கருணைக் கடல் ஷீரடி சாய்பாபா
இந்திய ஆன்மிக உலகம் கண்டு வியந்த குருமார்களில் ஒருவர் ஷீரடி சாய்பாபா. அவரது போதனைகளும், அற்புதங்களும் இன்றளவும் பேசப்படுகின்றன. அவருடைய தாய் மதம் எதுவென்று கண்டறியப்பட முடியவில்லை என்றாலும், இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் சகோதரர்களாகப் பாவித்தவர். அவரது அற்புதங்களாலும், போதனைகளாலும் தான் மதம், சாதி, மொழி, இனம் கடந்து இன்றளவும் மக்களால் போற்றப்படு கிறார். சாய்பாபாவின் அருளமுதம் ஒரு சராசரி மனிதனை புனிதராக மாற்றக் கூடியது.
இளம் வயதிலேயே ஷீரடி என்னும் மந்திரச் சொல் பாபாவை காந்தம் போல் ஈர்த்தது. மராட்டிய மாநிலத்திலுள்ள ஷீரடி மண் பாபாவின் பாதம்பட புண்ணியம் செய்திருக்க வேண்டும். பெய்யும் மழையும், ஓடும் நதியும், வீசும் காற்றும், கோயில் மணியோசையும் ஷீரடி ஷீரடி என்றே ஒலித்தன. ஷீரடி மண்ணில் பாபாவின் பாதம்படும் நேரமும் வந்தது. எல்லோருக்குள்ளும் ஊடுருவியிருக்கும் பரம்பொருளே பாபாவை ஷீரடிக்கு அழைத்து வந்தது. ஷீரடி வந்தடைந்த பாபா அங்குள்ள கண்டோபா சிவன் கோயில் அருகிலுள்ள வேப்ப மரத்தடியில் தியானம் செய்து கொண்டிருந்தார். அந்தக் கோயில் அர்ச்சகருக்கு பாபாவின் மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது. அதனால் பாபாவை அன்பாக ‘சாய்’ என்று அழைக்கத் தொடங்கினார். அவ்வூரில் பாபாவின் அருமை தெரியாத சிலர் அவரை கேலி செய்து வந்தனர், இருந்தாலும் பாபா அவர்களை கடிந்து கொண்டதில்லை எப்பொழுதும் இறை லயிப்பிலேயே இருந்தார்.
பாபாவின் புகழ் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் பரவ ஆரம்பித்தது. பலர் பாபாவை தங்கள் இல்லத்தில் வந்து தங்கும்படி வற்புறுத்தத் தொடங்கினர். ஆனால், பாபாவோ பாழடைந்த மசூதியை தான் தங்குவதற்குரிய இருப்பிடமாக தேர்ந்தெடுத்தார். இந்த மசூதியே பின்நாட்களில் ‘துவாரகாமயி’ என்று அழைக்கப்பட்டது. அங்கே உண்பதும், உறங்குவதும், தியானிப்பதையும் அன்றாட வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பாபா மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தாலும் கண்டோபா சிவன் கோயிலுக்குள் நுழைய அர்ச்சகர் அனுமதி மறுத்து விட்டார். பாபா நிதானமாக “கடவுள் மனிதர்கள்பால் பேதம் பார்ப்பதில்லை. எனவே, தான் தன் சாயலிலேயே எல்லோரையும் படைத்திருக்கிறான். எந்தப் புனித நூலும் பிறப்பால் நீ உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று வேற்றுமை பாராட்டவில்லை. அப்படி இருந்தும் நீங்கள் கண்ணிருந்தும் குருடராய் இருக்கின்றீர்கள் நான் என்ன செய்வது” என்றார்.
சாயிநாதனிடம் பேரன்பும், பக்தியும் கொண்ட ஷீரடி மக்கள் தங்கள் மத நம்பிக்கைகளை அறவே விட்டொழித்து சகோதரர்களாக வாழ்ந்து வந்தனர். பாபாவும் தன்னை சந்திக்க வருபவர்களின் குறைகளை கேட்டறிந்தும் அவர்களின் வியாதிகளை குணப்படுத்தியும் அற்புதங்கள் பல செய்யவே மெல்ல மெல்ல கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. பாபாவின் தெய்வீக ஞானத்தை சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள தொடங்கினர். ஷீரடி மக்களுக்கு தாய், தந்தை கூட பாபாவுக்கு அப்புறம் தான் என்றானது.
துவாரகமாயியில் இரவில் விளக்குகள் ஏற்றுவதற்கு அங்குள்ள கடைகளில் எண்ணெய் வாங்கி வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார், பாபா. கடைக்காரர்களோ பாபாவை மோசடிப்பேர்வழியாகக் கருதினர். அவருடைய அற்புதங்களெல்லாம் கண்கட்டு வித்தை, மாயாஜாலம் இதனை ஷீரடி மக்கள் உணராமல் கடவுளுக்கு இணையாக அவரை வைத்து வழிபடுகின்றனர் என்று நினைத்தனர். இனிமேல் நாம் பாபாவுக்கு எண்ணெய் வழங்கக் கூடாது என முடிவெடுத்தனர். பாபாவுக்காக கூடும் கூட்டம் அவர்களுக்குள் பொறாமைத் தீயை வளர்த்தது. விளக்கு எரிக்க எண்ணெய் வாங்கச் கடைக்குச் சென்ற பாபா ஏமாற்றத்துடன் மசூதிக்குத் திரும்பினார்.
கடவுள் காரியத்தை தடை செய்துவிட்டோமே பாபா உள்ளே என்ன செய்கிறார் என்று ஒளிந்து நின்று பார்த்த கடைக்காரர்கள் பேரதிசயத்தைக் கண்டனர். பாபா தான் பருகுவதற்கு வைத்திருந்த குடிநீரை விளக்குகளில் எண்ணெய்க்கு பதிலாக ஊற்றி திரியிட்டு அனைத்து விளக்குகளையும் எரியவிட்டிருந்தார். என்னவொரு அதிசயம், அத்தனை விளக்குகளும் சுடர்விட்டு எரிந்தன. இந்த பேரதிசயத்தைக் கண்ட கடைக்காரர்கள் வாயடைத்து நின்றனர். தாங்கள் பாபாவின் மீது சந்தேகப்பட்டது தவறு என உணர்ந்து கொண்டனர். உண்மையிலேயே அவர் ஒரு பெரிய மகான் தான் என்று ஒத்துக்கொண்டு, பாபாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.
அன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பரவிய காலரா நோய், பாபாவின் அற்புதத்தால் ஷீரடிக்குள் கால்பதிக்க முடியவில்லை. அதுபோல ஹரினோபா என்ற பாபாவின் தீவிர பக்தரின் காணாமல் போன விலையுயர்ந்த காலணியை தனது அற்புதத்தால் திரும்பக் கிடைக்கும்படி செய்தார் பாபா.
பாபா தன்னுடைய பக்தர்களுக்கு ‘அனைவருக்கும் ஒரே கடவுள்’, ‘மனிதனைச் சேவிப்பதே இறைவனைச் சேவிப்பது’ என்று உபதேசித்தார். கடமையைச் செய்து முடித்த பக்தர்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்து பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்றார். பசி, வறுமை, நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே உண்மையான இறைவழிபாடு என அவர் வலியுறுத்தினார். பாபா இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பொதுவானவர் எனவே தான் அவர் வாழ்ந்த மசூதியில் இந்துக்கள் விளக்கேற்றி வழிபட்டனர், அதேபோல் இஸ்லாமியர்கள் தொழுகை செய்தனர். இவ்வாறு பாபா மத நல்லிணக்கத்தின் சின்னமாக விளங்கினார்.
பிரச்னைகள் நீங்க பாபாவின் நாமத்தை உச்சரித்தாலே போதும். பாபா தன்னுடைய சத்சங்கத்தில் பக்தர்களிடம் அடிக்கடி நினைவு கூறுவது என்னவென்றால். புல், பூண்டு, புழுக்களாக ஜென்மமெடுத்தே இத்தகைய மனிதப் பிறவியை அடைந்திருக்கிறோம். அத்தகைய மனிதப் பிறவியை கடவுளை அடைவதற்கான ஒரு சந்தர்ப்பமாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உறவுகள், பணம், அந்தஸ்து, புகழ், பொறாமை, சுகம், சந்தோஷம் இவையெல்லாம் கடவுளைக் காணவிடாமல் நம்மை தடுத்து விடுகிறது. பிறப்பறுக்க இரண்டு கேள்விகளுக்கு விடை தெரிந்தாக வேண்டும். நான் யார்?, எங்கிருந்து வந்தேன்?
இவை தான் அந்த இரண்டு கேள்விகள்.பாபாவிடமிருந்து வெளிப்பட்ட ஆன்மிக ஒளிதான் சாய்பாபாவின் பெயர் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் பரவுவதற்கு மூலக்காரணமாய் அமைந்தது. உலகில் பல நாடுகளில் சாய்பாபாவின் ஆலயங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவைகள் மதம், சாதி, மொழி என எந்தப் பாகுபாடும் பார்க்காமல் அனைவரையும் ஒன்றிணைக்கும் அன்பின் மையங்களாக செயல்படுகின்றன.
பாபா சாதாரண மனிதரல்ல, சாய் என்பது பெளதிக உடலுக்கான பெயர் மட்டுமல்ல. காலங்காலமாக மனித இனம் தேடித் திரியும் சத்தியப் பேரொளி அவர். சத்தியத்திற்கு உருவமோ, மதமோ, சாதியோ, இனமோ, மொழியோ முக்கியமில்லை. இதையேதான் தனது இறுதிக் காலம் வரை மக்களிடையே வலியுறுத்தி வந்தார் சாய்பாபா. அன்பு, பொறுமை, நம்பிக்கை, சேவை - இவை அனைத்தும் தான் அவரின் வாழ்வினைத் தாங்கும் தூண்களாக இருந்தன. அதனால் தான் அவர் இன்றும் கோடிக்கணக்கான பக்தர்களின் இதயத்தில் தெய்வமாக குடியிருக்கிறார்.
மதியழகன்