தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சப்தரிஷிகளை அறிந்து வழிபட்டால் சஞ்சலமின்றி வாழலாம்!

ரிஷி பஞ்சமி : 28-8-2025

Advertisement

ரிஷி பஞ்சமி என்பது ஆவணி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை பஞ்சமி நாள். பொதுவாக ஆவணி அமாவாசைக்கு அடுத்த மாதம் புரட்டாசி மாதம். இதை பாத்ரபத மாதம் என்பார்கள். அதில் ஐந்தாவது நாள் ரிஷிபஞ்சமி. இன்னொரு கோணத்தில் விநாயக சதுர்த்தி நாளுக்கு அடுத்த நாள் ரிஷி பஞ்சமி ஆகும். இந்த நாள் சப்த ரிஷியின் பாரம்பரிய வழிபாடு நாளாகக் கருதப்படுகிறது. சப்தரிஷி என்பவர்கள் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் ஏழு முனிவர்கள். இவர்களை பிரம்மாவின் நேரடி வழித்தோன்றல்களாகக் கருதுகின்றனர். இவர்களை வைத்துக் கொண்டுதான் கோத்திரங்கள் வரையறுக்கப்படுகின்றன. கேரளாவின் சில பகுதிகளில் இந்த நாள் விஸ்வகர்மா பூஜை நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.

இந்த விரதத்தில், சமுதாயத்தின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பண்டைய ரிஷிகளின் மகத்தான செயல்களுக்கு மக்கள் மரியாதை, நன்றி மற்றும் நினைவை வெளிப்படுத்துகிறார்கள். அதன்படி பொதுவாக இந்த விரதத்தை பெண்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். ராஜஸ்தானின் அகர்வால் மற்றும் மகேஸ்வரி மற்றும் காயஸ்தா போன்ற சமூக குழுக்களால் இந்த ரிஷிபஞ்சமி, ரக்ஷா பந்தன் அல்லது ‘‘ராக்கி பண்டிகை’’ என்றும் கொண்டாடப்படுகிறது.

சகோதரிகள் தங்கள் உடன்பிறந்த ஆண்களின் நலனுக்காக வேண்டிக்கொண்டு ‘‘ராக்கி’’ அல்லது ‘‘புனித நூல்’’ கைகளில் கட்டுகிறார்கள் மேலும் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இருவரும் ஒருவருக் கொருவர் நலனுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளும் நாளாக இந்த நாள் விளங்குகிறது. ரிஷி பஞ்சமி அன்று, புனித நதிகள், குளங்கள் அல்லது பிற நீர்நிலைகளில் புனித நீராடுவது ஒரு முக்கிய சடங்கு ஆகும். விநாயகப் பெருமான், நவகிரகங்கள் (ஒன்பது கிரகக் கடவுள்கள்), சப்தரிஷிகள் (ஏழு முனிவர்கள்) மற்றும் அருந்ததி ஆகியோரை நினைவு கூர்ந்து இந்நாளில் வழிபாடு செய்கின்றனர்.

சப்த ரிஷிகள்

இனி இந்த ஏழு மகரிஷிகளின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்வோம். ரிஷி என்ற சொல்லுக்குக் கடவுளைக் கண்டவன் கடவுளை உணர்ந்தவன் என்று பொருள். மந்திர திரஷ்டா அதாவது மந்திரத்தை தியானத்தில் கண்டவர் என்றும் பொருள் உண்டு.ரிஷிகள் பெரும்பாலும் காட்டில் வாழ்ந்தவர்கள். இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள். எந்த ஒரு உயிருக்கும் தீங்கு நினைக் காதவர்கள். பேராசை இல்லாதவர்கள். நாட்டில் எங்கும் சுபிட்சம் நிலவ வேண்டும் என்பதற்காகவே இடைவிடாது தவம் புரிந்தவர்கள். ஏதேனும் முக்கியமான ஒரு காரணத்திற்காகத் தான் அவர்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பார்களே. தவிர, மற்ற பொழுதெல்லாம் அவர்கள் காட்டிற்குள் தான் வாழ்ந்து வந்தார்கள்.

அந்தத் தனிமையான வாழ்க்கையில், கடவுளைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும், வாழும் முறையைப் பற்றியும் பல்வேறு கருத்துக்களை ஆராய்ந்து தெளிந்து அவற்றை நூல்களாக வெளியிட்டார்கள். ரிஷிகளின் உபதேசங்களில் நாம் உண்மையான மனிதனை அறிய முடியும். ரிஷிகள் எப்படி இருப்பார்கள் என்பதை ஒரு ஸ்லோகம் சொல்லுகின்றது.

ஊர்த் வரேதாஸ் தபஸ் யோக்ர:

நியதாசீ ணி சசம் யமீ

சர்பானு க்ரஹயோ: சக்த:

சத்ய ஸந்தோப் வேத் ரிஷி:

ரிஷி என்றால் தூய்மையான வைராக்கியம் உள்ளவர். ஆண்மை உள்ளவர். உக்ரமான தவம் செய்பவர். குறைந்த உணவை உட்கொள்பவர். ஐந்து புலன்களையும் அடக்கி ஆள்பவர். சாபம் கொடுக்கவும் அருள் கொடுக்கவும் சக்தி நிறைந்தவர்.அவர்கள் தங்கள் உள்ளத்தில் தியானத்தின் மூலம் கடவுளைக் காணும் திறமை பெற்றவர்கள். சாந்தோக்கிய உபநிஷத்தில் ஒரு இடம் வருகிறது.சத்யகாமன் தவம் செய்து விட்டு வருகின்றான். அவன் திரும்பி வருவதை பார்த்த அவனுடைய குரு கௌதம மகரிஷி தன் சீடனின் முகத்தின் பிரகாசிக்கும் ஒளியையும் பரவசத்தையும் கண்டு, ‘‘இவன் கடவுளைப் பார்த்து இருக்கிறான் கடவுளை உணர்ந்து இருக்கிறான் அது இவன் முகத்தில் தெரிகிறது’’ (பிரஹ்ம விதிவ் ஆபாதிதே முகம்) என்று கூறுகின்றார்.

நம்முடைய பாரத நாட்டில் இப்படிப்பட்ட ரிஷிகள் அதிகம். தாங்கள் கடவுளைக் கண்டதோடு, உணர்ந்ததோடு, நம்மையும் கடவுளை உணர வைக்கும் சேவையைச் செய்பவர்கள். மனித குலத்தின் சங்கடங்களை எல்லாம் தங்கள் தவ வலிமையால் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். மங்கல வாழ்த்துக்குச் சொந்தக்காரர்கள். கடவுளின் பிள்ளைகளில் மூத்தவர்கள்.

ரிஷிகள் என்றால் இல்லறத்தை துறந்தவர்கள் என்ற அர்த்தம் அல்ல. பேராசையைத் துறந்தவர்கள். தர்ம சிந்தனை மிகுந்தவர்கள் என்று அர்த்தம். அதனால் தான் பலரும் இல்லறத்தில் வாழ்ந்து அற்புதங்களைச் செய்திருக்கிறார்கள்.

பரதன் ராமனை மகரிஷியைப் போன்றவர் (மகர் ஷிமிவ ராகவம்) என்று கூறுகிறான்.வால்மீகி ரிஷி ராமனை வர்ணிக்கும் பொழுதும் ‘‘நாட்டை விட்டு’’ காட்டுக்குச் செல்ல விரும்பிய பொழுதும் மனம் மாறுபாடு இல்லாது இருந்தான். அரச பதவியைத் துறக்கிறோமே என்கின்ற ஏமாற்றம் கிஞ்சித்தும் அவன் முகத்தில் இல்லை உலகத்தை கடந்து நிற்பவருக்கு எந்த மனமாறுபாடும் எப்படி இருக்காதோ அப்படியே ராமனுக்கும் இருந்தது.

ந வனம் கந்து காமஸ்ய

த் யஜ் யதஸ்ச வஸு ந் தராம்

சர்வலோகாஸ் திகஸ் ஏவ

லஷ்யதே சித்தவிக்ரியா (அயோத்திய காண்டம்)

சர்வலோகாஸ் திகன் என்றால் எல்லா உலகத்தையும் கடந்தவன் என்று பொருள். இதை அப்படியே கம்பன் தமிழில் மொழி பெயர்க்கிறார்.

இப் பொழுது, எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்

செப்ப அருங் குணத்து இராமன்

திருமுகச் செவ்வி நோக்கின்;

ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட

அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா!

ரிஷிகள் குலத்தைக் கடந்தவர்கள். அதனால்தான் ‘‘ரிஷி மூலம் நதிமூலம் பார்க்கக்கூடாது’’ என்பார்கள். நதி எங்கே இருந்து தோன்றியது என்று எளிதாகக் கண்டு பிடிக்க முடியாது. நதி மலை உச்சியில் தோன்றலாம். அடிவாரத்தில் தோன்றலாம். தரையில் தோன்றலாம். ஏரியில் தோன்றலாம். மழை வெள்ளத்தில் பிறக்கலாம்.மகரிஷிகளின் கதைகளைப் பொருத்தவரை அவர்கள் பிறந்த சமூகத்தைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை. அவர்களுடைய கண்டு பிடிப்புகள், மந்திரங்கள், சாதனைகள் இவற்றைப் பற்றியே பேசப்படுகின்றன. எந்தச் சமூகத்திலும் அவர்கள் பிறந்திருக்கலாம். பிறந்த சமூகம் முக்கியமல்ல. அவர்கள் தகுதி தான் முக்கியம்.

மகரிஷிகளில் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறியவர்கள் உண்டு. விசுவாமித்திர மகரிஷி சத்திரியராக இருந்து தவம் செய்து பிரம்ம ரிஷியான வசிஷ்டரின் நிலைக்கு உயர்ந்தவர்.

அந்த வகையில் சப்தரிஷிகளான காஷ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கௌதம மகரிஷி, ஜமதக்னி மற்றும் வசிஷ்டர் என்ற ஏழு ரிஷிகள் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

1. காஷ்யபர்

இவர் பிரஜாபதிகளிலே ஒருவர். மரீசி முனிவரின் புதல்வர். இவர் அதிதி, திதி, தனு, கத்ரு, வினதா, முனி, அரிட்டை, சுரசை, சுரபி, தாம்ரா, குரோதவசை மற்றும் விஸ்வா என்ற தட்சப்பிரஜாபதியின் மகள்களையும், பதங்கி, யாமினி ஆகியோரையும் மணந்தவர் என்று புராணத்தில் வருகிறது. இந்திரன், அக்கினி, தேவர்கள், ஆதித்தர்கள், வாமனர், பூமாதேவி இவர்களெல்லாம் காசியபர் அதிதியின் குழந்தைகள். மருத்துக்கள், தைத்தியர்கள்; இரணியாட்சன், இரணியகசிபு போன்றவர்களெல்லாம் காஷ்யபருக்கும் திதிக்கும் பிறந்தவர்கள். நவ நாகங்கள் மற்றும் நாகர்கள் காஷ்யபருக்கும் கத்ருவுக்கும் பிறந்தவர்கள் பறக்கும் பறவைகளான.

அருணன் கருடன் காஷ்ய பருக்கும் விந்தைக்கும் பிறந்தவர்கள். நாகப் பாம்புகள் வகைகள் தவிர்த்த பிற பாம்பினங்கள் காஷ்யபருக்கும் சுரசைக்கும்பிறந்தவர்கள். தானவர்கள் காஷ்யபருக்கும் தனுக்கும் பிறந்தவர்கள் அரம்பையர்கள் காஷ்யபருக்கும் முனிக்கும் பிறந்தவர்கள். இவைகள் மேலோட்டமாக கதைகளாகத் தெரிந்தாலும் உலகத்தின் உயிர் உற்பத்திக்கு காஷ்யப மகரிஷியின் தவம் உதவி இருக்கிறது என்று பொருள்.

2. அத்ரி முனிவர்

அத்ரி முனிவர், சப்தரிஷிகளில் ஒருவர் ஆவார். ரிக் வேதத்தில் அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளார். அக்னி, இந்திரன் மற்றும் இந்து மதத்தின் பிற வேத தெய்வங்களுக்காக பல பாடல்களை இயற்றியுள்ளார். பிரம்மனின் கண்ணிலிருந்து தோன்றியவராக சொல்லப்படுகிறார். அத்ரி முனிவர் தனக்குப் பகவானை ஒத்த ஒரு குழந்தை வேண்டும் என்று தவம் செய்தார் மும்மூர்த்திகளும் தரிசனம் தந்தனர்.

அவருக்கு பிரம்மனின் அருளால் சந்திரனும், விஷ்ணுவின் அருளால் தத்தாத்ரேயரும் சிவன் அருளால் துருவாசரும் பிறந்ததாக ஒரு வரலாறு உண்டு. ஒரு சமயம் ராகு என்ற அசுரன் சூரியனையும் சந்திரனையும் மறைத்து ஒளியைக் கிரகித்துக் கொண்டான் உலகம் இருள் அடைந்தது. அத்ரி ரிஷி தன்னுடைய யோக சக்தியால் உலகத்திற்கு தானே சூரியனாகவும் சந்திரனாகவும் ஒளியைத் தந்தார்.

இவர் மனைவி அனசூயை. அனசூயை என்றால் பொறாமை இல்லாதவள் என்று பொருள். ராமாயணத்தில், ராமரும் சீதையும் அத்திரி முனிவரின் ஆசிரமத்தில் தங்கியது குறிப்பிடத்தக்கது. அப்போது அவள் சீதைக்குப் பட்டாடைகளையும் நகைகளையும் அளித்ததாக ராமாயணத்தில் குறிப்பு உண்டு. ராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும் பொழுது நகைகளை எல்லாம் கீழே போட்டாள். எல்லா நகைகளையும் விட்டுவிட்டு மரவுரி அணிந்து கொண்டு காட்டிற்குப் போன அவளுக்கு எப்படி நகை வந்தது என்று கேட்பார் கள். இந்தக் கதை அதற்கு பதில் அளிக்கும்.

3. பாரத்வாஜர்

பாரத்வாஜர் பற்றி அருமையான கதை உண்டு. அவர் தன்னுடைய வாழ்நாள் முழுக்க வேதம் கற்பதில் செலவிட்டார். அவருடைய வாழ்நாள் முடிந்து போனதை அறிந்தவுடன் தவம் செய்தார். இந்திரன் தோன்றி அவருடைய வாழ்நாளை நீட்டித்துத் தந்தான். உடனே மகிழ்ச்சியுடன் அந்த நாள்களையும் வேதம் கற்பதில் செல விட்டார். மறுபடியும் வாழ்நாள் முடிந்தவுடன் தவம் செய்து இந்திரனிடம் வாழ்நாளை நீட்டிக்கும் படி கேட்க அவனும் நீட்டித்துத் தந்தான். அப்படி நீட்டிக்கப்பட்ட வாழ்நாளையும் வேதம் கற்பதில் செலவு செய்தார். மூன்றாவது முறையும் இப்படிச் செய்தபோது இந்திரன் ஒரு கேள்வி கேட்டான்.

‘‘எதற்காக நீங்கள் வாழ்நாளை நீட்டிக்க வேண்டும் என்று கேட்கிறீர்கள்?’’‘‘வேதங்களை கற்று முடிப்பதற்காக?’’‘‘சரி இதுவரை நீங்கள் கற்ற வேதங்கள் என்ன தெரியுமா?’’ என்று கேட்டவுடன் ‘‘தெரியாது’’ என்றார். உடனே மூன்று மலைகளைச் சுட்டிக்காட்டி இவைகள்தான் வேதங்கள் என்றார். ‘‘இவைகளை நான் படித்து விட்டேனா?’’ என்று பாரத்வாஜர் கேட்டவுடன். ‘‘இல்லை இல்லை அவைகள் எல்லாம் நீங்கள் இன்னும் படிக்க வேண்டிய வேதங்கள்’’ என்றான்.

உடனே பாரத்வாஜர், ‘‘அப்படியானால் நான் இத்தனை நாள்களாக படித்த வேதத்தின் பகுதி எத்தகையது?” என்று கேட்க மூன்று பிடி மண்ணை எடுத்து ‘‘இத்தனை ஆயிரம் ஆண்டுகளிலும் நீங்கள் கற்ற வேதத்தின் பகுதி இவ்வளவுதான்’’ என்று சொல்ல பாரத்வாஜர் வியந்து போனார். ஆனாலும் கற்பதில் உள்ள ஆர்வம் அவருக்கு குறையவில்லை. “கற்றது கைமண்ணளவு கல்லாதது மலையளவு” என்பார்கள் அது இவருடைய கதையிலிருந்து தெரிகிறது.

பாரத்வாசர் ஆங்கிரச குலத்தைச் சார்ந்தவர். ரிக்வேத கால முனி வர்களில் ரிக்வேதத்தில் அதிக சூக்தங்கள் இயற்றியவர். இவர் பெரும் புலமை பெற்றவர். பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். துரோணாச்சாரியர் இவரது புதல்வரே. இவரது தவ வலிமையை பல புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன இராமாயணத்தில் இராமர், சீதை மற்றும் இலக்குவனுடன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்கையில், முதன்முதலில் பரத்துவாஜ முனிவரின் குடிலில் சில நாட்கள் தங்கினர். பின் சித்திரகூடம் எனும் அடர்ந்த காட்டிற்கு செல்வதற்கான வழியை பரத்துவாஜர் இராமருக்குக் கூறினார்.

4. விசுவாமித்திரர்

விஸ்வம் என்றால் உலகம். மித்திரன் என்றால் நண்பன். விசுவாமித்திரன் என்றால் உலகத்திற்கு நன்மை செய்பவர் என்று பொருள். விசுவாமித்திரர் குசநாபரின் மகன். கௌசிகன் என்ற பெயருடைய மன்னன். வசிட்டரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷியானவர். விஸ்வாமித்ர முனிவர் கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தின் கனல் தேவலோகத்தில் இருக்கும் இந்திரனுக்கு அச்சத்தினை உண்டாக்கியது. எனவே தேவ கன்னிகையான மேனகையின் மூலம் முனிவரின் தவத்தினைக் கலைக்க கட்டளையிட்டான். மேனகை விஸ்வாமித்திரர் முன் நடனமாடினாள்.

அவளுடைய நடனத்தினால் முனிவரின் தவம் கலைந்தது. அத்துடன் மேனகையை மனைவியாக ஆக்கிக்கொண்டார் விஸ்வாமித்திரர். இருவருக்கும் சகுந்தலை என்ற மகள் பிறந்தாள். பின்னர், சகுந்தலை அரசன் துஷ்யந்தனை மணமுடித்து, அவர்களுக்கு பரதன் மகனாக பிறந்தான். பின்னர், ஆயிரம் ஆண்டுகளுக்கு கடுந்தவம் செய்யும் பொருட்டு இமாலயத்திற்கு சென்று விடுகிறார் கௌசிகர். உண்ணாமல், மூச்சு விடுவதையும் கூட அறவே குறைத்து விடுகிறார். இவர் தவவலிமையைக் கண்ட பிரம்மா, கௌசிகருக்கு ‘‘பிரம்மரிஷி’’ எனும் பட்டத்தை வழங்கி, விசுவாமித்திரர் எனும் பெயரும் இடுகிறார். காயத்ரி மந்திரம் உட்பட பழமையான ரிக்வேதத்தின் பல பகுதிகளை வழங்கியதாகக் கருதப்படுகிறார். விசுவாமித்திரரின் கதை வால்மீகி ராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

5. கௌதம மகரிஷி

கௌதமர் அல்லது அட்சபாதர்‌வேத கால மகரிசிகளுள் ஒருவர். பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பெயரைக்கொண்ட பல சுலோகங்கள் ரிக் வேதத்தில் உள்ளது. தேவி பாக வதத்தில் கோதாவரி நதிக்கு அப்பெயர் இவராலேயே வந்தது என்று கூறப்பட்டுள்ளது. பாரத்வாஜ மகரிஷியும், கௌதமருடன் அங்கரிசர் குலத்தில் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. ரிக்வேதத்தில் 20 சூக்தங்களைச் செய்துள்ளார்.

மகாபாரதம் சாந்தி பர்வத்தில் ஒரு கதை வருகிறது. கௌதம ரிஷி எமதர்மராஜனிடம் சொர்க்கத்தை அடைய என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும் பொழுது எமதர்மராஜன் விடை அளிக்கின்றான். ‘‘யார் ஒருவன் பெற்ற தாய் தந்தையை நன்கு காப்பாற்றுகின்றானோ அவர்களுக்கு சொர்க்கத்தின் கதவுகள் திறந்திருக்கும்.’’ இவரது மனையாளின் பெயர் அகலிகை. உலகத்தில் உள்ள எல்லா அழகையும் ஒன்றாகச் சேர்த்து பிரம்மன் ஒரு பெண்ணைப் படைத்தாராம். அகலிகை என்று பெயர் வைத்தானாம். அந்த அகலிகை கௌதம மகரிஷிக்கு மாலையிட்டாள்.

இராமாயணத்தில் அகலிகை பற்றிய குறிப்பு வருகிறது. தன் கணவனால் கல்லாக சபிக்கப்பட்ட அகலிகை இராமனின் திருவடித்துகளால் சாபம் நீங்கிய கதை இராமாயணத்தில் உள்ளது. பிறகு அக லிகையை குற்றமற்றவள் என்று கௌதம மகரிஷி ஏற்றுக் கொள்கிறார். இவர்களுக்கு வாமதேவ முனிவர், நோதாஸ், சதானந்தர் என்ற புதல்வர்கள் இருந்தனர். அவர்களும் வேதத்தில் பல சுலோகங்களை இயற்றியுள்ளனர். ரிக் வேதத்தின் சில பகுதி இவர்களின் குடும்பத்தை விவரிக்கிறது.

6. ஜமதக்கினி

பிருகுவின் வழித்தோன்றல் ஜமதக்கினி. ஜமதக்கினி என்பதற்கு நெருப்பு என பொருள்படும். வேதமனைத்தும் கற்ற ஜமதக்கினி, பிரசினசித்து என்ற சூரிய குல மன்னர் மகளான ரேணுகாவை மணந்தார். வசு, விசுவாவசு, பிருகத்யானு, பிருத்வான்கண்வர் மற்றும் பரசுராமர் ஆகிய ஐந்து குழந்தை களின் தந்தையானார். இதில் பரசுராமரை விஷ்ணு பகவானின் ஆவேச அவதாரமாகச் சொல்வார்கள். தந்தையின் சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்தவர்.

ஒரு முறை ஆயிரம் கரங்கள் கொண்ட கார்த்தவீரிய அருச்சுனன், ஜமதக்கினி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தார். ஜமதக்கினி வளர்த்துக் கொண்டிருந்த காமதேனுவின் மகளான சபலை எனும் தெய்வீகப் பசுவை கார்த்தவீரிய அருச்சுனன் கேட்டார். தர மறுக்கவே, ஜமதக்கினி முனிவரிடமிருந்து வலுக்கட்டாயமாக சபலை பசுவை கவர்ந்து சென்றான். இச்செய்தியை ஜமதக்கினி முனிவர் பரசுராமரிடம் தெரிவித்தார். கோபமுற்ற பரசுராமர் கார்த்தவீரிய அருச்சுனனை வென்றார்.

பழிக்குப் பழியாக கார்த்தவீரியஅருச்சனனின் மூன்று மகன்கள், பரசுராமர் ஆசிரமத்தில் இல்லாத நேரத்தில், ஜமதக்கினி முனிவரைக் கொன்றனர். இதனால் கோபமுற்ற பரசுராமர், சத்திரிய மன்னர்களின் 21 தலைமுறையினரைக் கொல்வதாகச் சபதம் செய்தார். பரசுராமன் 21 தலைமுறை சத்திரியர்களை அழித்து இந்த உலகம் முழுவதையும் கைப்பற்றி காஷ்யபருக்கு தானம் தந்துவிட்டு தன்னுடைய ஆயுதமான கோடாலியை மேற்குக் கடலில் வீசி கடலைப் பின்னுக்குத் தள்ளி ஒரு தேசத்தை உண்டாக்கி அதில் தவம் செய்தார். அதுதான் இன்றைய கேரள தேசம். பரசுராம சேத்திரம் என்று சொல்லப்படுகிறது.

7. வசிஷ்டர்

வசிட்டரின் பெயர் அனைத்துப் புராணங்களிலும் வரும். பிரம்மனின் ஆன்ம மகனும் (மனத்தால் பிறந்தவர்) அருந்ததியின் கணவரும் ஆவார். தேவர்களாலும் கட்டுப் படுத்த முடியாத ஆசை மற்றும் கோபத்தை வசிஷ்டர், தனது ஆன்ம நோன்புகளால் வெற்றி கொண்டவர்.இவர் பேரைக்கொண்ட பல ஸ்லோகங்கள் ரிக் வேதத்தின் ஏழாம் மண்டலத்தில் உள்ளது. இவர் பெயரால் வழங்கும் நூல் வசிட்ட சம்கிதை (Vasishta Samhita).

இவரின் மனையாளின் பெயர் அருந்ததி. தேவலோகப் பசுக்களான காமதேனு மற்றும் நந்தினி, இவையிரண்டையும் இவரே பராமரித்து வந்தார். மன்னர் கௌசிகர் இப்பசுக்களைப் பறிக்க முயன்று அதில் தோற்று, பின்பு நோன்பிருந்து தன் தவ வலிமையால் பிரம்ம ரிஷி விசுவாமித்ரர் என்று பெயர் பெற்றார். இந்த சம்பவங்கள் ராமாயணத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

ராமாயணக் காவியத்தில் வசிஷ்டர், தசரதனின் அரச குருவாக விளங்கியவர். விசுவாமித்திரரின் வேண்டுகோளின்படி, ராமன் மற்றும் இலக்குமணனை விசுவாமித்திரருடன் வனத்திற்குச் செல்ல வசிஷ்டர் தசரதனுக்கு ஆலோசனை கூறினார். மகாபாரத காவியத்தில், வசிட்டரின் மகனாகச் சக்தி மகரிஷி அறியப்படுகிறார்.ரிஷி பஞ்சமி அன்று இந்த ஏழு ரிஷிகளின் கதைகளை, தெரிந்து கொண்டு அவர்களை மானசீகமாக வணங்கினால், சப்த ரிஷிகளின் நல்லருள் நமக்குத் தட்டாமல் கிடைக்கும்.

முனைவர் ஸ்ரீராம்

Advertisement