தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆடியில் அம்மனின் தரிசனம்!

தாயமங்கலம் - முத்துமாரி

முத்துச்செட்டியாருக்கு மழலைச் செல்வம் தவிர மற்ற எல்லா செல்வங்களும் இருந்தன. மதுரை மீனாட்சியிடம் குழந்தை செல்வம் வேண்டினார் செட்டியார். ஒரு முறை மதுரையிலிருந்து சின்னக் கண்ணனூர் காட்டுப் பகுதியை கடக்கும் போது மூன்று வயது சிறுமி அழுது கொண்டிருப்பதைக் கண்டார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை. குழந்தையை தூக்கிக் கொண்டு, நடக்கத் தொடங்கினார். கோடை வெயில் தாகத்தை தணிக்க, ஊருணியில் நீர் அருந்தினார்.

திரும்பிப் பார்த்தவர் உடன் இருந்த குழந்தையை காணவில்லை. சோகத்தோடு வீடு வந்து சேர்ந்தார். அன்றிரவு கனவில் குழந்தை வடிவில் அம்மன் தோன்றி, தான் கத்தாழை காட்டிற்குள் தங்கியிருப்பதாகவும், தன்னைப் போன்றே உருவம் செய்து வழிபடுமாறு கூறினாள். மறுநாள் அங்கு சென்றவர், சிறுமியின் காலடித் தடம் தெரிய, அதைப் பின்பற்றி சென்றார். அந்தக்காலடி முடிந்த இடத்தில் மண்ணை குழைத்து அம்மன் உருவத்தை வடித்தனர்.

முத்துச்செட்டியாரின் கனவில் வந்து கூறியதால் முத்துமாரி என்றழைத்தார்கள். ராமநாதபுரத்து மக்களின் கண்கண்ட தெய்வமாக மாறிய முத்துமாரியை வணங்கினாள், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். மதுரையிலிருந்து மானாமதுரை வழியாகவும், மதுரையிலிருந்து சிவகங்கை சென்றும் தாயமங்கலத்தை அடையலாம்.

குன்றத்தூர் கல்யாணதேவி காத்யாயனி

தெய்வத் திருமுறைகள் பாடி பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழாரின் இல்லத்திற்கு நேர் எதிரில்தான் காத்யாயனி தேவியின் ஆலயம் உள்ளது. இதனாலேயே இத்தலத்தை திருமுறைக்காடு என்கிறார்கள். பார்வதி, பரமேஸ்வரனின் திருமணத்தில் தடை ஏற்பட்ட போது, காத்யாயன மகரிஷியை அணுகினார்கள். அவர் காத்யாயனி தேவியையும், மந்திரத்தையும் உருவாக்கினார்.

அந்த மந்திரத்தை ஜபிப்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. அதனாலேயே இவளை கல்யாணதேவி என்கிறார்கள். இக்கோயிலில் உள்ள மூன்று கிளை வேம்பின் கீழுள்ள நாகராஜரை தரிசித்து கருவறையில் அன்னையை தரிசிக்க வேண்டியது நிறைவேறும். குன்றத்தூர் முருகன் மலைக்கோயிலிலிருந்து திருநீர்

மலைக்குப் பிரியும் தெருவில் திருமுறைக்காடு தேவி காத்யாயனி கோயில் உள்ளது.

கீவளூர் - அஞ்சுவட்டத்தம்மன்

இறைவனே வதம் செய்தாலும் பாவம்தான். அப்படித்தான் சூரபத்மனை அழித்து வேறொரு உருவில் அவனைப் பெற்றாலும், ஏனோ ஒரு தவிப்பும் அமைதியின்மையும் கந்தனுக்குள் இருந்தது. கீவளூர் எனும் இத்தலத்தைச் சுற்றியுள்ள ஐந்து தலங்களிலும் பஞ்சலிங்க மூர்த்திகளை பூஜித்து விட்டு, இறுதியில் இத்தலத்திலுள்ள கேடிலியப்பரை பூஜிக்கத் தொடங்கினார். பார்வதி அன்னை காளியின் அம்சத்தோடு ஆசீர்வதித்தாள்.

குழம்பிப் போயிருந்த கந்தனின் நெஞ்சம் அன்னையின் தரிசனத்தில் தெளிந்தது. அன்று முதல் இந்த அம்மனை அஞ்சுவட்டத்தம்மன் என்றழைத்தனர். கலங்கி நின்றோரை கரையேற்றும் முக்தி தேவி இவள். நிம்மதி வேண்டும் என்பவர்கள் இத்தலத்தில் நின்று சென்றாலே போதும். திருவாரூர்-நாகப்பட்டினம் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

திருச்சி - காவிரி அம்மன்

காவிரி அன்னைக்கு தமிழகத்தில் சில இடங்களில்தான் கோயில்கள் உள்ளன. அம்மனை போற்றும் ஆடி மாதத்தில் காவிரி அன்னையும் வணங்கப்படுகிறாள். திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆழ்குழாய் அல்லது சாதாரண கிணறு தோண்டும் முன்பு இவளை வணங்கிச் செல்வது வழக்கமாக இருக்கிறது.

காவிரியை உபயநாச்சியார் என்று அழைக்கிறார்கள். ஆடிப்பெருக்கு விழாவின் போது ரங்கநாதர், ரங்கம் காவிரியின் தென்கரைக்கு வந்து மாலை வரை பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது இந்த ஆலயம்.

திருமுல்லைவாயல் - பச்சையம்மன்

உமையால், ஈசனின் ஒருபாகமாக தானும் இருக்க விரும்பி பூலோகத்திற்கு வந்தாள். பச்சை பசேல் என்றிருந்த பூமியின் நிறத்தில் தன்னையும் மாற்றிக்கொண்டு வீரமாபுரி நகரத்தை அடைந்தாள். சூரகோமன் என்பவன் அப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுடைய வீரர்கள் அன்னையின் அழகினை கண்டு, மன்னர் சூரகோமனிடம் கொண்டு செல்ல விரும்பினார்கள். இதனால் கோபமுற்று காளியாக மாறி அரக்கர்களை வதைத்தாள். பிறகு முல்லைவனத்து ஈசனான மாசிலாமணீஸ்வரரை பூஜித்து அத்தலத்தின் அருகேயே கோயில் கொண்டாள்.

இன்றும் இந்த அன்னை பச்சை நிற மேனியளாகவே ஜொலிக்கிறாள். ‘பச்சையம்மா...’ என்று அவளின் திக்கு நோக்கி கூவினால் ஓடி வந்து துயர் துடைப்பாள். இவள் பாதம் பணிந்தோரை பன்மடங்கு உயர்த்தும் சக்தி கொண்டவள். சென்னை - திருவள்ளூர் பாதையில் அம்பத்தூரிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

பூவனூர் - சாமுண்டீஸ்வரி

நெல்லையை ஆண்ட மன்னன் குழந்தைப் பேறின்றி தவித்தான். சிறந்த சிவபக்தனான இவன் கனவில் நெல்லையப்பர் தோன்றி உமையன்னை உனக்கு குழந்தையாகவும், பராசக்தியின் அம்சமான சாமுண்டியே செவிலித் தாயாகவும் வருவாள் என்றார். மன்னன் ஒருநாள் தாமிரபரணியில் மூழ்கியெழ கையில் சங்கு ஒன்று தட்டுப்பட்டு, குழந்தையாக மாறியது. அருகேயே செவிலித்தாயாக சாமுண்டியும் உடன் நின்றாள்.

குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டனர். குழந்தை வளர்ந்து சதுரங்க ஆட்டத்தில் சிறந்து விளங்கினாள். ஒருநாள் மன்னன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். பூவனூரை அடைந்த போதே, புஷ்பவனநாதர் சித்தர் வேடத்தில் வந்து குழந்தையான தேவியிடம் சதுரங்கம் ஆடலாமா என்றார். எவராலும் ஜெயிக்க முடியாத ராஜராஜேஸ்வரியை வெற்றி பெற்றார்.

சித்தர் வடிவில் வந்த ஈசனுக்கே ராஜராஜேஸ்வரியை மணமுடித்தார். இத்தலத்தில் ராஜராஜேஸ்வரியும், சாமுண்டீஸ்வரியும் தனித்தனி சந்நதிகளில் அருள்கின்றனர். இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்து இங்குதான் சாமுண்டீஸ்வரிக்கு தனிச் சந்நதி அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 7 கிலோ மீட்டர் தொலைவில் பாமணி ஆற்றின் மேல்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.

அந்தியூர் - பத்ரகாளி அம்மன்

மிகப்பழமை வாய்ந்த கோயில்கள் நிறைந்த அந்தியூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் இரண்டாயிரம் வருடத்திய பழமையானது. போரில் பகைவர்களை அழித்து வெற்றி பெற காளிக்கு தமது பிரார்த்தனை நிறைவேற்றிய பின் தம்மைத்தாமே பலியிட்டுக் கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. அதற்கு சாட்சியாக இக்கோயிலில் தமது தலைகளை தாமே பலியிட்டுக் கொள்ளும் சில படிவங்கள் காணப்படுகின்றன. அந்தியூரைச் சுற்றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் குலதெய்வமாக இவள் விளங்குகிறாள்.

சங்கரன்கோவில் - கோமதியம்மன்

ஈசனும், திருமாலும் சேர்ந்த கோலத்தில் சங்கரநாராயணராக அருட்கோலம் காட்டும் அரிய தலம். பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த உக்கிர பாண்டிய மன்னர் இந்த ஆலயத்தை கட்டினார். சிறந்த சிவபக்தரான மன்னன், மதுரை மீனாட்சியம்மனை தரிசிப்பது வழக்கமாக இருந்தது. யானையின் மீதேறி மதுரை செல்லும் போது திடீரென்று யானை ஓரிடத்தில் படுத்துக் கொண்டது. எவ்வளவு முயன்றும் யானையை எழுப்ப முடியவில்லை. அந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று தென்பட்டது.

அன்றிரவே மன்னரின் கனவில் ஈசன் தோன்றி ‘‘நீ என்னை தரிசிக்க மதுரைக்கு செல்ல வேண்டாம். இங்கேயே கோயில் கட்டி வழிபடு’’ என்றார். வன்மீகம் எனும் புற்றிலிருந்து ஈசன் தோன்றியதால் வன்மீகநாதர் என்றழைத்தனர். அம்பாள் இங்கு தவக்கோலத்தில் காட்சியளிக்கிறாள். நெல்லையிலிருந்து 55 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

மடப்புரம் - பத்ரகாளி

அது பிரளய காலம். மதுரையை அன்னை மீனாட்சி ஆண்டு கொண்டிருந்தாள். பிரளயத்தால் தன் நாடும் மூழ்கிக் கொண்டிருப்பதை கண்டவள் கடுந்துயருற்றாள். மூழ்கிய மதுரையை அடையாளம் காட்டும்படி ஆதிசேஷனிடம் கேட்டாள்.

கடலிலிருந்து வெளிப்பட்டு மதுரையின் எல்லைகளை தன் உடலால் வளைத்துக் காட்டினார். பாம்புப் படமும், வாலும் இணைந்த இடமே படப்புரம் என்றானது. நாளடைவில் மடப்புரமானது. பார்வதி காளியாக மாறி இங்கு நிலை கொண்டுள்ளாள். அம்மனின் முக்கிய நிவேதனம் எலுமிச்சைக் களி பொங்கல். எலுமிச்சை மாலை சார்த்தி பக்தர்கள் வேண்டினால், எந்தப் பிரச்னையும் தீரும் என்பதை காலம் காலமாக பக்தர்கள் உணர்ந்து வருகிறார்கள். மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் சாலையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

தொகுப்பு: மகி

Related News