தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்

பகுதி 8

Advertisement

திருச்செந்தூர்

திருமயிலை, திருவொற்றியூர், திருவான்மியூர், திருப்பாதிரிப்புலியூர், ராமேஸ்வரம் ஆகிய திருப்புகழ் கடற்கரைத் தலங்களைத் தொடர்ந்து, திருச்செந்தூர் திருத்தலத்தை இங்கு காணவிருக்கிறோம். ஜுலை 7, 2025 அன்று இக்கோயிலின் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அருணகிரிநாதர் இத்தலத்தில் 83 திருப்புகழ்ப் பாக்களும், திருச்செந்தூர் திருவகுப்பு என்ற வகுப்பும் பாடியுள்ளார். மேலும் 11 கந்தர் அந்தாதிப் பாக்களிலும் 5 கந்தர் அலங்காரப் பாடல்களிலும் செந்தில் பற்றிய குறிப்பை அளித்துள்ளார்.

“கயிலைமலை அனைய செந்தில்” என்றும் “மகா புனிதம் தங்கும் செந்தில்” என்றும் அருணகிரியாரால் அழைக்கப்பட்ட திருச்செந்தூர் செல்வோம். முருகப் பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்து, அவ்வெற்றியைக் கொண்டாடிய தலமாதலால், “ஜெயந்திபுரம்” என்றும், அலைகள் சீராக வந்து மோதி அமைதிபெற்றுத் திரும்புவதால் “திருச்சீரலைவாய்” என்றும், ஆன்மாக்களின் இருப்பிடம் (செந்து இல்) என்பதால் “திருச்செந்தில்” என்றும் அழைக்கப்படுகிறது.

நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் குறிப்பிட்டுள்ள இரண்டாவது ஆற்றுப்படைத் தலம் திருச்செந்தூர். சிலப்பதிகாரம், புறநானூறு ஆகிய நூல்களில் ``செந்தூர்’’ பற்றிய குறிப்புகள் உள்ளன. தேவகுரு பிரஹஸ்பதி சூரபத்மனைப் பற்றிய விவரங்களனைத்தையும், முருகப் பெருமானுக்கு எடுத்துச் சொன்னதால், “யுத்தம் முடிந்து நான் இங்கு கோயில் கொள்ளும் பொழுது, திருச்சீரலைவாயாகிய இத்தலம், குருஸ்தலம் என்று போற்றப்படும்” என்று அப்பெருமான் கூறியதாக செந்தூர் தலபுராணம் கூறுகிறது. கடலலைகளுக்கு இங்குள்ள சிறப்பு, அவை செந்தில் ஆண்டவன் பாதங்களைச் சரணடைந்து செல்கின்றன என்பதுவே, கடற்கரையில் கலங்கரை விளக்கமாக நின்றுகொண்டிருக்கிறான் முருகன்.

கோயிலை ஒட்டிய கடற்பகுதி வதனாரம்ப தீர்த்தம் எனப்படுகிறது. இதுபற்றி இரண்டு கருத்துகள் நிலவுகின்றன. சிவனுக்கும் தனக்கும் ஐந்து தலைகள் என்று இறுமாந்திருந்த பிரம்மனின் ஒரு தலையைப் பைரவர் கிள்ளி எறிந்தார். “உன் தலையைப் பெற சிவத்தை வழிபடு” என்றான் முருகன். சிவனாரோ, ‘ஒவ்வொரு நாளும் செந்தில் கடலில் நீராடு; குமரனைப் பொன் விமானமாய் நின்று போற்றுதல் செய்;

உனக்குரிய கற்ப இறுதியில் [ஒரு கற்பம் = பிரமனது ஒரு நாள்; 432 கோடி வருடங்கள் கொண்டது பிரம்மனின் ஒரு நாள்] இழந்த தலையைப் பெறுவாய்” என்று கூறியருளினார். அன்று முதல் பிரம்மன் இங்கு முருகனை வழிபட்டு வருகிறான் என்பர். வதனாரம்பம் என்ற பெயர்க் காரணம் பற்றி மற்றுமொரு கருத்து நிலவுகிறது. தாமிரபரணியில் நீராடும் போது, ஹயக்ரீவரைக் கண்டு, “குதிரை முக முனிவரா” என்று கிண்டல் செய்தாள் கலிங்க நாட்டு மன்னனின் மகள் கனகசுந்தரி. கோபமுற்ற ஹயக்ரீவர்,

“அடுத்த பிறப்பில் உனக்கு இதே முகம் அமையும்” என்று சபித்தார்.

அதன்படி அடுத்த பிறவியில் பாண்டிய மன்னனுக்கு அங்கமெல்லாம் அழகாக, ஆனால் முகம் மட்டும் குதிரையாக இருக்கும் ஒரு மகள் பிறந்தாள். அவளை அங்கசுந்தரி என்றழைத்து, அவள் முகத்தை மாற்றும்படி இறைவனைப் பலவாறாகத் துதித்தான் அரசன். தெய்வத் தலங்களைச் சார்ந்த கடல், பொய்கை, நதிகள் ஆகிய நீர் நிலைகளில் அவளை நீராடச் செய்தான். இறுதியாக செந்தூர் வந்தடைந்தாள் அங்கசுந்தரி. முருகனைத் துதித்த வண்ணம் செந்திலாண்டவன் கோயிலுக்கருகிலுள்ள கடல் தீர்த்தத்தில் முழுகி எழுந்தாள். குதிரை முகம் மாறி அழகிய பெண் முகம் பெற்றாள். இதனால் இவ்விடம் ‘வதனாரம்ப தீர்த்தம்’ என்றழைக்கப்படுகிறது. அருணகிரியார், ஐம்பத்தொன்றாம் கந்தர் அந்தாதிச் செய்யுளில் இது பற்றி ஒரு குறிப்பு வைத்துள்ளார்.

“வெஞ்செருமகள் வாசி கைத்தோ!” [கொடிய போரில் சிறந்த பாண்டியனின் குதிரை முகத்தையுடைய பெண்ணுக்கு, அக்குதிரை முகத்தை மாற்றியவனே!]என்று பாடுகிறார். இதனாலும் இவ்விடம் வதனாரம்ப தீர்த்தம் எனப்படுகிறது. முதலில் வதனாரம்ப தீர்த்தத்திலும், பின்னர் கோயிலருகிலுள்ள நன்னீர்க் கிணறான நாழிக்கிணற்றிலும் நீராடும் மக்கள், சற்றுத் தொலைவிலுள்ள தூண்டுகை விநாயகர் கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டு, செந்திலாண்டவனைத் தரிசிக்க வருகின்றனர். முருகன், கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறான்.

கிழக்குப்புறம் கடல் இருப்பதால் கோபுரவாயில் அமைக்க வழியில்லை. எனவே கனமான பாறை அடித்தளமாக உள்ள மேற்குப் புறத்தில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இவ்வாசல் திறக்கப்படுவதில்லை. மேலக் கோபுர வாசலில் விநாயகரும் அவருக்கு எதிரே அருணகிரிநாதர் திருவுருவமும் உள்ளன. சண்முகர் சந்நதிக்கு நேர் எதிரே அமைந்துள்ள சண்முக விலாசத்தை ஒட்டிய வாயில் வழியாகத்தான் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

சண்முக விலாசம், 120 அடி நீளமும் 80 அடி அகலமும் உள்ள கல் மண்டபம். நடுவில் ஒரு சிறிய மேடை அமைந்துள்ளது. ஆவணி, மாசி பிரம்மோத்ஸவங்களின் போது, இங்குதான் சண்முகரை அமர்த்தி ஆறு முகங்களுக்கும் ஆறு தீபாராதனைகள் நடத்தப்படுகின்றன. கந்தசஷ்டியின் போது, மூலவரின் உற்சவ மூர்த்தி இங்கு எழுந்தருளுகிறார். சண்முக விலாசத்திலிருந்து சில படிகள் கீழே இறங்கிச் சென்றால், கடல் மட்டத்திலமைந்திருக்கும் மூலவர், சண்முகர் சந்நதிகளைத் தரிசிக்கலாம். தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தை வணங்கி, மூலவர் இருக்கும் முதல் சுற்றிற்குள் வருகிறோம். இடப்பக்கமாகக் கம்பித் தடுப்பு வழியே சுற்றிவரும் போது அன்னை பார்வதியைக் கண்டு வணங்கலாம். முருகனுக்கு அவள் வேல் கொடுத்தது பற்றிய அருணகிரியாரின் திருப்புகழ் நினைவுக்கு வருகிறது.

``பம்பர மேபோல ஆடிய

சங்கர வேதாள நாயகி

பங்கய சீபாத நூபுரி கரசூலி

பங்கமி லாநீலி மோடிப

யங்கரி மாகாளி யோகினி

பண்டுசு ராபான சூரனொ எதிர்போர்கண்டு

எம் புதல்வா வாழி வாழியெ

னும்படி வீறான வேல்தர

என்று முளானேம நோகர வயலூரா

இன்சொல்வி சாகாக்ரு பாகர

செந்திலில் வாழ்வாகி யேயடி

யென்றனை யீடேற வாழ்வருள்

பெருமாளே’’.

அருகே கரிய மாணிக்க விநாயகர் வீற்றிருக்கிறார். உள்ளே இருப்பவன் சிவந்த மாணிக்கம். “செவ்வான் உருவில் திகழ் வேலவன்” ஆயிற்றே அவன்! கருவறை, அர்த்த மண்டபத்திற்கு வெளியே வீரபாகுத் தேவரும் வீரமகேந்திரரும் காவல் காக்கின்றனர். மூலவர் பாலசுப்பிரமணியர். செந்திலாண்டவன் என்றே அறியப்படுபவர். “என்று வந்தாய்?” என்ற குறிப்போடு நம்மைப் பார்க்கிறார்.

“தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னைத்

திண்டாட வெட்டி விழவிடுவேன் செந்தில் வேலனுக்குத்

தொண்டாகிய என் `அவிரோத ஞானச்சுடர் வடிவாள்’

கண்டாயடா அந்தகா வந்துபார் சற்று

என் கைக்கு எட்டவே!”

என்று எமனுக்கே சூளுரைக்கும் தைரியத்தை அருணகிரியாருக்குக் கொடுத்தவர் இவரே என்று எண்ணும்போது உடல் புல்லரிக்கிறது. தவக்கோலத்தில் ஒரு திருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு திகழ்கிறார் மூலவர். மேல் வலக்கையில் சிங்கமுகாசுரனை வென்ற குலிசாயுதம் உள்ளது. “வேலைத் தவிர உனக்கு வேறு ஆயுதப்படையில் பயிற்சி இல்லையோ?” என்று ஏளனமாகச் சிங்கமுகாசுரன் கேட்ட போது, குலிசப்படையை அவன் மேல் எறிய, அது அவனை மாய்த்தது. கீழ் வலக்கை வரத முத்திரையுடனும் உள்ளங்கையில் அர்ச்சனை செய்வதற்கான தாமரை மலருடனும் காட்சி அளிக்கிறது.

மேல் இடக்கையில் ஜெபமாலையும் கீழ் இடக்கையை இடுப்பில் வைத்தும் காணப்படுகிறார்.வேலாயுதம் வலது புறம் சாத்திவைக்கப்படுகிறது. இவர் தங்கத் திருவடிகளை அணிந்துள்ளார். வலது திருவடி அருகே வெள்ளி ஸ்ரீபலிநாயகரும் இடது திருவடி அருகே தங்க ஸ்ரீ பலிநாயகரும் காட்சி அளிக்கின்றனர். [பூஜையின் நிறைவில் தேவதைகளுக்கு பலி உணவு வழங்கும் பொழுது இறைவனது பிரதிபிம்பமாக ஊர்வலம் செல்லும் சிறிய திருமேனி ‘ஸ்ரீ பலி நாயகர்’ என்றழைக்கப்படுகிறது] மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் அருகே வள்ளி தெய்வயானையர் இல்லை.

“அசுரரைத் துவைத்தும் பந்தடித்தும் சங்

கொலித்தும் குன்றிடித்தும் பண்

சுகித்தும் கண் களிப்பும் கொண்டிடும் வேலா

சிரப்பண்பும், சுரப்பண்புங்

கடப்பந்தொங்கலிற் பண்புஞ்

சிவப்பண்புந் தவப்பண்புந் ருவோனே”

என்று செந்திலில் பாடுகிறார்

அருணகிரியார்.

[பொருள்: அசுரர்களை மிதித்துக் கசக்கியும், பந்தடிப்பது போல் அடித்தும், சங்கு ஊதி வெற்றி ஒலி செய்தும் கிரௌஞ்ச மலையைப் பொடி படுத்தியும், துதி ஒலி கேட்டு இன்புற்றும் மகிழ்ந்த வேலா!உன்னை வணங்குவதால் தலை பயன் பெறுதலையும் (சிரப்பண்பு) உன்னைக் கைகூப்பித் தொழுவதால் கைகள் பயன் பெறுதலையும் (கரப்பண்பு), உனக்குக் கடப்ப மாலை சூட்டுதலால் பயன் பெறுதலையும் (கடப்பந் தொங்கலிற் பண்பும்), சிவமாம் மங்கலத் தன்மை பெறுதலையும் (சிவப்பண்பும்), தவநிலை பெறுதலையும் (தவப் பண்பும்) தருவோனே!]

மூலவருக்குப் பின்புறமுள்ள சுவரில் இடப்புறம் மாடக்குழியில் ஜெகந்நாதர் எனப்படும் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். பின்புறமுள்ள சுவரில் வலப்புறத்தில் கஜலட்சுமி காட்சி அளிக்கிறார். ஜெகந்நாதருக்கென மூலவர் முன்னுள்ள இரு மயில்களுடன் நந்தியும் காட்சி அளிக்கிறார். இரு மயில்களுள் ஒன்று இந்திர மயில். கிரௌஞ்சப் பறவை மீது ஏறிவந்த சூரனுடன் போரிட்ட போது, இந்திரன் மயிலாக வந்து முருகனைத் தாங்கினான்.

மற்றொன்று சூர மயில் - சூர சம்ஹாரத்திற்குப் பின் சூரன் - பதுமன் எனும் இருவர் தோன்றி, சூரன் மயிலாகவும், பதுமன் கோழியாகவும் முருகனுடன் நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். ஆறுமுகப் பெருமான் முன் ஒரு மயில் இருந்ததென்றும் ஆவணி, மாசிப் பெருவிழாக்களின் போது நடக்கும் உருகு சட்ட சேவைக்கு இடையூறாக இருந்ததால் அந்த மயிலை மூலவர் முன் வைத்தனர் என்றும் கூறுகிறார்கள். அடுத்து இருப்பவர் அலைவாயுகந்த பெருமான். இவர் தோழன் சாமி எனப்படுகிறார். அருணகிரிநாதர் இவரைத் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார்.

``மறிமானுகந்த இறையோன் மகிழ்ந்து

வழிபாடு தந்த மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச

வடிவேல் எறிந்த அதிதீரா

அறிவால் அறிந்துன் இருதாள் இறைஞ்சும்

அடியார் இடைஞ்சல் களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து

அலைவாய் உகந்த பெருமாளே’’

அடுத்ததாக நாம் காண இருப்பது

வரலாற்றுச் சிறப்பு பெற்ற சண்முகர் சந்நதி. ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் கொண்ட அழகிய செம்பொன் சிலை; உடன் தேவியர் உள்ளனர். இவர் மீது கடல் உப்பு அரித்த அடையாளங்கள் உள்ளன. இதன் பின் ஒரு அரிய வரலாற்றுக் குறிப்பு உள்ளது. 1649 ஆம் ஆண்டு, டச்சுக் கொள்ளைக்காரர்கள் சண்முகரைத் தங்கத் திருமேனி என்று கருதி அதை மற்ற சிலைகளுடன் சேர்த்து தம்முடன் எடுத்துக் கொண்டு கப்பலில் சென்றனர். பெரும் புயல் ஒன்று அக்கப்பலைத் தாக்கிய போது, பயந்து போய் சண்முகர் முதலான திருமேனிகளைக் கடலில் வீசிவிட்டுச் சென்றனர். 1651 ஆம் ஆண்டு வடமலையப்ப பிள்ளை எனும் பக்தரின் கனவில் தோன்றிய முருகன், தன் இருப்பிடத்தை அறியச் செய்தான்.

அவர் ஒரு சில வேலையாட்களுடன் கப்பலில் சென்று, இறைவன் குறிப்பிட்டபடி எலுமிச்சம்பழ மாலை மிதந்து கொண்டிருந்த இடத்தில் கடலில் மூழ்கி சண்முகர் சிலையை மீட்டெடுத்து வந்தார். அப்போது கிடைத்த நடராஜர் சிலை ஒன்றும் வேறு சில சிலைகளும், கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. 1649-1651 இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளும் கோயிலில் எந்த விழாவும் நடைபெறவில்லை. [ஆதாரம் - திருநெல்வேலி கெசட்] சண்முகருக்குக் கந்தர் அலங்காரப் பாடல் ஒன்றை சமர்ப்பிக்க விரும்புகிறோம்.

“பத்தித் திருமுகம் ஆறுடன்

பன்னிரு தோள்களுமாய்த்

தித்தித்து இருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்கப்

புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித்

தத்திக் கரைபுரளும் பரம ஆனந்த சாகரத்தே.”

சண்முகருக்குப் பின்புறம் ஆத்மலிங்கம் ஒன்றும், தினமும் வள்ளியம்மையின் பள்ளியறைக்கு எடுத்துச் செல்லப்படும் முருகன் திருவடிகள் பொறிக்கப்பட்ட வெள்ளிப் பீடமும் உள்ளன. ஆவணி, மாசி மாதத் திருவிழாக்களில் ஏழாம் நாளும், எட்டம் நாளும் தேவியருடன் எழுந்தருளி ஊருக்குள் வலம் வருகின்றார் சண்முகர். எனவே இவ்விரு நாட்களும் மூலவரின் சக்தி பெற்று உற்சவ மூர்த்தியாக வலம் வருகிறார் எனலாம். சண்முகரை வெளியே கொண்டு வருவதற்கு அவர் எழுந்தருளியிருக்கும் சந்நதிக்கும் சப்பரத்திற்கும் நடுவே சாய்வுப் பலகை வைக்கப்படுகிறது.

மூலவருக்கு நேரே சண்முகரை அமரவைத்து இருவருக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடத்தப் படுவதைக் காணும் போது, “நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே! கோடாத வேதனுக்கு யான் செய்த குற்றம் என்?” என்று நாமும் ஏங்குகிறோம். இந்நாட்களில்தான் மூவண்ணப் பூக்களில் சண்முகர் ஊர்வலம் வரும் காட்சியை அனைவரும் கண்டு மகிழலாம்.

1. சிவப்பு சாத்தி:

ஆவணி, மாசி விழாக்களின் ஏழாம் நாளன்று சண்முகரும் தேவியரும் சிவப்புப்பட்டாடையாலும் சிவப்புப் பூக்களாலும் அலங்கரிக்கப்படுகின்றனர். சிவப்பு, சிவபெருமானைக் குறிக்கிறது. இதனாலும், அருணகிரியாருக்கு நடனம் புரிகின்ற சிவனாகக் காட்சி அளித்ததாலும் சண்முகரின் பின்னாலிருக்கும் முகத்தைப் பிரதானமாக வைத்து நடராஜராக அலங்கரிக்கின்றனர். சிவனும் முருகனும் ஒருவரே என்று நமக்கு அறிவிக்கிறார் போலும்! தண்டையணி எனத் தொடங்கும் செந்தில் திருப்புகழை இங்கு நினைவுகூருகிறோம்.

``தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையுந்

தண்கழல்சி லம்புடன்கொஞ்சவேநின்

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்

சந்தொடம ணைந்துநின்றன்புபோலக்

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்

கஞ்சமலர் செங்கையுஞ்சிந்துவேலும்

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்

கண்குளிர என்றன்முன்சந்தியாவோ

புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்

பொங்கியெழ வெங்களங்கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்

வளர்ந்துமுன்

புண்டரிகர் தந்தையுஞ்சிந்தைகூரக்

கொண்டநட னம்பதஞ் செந்திலிலும்

என்றன்முன்

கொஞ்சிநட னங்கொளுங்கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்

கும்பமுநி கும்பிடுந்தம்பிரானே’’.

பெருமாளே என்றில்லாமல் தம்பிரானே என்று நிறைவுபெறும் ஒரு சில திருப்புகழ்ப் பாக்களுள் இதுவும் ஒன்று.

(அடுத்த இதழில்...)

Advertisement

Related News