செல்வம் வரும் வழியும் போகும் வழியும் முக்கியம்...
மனிதப் பிறவியில் செல்வம் ஒருவருக்கு இரண்டு வழிகளில் வரும். ஒன்று அதிர்ஷ்டமாக ,நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தானே வர வேண்டிய காலத்தில் அது இஷ்டமாக வரும்.இன்னொன்று ஒருவருடைய முயற்சிக்குத் தகுந்தபடி வரும்.அது இஷ்டம் ஆக வருவதால் நம் கட்டுப்பாட்டில் அந்தச் செல்வம் இல்லை. அந்தச் செல்வம் நமக்கு பயன்படலாம் அல்லது பயன்படாமல் போகலாம்.உதாரணமாக ஒருவர் மிக ஏழையாக இருந்தார். அவருடைய உறவினர் ஒருவருக்கு ஏராளமான செல்வம் இருந்தது. ஆனால், அவருக்கு வாரிசு இல்லை. அவர் இறந்த பிறகு, அவருக்கு உரியவர்கள் வேறு யாரும் இல்லாததால், அவருடைய உறவினரான இந்த ஏழைக்கு அவருடைய செல்வம் முழுக்க வந்து சேர்ந்தது. இப்படி நடப்பதை நாம் உலகியலில் காணலாம்.
என்னுடைய அண்ணார் வீட்டில் ஒருவர் குடியிருந்தார். மிகுந்த கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.. வடகம், வற்றல், அப்பளம், மிளகாய்த்தூள் போன்ற பொருள்களைத் தயார் செய்து ஒரு பையில் எடுத்துக்கொண்டு கடைகடையாகப் போட்டு வருவார். மிகப்பெரிய லாபம் எதுவும் வராது. அவருடைய மனைவி கைக்குழந்தையோடு தையல் வேலை செய்து கொண்டிருந்தார். ஆனால், திடீரென்று 40 வருடங்களாக வழக்கில் இருந்த அவருடைய பூர்வீகச் சொத்தில் ஒரு பாகம் அவருக்கு வந்து சேர்ந்தது. ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறினார்.அந்தக் காலத்தில் புதையல் என்று சொல்வார்கள். இந்தக் காலத்தில் புதையல் எல்லாம் கிடையாது. அதற்கு பதிலாக இப்படி ஏதாவது ஒரு வழியில் எதிர்பார்க்காமல் செல்வம் வரும். யாருக்கோ உரிய செல்வம் ஏதோ ஒரு வழியில் நம்மிடத்தில் வந்து சேரும். லாட்டரி, பந்தயம் - இப்படி வருகின்ற அபரிமிதமான செல்வமும் இதில் சேரும்.ஆனால் இதிலே இரண்டு வகை உண்டு.
1. நமக்கு எப்பொழுது தேவையோ அப்பொழுது அந்தச் செல்வம் கிடைக்காமல் இருக்கும்.
2. எப்பொழுது நமக்கு அந்தச் செல்வம் தேவை இல்லையோ அந்தச் சமயத்தில் அந்தச் செல்வம் நமக்கு வந்து சேரும். முதலில் நான் சொன்ன வாரிசு இல்லாத பணக்காரர், தம்முடைய ஏழை உறவினருக்கு பலமுறை கேட்டும் உதவவில்லை. ஒரு நயா பைசா கூட தரவில்லை. ஆனால், அவர் இறந்த பிறகு இவருக்கு அந்த செல்வம் முழுக்க வந்துவிட்டது. ஆனால் இவரால் அதை அனுபவிக்க முடிய வில்லை. காரணம் வயது அதிகமாகி நோய் நொடிகளோடு போராடிக் கொண்டிருந்தனர். எனவே, அதிர்ஷ்டம் என்று சொன்னாலும் அது எப்பொழுது வர வேண்டுமோ அப்பொழுது வந்தால் தான் அதிர்ஷ்டத்திலும் அர்த்தம் உண்டு.இல்லாவிட்டால் அதிர்ஷ்டமும் துரதிஷ்டம் தான்.
அதிர்ஷ்ட செல்வத்தை இப்படிக் கூட சொல்லலாம்.
1. உழைக்காமல் வரும் செல்வம்.
2. உழைத்து வரும் செல்வம் இரண்டாவது வகை.
இதிலும் கூட பலவகை உண்டு.
1. கொடுக்கும்உழைப்பை விட குறைவாக வரும் செல்வம். நாள் முழுக்க கடுமையாக உழைத்தாலும் வாய்க்கும் வயிற்றுக்கும் தான் வருமே தவிர, எதுவும் மிஞ்சாது. இரண்டு நாள் உழைக்க முடியாத நிலை வந்து விட்டால் கடன் வந்து சேர்ந்து விடும்.
2. உழைப்புக்குத் தகுந்தபடி வரும் செல்வம்.
3. கொடுக்கின்ற உழைப்பை விட பல மடங்கு வருகின்ற செல்வம்.
செல்வத்தைச் சம்பாதிப்பது போலவே, செல்வத்தைச் செலவழிப்பதிலும் சில விஷயங்கள் உண்டு.சம்பாதிக்கத் தெரிந்த சிலருக்கு முறையாகச் செலவழிக்க தெரியாது. ஆகையினால் அவர்கள் செல்வத்தின் பயனை முழு மையாக அடைய முடியாதவர்களாக இருப்பார்கள். வேறு சிலருக்கு சம்பாதிக்கத் தெரியாது. ஆனால், எத்தனை கொடுத்தாலும் செலவு செய்து விடுவார்கள்.செல்வம் என்பது செலவு செய்வதற்குத் தான். நம்மிடம் இருக்கும் பொருளை அல்லது உழைப்பினால் சேர்த்த பொருளை எப்படிச் செலவு செய்கிறோம் என்பதில்தான் செல்வத்தின் பெருமை அடங்கியிருக்கிறது.
செல்வத்திற்கு இரண்டு சிறப்புகள் இருக்கின்றன.
1. எப்படி வருகிறது என்பது ஒரு சிறப்பு
2. எப்படிச் செலவு செய்யப்படுகிறது என்பது மற்றொரு சிறப்பு.
1. அறம் உள்ள வழியில் பொருள் ஈட்டி அறம் உள்ள வழியில் செலவழிப்பது.
இதுவே உயர்ந்த முறை. பொருள் ஈட்டுவதில் நேர்மை இருக்கும். செலவு செய்வதிலும் மிகுந்த கவனமும் அறக் கோட்பாடுகளும் இருக்கும். தங்களுக்காக வீண் விளம்பரப் பெருமைக்காக செலவு செய்ய மாட்டார்கள். பொது நன்மையைக் கருதி உயர்ந்த விஷயத்துக்காக பயன் கருதாது செலவு செய்வார்கள். இது முதல் ரகம்.
2. அறம் உள்ள வகையில் பொருள் ஈட்டினாலும் அறமற்ற வகையில் செலவு செய்வது என்று ஒரு வகை உண்டு.உதாரணமாக பல்வேறு தொழில்களின் மூலம் கிடைத்த லாபத்தை, தங்களுடைய மகிழ்ச்சிக்காக மட்டும் செலவு செய்வார்கள். தர்ம சிந்தனை எதுவும் இருக்காது. வீண் பெருமைக்காகவும், கௌரவத்திற்காகவும், தம்மை எதிர்ப் பவர்களை அடக்குவதற்காகவும் செலவு செய்வார்கள்.
3. அறமற்ற வழியில் பொருள் ஈட்டி அறம் உள்ள வகையில் செலவு செய்பவர்களும் உண்டு.அவர்கள் செல்வம் வரும் வழி என்பது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்காது. ஆயினும் அவர்கள் ஊர் மெச்சும் படி, பல்வேறு விதமான தர்ம நடவடிக்கைகளைச் செய்வார்கள். கோயில் கட்டுவார்கள். அன்னதானம் செய்வார்கள். ஏழைகளின் படிப்புக்கு உதவி செய்வார்கள். இப்படி ஒரு வகை உண்டு.
4. அறமற்ற வழியில் சம்பாதித்து அறமற்ற வழியில் செலவு செய்பவர்கள் என்று ஒரு வகை உண்டு. இவர்கள் வருமானம் செய்வதிலும் தர்மம் இருக்காது. அதைப்போலவே ஒரு நற்காரியமும் செய்ய மாட்டார்கள். முழுக்க முழுக்க ஆடம்பரம், சுயநலம் என்பதையே நோக்கமாகக் கொண்டு பெரும் செலவு செய்வார்கள்.இதன் அடிப்படையிலேயே தான், நம்முடைய முன்னோர்கள், எப்படி வருமானம் வருகிறது என்று பார், அதை எப்படி செலவு செய்கிறாய் என்பதையும் பார், என்று தர்மத்தின் அடிப்படையிலே பொருள் ஈட்டுதல் குறித்தும் அதை அறமுள்ள வகையில் செலவு செய்வதைக் குறித்துச் சொன்னார்கள்.
அறம், பொருள், இன்பம்,வீடு அதாவது தர்மம் அர்த்தம் காமம் மோட்சம் என்று நான்கு விஷயங்களைச் சொன்னவர்கள், முதலில் தர்மத்தைத் தெரிந்து கொள்ளச் சொன்னார்கள். தர்மத்தைத் தெரிந்து கொண்டவனிடம் செல்வம் சேர்ந்தால் அவன் அந்த செல்வத்தை வைத்துக்கொண்டு தர்மத்தைக் காப்பாற்றுவான். தர்மமானது அவனைக் காப்பாற்றும். நன்றாக கவனியுங்கள். பணம் தர்மமாக மாறி தர்மம் செய்தவனைக் காப்பாற்றி.விடும்.
இதைத்தான் ஆழ்வார் செல்வமானது
கொள்ளென்று கிளர்ந்து எழுந்த
பெரும் செல்வம் நெருப்பாக
கொள்ளென்று தமமூடும்
இவை என்ன உலகியற்கை?
என்று நெருப்போடு ஒப்பிட்டுச் சொன்னார்.
நெருப்பு என்பது வெளிச்சத்திற்காக, சமைப்பதற்காக, என பலவகையில் பயன்படும்.செல்வம் நெருப்பு போல. நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ள நெருப்பு நமக்கு பலவகையிலும் பலன் தரும். ஆனால் அதே நெருப்பு ஒரு காட்டுத்தீயாக மாறிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அது கொழுந்துவிட்டு எரித்து, எல்லாவற்றையும் அழித்து விட்டுத்தான் ஓயும். அதைப்போலவே கட்டுப்பாட்டுக்குள் உள்ள செல்வம், அடுப்பு மூட்டுவது போலவும் வெளிச்சம் பெறுவது போலவும் அவனுக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும். கட்டுப்பாடற்ற செல்வம் பெருநெருப்பாக மாறி அழித்துவிடும். இதைத்தான் ஆழ்வார் பாசுரத்தில் ‘‘செல்வமே பெரு நெருப்பாய்” என்றார்.