சகல சம்பத்தைக் கொடுக்கும் சமுத்திர யோகம்!
சமுத்திர யோகம் என்பது என்ன?
ஜாதகத்தில் எந்த லக்னமாக இருந்தாலும், லக்னத்திற்கு இரண்டாம் பாவகம் (2ம்), நான்காம் பாவகம் (4ம்), ஆறாம் பாவகம் (6ம்), எட்டாம் பாவகம் (8ம்), பத்தாம் பாவகம் (10ம்), பன்னிரெண்டாம் பாவகம் (12ம்) ஆகிய பாவகங்களில் கிரகங்கள் அமர்ந்து, லக்னத்தின் அதிபதியான கிரகம் நீசம் பெறாமலும் அசுப கிரகங்களுக்கு இடையில் இல்லாமலும் இருக்க வேண்டும். லக்னத்தின் அதிபதியான கிரகம் ஆட்சி, உச்சம் பெற்று அமைவது சிறப்பான சமுத்திர யோகம் என்று சொல்லப்படுகிறது. எந்த கிரகங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். இதில் சுப கிரகங்கள், அசுப கிரகங்கள் என்ற பாகுபாடு கிடையாது.
சமுத்திர யோகத்தின் சிறப்பு என்ன?
இந்த யோகத்தின் மிகச் சிறப்பு என்னவெனில், ஜாதகருக்கு இந்த யோகம் இருப்பதே அவருக்கு தெரியாது. ஆனால், பலன்கள் நிச்சயம் உண்டு. இந்த யோகம் ஒரு குறிப்பிட்ட கோட்சார கிரகங்கள் இணையும் காலத்திலோ அல்லது குறிப்பிட்ட திசா நடைபெறும் காலத்திலோ அல்லது குறிப்பிட்ட திசாவின் புத்திகள் நடைபெறும் காலத்திலோ வரும் என்பதில்லை. இது சமுத்திரத்தை போலவே அலைகள் வந்து போவது போல எப்பொழுதும் ஜாதகருடன் பயணிக்கும் ஒரு யோகமாகும்.மேலும், ஒவ்வொரு பாவகத்திற்கும் அல்லது ஒவ்வொரு கிரகத்திற்கும் பதினோராம் பாவகத்தில் ஒரு கிரகம் அமைவது சிறப்பான அமைப்பாகும். ஒரு கிரகத்தை மற்றொரு கிரகமும் அந்த மற்றொரு கிரகத்தை இன்னொரு கிரகமும் இயக்கிக் கொண்டே இருக்கிறது. இவ்வாறு இருக்கும் சூழ்நிலைகளில் லக்னத்தின் அதிபதி வலிமையாக ஆட்சி பெற்றோ அல்லது உச்சம் பெற்றோ அல்லது அந்த கிரகங்கள் தங்களின் சொந்த வீட்டை பார்க்கும் தன்மையுடன் இருப்பது ஜாதகரை மேம்படுத்தும். சங்கிலித் தொடர் போல உள்ள இந்த அமைப்புகள் ஒரு நிகழ்வுடன் மற்றொரு நிகழ்வு தொடர்ச்சியை ஜாதகர் அனுபவிக்கும் யோகத்தை கொடுக்கும்.
சமுத்திர யோகத்தின் பலன்கள் என்ன?
* நீண்ட யோகமாக இருப்பதால் திசா, புத்திகள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
* எந்தப் பிரச்னையையும் நுட்பமாக கையாள்வதில் வல்லவர்கள். அந்தப் பிரச்னைக்கான காரணத்தை, தீர்வுகளை எளிதாக கையாள்வர்.
* தவறான விஷயங்களைத் தவிர, மற்ற எந்த விஷயத்திற்கும் அஞ்ச மாட்டார்கள். தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும் அடுத்து எந்தப் பிரச்னை வரவிருக்கிறது என்பதையும் முன்னரே தெரிந்து வைத்திருப்பதில் வல்லவர்கள்.
* ஆய்வு மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பர். எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருப்பர்.
* சந்தோஷத்தையும் துக்கத்தையும் ஒரே மாதிரியாக அணுகும் மனோபலம் படைத்தவர்கள்.
* இவரை நம்பியவர்களை நிச்சயம் கைவிட மாட்டார்.
* இந்த யோகம் உள்ள நபர்களை எதிர்ப்பவர்கள் ஒரு நாள் இவரிடமே வந்து உதவி கேட்பார்கள். ஆனாலும், தயக்கம் இன்றி அவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பர்.
* ஜாதகர் தேர்ந்த அனுபவசாலியாக இருப்பார். எல்லோரும் பயப்படும் விஷயத்தை தைரியமாக எதிர்கொண்டு வெளிவந்து வெற்றிப் பெறுவார். தான் வெற்றிப் பெற்றுவிட்டோம் என்பதை உணர்ந்து கொள்ளாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பது இவரின் தனிச்சிறப்பு.
* கடல் கடந்து சென்று வரும் அமைப்பு சிலருக்கு உண்டு.
* தொழிலை அல்லது உத்யோகத்தை சிறப்பாக செய்யும் தன்மை இவருக்கு உண்டு.
* திறந்த மனம் படைத்தவராக இருப்பார். அடுத்தவருக்கு உதவும் மனம் கொண்டவர். அதற்காக தன்னுடைய நேரத்தையும் பொருளையும் கொடுக்கக்கூட தயங்கமாட்டார். மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள் இவர்கள்.
* இவர்கள் யாரையும் பார்த்து பொறாமை கொள்ளும் மனம் இல்லாதவர்கள்.
* வாழ்நாள் முழுதும் இயங்கிக் கொண்டே இருப்பார்கள். வாழ்வின் கடைசி நிமிடம் கூட ஒரு விஷயத்திற்காக உழைப்பவர்கள் இவர்கள்.
* சிலருக்கு பொருள் வரும் போகும். இன்னும் சிலருக்கு பெரும் பொருளாதாரத்தை சம்பாதிக்கும் அமைப்பு உடையவர்கள்.