சகுந்தன்
பகுதி 2
அதைக்கண்ட நாரதர், நடுங்கிப்போய் ஒரு புறமாக நகர்ந்தார்.ஆஞ்சநேயர் விடவில்லை; நாரதரை மெள்ளத்தன் கரங்களால் பிடித்து அழைத்துவந்து வணங்கி, ‘‘சுவாமி! இந்தச் செயலைச்செய்ய எனக்கொரு வழி சொல்லுங்கள்!’’ என வேண்டினார்.நாரதர் சொல்லத். தொடங்கினார்; ‘‘அனுமனே! இங்கேயே உன் வாலினால் ஒரு கோட்டை கட்டு! அதற்குள் சகுந்தனை வைத்துக் கொள்!
ராம நாமத்தையே தியானம் செய்து கொண்டிரு! எப்படிப்பட்ட இடையூறுகள்வந்தாலும் நீ எழுந்திருக்கக்கூடாது.
ஆஞ்சநேயர் அதற்கு ஒப்புக் கொண்டார். இதுதான் சமயம் என்று, சகுந்தன் தன் மறைவிடத்தில் இருந்து வெளிப்பட்டு ஆஞ்சநேயரை வணங்கினார்.அங்கேயே சகுந்தனைச் சுற்றித் தன் வாலால் ஒரு கோட்டை யைக்கட்டி, அதன்மேல் அமர்ந்து ராம நாமத்தைத் தியானம் செய்யத்தொடங்கினார் ஆஞ்சநேயர். அதன்பின் நாரதர், அதற்கு மேல் செய்ய வேண்டியவைகளுக்காக அங்கிருந்து அகன்றார்.
அதே சமயம்... சகுந்தனின் தலையைக் கொண்டு வரும்படி உத்தரவிடப்பட்ட சத்ருக்னன், ஏராளமான படைகளுடன் காசியில் மன்னர் அரண்மனைக்குச் சென்றார். அங்கே அரசர் இல்லை; அவர் காடு போயிருக்கிறார் என்ற தகவலை அறிந்ததும், சத்ருக்னனும் உடனே காட்டை நோக்கிப்போனார்.போகும் வழியில், ஆஞ்சநேயர் முழங்கும் ராம நாமம் காடு முழுதும் எதிரொலித்து, சத்ருக்னன் காதுகளிலும் விழுந்தது. ராமநாம முழக்கத்தைக்கேட்ட சத்ருக்னன் அதன் இனிமையில் மயங்கி, அப்படியே கைகளைக் கூப்பியபடி நின்று விட்டார். படைகளும் நின்று விட்டன.
சகுந்தன் தலையைக் கொண்டுவரப் போன சத்ருக்னன் திரும்பாதது கண்டு ஸ்ரீராமர், ‘‘தம்பி பரதா! நீ போ! சத்ருக்னன் இன்னும் திரும்பவில்லை. என்ன நடந்தது என்பதைப் பார்த்து, சகுந்தனின் தலையுடன் சத்ருக்னனை அழைத்து வா!’’ என உத்தரவிட்டு அனுப்பினார். ஸ்ரீ ராமரை வணங்கிப் புறப்பட்டார் பரதன்.போனவர் காட்டில் இருந்த சத்ருக்னனைப் பார்த்தவுடன், ‘‘தம்பி! என்னவாயிற்று உனக்கு? நம் அண்ணனும் அரசருமான ஸ்ரீராமரின் கட்டளையை நிறைவேற்றாமல், ஏன் இப்படி நிற்கிறாய்?’’ என்று கேட்டார்.
சத்ருக்னன், ‘‘அண்ணா! அதோ கேளுங்கள்! அந்தச் சகுந்தன் ஸ்ரீராம நாமத்தை எவ்வளவு இனிமையாகக் கானம் செய்கிறான்! இப்படிப்பட்ட பாகவதனை நம்மால் கொல்ல முடியுமா? அவ்வாறு கொல்வதுதான் தர்மமா?’’ என்றார்.
(தொலை தூரத்தில் இருந்த ஆஞ்சநேயர் சொல்லும் ஸ்ரீராம நாமத்தை, சகுந்தன் சொல்வதாகக் கருதி விட்டார் சத்ருக்னர்) அதைக்கேட்ட பரதன், ராம நாம முழக்கம் அப்படியே காற்றில் பரவிப் படர்வதைக் கேட்டு, ‘‘ஆகா! இவ்வாறு ராம நாமத்தைப் பக்தியுடன் முழங்கும் அந்தப் பக்தனை நான் நேரில் தரிசிக்க வேண்டும்’’ என்று கூவியபடியே, ராம நாம முழக்கம் வந்த திசை நோக்கி ஓடினார்.அங்குபோய்ப் பார்த்தால், ஆஞ்சநேயர் தன் வாலால் கோட்டை கட்டி, அதன்மேல் அமர்ந்து ராமநாமம் முழங்கியவாறு, ஔி வீச (ஆஞ்சநேயர்) அமர்ந்திருந்தார்.
அதைப் பார்த்ததும் பரதன் மெய் மறந்தார்; கைகளைக் கூப்பியபடியே ஆஞ்சநேயரை வலம்வந்து வணங்கி, ராமநாம நினைவிலேயே மூழ்கி விட்டார். நெடுநேரம் ஆகியும் பரதன் திரும்பாதது கண்ட ஸ்ரீராமர், ‘‘லட்சுமணா! சகுந்தன் தலையைக் கொண்டுவரப் போன சத்ருக்னனும், அவனைத் தேடிப் போன பரதனும் இன்னும் திரும்ப வில்லை. அவர்களைப்போல் நீயும் தாமதம் செய்யாதே! உடனே போய்ச் சகுந்தனின் தலையைக் கொண்டு வா!’’ என உத்தரவிட்டார்.
ஸ்ரீராமரை வணங்கி லட்சுமணனும் விரைந்து சென்றார்; வழியிலிருந்த சத்ருக்னனைக்கூடக் கவனிக்காமல், நேரே பரதன் இருக்குமிடம் போனார். ஆஞ்சநேயர் வால்கோட்டை கட்டி அமர்ந்திருந்ததும், அருகில் பரதன் கைகளைக் கூப்பியபடி நின்றிருந்ததும் லட்சுமணன் பார்வையில் பட்டது. அதே நேரத்தில் அங்குவந்த நாரதர் மூலம் விவரமறிந்த லட்சுமணன், ஆஞ்சநேயரை நெருங்கி, ‘‘அனுமனே! நீங்கள் சகுந் தனை உடனே வெளியேற்றி விடுங்கள்!’’ என்று பலவாறாக வேண்டினார். ராமநாமத்திலேயே மூழ்கியிருந்த ஆஞ்சநேயர், லட்சுமணனின் சொற்களைக் கவனிக்கவில்லை.
பொழுது புலரும் நேரம்! தன் வார்த்தைகளைக் கவனிக்காத ஆஞ்சநேயர் மீது கோபங்கொண்டு, பல விதமான அம்புகளை ஆஞ்சநேயர் மீது ஏவினார் லட்சுமணன்.அவர் ஏவிய அம்புகள் ஆஞ்சநேயரை வலம்வந்து வணங்கி னவே தவிர, ஆஞ்சநேயருக்குச் சிறிதும் தீங்குசெய்ய வில்லை. லட்சுமணனோ கைகள் சோர்ந்துபோய், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார்.லட்சுமணனும் திரும்பாததைக் கண்ட ஸ்ரீராமர், தானே புறப்பட்டுச் சகுந்தன் இருக்குமிடத்தை அடைந்தார். அவரைப் பார்த்ததும் லட்சுமணன், ஸ்ரீராமரை வணங்கி நடந்ததை எல்லாம் சொன்னார்.
ஸ்ரீராமருக்குக் கோபம் தாங்கவில்லை; ‘‘வில்லை வளைத்து அதில் அம்பைத் தொடுக்க வேண்டியதுதான்’’ எனத் தீர்மானித்தார்.அவருடைய எண்ணத்தைப் புரிந்துகொண்ட நாரதர் வெகு வேகமாக ஸ்ரீராமரை நெருங்கி, ‘‘ராமா! என்ன காரியம் செய்யத் துணிந்து விட்டாய்? உன் உத்தம பக்தனான ஆஞ்சநேயன் மீது, அம்பைப் போடப் போகிறாயா?’’ எனக்கேட்டார்.‘‘சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது, உத்தம சக்ரவர்த்தி தசரதன் மைந்தனாகிய என் கடமையல்லவா?’’ எனக்கேட்டார் ஸ்ரீராமர்.
நாரதர் சிரித்தார்; ‘‘ராமா! இதைச்செய்யச் சொன்ன கௌசிக முனிவரை இங்கே கொண்டு வா! உன் வாக்கு நிறை வேறும்படிச் செய்யலாம்’’ என்றார்.ஸ்ரீராமர், லட்சுமணனுக்குப் பார்வையாலே உத்தரவிட்டார். அதை உணர்ந்த லட்சுமணன் உடனே போய்க் கௌசிக முனிவரை அழைத்து வரச் சென்றார்.அப்போது நாரதர், ஆஞ்சநேயரை நெருங்கி அவர் வால் கோட்டையிலிருந்து சகுந்தனை வெளியேற்றச் சொன்னார். ஆஞ்சநேயரும் தன் வால் கோட்டையைப் பிரித்துச் சகுந்தனை வெளியே வரச்செய்து, ஸ்ரீராமரை வணங்கி நின்றார். அவரால் காப்பாற்றப்பட்ட சகுந்தனும் ஸ்ரீராமரையும் நாரதரையும் வணங்கினார்.
சற்று நேரத்தில், தன் எண்ணம் நிறைவேறப் போகிற மகிழ்ச்சியில் கௌசிகர் வந்தார். அவரைப்பார்த்ததும் தலைகுனிந்த படியே அவரை நெருங்கிய சகுந்தன் ‘பளிச்’சென்று, அவர் கால்களில் தன் தலையை வைத்து விழுந்து வணங்கினார்.சகுந்தனை அறியாத கௌசிகர், ‘‘நீடூழி வாழ்வாயாக நீ!’’ என்று வாழ்த்தினார்.சகுந்தனும் எழுந்து நின்று வாய்மூடி நின்றார்.‘‘ஆகா! நமக்கு அபராதம் செய்ததாக எண்ணிய சகுந்தனை அல்லவா, நாம் வா்த்தியிருக்கிறோம்!’’என்று திகைத்து நின்றார்.
அப்போது நாரதர், கௌசிகரை நெருங்கி, ‘‘மாமுனிவரே! சகுந்தன் தலை உங்கள் காலில் விழ வேண்டும் என்பதுதானே, உங்கள் விருப்பம்? அவன் உங்களை வணங்கியபோது, அவன் தலை உங்கள் கால்களில் விழுந்து விட்டதே! மேலும் நீங்களே அவனை வாழ்த்தியபடி, அவன் நீண்டகாலம் வாழட்டும்!’’ என்றார்.அதன்பின் ஸ்ரீராமர் பக்கம் திரும்பிய நாரதர், ‘‘ராமா! உன் வாக்கும் உண்மை ஆயிற்று. நான் செய்த கலகமும் நல்லவிதமாக முடிந்தது’’ என்றார்.அனைவரும் மகிழ்ச்சியாக அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பினார்கள்.
- பி.என். பரசுராமன்