமையாகச் சொல்லப்பட்டுள்ளன.
முருகப்பெருமானின் உடையும், மாலையும் சிவந்த நிறமுடையன. வேற் படையும் பவழக்கொடியினது நிறத்தை ஒத்துள்ளதைப் பரிபாடலின் 18 ஆம் பாடல்
“உடையும் ஒலியலுஞ்
செய்யை மற்றாங்கே”,
“படையும் பவழக் கொடி
நிறம் கொள்ளும்”
என்ற பாடல் வரிகள் தெளிவுபடுத்தும்.
முருகப்பெருமானின் வாகனம் மயில் மட்டுமல்ல யானையும் கூட. அக நானூற்றில் முருகப்பெருமான் களிற்றைத் தன்ஊர்தியாகக் கொண்ட செய்தியை,
“கடம்புங் களிறும் பாடித் தொடங்கு” (138)
என்ற தொடர் விளக்கும்.''
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்
மணிமயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும் என
ஞாலம் காக்கும்
என்ற புற நானூற்றுப் பாடல்( 56)ஆம் பாடலும் முருகனுக்கு யானையும் மயிலும் ஊர்திகளாக அமைந்துள்ள செய்தியைச் சுட்டுகிறது.முருகனுக்குரிய மாலையாகக் கடம்ப மாலையானது சிறப்பிடம் பெறுகிறது. முருகனின் ஆயுதமாகிய வேல் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் அதிகம்.
“விறல்வெய்யோனூர்
மயில் வேனிழனோக்கி” (பரிபாடல் - 21)
என்ற வரியில் செவ்வேள் பகைவரைக் கொன்ற வேலினை உடையவன் என்று வருவதை கவனிக்க வேண்டும்.சங்க இலக்கியமான பரிபாடலின் 8ஆம் பாடலானது முருகனது பிறப்பினை
“மணமிடற்றண்ணற்கு
மதியாரற் பிறந்தோய் நீ”
என்னும் அடியால், சரவணப் பொய்கையில் பிறந்து, அறுவகைக் கார்த்திகை மகளிரால் வளர்க்கப்பெற்றவன் என்பதையும், சிவபெருமானுடைய திருமகன் என்பதையும்
விளக்குகிறது. இப்படி நூற்றுக்கணக்கான செய்திகளை முருகன் பெருமைகளாக சொல்லிக்கொண்டே செல்லலாம்.தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூலாக விளங்கும் தொல்காப்பியம் முருகனைச் “சேயோன்” என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளது.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
என்பது தொல்காப்பியம். முருகன் என்றால் அழகன். ஒவ்வொருவர் மனதிலும் வசிப்பதால் குகன் என்ற திருநாமம் உண்டு., சரவணப் பொய்கையில் அவதரித்ததால் சரவணன். சிவனுக்கு பிரணவ உபதேசம் செய்ததால் “சிவகுருநாதன்” ஸ்வாமி நாதன்.
ஞானமே வடிவானவர் என்பதால் ஞானஸ்கந்தர்.
இவருடைய திருத்தலங்களில் ஆறு படை
வீடுகளுக்கு சிறப்பு உண்டு..
இது ஆறு படைவீடுகளல்ல. ஆற்றுபடை வீடுகள்.
முருகக் கடவுள் நெறி நின்று, உயிரினங்களுக்கு உய்வடைய வழிப்(ஆறு) படுத்தும் தலங்கள் என்பர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் - மதுரைக்கு தென்மேற்கில் ஏறத்தாழ 8 கி.மீ தொலை வில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.திருப்பரங்குன்றம் மலைக்கு திருப்பரங்கிரி, கந்தமாதனம், கந்தமலை, சத்தியகிரி, தென் பரங்குன்றம் என்று பல பெயர்கள் உண்டு. முருகனுக்கு உரிய கோயில் என்றாலும் சிவபெருமானே மூலவராக சத்தியகிரீஸ்வரர் என்னும் பெயரோடு இருக்கின்றார். இவர் எதிரில் பெருமாளும் காட்சி தருகின்றார். பெருமாளுக்கு இடது புறம் தேவி பூதேவி மதங்க முனிவர் இருக்கின்றார்கள்.
சத்தியகிரீஸ்வரருக்கு பின்புறம் சோமஸ்கந்தர். சிவன் பார்வதியின் நடுவில் முருகன் அமர்ந்த கோலம் காணலாம். இக் கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். தெய்வானை ஒருபக்கம். நாரதர் ஒருபக்கம் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு அருகே சூரிய சந்திரர்கள் உள்ளனர். இங்குள்ள முருகனுக்கு அபிஷேகம் கிடையாது. அவருடைய வேலுக்கு அபிஷேகம் செய்வார்கள். சூரனை வென்ற சிறப்புக்காக தேவர்கள் தலைவனாகிய இந்திரன் தன் மகள் தெய்வானையை மணமுடித்து வைத்தார். திருப்பரங்குன்றம் மடப்பள்ளி மண்டபம் அருகில் சன்யாசி கிணறு என்று ஒன்று உள்ளது. இந்த கிணற்றுத் தீர்த்தம் தினமும் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
2. திருச்செந்தூர்
திருச்செந்தூர்-வங்கக் கடலோரம் எழில் சிந்தும் தலம்.திருசீரலைவாய் என்று பெயர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு என்று போற்றப்படும். இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது.கந்த சஷ்டி விழாவில் சூர சம்ஹாரம் இங்கு விசேஷம். திருச்செந்துார் வரும் பக்தர்கள் கடலில் நீராடி முருகனைத் தரிசிப்பர். நள்ளிரவு 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபராதனை, 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 2:30 மணிக்கு தீபாராதனை நடைபெறும். காலை 9:00 மணிக்கு மூலவர், உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். இதை தரிசிப்போருக்கு ஆண்டு முழுவதும் முருகனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
இந்த சிறப்பு நாளில் திருச்செந்தூரில், கருவறையில் தண்ணீர் நிற்கும் படி வைத்து இறைவனுக்கு வெப்பம் தணிக்கும் விழா நடத்தப்படுவது வழக்கம். சிறுபருப்பு பாயசம், அப்பம், நீர்மோர் முதலியவை நைவேத்தி யமாகப் படைக்கப்படும்.கோயில் வசந்த மண்டபத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை வைத்து, முருகனின் வாயிலிருந்து சிந்திய பாலினை குடித்த அந்த மீன்கள் சாப விமோசனம் பெறும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது..ஆறு முனிவர்களின் உருவ பொம்மையும் காணலாம்.திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தன்று வள்ளி திருமணம் நடைபெறுகின்ற பொழுது தினைமாவு விளக்கு ஏற்றுவர். அப்படி விளக்கு ஏற்றி வைத்து வள்ளி கல்யாணத்தை தரிசித்தால் திருமணத் தடைகள் நீங்கும். ஆதி சங்கரர் இத்தலத்தில் சுப்பிரமணிய புஜங்கத்தை இயற்றியது குறித்த வரலாறு உண்டு. ஆதிசங்கரரின் புகழைக்கண்டு பொறாமைகொண்ட அபிநவகுப்தர் எனும் புலவர் மந்திர ஏவலால் காசநோயால் வருந்தும்படிச் செய்தாராம். சிவபிரான் சங்கரருடைய கனவில் தோன்றி ‘ஜயந்திபுரம்’ (திருச்செந்தூர்) எனும் திருத்தலத்தில் சூரபத்மனை வென்ற செந்தில்குமரனைக் கண்டு வழிபட்டால் இக்கொடியநோய் அடியோடு விட்டகலும் எனக்கூறித் திருநீறு அளித்தருளினார்.ஆதிசங்கரரும் தனது யோகசக்தியால் மறுநாள் திருச்செந்தூரை அடைந்து அங்கு பாம்பு ஒன்று செந்தில்குமரனின் திருவடிகளில் வழிபடுதலைக் கண்டார். உடனே பாம்பு எனும் பொருளைத்தரும் ‘புஜங்கம்’ எனும் பெயரைக்கொண்ட புதுவகையான ஒரு செய்யுள் அமைப்பில் சமஸ் கிருதத்தில் முப்பத்துமூன்று கவிதைகள் கொண்ட ‘சுப்பிரமணிய புஜங்கத்தை’ப் படைத்தார். தமது நோயும் நீங்கப் பெற்றார்.
3. பழனி
பழனி முருகனின் மூன்றாம் படை வீடாகும். பழனிக்கு பொதினி என்ற பெயர் உண்டு. இப்பகுதியை ஆவி என்னும் வேளிர் தலைவன் ஆட்சி செய்தான். அதனால் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. முருகன் ஆண்டி வேடம் தரித்து சித்தரைப் போல நின்றதால் சித்தன் வாழ்வு என்றும் அழைக்கப்படுகிறது.மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது பழனிமலை. 18 சித்தர்களில் ஒருவரான போகரால் ஒன்பது வகை பாஷாணத்தைக் கொண்டு செய்த புகழ் பெற்ற முருகன் சிலை, இருக்கிறது. சங்ககால ஓவியங்கள் சில பழனியில் கண்டுபிடிக்கப்பட்டன என்பது இத்தலத்தின் பழமைக்கு எடுத்துக்காட்டு.புராணப்படி, ஒருநாள் நாரதர் மிக அரிதாகக் கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு கொண்டு வந்தார்.பார்வதி அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார். உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தைப் பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தைச் சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாகக் கருதி அவர்களைச் சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலை யில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் ``பழம் நீ’’ (பழனி) என அழைக்கப்படுகிறது. பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் மூலம் பழனிமலையையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார்.இலக்கிய அறிவியல் ரீதியில் பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லின் அடிப்படையில் உருவான பெயரே பழனி. பழனம் என்ற சொல் விளைச் சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது.
4. சுவாமிமலை
சுவாமிமலை (திருவேரகம்): முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளி உள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர். முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமி நாதன் எனப் பெய ராயிற்று. சுவாமிமலை முருகனுக்கு அதிகாலையில் அபிஷேகம், அலங் காரம் நடைபெறும். அதன்பின் சங்காபிஷேகம், மாலையில் சிவனுக்கு முருகன் உபதேசிக்கும் வைபவம் நடக்கும். இரவு வள்ளி, தெய்வானையுடன் முருகன் புறப்பாடு நடைபெறும். கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன் கூடிய ராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. இத்தலத்தின் தல மரம் நெல்லி மரமாகும். முருகன் சந்நதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் கொடி மரத்தின் அருகே கண்கொடுத்த விநாயகரான நேத்திர விநாயகர் உள்ளார். உள்சுற்றில் தல விநாயகர், வள்ளி தெய்வா னையுடன் சுப்பிரமணியர், சரஸ்வதி, நாரதர், வீரபாகு, அகத்தியர், அருணகிரிநாதர் ஆகியோர் சிலைகள் உள்ளன. சுவாமிநாதசுவாமியின் சந்நதிக்கு எதிராக மயிலுக்குப் பதிலாக யானை வாகனம் உள்ளது. இது இந்திரன் அளித்ததாகும்.கருவறையில் முருகன் வலது கரத்தில் தண்டம் ஏந்தியபடி ஊறு முத்திரையில் நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றார்.அருணகிரிநாதர் மற்றும் நக்கீரர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் 4ம் திருமுறையில் உள்ளன.இக்கோயிலுக்கு அருகேயுள்ள மற்றொரு முருகன் கோயில் ஏரகம் கந்த நாதசுவாமி கோயிலாகும்.
5. திருத்தணி
திருத்தணி, முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர். இவ்விடத்தின் வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்ட தலமாகும்.
முருகப் பெருமான் தன் கிரியா சக்தியாகிய தெய்வானையைத் திருப்பரங் குன்றத்தில் திருமணம் செய்து கொண்டாற்போல் திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாக வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருந்தருள்கிறார்.திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது. முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். வைகாசி விசாக நாளில் திருத்தணி மலையிலுள்ள சரவணப் பொய்கையில் நீராடி, முருகப்பெருமான் வழிபட்ட குமாரேஸ்வரரை வழிபட்டால் பிரம்மஹத்தி பாவமும் தீரும்.திருத்தணி செல்ல வேண்டும் என்று நினைத்தாலே போதும். அந்த திசையை நோக்கி தொழுதால் போதும் சகல பாவங்களும் விலகும். இங்கு திருப்புகழ் படித்திருவிழா விசேஷமாக நடக்கும். டிசம்பர் 31 அன்று மாலையில் தீபம் ஏற்றியதும், படித்து திருப்புகழில் இருந்து ஒரு பாடல் பாடி, 365 படிக்கும் நெய்வேத்தியம் செய்யும் வழக்கத்தை வள்ளிமலை சுவாமிகள் உருவாக்கினார். அது இங்கு விசேஷமாக நடக்கிறது.
6. பழமுதிர்சோலை
பழமுதிர்சோலை - முருகனின் ஆறாம் படைவீடாகும். திருமுருகாற்றுப் படையில் வரும் பழமுதிர்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார்.முருகப் பெருமான் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்கு தானென நம்பப்படும் இடம்.அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.பழமுதிர் சோலை என்பதற்கு ``பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை’’ என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம். இங்குள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார்.இந்தக் கோயிலில் கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும், முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூசைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.நிறைவாக ஒரு அருமையான முருகன் கோயில் செய்தியோடு நிறைவு செய்வோம்.குழந்தைகளை காக்கும் குமரன்
தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அம்மாபேட்டையில் இருக்கிறது. முத்துகுமாரசாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் மிகப் பெரிய சிறப்பு என்னவென்று சொன்னால், குழந்தைகளை தத்து கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது விசேஷம். நோய்நொடிகள் உள்ள குழந்தைகள் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக இங்கு உள்ள முருகனுக்கு தத்து கொடுக்கின்றனர்.
பிறகு அதற்கு எடைக்கு எடை தவிடு கொடுத்து குழந்தையை திரும்ப வாங்கி செல்கின்றனர். இப்படி தத்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதேபோலவே தத்து கொடுத்த குழந்தைக்கு திருமண வயது வருகின்ற பொழுது, ஒரு தென்னம் பிள்ளையை கோயிலுக்கு கொடுத்து விட்டு திருமணத்தைச் செய்கின்றனர். இந்தப் பகுதியில் மட்டுமல்ல, சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களும் இந்த நேர்த்திக் கடனை இங்கே நடத்துவது சிறப்பு.
அதனால் இங்கு உள்ள முருகனுக்கு குழந்தைகளை காக்கும் குமரன் என்கின்ற பெயரும் உண்டு.