திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்
பகுதி 12
கோடியக்கரை [குழகர் கோயில்]
நாகை மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மற்றொரு திருப்புகழ்த் திருத்தலம் கோடியக்கரை; கோயில் - குழகர் கோயில் எனப்படுகிறது. கோடிக் குழகர் என்பது இக் கடற்கரையைக் காக்கும் சிவனாரின் திருநாமம் என்றும் குழகர் எனும் முனிவர் பூஜித்ததால் குழகர் கோயில் எனப் பெயர் பெற்றது என்றும் கூறுவர். ‘பாயின்ட் கேலிமர்’ [கள்ளி மேடு] பறவைகள் சரணாலயம் இங்கு அமைந்துள்ளதால், காட்டிலாகாவின் அனுமதி பெற்ற பின்னரே ஊருக்குள் செல்ல முடியும். அழகிய சாலையின் இருபுறமும் உப்பளங்களும் மரங்களும் நிறைந்துள்ளன. சுற்றுலாப் பயணிகள், வனவிலங்குகளையும் பறவைகளையும் காணவும், தேவாரத் திருப்புகழ்ப் பாக்களைப் பெற்ற குழகர் கோயிலைத் தரிசிக்கவும் இங்கு வருகின்றனர்.
பாற்கடலிலிருந்து கிடைத்த அமிர்தத்தைத் தேவர்கள் பருகி, மீதியை வாயுதேவனிடம் கொடுக்க, அவர் அதை எடுத்துக்கொண்டு வான் வழியாகச் செல்கையில் அது பூமியில் விழுந்து லிங்க ரூபமாய் இங்கு தோன்றியது என்கிறது புராணம். எனவே சுவாமி அமிர்தகடேஸ்வரர் என்று பெயர் பெற்றார். அம்பிகை அஞ்சனாட்சி [மையார் தடங்கண்ணி] கோயில் பிராகாரத்திலுள்ள கிணறு அமிர்த தீர்த்தம் என்றும் கடல் ருத்ர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றன. தட்சிணாயன, உத்தராயண காலங்களில் இங்கு நீராடுவது விசேஷம்.
நெடிதுயர்ந்து விளங்கும் ஐந்து நிலை ராஜ கோபுரம் கண்ணைக் கவர்கிறது. மூலவர் அழகிய லிங்கத் திருமேனியாக சதுரமான பீடத்திலமர்ந்துள்ளார். கோயிலின் கருவறைக் கோட்டத்தில் சட்டநாதர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை, தேவியுடன் கூடிய ஐயனார் ஆகியோரை வணங்கலாம். சுற்றுப்பிராகாரத்தில் பைரவர், சூரியன், சந்திரன், சண்டிகேசர் ஆகியோரைத் தரிசிக்கலாம். கோளிலித் தலமாதலால் நவகிரஹங்கள் நேர் வரிசையில் அமைந்துள்ளன. மகா மண்டபத்தில் குழக முனிவரின் உருவச் சிலை உள்ளது.
முன் மண்டபத்தில் இக்காட்டுப் பகுதியைக் காக்கும் “காடு கிழாள்” எனும் வன தேவதையின் சந்நதியும் அம்பிகை அஞ்சனாட்சியின் சந்நதியும் உள்ளன. அமிர்த விநாயகர், முருகன் ஆகியோர் சந்நதிகள் தனித்தனிக் கோயில்களாக உள்ளன. முருகனின் மூர்த்தி தனிச்சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது. பெருமானின் ஒரு கரம் அமுத கலசம் ஏந்தியுள்ளது; மற்றொன்று அபய ஹஸ்தம். மற்ற நான்கு கரங்களிலும் நீலோற்பலம், தாமரை, வச்சிரம், வேல் ஆகியவை உள்ளன.
மயில் வடக்கு நோக்கி நிற்கிறது. முருகனுக்கென தனிக் கொடிமரம் உள்ளது. வாயு எடுத்துச் சென்ற போது கீழே சிந்திய ஒரு சிறு பகுதி அமுதத்தை ஒரு கலசத்தில் ஏந்தி நின்றதால், அவர் அமிர்த சுப்ரமண்யர் என்று அழைக்கப்படுகிறார்.அருணகிரிநாதர் கோடிக் குழகரின் குழவியைத் தேடி நாட்டின் இக்கோடிக்கு வந்து திருப்புகழ் பாடியுள்ளார் என்றறியும் போது வியப்பு மேலிடுகிறது. பாடலைப் பார்ப்போம்.
நீல முகிலான குழலான மடவார்கள் தன
நேயமதிலே தினமும் உழலாமல்
நீடு புவியாசை பொருளாசை மருளாகி அலை
நீரில் உழல் மீனதென முயலாமல்
காலனது நா அரவ வாயிலிடு தேரையென
காயமருவு ஆவி விழ அணுகாமுன்
காதலுடன் ஓதும் அடியார்களுடன் ஆடி ஒரு
கால் முருக வேளெனவும் அருள்தாராய்.
கார்மேகம் போன்ற கூந்தலை உடைய மாதர்கள் தனபார மேலுள்ள ஆசையிலே நான் நாள்தோறும் அலைச்சலுறாமலும், மண், பொன், பெண் எனும் மூவாசைகளில் மயக்கம் கொண்டு, அலை மிகுந்த கடல் நீரிலே அலைச்சலுற்றுத் தத்தளிக்கும் மீனைப் போன்று தினமும் உழலாமலும் இருக்க வேண்டும்.காலனது அதட்டி மிரட்டும் பேச்சு எனும் [நா = வார்த்தை] பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போன்று, எனது உடலானது உயிரைத் துறந்து அவன் கையில் சிக்கிவிடும்படி, அவன் என்னை அணுகுவதற்கு முன்னால், உன்னை அன்புடன் துதிக்கும் அடியார்களை நாடி, ஒரு முறையாவது முருகவேள் என்று நான் புகழும்படி உன் திருவருளைத் தந்தருள்வாயாக.
‘அரா நுகர வாதையுறு தேரை கதி’ என்பார் சுவாமிமலைத் திருப்புகழில். ‘பாம்பின் வாய்த் தேரையாய்’ என்று சம்பந்தரும், ‘பாம்பின் வாய்த் தேரை போல’ என்று அப்பர் பெருமானும் பாடியுள்ளனர்.எமராஜனின் தூதர்கள் மனிதர்களைப் பிடித்து போகும் போது, அவர்களை விரட்டி, ஏசிக் கொண்டு செல்வார்கள் என்பதை ஆதி சங்கரர், சுப்ரமண்ய புஜங்க நூலின் 21 ஆம் செய்யுளில் குறிப்பிடுகிறார்.
க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷுகோபாத்
தஹச்சிந்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு
மயூரம் ஸமாருஹ்ய மாபைரிதி த்வம்
புர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம்
[எல்லையில்லாத் துன்பம் தரும் எமதூதர் வந்து கோபத்துடன், ‘எரி, குத்து, வெட்டு’ போன்ற சொற்களால் என்னைப் பயப்படுத்தும் போது, முருகா! நீ சற்றும் தாமதிக்காமல் சக்தி வேலைத் தாங்கிய வண்ணம், மயில் வாகனத்தில் ஏறிக்கொண்டு என் முன் வந்து ‘அஞ்சேல்’ என்று அபயம் தர வேண்டும்]‘வருபவர்கள்’ எனத் தொடங்கும் கதிர்காமத் திருப்புகழில், எமதூதர்கள் ஏசிக்கொண்டு நம்மை இழுத்துச் செல்வது குறித்து அருணகிரியார் பின்வருமாறு பாடுகிறார்.
வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதரென்று
மடிபிடியதாக நின்று தொடர்போது
மயலது பொலாத வம்பன்
விரகுடையனாகுமென்று
வசைகளுடனே தொடர்ந்து அடைவார்கள்
கருவியதனாலெறிந்து சதைகள்தனையே அரிந்து
கரிய புனலே சொரிந்து விடவேதான்
கழுமுனையிலே இரென்று விடுமெனும் அ(வ்)வேளை கண்டு
கடுகி வரவேணும் எந்தன் முனமேதான்.
[என் உயிரைக் கவர வரும் யமதூதர்கள், எனது ஆயுள் ஓலையை எடுத்துக்கொண்டு வந்து, “நாங்கள் எமதர்மராஜனின் தூதர்கள்” என்று கூறி, விடாப்பிடியாகத் தொடர்ந்து வந்து என்னை நோக்கி, “இவன் காமம் மிக்கவன், வீணன், தீயவன், தந்திரம் உடையவன்” எனும் வசைச் சொற்களுடன் நெருங்குவார்கள். ஆயுதங்களை வீசிச் சதைகளை அரிந்து, ரத்தம் நீர் போல் சொரிந்து விழும்படியாக, கழுமுனையில் ஏற்றி விடுவார்கள்; அந்தச் சமயத்தை அறிந்து, என்னைக் காக்க நீ வேகமாக என்முன் வரவேண்டும்.]
குழகர் கோயில் திருப்புகழின் பிற்பகுதியைக் காண்போம்.
சோலை பரண் மீது நிழலாக தினை காவல்புரி
தோகை குறமாதினுடன் உறவாடிச்
சோரனென நாடி வருவார்கள் வன வேடர் விழ
சோதிகதிர் வேலுருவு மயில்வீரா
கோல அழல் நீறுபுனை ஆதி சருவேசரொடு
கூடி விளையாடும் உமை தருசேயே
கோடுமுக ஆனை பிறகான துணைவா குழகர்
கோடிநகர் மேவிவளர் பெருமாளே!
வள்ளிமலைச் சோலையிலே மரங்களின் நிழலில் பரண் மீது அமர்ந்து தினைப் பயிரைக் காவல் செய்து வந்த மயில் போன்ற அழகியாம் குறவள்ளியுடன் சல்லாபித்து, அவளை உன்னுடன் அழைத்துச் செல்ல, உன்னைத் திருடன் என்று கருதி, பிடிக்க வந்த வேடர்கள் மடிந்து வீழும்படி வேலை செலுத்திய மயில் வீரனே! அழகுடையதும், பூசிக்கொள்பவரது வினையைச் சுட்டெரிக்கக் கூடியதுமான விபூதியைத் தரித்திருக்கும் எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபிரானுடன் சேர்ந்து ஞானத் திருவிளையாடல் புரியும் பார்வதி குமாரனே!
தந்தங்கள் பொருந்திய முகமுடைய விநாயகரின் இளையோனே! குழகர் எனும் திருநாமத்துடன் சிவனார் வீற்றிருக்கும் கோடிநகர் திருத் தலத்தில் விரும்பி உறையும் பெருமாளே!சுந்தர மூர்த்தி நாயனார், சேரமான் பெருமாளுடன் கோடியக்கரை வந்தபோது, கோயில் கடலருகே தனித்து நிற்பதைக் கண்டு உள்ளம் வருந்திப் பாடியுள்ளார். [கல்கி அவர்களின் ‘பொன்னியின் செல்வன்’ தொடரில் இது பற்றிய குறிப்பு வந்துள்ளது!]
தம்பிரான் தோழராயிற்றே! “உமக்குத் துணை யார் உளர் இங்கு? மீண்டும் நஞ்சுண்ண எண்ணினாயோ? என் தாய் இந்தக் காட்டில் வசிக்க அஞ்சுவாளே!” என்றெல்லாம் கோடிக் குழகர் மீதும் உமை மீதும் உள்ள பேரன்பால் பாடுகிறார்.
“கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல்
குடிதான் அயலே இருந்தாற் குற்றமாமோ
கொடியேன் கண்கள் கண்டனக் கோடிக் குழகீர்!
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே”
[கோடிக் குழகரே! கடற்காற்று மிக வேகமாய் வந்து வீசும் பொது, இக்கடற்கரையின் அருகில் நீர் இருக்க, உமக்கு யார் துணையாக உள்ளார்? நீர் இங்கு தனித்து நிற்பதைக் கொடியேனான என் கண்கள் காண்கின்றன. உமது குடியை வேறோர் இடத்திற்கு மாற்றிக்கொண்டால் குற்றம் உண்டோ? சொல்வீராக]
“காடேல் மிக வாலிது காரிகை அஞ்சக்
கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகை குழற
வேடித் தொண்டர் சாலவும் தீயர் சழக்கர்
கோடிக் குழகா இடங்கோயில்
கொண்டாயோ?”
[கோடிக் குழகனே! நீர் உறையும் இக்காடோ மிகப்பெரியது. உமது துணைவி அஞ்சுமாறு மரப்பொந்திலுள்ள ஆந்தைகளும் கூகைகளும் கூடிச் சேர்ந்து கூக்குரலிடுகின்றன. இங்கு வாழும் வேடர்கள் மிகக் கொடியவர்கள், வஞ்சகர்கள். என்ன காரணத்தினால், இப்படிப்பட்ட இடத்தில் வந்து குடிகொண்டாய்? [‘என் தாய் அஞ்சுவாளே என்பதற்காகவாவது உன் இடத்தை மாற்றக் கூடாதா?’ என்று உரிமையோடு கேட்கும் அழகு தனிதான்.]
சுந்தர பாண்டியன் காலத்தில் மீனவர்கள் ஒன்றிணைந்து கோயில் பூசைக்காகப் பொருளுதவி செய்தனர் என்றும், கோயிலுக்கென பக்தர்கள் பலர் பொன்னும் பொருளும் உதவினர் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.இங்கிருந்து அருகிலுள்ள இலங்கைக்குப் பாலம் அமைக்கலாம் என்றான் சுக்ரீவன். ஆனால் இலங்கையின் பின் பக்கமாக கோடியக்காடு அமைந்துவிட்டதால் பின்பக்கமாகச் சென்று ராவணனைத் தாக்குவது தனக்குப் பெருமை தராது என்று கூறி ராமர் மறுத்துவிட்டார் என்பர். ராமன் வருகை தந்ததைக் குறிக்கும் வகையில் கோயிலின் பின்புறம் ராமர் பாதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இரை தேடிவரும் பறவைகளுக்கும், இறை தேடி வரும் பக்தர்களுக்கும் சரணாலயமாகத் திகழும் கோடியக்கரை குழகரையும் அவர் குழவியையும் மீண்டும் வணங்கிப் புறப்படுகிறோம்.
சித்ரா மூர்த்தி